படிப்புகள்: 6
Print

      ஜெபம் என்பது அறிவோடும். உண்மையோடும், அன்போடும், தேவனிடம், கிறிஸ்துவின் மூலம், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, அவர் வாக்குப்பண்ணின காரியங்களுக்காக, தேவனின் வார்த்தைப்படி, திருச்சபையின் நன்மைக்காக, விசுவாசத்தில் நம் சித்தத்தை தேவனது சித்தத்திற்கு கீழ்ப்படுத்தி, நம் இருதயத்தை அல்லது ஆத்துமாவை அதில் ஊற்றிவிடுவதாகும்.

மேற்கூறிய இலக்கண விதியில் ஏழு காரியங்களை கவனிக்கலாம்:

(1) ஒரு உண்மையான

(2) ஒரு அறிவான

(3) ஒரு அன்பான தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் ஊற்றிவிடுவதாகும்

(4) பரிசுத்தாவியின் உதவி அல்லது பெலத்தினால்

(5) தேவன் வாக்குப் பண்ணின காரியங்களுக்காக அல்லது அவரது வார்த்தையின்படி

(6) திருச்சபையின் நல்வாழ்வுக்காக

(7) விசுவாசத்தில் கடவுளின் சித்தத்துக்கு நம்மை கீழ்படுத்துதலாகும்.

உண்மையான ஜெபம் எது?

முதலாவது உத்தமத்தோடு தேவனிடம் நம் ஆத்மாவை ஊற்றிவிடுதல்:- உத்தமம் என்பது ஒரு கிருபை. கிறிஸ்தவனின் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டிய ஒரு குணம். அது இல்லாவிட்டால் தேவன் நம் செயல்களை ஏற்கவே மாட்டார். "அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன். என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." என்று தாவீது கூறுகிறார். (சங்கீதம் 66:17, 18).

உத்தமம் என்பது ஜெபத்தின் ஒரு பங்கு, அதில்லாமல் தேவன் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (எரேமியா 29:13). எனவே (ஓசியா 7:14) -ல் "தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்: என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.'

இப்படிப்பட்ட ஜெபத்தைக் தேவன் வெறுக்கிறார். ஏனெனில் அப்படிப்பட்ட ஜெபம் உத்தமத்திற்கு மாறானது; ஏமாற்றுவதற்கு சமம், வெளிப்படையான வேஷம், மனுஷரால் காணப்படுவதற்கும், புகழப்படுவதற்காக மட்டும் செய்யப்படுகின்றது. உத்தமத்தை நாத்தான்வேலிடம் அத்திமரத்தின் கீழ் கிறிஸ்து கண்டு அதை மதிக்கின்றார். (யோவான். 1:47) ஒரு வேளை இந்த நல்ல மனிதன் தேவனிடம் தன் இருதயத்தை ஊற்றிக் கொண்டிருக்கலாம். உத்தமத்தோடும், ஏமாற்றாத வகையிலும் தேவனிடம் ஜெபம் செய்து கொண்டிருக்கலாம். இவ்வகை உத்தமமான ஜெபத்தைக் தேவன் மதிக்கின்றார்.

'செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்' (நீதிமொழிகள் 15:8).

ஏன் ஜெபத்திற்கு உத்தமம் அவசியமென்று பார்ப்போம். ஏனெனில், உத்தமம், நம் இருதயத்தை எளிமையான நிலையில் தேவனிடம் எடுத்துக்காட்டுகிறது. தன்னை அழிக்காத அளவுக்கு சீர் தூக்கிப்பார்க்கவும் உதவுகின்றது. மெச்சிக்கொள்ளாமல், முழு அளவில் தன் நிலையை காட்டுகின்றது. (எரேமியா 31:18) நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன். என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்.

உத்தமம் என்பது நம் சொந்த நிலையை ஒரே சீராய் காண்கின்றது. நாம் ஒரு மூலையில் நின்றாலும் சரி. உலக மக்களுக்கு முன்பாக நின்றாலும் சரி, இரண்டு முகமூடிகள் போட்டுக்கொள்ள அது விரும்புவதில்லை. ஒன்று மனிதருக்கு முன்பாக உபயோகப்படுத்துவதற்கும் தேவனிடம் அது இருக்கவேண்டும். நமது கடமையாகிய ஜெபத்தில் அது நம்மோடு இருக்கும். உதட்டளவில் அது மகிழ்கின்ற ஒன்றல்ல. தேவனைப் போலவே, உத்தமம் என்பது இருதயத்தைப் பார்க்கின்றது. இருதயத்திலிருந்துதான் உண்மை ஜெபம் வருகின்றது.

