படிப்புகள்: 121
Print

மிகப்பெரிய வித்தியாசம்

நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்று நான் கேட்கிறேன். ஏனெனில் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதே சிறப்பான பரிசுத்த வாழ்க்கையின் இரகசியமாகும்.

உண்மையாகவே கிறிஸ்தவர்களிடையே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கர்த்தருடைய இராணுவத்தில் முதலில் நிற்பவர்களுக்கும் பின்னால் நிற்பவர்களுக்கும் இடையில் ஒரு பெரும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே இராணுவத்தில் இருந்து போர் புரிகிறார்கள். ஆனால் ஒருசிலர் மிகவும் துணிவுடன் நல்ல போர் புரிகிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய பணியை செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக செய்கிறார்கள். தேவன் கொடுத்த வெளிச்சம் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் அதிகமாய் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஓட்டத்தை தான் ஓடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மற்றவர்களை காட்டிலும் வேகமாக ஓடுகிறார்கள். அவர்கள் எல்லாரும் ஒரே தேவனையும் இரட்சகரையும்தான் நேசிக்கிறார்கள். ஆனால் எப்படி ஒரு சிலரின் நேசம் மற்றவர்களின் நேசத்தை பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது. நம் மத்தியில் காரியம் இப்படி இல்லையா என நான் ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவர்களை பார்த்தும் கேட்கிறேன்.

ஒரு சில கர்த்தருடைய பிள்ளைகள் மனம்திரும்புதலின் போது எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள் மறுபிறப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பழைய கிறிஸ்தவ அனுபவங்களையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பத்து வருடத்திற்கு முன்பாக மனந்திரும்பியபோது எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய தாகமும், கிறிஸ்தவத்தில் கொண்ட ஆர்வமும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும். நிச்சயமாக அவர்கள் மோட்சப் பிரயாணிகள்தான். ஆனால் பழைய கிபியோனியர்களை போல காணப்படுகிறார்கள். அவர்களின் அப்பம் உலர்ந்து பூசணம் பிடித்திருக்கிறது. அவர்களின் பாதரட்சைகள் பழசாய் போயிருக்கிறது. அவர்கள் துணிகள் கிழிந்திருக்கிறது. நான் மிகுந்த துக்கத்துடனும் துயரத்துடனும் இதை சொல்கிறேன். நான் சொல்வது உண்மையில்லையா? என ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனையும் பார்த்து கேட்கிறேன்.

