படிப்புகள்: 7
Print

      ஆதியாகமம் 3:16: ஏவாள் நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை உண்டதால், எல்லாப் பெண்களும் குழந்தை பிறக்கும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது. (இறந்து போன முதையார்களுக்கு சற்றும் தொடர்பில்லாத அவர்களுடைய உறவினர்கள் பாவப் பரிகாரத்தக்காக பணத்தைச் செலவழிப்பது எப்படியோ அப்படியோ ஏவாளின் பாவத்துக்குச் சற்றம் தொடர்பில்லா அவளுடைய தலைமுறையில் வருகிற பிற்காலப் பெண்கள் பிரசவ காலத்தில் வேதனையை அனுபவிக்க வேண்டியதாயிருக்கிறது. இது பெண்களுக்குக் காட்டும் பாகுபாடு அல்லவா?

ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுலத்திற்கு ஏற்பட்ட பாவவீழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்கும் முன்னர், ஒன்று மற்றம் இரண்டாம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் விவரங்களைச் சற்று உற்றுக் கவனிக்க வேண்டியது அவசியம். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலிலும், வேதனுடைய ரூபத்திலும் படைக்கப்பட்டார்கள். “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக! தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:26,27). இருவருமே தேவ சாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவருடைய குணத்திலும் மதிப்பிலும் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும் ஆதியாகமம் 1:28-30 -இல் “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் சேர்ந்தே வழங்கப்பட்டுள்ளன. எனவே, படைப்பின் செயல்பாட்டிலிருந்தும், ஆசீர்வாதங்களை வழங்கியதில் இருந்தும், எல்லா ஆணும் பெண்ணும் தேவனுக்கு முன்பாகச் சமமாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கிடைய எவ்வித வேறுபாடுகளும் இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

அடுத்ததாக அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டபோது, ஆதியாகம் 2:18-25 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனானவர் கணவனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு வகையான பாத்திரங்களைக் (பங்களிப்புகளைக்) கொடுத்தார். (அவர்களுடைய மதிப்பில் அல்லது பெறுமதியில் வேறுபாடு அல்ல, பங்களிப்பில் வேறுபாடுகள் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்). தேவன் பெண்ணை ஆதாமுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார். இதிலிருந்து ஓர் ஆணுக்கு சம அளவிலுள்ள ஓர் உதவியாளர் அல்லது ஒரு துணையாளர் தேவை என்னும் உண்மையைக் கண்டுகொள்கிறோம்.

ஆதியாகமம் 2:18-20 -இல் பயன்படுத்தப்பட்டுள்ள, “ஏற்றதுணை” என்ற வார்த்தைக்கு எபிரெய மொழியில்அய்ஸர் (ay-zer) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம், மிக இன்றியமையாததும் முக்கியமானதுமான ஆற்றல் மிக்க மீட்பின் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்யக்கூடிய செயலின் பின்னணியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை (ezer) என்னும் பெயர்ச்சொல்லாக பழைய ஏற்பாட்டில் இருபத்தி ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு முறை முதல் பெண்ணாகிய ஏவாளின் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று முறை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உதவி செய்கிற (அல்லது ஆபத்தில் உதவி செய்யத் தவறிய) நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பதினாறு முறை தேவன் நமக்கு உதவியாளராக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏவாளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள, “எற்றதுணை” என்ற வார்த்தையானது வேறு பகுதிகளில், “தேவன் நமக்கு உதவிசெய்கிறவர்” என்ற சொல்லப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே தோராவில் பெண்ணின் பங்கு என்பது குறைந்த மதிப்புடையது அல்ல, மேலும் முக்கியத்துவம் குறைந்ததும் அல்ல. ஆகவே பெண்ணின் மதிப்பும் தகுதியும் ஆணுக்குக் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது. ஆயினும் அவர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பில் வேறுபாடுகள் இருக்கின்றன.

இப்பொழுது மூன்றாம் அதிகாரத்துக்கு வருவோம். ஆணும் பெண்ணும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் பாவத்தில் விழுந்தனர். நீதியும் பரிசுத்தமுமான தேவனால் பாவம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆகவே தேவன் அவர்களுக்குத் தண்டனை வழங்கினார். இதில் ஏவாளுக்கு வழங்கப்பட்ட தண்டனையே, அவள் பிரசவ வேதனைப்படும்போது வலி உண்டாகும் என்பது. ஆயினும் ஏவாளுக்குத் தண்டனை வழங்கிய விதத்திலும் தேவன் எவ்விதப் பாலினப் பாகுபாடும் கட்டவில்லை என்பதை மூன்று கருத்துகளை முன்வைத்து அதை நிரூபிக்க விரும்புகிறேன்.

