Adonijah
1இராஜாக்கள் 1:5-18
5
ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.
6
அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
7
அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவி செய்து வந்தார்கள்.
8
ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
9
அதோனியா இன்ரோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.
10
தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன் சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை.
11
அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?
12
இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
13
நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.
14
நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
15
அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.
16
பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
17
அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
18
இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.
1இராஜாக்கள் 2:13-25
13
ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.
14
பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
15
அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
16
இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
17
அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
18
அதற்குப் பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.
19
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.
20
அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்க வேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
21
அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.
22
ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செரூயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.
23
பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகச் சொல்லாதிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு,
24
இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
25
ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.