எப்போதும் முன்னேறிச் செல்கிற கர்த்தருடைய பிள்ளைகளும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மழைக்கு பிறகு முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்கள் விருத்தியடைந்ததுபோல வாழ்க்கையில் விருத்தியடைவார்கள். அவர்கள் கிதியோனைப் போல பின்தொடர்வார்கள். அவர்கள் ஒருசில நேரம் விழுந்து போகலாம், ஆனால் எப்போதும் இயேசுவை பின்பற்றுவதை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் எப்போதும் கிருபையின் மேல் கிருபையையும் விசுவாசத்தின் மேல் விசுவாசத்தையும் பலத்தின்மேல் பலத்தையும் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களை சந்திக்கும்போதும் அவர்கள் இருதயம் விஸ்தாரமாக வளர்கிறது. அவர்களின் ஆவிக்குரிய நிலைமையும் உயரமாகவும் பலமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் வளர்ச்சியடைந்து கிறிஸ்தவத்தில் அநேக காரியங்களை உணர்ந்து கொள்வார்கள். அவர்களின் விசுவாசத்தை செய்கைகளின் மூலம் மட்டுமல்ல. அவர்களின் செயல்களின் மூலமாகவும் காட்டு வார்கள். அவர்கள் நன்மை செய்வது மட்டுமல்ல, தாங்கள் செய்கிற நற்செயல்களை சொல்லிக் காட்டவோ அல்லது அதில் தோய்வு பெறவோமாட்டார்கள். அவர்கள் பெரிதான காரியத்திற்கு முயற்சி செய்து, பெரிதான காரியங்களை சாதிப்பார்கள். ஒருவேளை அவர்கள் தோற்று போனால் மறுபடியும் முயற்சி செய்வார்கள். அவர்கள் விழுந்துபோனால் மறுபடியும் எழுந்திருப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலும் அவர்கள் தங்களை அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்றும், ஏழ்மையானவர்கள் என்றும் நினைத்து கொள்வார்கள். அவர்களிடம் ஆடம்பரத்தை பார்க்க முடியாது. அவர்களே எல்லாரின் கண்களுக்கு முன்பாகவும் கிறிஸ்தவத்தை அழகானதாகவும் அன்பானதாகவும் காட்டுகிறவர்கள். மனந்திரும்பாத மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையை பாராட்டுவார்கள். சுயநலம் கொண்ட உலக மனிதர்கள் கூட அவர்கள் மீது நல்ல கருத்துகளை கூறுவார்கள். அவர்களோடு இருப்பதும், அவர்கள் பேசுவதை கேட்பதும் எவ்வளவு சிறப்பானது. அவர்களை நீங்கள் சந்திக்கிறபோது மோசே கர்த்தருடைய சமூகத்தில் இருந்து வெளிவரும்போது எப்படி காணப்பட்டாரோ அப்படி காணப்படுவார்கள். நீங்கள் அவர்களோடு இணையும்போது அவர்கள் கூட இருப்பதால் அனலூட்டப்படுவீர்கள். உங்கள் ஆத்துமாவும் நெருப்பிற்கு அருகில் இருப்பது போல இருக்கும். அத்தகைய மனிதர்கள் ஒருசிலரே என்பது எனக்கு தெரியும். ஏன் இப்படிபட்ட மக்கள் பல பேர் இல்லை? என்பதே நான் உங்களை பார்த்து கேட்கும் கேள்வி.

வேறுபாட்டின் காரணம்

நான் மேலே விளக்கிய வேறுபாட்டை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்? என்ன காரணத்தினால் ஒருசில விசுவாசிகள் மற்றவர்களை காட்டிலும் பிரகாசமுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்? 20 பேர்களில் 19 பேர் இது அவர்களின் தனிப்பட்ட ஜெபப்பழக்கத்தினால் ஏற்பட்ட வித்தியாசம் என்றே நிச்சயம் சொல்வார்கள். குறைவாக ஜெபிப்பவர்களால் சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழமுடியாது. சிறப்பான பரிசுத்த வாழ்க்கையை வாழுகிறவர்கள் நிச்சயமாக அதிகமாக ஜெபம் செய்கிறவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

இந்த செய்தியை கேட்கிற ஒரு சிலருக்கு இந்த காரியங்கள் ஒரு எச்சரிக்கையின் ஒலியாக இருக்கும் என நிச்சயமாக சொல்லுகிறேன். நேர்த்தியான பரிசுத்த வாழ்க்கை ஒரு வரம் என்றும், அதை ஒரு சிலர் மட்டுமே வாழமுடியும் என்றும் அநேகர் தவறான எண்ணம் கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது. புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறை பார்த்து தூரத்தில் நின்று இரசிக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் வாழ்கிற பரிசுத்தமான மனிதர்களை அழகானவர்களாக நினைக் கிறார்கள். இந்த வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் எட்டக்கூடிய தாகவே இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அவர்களின் தவறான எண்ணமே அவர்களை பெற்றுக்கொள்ள முடியாமல் செய்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் தவறான எண்ணம்.

