BSI

எண்ணாகமம் அத்தியாயம் 23
பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.
பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.
பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்கதகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.
தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூட தன் சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.
யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தை மாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,
அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி; நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப்பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,
அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.
பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.