அறிவான ஜெபம் எது?

இரண்டாவது அறிவாற்றலோடு செய்யப்படுகின்ற ஒன்று உண்மை ஜெபமாகும். அது அநேகர் எண்ணுகின்றபடி தேவனைப் புகழக்கூடிய, அல்லது அர்த்தமற்ற சில வார்த்தைகளை சொல்வதைக் குறிக்காது. ஆனால், அறிவாற்றலோடு கூடிய இருதயத்தின் உணர்வுகளைக் குறிக்கும். அப்படிப்பட்ட உணர்வுகள் சில சமயங்களில் பாவத்தைப் பற்றியனவாய் இருக்கும். சில சமயங்களில் நாம் பெற்ற நன்மைகளை நினைத்ததாக அமையலாம்; சில சமயங்களில் தேவனை மன்னிக்க ஆயத்தமுள்ளவரென்பதை காட்டுவதாக அமையலாம்.

1) பாவத்தின் அகோரத்தினால் மன்னிப்பு இரக்கத்தை பெற விரும்பி நிற்கின்ற ஒரு நிலை - ஆத்மா உணர்வுள்ள நிலையில் காணப்படுகின்றது. ஏக்கத்தோடும். அழுகையோடும், உணர்வுகள் எழும்பி அவை இருதயத்தை உடையச் செய்கின்றது. இருதயம் கவலையோடு இருக்கின்ற சமயம், உண்மை ஜெபம் அப்பாரத்தைக் கிழித்துக்கொண்டு வெளிவருகின்றது. அதை அன்னாளின் ஜெபத்தில் பார்க்கிறோம். (1 சாமுவேல் 1:10) தாவீது ராஜா (சங்கீதம் 69:3, 38:8-10) ஆண்டவரிடம் எவ்வளவு உணர்வுகளோடு விண்ணப்பிக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். அதேபோல் எசேக்கியா 'புறாவைப் போல் புலம்புகிறார். 'எப்பிராயீம் தன்னைப் பற்றியே புலம்புகிறார். (எரேமியா .31:18,19). பேதுரு மனங்கசந்து அழுதார். (மத்தேயு 26:75) கிறிஸ்துவும் ''தேவனை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி" (எபிரேயர் 5:7) என்று பார்க்கிறோம். மேலும், (சங்கீதம் 116: 3,4; 77:2; 38:6) போன்ற வசனங்களில் தாவீது ராஜா, தேவனை நோக்கி பாவத்திற்காக அழுது கெஞ்சி மன்றாடுவதைப் பார்க்கிறோம்.

2) அடுத்தபடியாக சில சமயங்களில் இவ்வித இரக்கத்தை தாவீது பெற்றுக்கொண்டு பெலனடைந்து, ஆறுதலடைந்ததாகப் பார்க்கிறோம். தேவனிடம் மன்னிப்பை பெற்றிருப்பதைப் பற்றி வாசிக்கிறோம். (சங்கீதம் 103:1-4) பெற்ற இரக்கத்திற்காக நன்றி செலுத்துகின்ற ஜெபம் மிகவும் வல்லமையுள்ளது. இதை (பிலிப்பியர் 4:6, 7) -ல் தெளிவாகப் பார்க்கிறோம்.

3) சில சமயங்களில், தேவன் வாக்குப்பண்ணி, நாம் பெறவேண்டிய இரக்கங்களைச் சொல்லியும் ஜெபிக்கலாம். இதற்கு உதாரணங்களாக, (2 சாமுவேல் 7:27) தாவீது ராஜாவைப் பார்க்கலாம். மேலும், (ஆதியகாமம் 32:10,11) (தானியேல் 9:3,4) -ல் வாசிக்கிறோம்.

ஒரு அன்பான தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் ஜெபிப்பது

அடுத்தபடியாக ஜெபம் என்பது வாஞ்சையோடும் அன்போடும் பிரியத்தோடு தேவனிடம் நம் ஆன்மாவை ஊற்றி விடுவதாகும். இதை (சங்கீதம் 42:1) "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது." என்று பார்க்கிறோம்.

(சங்கீதம் 84:2) "என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது."

மேலும் (சங்கீதம் 119:40) "இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்."

(சங்கீதம் 119:20) ''உமது நியாயங்கள் மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது."

(தானியேல் 9:19) "ஆண்டவரே. கேளும், ஆண்டவரே மன்னியும்,

ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்."

(லூக்கா 22:44) "இயேசு மிகுந்த வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்".

ஆனால் அநேகர் இன்றைக்கு ஜெபிக்கும் பழக்கமில்லாதவர்களாக நம்மிடையே காணப்படுகிறார்கள். அவர்கள் ஜெபத்திற்கு அந்நியர், சரீரப்பிரகாரமாக முழங்கால் படியிடுவதும், உதட்டை அசைப்பதுமாகக் காணப்படுகிறார்கள். நம்முடைய வாஞ்சைகள், பிரியம் அதில் சேரும் பொழுதுதான், நாம் முழு மனிதனாக ஜெபிக்க முடியும். அப்படி ஜெபிக்கும்பொழுது மட்டுமே, கேட்ட காரியத்தை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ளுவோம். அதோடு கிறிஸ்துவின் ஐக்கியம், சமாதானத்தையும் பெற்றுக்கொள்வோம். ஆகவே பரிசுத்தவான்கள், தங்கள் முழு பலத்தோடு ஜெபிப்பதும். அதற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்து கேட்ட காரியம் கிடையாமல் திரும்பிப்போவதே கிடையாது.

அநேகர் இன்று தேவ பயமில்லாமல், பொறாமையால் தூண்டப்பட்டு, பலனற்ற ஜெபத்தை செய்வதனால் ஜெபத்தின் உண்மையான வல்லமையை அறிந்து கொள்ளமுடிவதில்லை. அவர்களில் அநேகருக்கு, மறுபடியும் பிறத்தல் குமாரன் மூலமாய் தேவனோடு தொடர்பு கொள்ளுதல், கிருபையின் சக்தியால் பாவம் கழுவப்படுதல் போன்றவற்றை உணரமுடியாமல் போய்விடுகிறது. எனவேதான் அவர்கள் ஜெபம் செய்தும், தங்கள் பாவமான, கேடான, விபசார, குடிகார வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாமல் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவ மக்களையும் கூட, தங்கள் பொறாமை, கெட்ட குணத்தால் துன்புறுத்துகின்றார்கள்.ஆ! எவ்வளவு பெரிய நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆக்கினையிலிருந்து அவர்கள் ஜெபமும் மாய்மாலமான எண்ணங்களும், திட்டங்களும் அவர்களை விடுவிக்கவே மாட்டாது.

ஒரு மனிதனின் உண்மை ஜெபமானது தன் இருதயத்தை முழுவதுமாக தேவனிடம் திறந்து காட்டுவதாகும். (சங்கீதம் 38:9) மேலும் ''என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது." (சங்கீதம் 42: 2,4), என் உருகிய உள்ளத்தை தேவனிடம் ஊற்றிவிடுகிறேன். என்பதுபோல் கூறுகிறார்.

அதாவது ஜெபம் என்பது தமது முழுபலன், ஜீவனோடு ஜெபித்தல் ஆகும் என்று அறிகிறோம். மேலும் 'எக்காலத்திலும் அவரை நம்புங்கள். உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள். தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் (சங்கீதம் 62:8). இப்படிப்பட்ட ஜெபத்தில் ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. நம்மை அடிமைத் தனத்தினின்று விடுவிக்கும் ஜெபம் இது. அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரை தேடுவாய். உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் தேடும்பொழுது அவரைக் கண்டடைவாய்? (உபாகமம் 4:29).

மேலும் ஜெபம் நம் இருதயத்தை தேவனிடம் ஊற்றி விடுவதாகும். இது ஜெபத்தின் உன்னத நோக்கத்தைக் காண்பிக்கிறது. வல்லமையுள்ள தேவனிடத்திற்கு அது செல்லுகிறது. எப்பொழுது நான் உமது சந்நிதியில் வந்து நிற்பேன், என்று ஜெபிக்கிற உள்ளம், உலகத்தின் திருப்தி தேவனிடம் மட்டுமே இளைப்பாறுதலும் மன திருப்தியும் இருப்பதை காண்கிறது. (1 தீமோத்தேயு 5:5) -ல் "உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய். இரவும் பகலும், வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள் " என்று கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் தாவீது சொல்கிறார். "கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். உமது நீதியினிமித்தம் என்னை சாய்த்து என்னை ரட்சியும். நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும். என்னை இரட்சிப்பதற்கு கட்டளையிட்டீரே. நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாயிருக்கிறீர். என் தேவனே துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். கர்த்தராகிய ஆண்டவரே நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்" (சங்கீதம் 71:1-5).

அநேகர் தேவனைப்பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் சரியான ஜெபம் என்பது தேவனை தன் நம்பிக்கையாய்க் கொண்டிருக்கிறது. உண்மை ஜெபம் தேவனைத் தவிர வேறெதையும் முக்கியமானதாகக் காண்பதில்லை. நாம் ஏற்கனவே சொன்னதுபோல, அதுதான் உண்மை உணர்வோடு, அறிவாற்றலோடு, உள்ளான அன்போடு செய்யப்படுகிற ஜெபமாகும்.

அடுத்தபடியாக, இப்படிப்பட்ட ஜெபம், கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் செல்லவேண்டும் என்று பார்க்கிறோம். ஏனெனில் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே ஆத்துமாவுக்கு தேவனிடம் சேரமுடியும். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். (யோவான். 14:14) இதைப்போலவே தானியேலும் ஜனங்களுக்காக கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்தார். "இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். ''. (தானியேல் 9:17). அப்படியே தாவீதும் ஜெபித்தார். "கர்த்தாவே, உமது நாமத்தினிமித்தம் அதாவது கிறிஸ்துவுக்காக மன்னித்தருளும்'' (சங்கீதம் 25: 11). ஆனால், தேவனிடம் கிறிஸ்துவின் மூலமாக ஜெபத்தில் வருவது ஒரு கடினமான காரியமாகும். ஒரு மனிதன் அறிவாற்றலோடு, அன்போடு வந்தாலும், கிறிஸ்துவின் மூலமாக வருவது கடினம். ஏனெனில் அவர் மூலமாக வரவேண்டுமானால் அவரைப்பற்றி அவன் அறிந்திருக்க வேண்டும். 'விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும். அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரேயர் 11:6) மோசேயும் இப்படியே ஜெபிக்கிறார். (யாத்திராகம் 32:13)

இந்த கிறிஸ்துவை பிதா ஒருவர் மட்டுமே நமக்கு காண்பிக்க முடியும். (மத்தேயு 16:27; 16:16) கிறிஸ்துவின் மூலம் வருவதென்றால் தேவனின் ஒத்தாசையினால், கிறிஸ்துவின் நிழலில் தங்குவதற்கு சமானமாகக் கூறலாம்.

எனவே, தாவீது அவரைப் பற்றி "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.'' (சங்கீதம் 18:2; 27:1: 28:1). ஏனெனில், அவரால் சத்துருக்களை மேற்கொண்டது மாத்திரமல்ல, அவரால் பிதாவாகிய தேவனிடம் ஒத்தாசை பெற்றார். தேவன் ஆபிரகாமிடம் "நான் உனக்கு கேடகம்" என்று கூறுகிறார். (ஆதியாகமம் 15:1) கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் வருகிற மனிதனுக்கு விசுவாசம் தேவை. விசுவாசம் உடையவன் தேவனால் பிறந்து, தேவனுடைய பிள்ளையாய் மாறுகிறான். இதனால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் அவயமாகின்றான். (யோவான் 3:5,7; 1:12)

கிறிஸ்துவின் அவயமாக வரும்பொழுது, தேவன் அவனை கிறிஸ்துவின் அங்கமாகவும், அவரது சரீரமாகவும், மாம்சமாகவும், எலும்பாகவும். தன்னோடு, பிரித்தெடுத்தல், மனமாறுதல், உயிர்ப்பிக்கப்படுதல் என்பவற்றின் மூலம் ஏற்றுக்கொள்ளுகிறார். பரிசுத்த ஆவியையும் அவன் உள்ளத்தில் வைக்கிறார். ஆகவே, இப்பொழுது அவன் கிறிஸ்துவின் புண்ணியங்களினால் அவரது இரத்தம், நீதி, வெற்றி, பரிந்து பேசுதல் இவற்றின் மூலம் வருகிறான். ஆகவே, தம் குமாரன் மூலம் இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்படுகிறான். ஆகவே அவன் தேவனிடம் கிறிஸ்துவின் மூலம் வந்திருக்கிறான். பரிசுத்த ஆவி அவனுக்குள் இருப்பதனால் தன் இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிட முடியும்.