மிகச்சிறந்த கிறிஸ்தவ வாழக்கை என்பது விசுவாசத்தோடே கிருபையின் சாதனங்களை பயன்படுத்துவதில் தான் தங்கியிருக்கிறது என நம்புகிறேன். நாம் அசாதாரண முறையில் ஆவிக்குரிய தாலந்துகளை பெற்றுக் கொள்ளுகிறோம் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் தேவனிடம் மனந்திரும்பிய பிறகு, தேவன் அவனுக்கு கொடுத்திருக்கின்ற கிருபையின் சாதனங்களை முழு முயற்சியோடு பயன்படுத்தும்போதே அத்தகைய பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முடியும் என நான் சொல்லுகிறேன். இயேசுகிறிஸ்துவின் திருச்சபையில் மிகவும் சிறப்பாக செயல்படுகிற விசுவாசிகள், கர்த்தர் கொடுத்த வழிமுறையான தனிஜெபத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதாலே வளர்ந்திருக்கிறார்கள் என முழு நிச்சயத்துடன் அறிக்கையிடுகிறேன்.

ஜெபம் வல்லமையுள்ளது

வேதத்துக்கு உள்ளும் புறம்பும் மிகவும் பிரகாசமான சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த தேவனுடைய ஊழியக்காரரின் வாழ்க்கையை பாருங்கள். மோசேயை பற்றியும் பவுலைப் பற்றியும் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள். சீர்திருத்தவாதிகளான லூத்தரை (Luther) பற்றியும் பிராட்போர்டை (Bradford) பற்றியும் வரலாற்றில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். வைட்ஃபீல்ட் (Whitefield), செசில் (Cecil), வென் (Venn), பிக்கர்ஸ்டெத் (Bickersteth) மற்றும் மெச்சிகன் (M’Cheyne) போன்றோரின் தனிப்பட்ட தெய்வீக வாழ்க்கையில் எது தொடர்புபட்டிருக்கிறது என்று கவனியுங்கள். தனிஜெபம் செய்யமால் வெற்றியடைந்த ஏதேனும் பரிசுத்தவான்களையோ அல்லது இரத்த சாட்சிகளையோ என்னிடம் காண்பியுங்கள் பார்க்கலாம். அது முடியாது, ஏனெனில் அவர்கள் ஜெபிக்கிற மனிதர்களாய் இருந்திருக்கிறார்கள். ஜெபத்தை சார்ந்து இருங்கள். ஏனென்றால் ஜெபமே சக்தி வாய்ந்தது.

ஜெபமே பரிசுத்த ஆவியின் தொடர்ச்சியான வழிநடத்துதலை பெற்று தருகிறது. இவரே ஒரு மனிதனின் இருதயத்தில் கிருபையின் கிரியையை தொடக்குவிக்கிறார். அவர் மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி வாழ்க்கையை ஆசிர்வாதமாக மாற்றுகிறார். நாம் ஜெபிப்பதை ஆவியானவர் விரும்புகிறார். யாரெல்லாம் அதிகமாக அவரின் உதவியை கேட்கிறார்களோ அவர்கள் அதிகமாக ஆவியானவரின் உதவியை பெற்றுகொள்கிறார்கள்.

பிசாசுக்கு எதிராக போராடவும், நமக்குள் தொடர்ச்சியாக இருக்கும் பாவங்களை மேற்கொள்வதற்கும் ஜெபமே ஒரு உறுதியான தீர்வாய் இருக்கிறது. இருதயத்திலிருந்து ஏறெடுக்கும் ஜெபத்திற்கு முன்பாக பாவம் உறுதியாக நிற்க முடியாது. தேவனுக்கு முன்பாக உதவியை நாடி நிற்கிறவர்களிடம் பாவம் மேலும் தன் ஆளுமையை தொடராது. நம்முடைய பரலோக மருத்துவர் நம்முடைய அனுதின பிரச்சனையை தீர்க்கிறவராய் இருக்கிறபடியால் நம்முடைய மெய்யான நிலையை அவரிடம் விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.

நீங்கள் கிருபையில் வளர்ச்சியடைந்த தெய்வீகமானவர்களாக விரும்புகிறீர்களா? உண்மையாக நீங்கள் அப்படி இருக்க விரும்பினால் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? என்பதே உங்கள் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி.