படிப்புகள்: 8
Print

      லேவியராகமம் 15:19-30: ஒரு பெண் தன் மாதவிடாய் காலத்தில், அவள் தொட்டதெல்லாம் தீட்டாக இருக்கிறது என்றும் அவள் தொட்டது எதைத் தொட்டாலும் தொட்டவர்களும் தீட்டாக இருக்கிறார்கள் என்றும் இந்த வேதபகுதி சொல்கிறது. தேவன் உருவாக்கியதாகக் கூறப்பட்டும் ஒரு உயிரியல் செயல்பாடு, அவளுக்கு வரும்போது (உதிரப்போக்கு) அது தீட்டாக எண்ணப்படுவதும், அதனினிமித்தம் அவள் தண்டிக்கப்படுவதும் வேடிக்கையாக உள்ளது. அவர் உருவாக்கிய ஒன்றை அவரே தீட்டு என்று சொல்வது தவறானது அல்லவா?

இந்த பத்திகளை நாம் படிக்கும்போது, இந்த கட்டளைகள் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டவை என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். யூத பாரம்பரியத்தில் சுத்திகரிப்புச் சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே தீட்டு என்று கூறுவது, நான் குறிப்பிட்டது போல், அது பாவத்தையோ அல்லது தாழ்வு மனப்பான்மையையோ குறிப்பிடுவதில்லை. பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவளைத் தனிமைப்படுத்துவது அவளுக்கு அளிக்கப்படும் தண்டனை அல்ல. மாறாக இது தேவனுடைய மக்களுக்கான தரத்தை நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடு என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.

உதிரப்போக்கு நாட்களில் தேவனுடைய மக்கள் அவரின் நிமித்தம் தங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, தேசத்தின் நலனுக்காக மீண்டும் நல்ல முறையில் குழந்தை உண்டாகும் திறனுடன் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் திரும்பி வருவதற்கான ஏற்பாடு ஆகும். தேவன் இஸ்ரவேல் மக்களை தம்முடைய தனித்துவமானவர்களாகத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி, பிற தேசங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக வாழும்படி அழைத்திருந்தார் என்பதை நினைவில் வையுங்கள். மேலும், தேவன் அவர்கள் நடுவில் தம்முடைய “வாசஸ்தலத்தையும் - ஆசரிப்புக்கூடாரம்” உருவாக்கியிருந்தார். (லேவியராகமம் 15:31).

அந்த பெண்ணியவாதி குறிப்பிடாத மற்றொரு குறிப்பிடத்தக்க காரியம் என்னவென்றால், இந்தச் சுத்திகரிப்பின் முறைமைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தன என்பதே ஆகும். இது பெண்களுக்கு மட்டும் அல்ல. எனவே இது எந்தப் பாலின பாகுபாட்டையும் குறிக்கவில்லை. இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது மட்டுமின்றி, யாரிடமிருந்தும் எந்த பிரமியத்தினால் உண்டான தீட்டு வெளியேற்றத்தின் போதும் தனிமைப்படுத்தலும் மற்றும் சரீர சுத்திகரிப்பும் தேவைப்படும். லேவியராகமம் 15 -ஆம் அதிகாரத்தில் நான்கு வகையான தீட்டு வெளியேற்றத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1) ஆணின் பிரமியம் வெளியேற்றப்படுதல் (ஒரு வியாதியாக தொடர்ந்து வெளியேறுதல்) (வசனங்கள் 1-15)

2) ஆணின் இந்திரியம் வெளியேற்றப்படுதல் (வசனங்கள் 16-18)

3) பெண்ணின் மாதவிடாயின் உண்டாகிற உதிரப்போக்கு (வசனங்கள் 19-24)

4) பெண்ணுக்கு பால நாட்களாகதொடர்ந்து ஏற்படும் உதிரப்போக்கு (வசனம் 25-30).

இங்கே சொல்லப்பட்ட பிரச்சினைகள் இருபாலருக்கும் ஏற்படுகிறதைக் காண்கிறோம். இரு பிரச்சினைகள் ஆண்கள் சம்பந்தப்பட்டதாகவும், இரு பிரச்சினைகள் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதைக் காண்கிறோம். மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுத்திகரிப்பின் விதிகள் ஒரே மாதிரியானவை ஆகும். எனவே இந்த வசனங்களின் வாயிலாக தேவன் பாலினப் பாகுபாடு உடையவர் என்று தீர்மானிக்கமுடியாது. மாறாக இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் தேசம் தனித்துவமாக விளங்கும்படி அவரால் கொடுக்கப்பட்ட உயரிய தரநிலைக் கட்டளைகளாகும்.

இதுபோன்ற உடல் வெளியேற்றங்கள் முடிவடைந்தவுடன் சுத்திகரித்தல் முறைமை சொல்லப்பட்டுள்ளது. அது முடிந்த பிறகு, அவர்கள் தங்களது சரீரத்தை தியாகபலியாக ஒப்புவித்து, தேவனுக்கென்று தங்களை மறு பிரதிஷ்டை செய்வதற்காக ஏற்பாடாக இது இருக்கிறது.

மேலும், ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாயின் போது, ஏழு நாட்கள் தனிமைப்படுத்துவது அவர்களுக்கு போதுமான ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தர அனுமதிக்கிறது. இது நவீன கால பெண்களுக்குக்கூட அரிதாகக் கிடைக்கிற ஒன்றாகும்.

லேவியராகமம் 18:19: பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களைப் பார்ப்பது கூட தவறு என்று இந்த வசனம் சொல்கிறதே.

லேவியராகமம் 18:19: இந்த வசனம் உ.ண்மையிலேயே என்ன சொல்கிறது என்று பார்ப்போம்: “ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே”.

முதலாவதாக, இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே, ஒரு பெண்ணை மிகவும் தவறான வகையில் சித்தரிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இது மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள முயற்சிப்பது பற்றியது. இங்கு தடை என்பது, பெண்களைப் பார்க்கக்கூடாது என்றல்ல, மாறாக மாதவிடாய் காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அதன் பொருட்டு அவளை நிர்வாணமாக்காமலிருப்பது பற்றியது ஆகும். நேர்மையாகச் சிந்திப்போமானால், இத்தகைய தடையானது யாருக்குச் சாதகமாக இருக்கிறது, ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? நிச்சயமாகவே இது பெண்ணுக்கே சாதகமானது ஆகும். ஒரு பெண் மாதவிடாய் காலத்தில், மனரீதியாக, உடல் ரீதியாகவும் மிகவும் பெலவீனமாக இருப்பாள். இந்த நேரத்தில் உடலுறவு என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதனுடைய வலியைப் புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்தில் உடலுறவுத் தடை என்பது பெண்களைக் குறித்த காரியத்தில் தேவனுடைய கனிவான இருதயத்தையே என்னால் பார்க்க முடிகிறது. இதன் மூலம் தேவன் ஒரு பாலியல் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பது தெளிவான உண்மையாகும்.