படிப்புகள்: 8
Print

       ஜெபம் தேவன் ஏற்படுத்திக் கொடுத்த நியமங்களில் ஒன்றாகும். நாம் தனிப்பட்ட முறையிலும் ஜெபிக்க வேண்டும்; அவ்வாறே பொதுக் கூடுகைகளிலும் நாம் ஜெபிக்க வேண்டும். ஆவியினால் நிறைந்த மன்றாட்டு ஜெபத்தை  ஏறெடுப்பவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஜெபம் காரியங்களைச் சாதிக்கக்கூடியது. யார் ஜெபிக்கிறார்களோ அவர்களும், யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவர்களும் தேவனிடமிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஜெபமே தேவனின் இருதயத்தைத் திறப்பதற்கான வழியாகவும், ஜெபிக்கிறவர்களின் வெறுமையான ஆத்துமா நன்மையால் நிரப்பப்படுவதற்கான வாய்க்காலாகவும் விளங்குகிறது. ஜெபத்தின் வாயிலாக ஒரு கிறிஸ்தவர் தனது இருதயத்தை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பரிடம் திறந்து காட்டுவதுபோல தேவனிடம் வெளிப்படுத்திக் காட்ட முடியும். மேலும் அவருடன் நெருக்கமாக உறவாடி நட்பைப் பெற்று, ஒரு புதிய சாட்சியாகத் திகழ முடியும். ஜெபம் ஒரே விதமாக, மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒருவிதமான மந்திரச் சொல்போன்று இராததால், நாம் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கும், பொது வெளியில் ஜெபிக்கும்போதும் வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும். அவ்வாறே ஜெபிக்கும் முறையிலும் நாம் வித்தியாசத்தைக் காட்டமுடியும், அதாவது உரத்த சத்தத்தோடும் நாம் ஜெபிக்க முடியும், வெளியே சத்தம் கேட்காமல் மனதுக்குள்ளும் ஜெபிக்க முடியும். நாம் நமது தாலந்துகளைப் பயன்படுத்தி சத்தமாகவும் ஜெபிக்க முடியும், கிருபையைப் பயன்படுத்தி அமைதியாகவும் ஜெபிக்க முடியும். எவ்வாறாயினும், கைகளைக் கூப்பி, கண்களை மூடி, வாயை அசைத்துச் ஜெபிக்கும்போது நமது இருதயம் அதனுடன் இசைந்து செல்லாவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. நாம் ஆவியோடும் ஜெபிக்க வேண்டும், அதே வேளையில் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும். ஜெபம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் காட்டக்கூடிய நான்கு காரியங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

  1. ஜெபம் உண்மையானதாக இருக்க வேண்டும்.
  2. ஜெபம் ஆவியானவரோடு (ஆவியில் ஜெபித்தல்) இணைந்து செல்ல வேண்டும்.
  3. ஆவியோடும் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும்.
  4. நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ அந்தக் காரியத்தைப் பற்றி சுருக்கமாக ஜெபிக்க வேண்டும்.