படிப்புகள்: 9
Print

      இப்போது நாம் இரண்டாவது குற்றச்சாட்டு நேராக வருவோம். ஏவாள் பாவம் செய்தாள், தண்டனை அனுபவித்தாள். ஆனால் தாங்கள் செய்யாத பாவத்திற்காக எல்லாப் பெண்களும் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?

முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், பாவத்திற்கான தண்டனை பெண்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை, அது ஆண்களுக்கும் வழங்கப்பட்டது. இங்கு ஆண் பெண் பேதமின்றி இருவருக்கும் வழங்கப்பட்டது. எனவே இது பாலியல் ரீதியிலான பிரச்சினை மட்டுமல்ல. இது ஆதாம் மற்றும் ஏவாள் இந்த இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை வழி வழியாக அவர்களடைய பிள்ளைகளுக்கும் கடத்துவதுடன் தொடர்புடையது. அதாவது அவர்களுடைய பாவத்தின் விளைவைச் சந்ததி சந்ததியாக அனுபவிப்பதாகும். ஆகவேதான் இன்றும் கூட அந்தத் தண்டனையின் பாதிப்பு தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே தோராவில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று புலம்புவதற்கு முன், சந்ததிதோறும் தண்டனையின் பாதிப்பு கடத்தப்படுவதை எதிர்மறையான காரியமாக மட்டும் காணமால், நேர்மறையான ஒன்றாகவும் இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆகவேதான், பிள்ளைகள் பெற்றோரின் சுதந்தரத்தை வழி வழியாகப் பெற்றுவருகிறார்கள்.  இந்தத் தண்டனையில் அது சொல்லப்படாவிட்டாலும் கூட, வாழ்க்கை என்னும் பரிசை நாம் பெற்றோரிடமிருந்து தான் பெற்றுக்கொள்கிறோம். இந்த ஆசீர்வாதம் அந்த தண்டனையின் ஊடாகவே அடங்கியிருக்கிறது. ஆதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறித்துப் பார்ப்போம். ஒரு நாட்டின் பிரதம அமைச்சரோ அல்லது ஒரு மாநிலத்தின் தலைமை அமைச்சரோ எடுக்கும் ஒரு முடிவானது அதன் குடிமக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது போல, ஆதாம் மனித இனத்தின் தலைவராக இருப்பதால், அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை முழு மனித குலத்தையும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. மனித சமுதாயத்தில் நாம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருக்கும் வரை, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு இத்தகைய விளைவுகள் உண்டாவது தவிர்க்க முடியாதது ஆகும். ஒரு தலைமைப் பிரதிநிதி என்ற வகையில் ஒரு நாட்டின் தலைவர் எடுக்கும் முடிவுகள், அது போர் போன்ற பெரிய காரியமாக இருந்தாலும், அல்லது சிறிய காரியமாக இருந்தாலும் அது மக்களைப் பாதிக்கிறது. மேலும் ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒரு ஆண் எடுக்கிற காரியங்கள் பிள்ளைகளைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வேலை தொடர்பாகவோ, அல்லது தங்குமிடம் தொடர்பாகவோ அல்லது இடம் பெயர்வது தொடர்பாகவோ எந்த முடிவெடுத்தாலும் அவை பிள்ளைகளின் மீது அழியாத முத்திரையை பதித்துவிடுகின்றன.

“உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” (ஆதி. 3:16) என்று கூறுவதன் மூலம் பாலினங்களுக்கு இடையேயுள்ள சமத்துவமின்மையோடு அதாவது ஆண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதோடு இந்த வசனம் முடிகிறது.