  1. ஏவாள் முதலாவது பாவம் செய்தாள், பிறகு ஆதாம் பாவம் செய்தான் என்பது உண்மையாயினும், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்டது ஏவாள் மட்டுமின்றி, ஆதாமும் இதற்குக் காரணமாயிருந்த சர்ப்பமும் தண்டிக்கப்பட்டார்கள். தேவன் ஒருபோதும் ஏவாளை மட்டுமே பாவத்திற்குப் பொறுப்பாக்கவில்லை. ஆதாமின் மீதும் சமமாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பதை வேதாகமம் முழுவதிலும் காண்கிறோம். உண்மையில், அவர்கள் கீழ்ப்படியாமல் பாவம் செய்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் தேவன் ஆதாமிடமே முதலாவது விளக்கம் கேட்டதைக் காண்கிறோம். இந்த வசனப் பகுதியில் காண்கிறோம். (ஆதியாகமம் 3:9-11). அதன் பிறகுதான் அவர் ஏவாளிடம் வினவினார். வேதாமத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள பகுதிகளில் ஆதாமே பாவத்தின் மூல காரணராகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை அடிக்கடியாகப் பார்க்கிறோம். (ரோமர் 5, 1 தீமோத்தேயு 2 முதலிய பகுதிகள்). இந்தப் பகுதிகளில் ஆதாமே முழு மனிதகுலத்தின் தலைவராகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் ஆதாமின் மூலமாகவே பாவம் இந்த உலகில் பிரவேசித்தது என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் தேவன் தண்டனை வழங்கும்போது அது முதலில் சர்ப்பத்துக்கும், பின்னரே ஏவாளுக்கும் வழங்கினார்.
  2. தேவன் ஆதாமுக்கும் சர்ப்பத்திற்கும் வெவ்வேறு வகையிலான தண்டனைகளை வழங்கினார். ஆனால் ஏவாளுக்கோ பிரசவத்தின் போது ஏற்படுகிற வலி மட்டுமே தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. ஏதேன் தோட்டத்தில், உழைப்பும் விவசாயமும் இல்லாமலேயே அவர்களுக்குத் தேவையான உணவு ஏராளமாகக் கிடைத்தது. ஆனால் பாவத்திற்குப் பிறகு, ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஆதாம் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் ஏவாளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்போ குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் ஏற்படுகிற வலியாகிய தண்டனை மட்டுமே ஆகும். மாறாக ஆதாமோ தன் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து கடினமாக உழைக்க வேண்டியதாயிற்று. ஆதாம் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தி உழைப்பதன் மூலமாக அனுபவித்தான்.
  3. மேலும் உடனடியாக ஓர் ஆசீர்வாதத்தையும் சேர்த்து வழங்கிய ஒரே தண்டனை ஏவாளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதாகும். அதாவது தண்டனை அடைந்த உடனேயே ஆசீர்வாதம். அவள் பிரசவ வலியால் அவதிப்பட்டாலும், அவள் ஒரு குழந்தையைப் பெறுவாள், அது மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாய் இருக்கிறது.

* அவளுக்குப் பிரசவ வலி உண்டாகும் என்று சொல்லப்பட்ட தண்டனையின் ஊடாக, மேலும் ஒரு வாக்குறுதி அவளுக்கு வழங்கப்பட்டதைக் காண்கிறோம். இந்த வாக்குறுதி சர்ப்பத்திற்கு வழங்கப்பட்ட சாபத்தின் ஊடாகக் காணப்படுகிறது. “உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் (வித்துக்கும்) அவளுடைய சந்ததிக்கும் (வித்துக்கும்) பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவருடைய குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15). இது மேசியாவைப் பற்றிய ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம். பெண்ணின் வித்திலிருந்து ஒரு மீட்பர் இந்த உலகில் தோன்றுவார் என்னும் வாக்குறுதி ஏவாளுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களில் மிகவும் பெரியதாகும்.