படிப்புகள்: 7
Print

      லோத்தின் மனைவி ஏதோ திரும்பி சோதோம் நகரத்தின் அழிவின் எச்சங்களைச் சற்றுத் திரும்பிப் பார்த்ததற்காக தேவன் அவளைக் கொன்ற செயல் பெண்களின் மீது அவருக்கு இருந்த குறைவான அபிப்பிராயத்தினால் தானா?

லோத்தும் அவனுடைய குடும்பத்தாரும் நகரத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக்கூடாது என்று தேவதூதர்கள் தெளிவாக எச்சரித்திருந்தார்கள். எனவே, இது “வெறுமனே திரும்பிப் பார்க்கிற” ஒரு செயலாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் ஓடிச்செல்லும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு நேரடிக் கட்டளை தேவதூதர்களிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. முழு நகரமும் எரிக்கப்படும்போது அவர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டனர். எனவே தேவன் அவர்கள்மீது காட்டிய மாபெரும் இரக்கத்துக்கு அவர்கள் வாழ்க்கையில் காட்டவேண்டிய பிரதி உபகாரத்துக்கு அடையாளமாகவே திரும்பிப் பார்க்க வேண்டாம் என்னும் கட்டளை கொடுக்கப்பட்டது. இதற்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆனால் தேவதூதர்களால் கொடுக்கப்பட்ட ஒரு நேரடியான கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாதது லோத்தின் மனைவியின் குற்றமே ஆகும். வேண்டுமென்றே சட்டங்களை மீறுகிற செயல்களுக்கு எந்த நீதிமன்றமும் தண்டனையே வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவேதான் லோத்தின் மனைவி உப்புத் தூணாக மாறினாள். இது அவள் ஒரு பெண்ணாக இருப்பதால் கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல. லோத்து திரும்பிப் பார்த்திருந்தாலும், அவனது கீழ்ப்படியாமையின் விளைவாக அவனும் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் தண்டனையைச் சந்தித்திருப்பான். எனவே, லோத்தின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் தேவன் எந்த வகையிலும் பாலினப் பாகுபாடு பார்க்கிறவர் அல்ல, என்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன், பாவத்தை எந்தப் பாலினத்தவர் செய்தாலும், யாரையும் பொருட்படுத்தாமல் அதைத் தண்டிக்கிறவர் என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.