பரிசுத்த ஆவியின் உதவி அல்லது பெலத்தினால் ஜெபிப்பது

அது மட்டுமல்ல, ஆவியானவரின் துணை, பலன்கொண்டு ஜெபிப்பதுதான் உண்மை ஜெபமாகும். மேற் கூறப்பட்டுள்ள காரியங்களோடு, ஆவியானவரின் பலத்தைச் சேர்த்து ஜெபிக்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஆரோனின் குமாரர் செய்ததுப் போல, அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்து அதன் விளைவாக மரித்தது போலாகிவிடும் (லேவியராகமம் 10:1,2). மேலும் ஆவியானவர் துணையின்றி செய்யும் ஜெபம், தேவ சித்தத்திற்கு ஏற்றதாயிராது என்று பார்க்கிறோம். (ரோமர் 8:26,27).

தேவன் வாக்குப் பண்ணின காரியங்களுக்காக அல்லது அவரது வார்த்தையின்படி ஜெபிப்பது

அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டியது, நம் ஜெபம் தேவ சித்தத்திற்கும், வேத வசனத்திற்கும் ஒத்ததாக அமையவேண்டும். தேவ வசனத்திற்கு ஒத்திருக்கும் பொழுதுதான் அது உண்மை ஜெபமாக விளங்க முடியும். தேவ வசனத்திற்கு மாறுபட்டிருந்தால், அது தேவதூஷணமாக, அர்த்தமற்ற வார்த்தைகளாகவே இருக்கும். எனவே தாவீது தமது ஜெபத்தில் எப்பொழுதும் தன் கண்ணை வேத வசனத்தின் மேல் வைத்திருந்தார். "என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது. உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.'' (சங்கீதம் 119:25-28) மேலும் அதே

சங்கீதத்தில், வசனங்கள் 41, 42, 58, 65, 74, 81, 82, 107, 147, 154, 169, 170 ஆகிய வசனங்களில் பார்க்கலாம். மேலும் 'நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை நினைத்தருளும்' (வசனம் 49)

உமது அடியேனுக்காக பரிசுத்த ஆவியானவர் நம்மை வசனத்தைக் கொண்டே நம் இருதயத்தை உணர்த்துகின்றார். எனவே, நாம் அவரது வசனத்தைக் கொண்டே தேவனிடம், விவாதம் செய்யவோ அல்லது விண்ணப்பம் செய்யவோ போகின்றோம். இதைப் போலவே தேவனது வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகிய தானியேலிடம் காண்கிறோம். அவர் புஸ்தகங்களின் மூலம். இஸ்ரவேலின் சிறையிருப்பின் வருஷங்கள் முடியப்போகிறதென்று அறிந்துக் கொண்டேன். நம் ஜெபங்களுக்கு பதிலளிப்பார் என்று நிச்சயம் நம்பவேண்டும்.

ஆனாலும் நீதிமான்கள், தேவனுடைய சித்தத்திற்கு தங்களை கீழ்ப்படுத்தி ஜெபிக்கும் பொழுது. தேவனுடைய அன்பை சந்தேகிக்கவோ, அதை வினவவோ வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் எல்லா சமயங்களிலும் ஞானத்தோடு நடந்துக்கொள்ள முடியாத காரணத்தால், சாத்தான் அவர்களை மேற்கொள்ளக் கூடும். அவர்களை தவறாக ஜெபிக்கவும் தூண்டலாம். தங்கள் நன்மை. தேவனின் மகிமை இவற்றிற்கு மாறாகவும் ஜெபிக்கத் தூண்டலாம். 'நாம் எதையாகிலும் அவர் சித்தத்தின் படி கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்கு செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளை பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 5:14,15) ஏற்கனவே நாம் கவனித்தபடி, பரிசுத்த ஆவியின் துணையின்றி ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு விடை கிடைப்பதில்லை. ஏனெனில் அது தேவ சித்தத்திற்கு முரண்பட்டு காணப்படுகிறது.