இந்த கேள்வியைச் சிந்திப்பதற்கு முன்னதாக, இது ஒரு திருமண உறவுக்குள் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி பேசுவதால், திருமணம் பற்றிய தேவனின் கண்ணோட்டத்தை அல்லது திருமணத்தில் தேவன் ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்பு முறையைப் பற்றிச் சிந்திப்போம். திருமணம் என்பது தேவனால் திட்டமிடப்பட்டு நிறுவப்பட்டது. ஒரு குடும்பத்தில், பல்வேறு விதமான கடமைகளும், பங்களிப்புகளும், பொறுப்புகளும் உள்ளன. தேவன் ஏற்படுத்திய இத்தகைய கடமைகளையும் பங்களிப்புகளையும் நாம் புரிந்துகொண்டு வாழ்வதே ஒரு சிறந்த குடும்பத்திற்கான எடுத்துக்காட்டாகும். ஒரு குடும்பத்தில் கணவனின் பங்கு என்பது அக்குடும்பத்தைத் தலைமை தாங்கி நடத்துவதாகும். அவன் தன் வீட்டிற்கு சேவை செய்யும் ஒரு அன்பான தலைவனாக விளங்குகிறார். மனைவிக்கும் இதற்கு நிகரான பங்களிப்பு இருக்கிறது. கணவனுக்கு ஏற்ற உதவியாளராக இருப்பதும், அவருடைய தலைமைக்குக் கீழ்ப்படிந்து இருப்பதுமே அவளுடைய கணவனுக்கு நிகரான பங்களிப்பாகும். இந்த உலகத்தில் எந்த நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ எடுத்துக்கொண்டாலும், அங்கு பணிபுரிகிற எல்லாருக்கும் ஒரே மாதிரியான பங்களிப்பு கிடையாது. எல்லோரும் ஒரே பங்களிப்பை அல்லது பொறுப்பை ஏற்று, எல்லாரும் ஓரேவிதமாகச் செயல்பட்டால், அந்தச் சமுதாயத்தில் குறைவுகளும், திறமையின்மைகளும், குழப்பங்களுமே மிஞ்சும். குடும்பம் என்பது ஒரு பெரிய சமுதாயத்தின் மிகச்சிறிய அம்சம் அல்லது நிறுவனம் ஆகும். ஏற்கனவே நாம் விவாதித்தபடி, குடும்பத்திற்கு தேவன் சமமான மதிப்புள்ள, ஆனால் வெவ்வேறு பொறுப்புள்ள பாத்திரங்களை வழங்கியிருக்கிறார். அப்பொழுதே குடும்பம் என்னும் அமைப்பு தன்னுடைய முழுத் திறனுடன் செயல்பட முடிகிறது.

​​​​குடும்ப வாழ்க்கையானது, அன்பு, ஆறுதல், மற்றும் பெண்ணின் ஆசை நிறைவேறுதல் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எளிதானதாக இருப்பதற்குப் பதிலாக, பாவம் உலகத்தில் நுழைந்ததால் அது வலிந்து நடத்துகிற ஒன்றாக மாறிவிட்டது. பாவத்தின் விளைவாகக் கணவன் மனைவி ஆகிய இருவரின் மனப்பான்மையும் மொத்தமாகத் தலைகீழாக மாறிவிட்டது. மனைவியானவள் தன் கணவனின் தலைமைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்திருப்பதற்குப் பதிலாக, பாவம் பிரவேசித்ததன் காரணமாக இப்போது வலுக்கட்டாயமாகக் கீழ்ப்படிகிற நிலைமைக்கு ஆளாகிவிட்டது. உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும் என்னும் அறிக்கையானது, மனைவி கணவன் மீது கொண்டிருக்கும் எளிய ஆசையன்று, மாறாக அது கணவனையே ஆளுகை செய்ய வேண்டும் என்னும் ஆசையாகும். “அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” (ஆதி. 4:7) என்று காயீனை ஆளுகை செய்ய வேண்டும் என்கிற பாவத்தின் ஆசையைப் பற்றிச் சொல்லும்போதும் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்” என்ற வசனத்தின் அர்த்தம், “பெண் தன் கணவனைக் கட்டுப்படுத்த விரும்புவாள், ஆனால் அவனோ அதையும் மீறி அவளுடைய எஜமானனாக இருப்பான்” என்பதாகும். தேவன் கொடுத்த பொறுப்பை அழகான முறையில் வெளிப்படுத்த வேண்டிய மனைவி என்னும் பாத்திரம், பாவத்தின் காரணமாக இப்பொழுது வெறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. பாவம் நுழைந்ததின் விளைவாக பெண்ணைப் பற்றியிருந்த ஆசையானது அவளது கணவனின் அதிகாரத்தால் உறவுகள் விரக்தியடையும் நிலைக்குச் சென்றுவிட்டது. மேலும் இந்த ஆசையானது, வீழ்ந்துபோன உலகில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்களுக்கு ஓர் ஆதாரமாகவும் ஆகிவிட்டது. ஆயினும், பாவத்தின் தாக்கத்தால் முழுமையான வகையில் வாழ்க்கை மூழ்கியிருந்தாலும், இது எந்த வகையிலும் குடும்பத்திலுள்ள அதிகாரத்தை அகற்றிப் போடாமல், அதிலுள்ள வெவ்வேறு பாத்திரங்கள் எவ்வாறு தங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றப்படும் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது.