படிப்புகள்: 5
Print

'நான் ஆவியோடு விண்ணப்பம் பண்ணுவேன்'

ஆவியோடு விண்ணப்பித்தல் என்பது ஜெபிக்கின்ற மனிதனைக் குறிக்கிறது. தேவன் தன்னை அங்கிகரிக்கின்ற வகையில் அவரிடத்தில் கிறிஸ்துவின் மூலம் வரவேண்டும். தேவனிடம் நாம் உண்மையோடும், அன்போடும், அறிவாற்றலோடும் வருவது என்பது தேவ ஆவியானவராலே நடைபெறக்கூடிய ஒரு காரியமாகும்.

உலகத்தில் ஒரு மனிதனாவது ஒரு சபையாவது பரிசுத்த ஆவியானவர் ஒத்தாசையின்றி ஜெபத்தில் தேவனிடம் வரவேமுடியாது. 'ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை கிறிஸ்துவின் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்'. (எபேசியர் 2:18). மேலும் "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.'' (ரோமர் 8:26,27) வேதத்தில் விண்ணப்பத்தின் ஆவியைப்பற்றி இவ்வளவு கூறப்பட்டிருப்பதாலும், அதில்லாமல் மனிதன் ஜெபிக்க முடியாததாலும், அதைப் பற்றி சில கருத்துக்களைக் கீழே பார்ப்போம்.

முதலாவது நாம் கவனிக்க வேண்டியது பவுலடியாரும். அப்போஸ்தலருமாகிய அவர்கள், முக்கியஸ்தராயும், ஆதி சபையைக் கட்டுகிறவர்களாயும், மூன்றாம் வானமட்டும் சென்றவர்களாமாயிருந்த போதிலும், நாம் இன்னின்ன காரியத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று அறியாதவர்களாயிருக்கிறோமென்று கூறியுள்ளார்கள்.

பரிசுத்த ஆவியானவர் துணையின்றி நாம் எக்காரியங்களுக்காக, யாரிடம், யார் மூலம் ஜெபிக்க வேண்டுமென்று அறிந்துக்கொள்ளவே முடியாது. கிறிஸ்துவின் மூலம் தேவனோடு நாம் ஐக்கியப்பட முயற்சிப்பதா? விசுவாசத்திற்காகவா, கிருபையினால் அங்கீகாரம் பெறுவதற்காகவா, இருதய சுத்திகரிப்பிற்காகவா. எதற்காக ஜெபிப்பது? இதற்கு விடையை தெரிந்துகொள்ளவே முடியாது. ஏனெனில் "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்" (1 கொரிந்தியர் 2:11). இவ்விடத்தில் அப்போஸ்தலர் உலகம் அறியாத உள்ளானவற்றையும் ஆவிக்குரியவைகளையும் பற்றிப் பேசுகிறார். (ஏசாயா 29:11)

மேலும், ஆவியானவரின் உதவியின்றி, ஜெபத்தின் உண்மைக் கருத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. எனவேதான், நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமல் இருக்கிறோமென்று அப். பவுல் கூறுகிறார். ஆனால் இதில் ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்.

ஆவியானவர் உதவிசெய்யும் பொழுது அப்போஸ்தலர் வல்லமையோடு ஜெபிக்கவும் ஊழியம் செய்யவும் முடிந்தது.

நமக்கு ஏற்றபடி வேண்டிக்கொள்ளத் தெரியாது என்று வேத வசனத்தில் கூறப்பட்டுள்ளது. வேத வசனத்திற்கு ஏற்ற முறையில் ஜெபிக்காமல், நமது விருப்பப்படி ஜெபித்ததற்கு யெரொபெயாம் ஒரு உதாரணம். (இராஜாக்கள் 12:26-33) நம்முடைய திறமையினாலோ. தந்திரத்தினாலோ ஜெபிக்க முற்படக்கூடாது. பரிசுத்த ஆவியானவர் துணையின்றி நமக்கு சரியான முறையில் ஜெபிக்கத் தெரியாது. ஆவியானவர் மட்டுமே நமக்குத் துணையாக இருக்கவேண்டும். நமது ஆசைகளையும் ஆவியானவரோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் மனிதன் தன் விருப்பப்படி நினைப்பது ஒன்று, ஆனால் ஆவியானவர் கட்டளையிடுவது வேறொன்றாக இருக்கும்.

"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." (யாக்கோபு 4:3) ''நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்பொழுது. ஆண்டவர் நம் இருதயத்தை அதன் வேரையும், ஆவியையும் தேடிப் பார்க்கிறார் (1 யோவான் 5:14). அப்படிப் பார்க்கிறவர் ஆவியானவர் எடுத்துரைப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளுகிறார். ஏனெனில் ஆவியானவர் மட்டுமே பரிசுத்தவான்களுக்காக தேவ சித்தப்படி வேண்டிக் கொள்ளுகிறார் என்று அவருக்குத் தெரியும். தேவ சித்தப்படி இருப்பதை மட்டும் அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். ஆவியானவர் மட்டுமே அதை நமக்கு வெளிப்படுத்தக் கூடும்.

நமக்கு எத்தனை ஜெபபுத்தகங்கள் இருந்தாலும் ஆவியானவர் ஒருவர் தவிர உண்மையாக ஜெபிக்க அவை உதவி செய்யமுடியாது. ஏனெனில் நமது பெலவீனங்களே நமக்கு தடையாக உள்ளன. அவை எவையென்று பார்ப்போம்.

முதலாவது பலவீனம்

ஆவியானவர் துணையின்றி, கடவுளைப்பற்றியோ, கிறிஸ்துவைப் பற்றியோ, நற்பேறுகளைப் பற்றியோ, ஒரு எண்ணம் ஒருவனுக்கு உண்டாகாது.'ஏனெனில் துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே' (சங். 10:4), மேலும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கூறப்பட்டிருக்கிறது (ஆதி. 6:5; 8:21). நாம் கடவுளைப்பற்றி சரியான எண்ணம் கொள்ள இயலாமையால் யாரிடம், யார் மூலம், எதற்காக ஜெபிக்கவேண்டுமென்று அறியமுடியாது இருக்கின்றோம். ஆவியானவர் துணையோடு மட்டுமே அதை அறிந்து கொள்ள முடியும்.

ஆவியானவரே இக்காரியங்களை ஆத்துமாக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். கிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஆவியானவரை தாம் அனுப்பப்போவதைப் பற்றி சொல்லும்பொழுது "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்." (யோவான். 16:14). அவர் இப்படிச் சொல்வது போல் நமக்கு தெரிகிறது. "இயற்கையாக நீங்கள் இருளாயிருப்பதனால், என் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. நீங்கள் இப்படி அல்லது அப்படி என்று முயற்சித்தாலும், உங்கள் அறியாமை நீங்குவதில்லை. உங்கள் இருதயத்தை ஒரு திரை மூடியிருக்கிறது. அதை யாருமே எடுத்துப்போட முடியாது. ஆவியானவர் மட்டுமே ஆவிக்குரிய அறிவைப் புகட்ட முடியும்.

சரியான ஜெபம் என்பது ஆவியானவரின் வெளிச்சத்தில் ஆத்மா காண்கிற ஒரு காட்சியாகும்; மற்ற ஜெபங்கள் எல்லாம் பகட்டாகவோ அல்லது தீழ்ப்பானவையாகவோ காணப்படுகின்றன. ஏனெனில் அவற்றில் இருதயமும். நாவும் ஒரே திசையில் செல்வதில்லை. ஆவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்யாவிடில் அவை ஒரே திசையில் செல்லவும் முடியாது. மாற்கு 7 –ம் அதிகாரம் நீதிமொழிகள் 28:9; ஏசாயா 29:13) எனவேதான் தாவீது தேவனது சமூகத்தில் அவரை தொழுதுகொள்ள வரும் பொழுது, நீர் என் உதடுகளை திறந்தருளும். அப்பொழுது என் வாய் உமது புகழை அறிவிக்கும் என்று சொல்லுகிறார். ஆவியானவர் உதவியின்றி ஒரு புகழ் வார்த்தை கூட பேசமுடிவதில்லை. எனவேதான், 'நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது பலவீனம்

ஆவியோடு ஜெபிக்கும் பொழுது. நம்முடைய ஜெபம் பலனுள்ளதாயிருக்கும். ஏனெனில் மற்றபடி மக்கள் அறிவாளிகளாகக் காணப்படுவதுப் போல, மாய்மாலமாயும், அனலற்றவர்களாயும். ஜெபத்தில் மிக கேவலமாய் காணப்படுகிறார்கள். எனவே அவர்களும், அவர்கள் ஜெபங்களும் தேவனுடைய பார்வையில் அறுவருபானவைகளாகக் காணப்படுகின்றன. (மத்தேயு 23:14; மாற்கு 12:40: லூக்கா 18:11,12; ஏசாயா 58:2,3)

ஜெபத்தின் தொனி அல்லது சத்தத்தை வைத்து அல்லது ஜெபிக்கிறவனுடைய பிரியம், ஆர்வம் இவற்றை வைத்து ஜெபத்தை தேவன் மதிப்பதில்லை. தனது ஒரு வார்த்தையைக் கூடக் காப்பாற்ற முடியாத பொல்லாங்கு நிறைந்த மனிதனிடம் இருந்து தேவனுக்கு உகந்த ஜெபம் ஏறெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. எனவே, பரிசேயரும் அவர்களது ஜெபங்களும் நிராகரிக்கப்பட்டது. அவர்களால் திறமையாகவும், நீண்ட நேரமுங்கூட ஜெபிக்க முடியும். ஆனால் அவர்களுக்குக் கிறிஸ்துவினுடைய ஆவியானவரின் உதவி கிடைப்பதில்லை. எனவே, தங்கள் பெலவீனங்களோடு செய்கின்ற ஜெபம்,ஒரு உண்மையோடு, அறிவாற்றலோடு, அன்போடு செய்யப்படுகின்ற ஜெபத்தைப்போன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பரலோகத்திற்கு போய் சேருகின்ற ஜெபம், ஆவியானவரின் பெலத்தோடு அனுப்பப்பட வேண்டும்.

மூன்றாவது பலவீனம்

ஆவியானவர் மட்டுமே நம்முடைய உண்மை, உள்ளான தீழ்ப்பான நிலையை நமக்குக் காட்டமுடியும். பேசும் வெறும் பேச்சுத்தான் என்ற கூற்றுக்கிணங்க, நம் தீழ்ப்பான நிலையை உணராத மனதில் எழுகின்ற ஜெபம் ஒரு வாய்ச் ஜெபமாகவே அமையும். அநேக ஜெபிக்கும் மக்களின் உள்ளங்களில் சாபத்திற்குரிய மாய்மாலமே காணப்படுகிறது. ஏனெனில் தங்கள் தீழ்ப்பான தன்மையை உணருகின்ற மனநிலை இன்னும் அவர்களில் உருவாகவில்லை. ஆவியானவர் கிரியை செய்தால், நமது தீழ்ப்பான தன்மையை மிக அழகாக தெளிவாக, அது எங்கே இருக்கிறது. அதற்கு மாற்று என்ன, அது நாம் தாங்க முடியாத நிலை என்றெல்லாம் எடுத்துக் காட்டுவார். நம் பாவத்தையும் தீழ்ப்பான தன்மையையும் திறம்பட சுட்டிக்காட்டக் கூடியவர் ஆவியானவரே. அதன் மூலம் நம் ஆத்துமா தேவனிடம் பரிவோடும். உணர்வோடும், ஆற்றலோடும் அவர் வார்த்தைக்கிணங்க ஜெபிக்க கூடிய நிலையை அடைகின்றது. (யோவான் 16:7-9)

நான்காவது பலவீனம்

மக்கள் தங்கள் பாவங்களை ஆவியானவரின் துணையின்றி பார்க்கும் பொழுது நம்மை மீட்ட கிறிஸ்துவிடம் ஜெபிக்க முன்வர மாட்டார்கள். ஆவியானவரின் உதவி இல்லாதிருந்தால், அவர்கள் காயீன், யூதாஸ்காரியோத்தைப் போல கடவுள் சமூகத்திலிருந்து ஓடிவிடுவார்கள். ஒரு மனிதன் தன் பாவ நிலையையும், தேவ சாபத்தையும் உணரும் பொழுதுகூட ஜெபிக்க முன்வரமாட்டான். அவனுடைய இருதயம் அவனிடம் நம்பிக்கை இல்லை, தேவனை தேடுவது வீண்? என்று சொல்லும். (எரேமியா 2:25; 18:12). நான் மிகவும் தீழ்ப்பானவன், கேவலமானவன், மதிப்பிடமுடியாத அளவுக்கு சாபத்திற்குரியவன் என்று நினைக்கலாம்! அந்நேரத்தில் தான் ஆவியானவர் நம்மிடம் வருகிறார். ஆத்துமாவை அமைதிப்படுத்தி, நம் முகத்தை ஆண்டவருக்கு நேராக திருப்புகிறார்: கடவுளிடமிருந்து சிறிதளவு இரக்கத்தை நமது இருதயத்தில் வரப்பண்ணி, தேவனிடம் நாம் தைரியமாக நெருங்கி வர நம்மை ஏவுகிறார். எனவேதான் ஆவியானவருக்கு 'தேற்றரவாளன்' என்று பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. (யோவான் 14:26)

ஐந்தாவது பலவீனம்

'ஆவியானவருக்குள்' அல்லது 'ஆவியானவரோடு' என்ற நிலை நமக்கு ஏற்பட வேண்டும், ஏனெனில் அவரின்றி, ஒருவருக்கும். தேவனிடம் வருவதற்கு வழி தெரிவதில்லை. நாம் குமாரன் மூலமாக தேவனிடம் வந்திருக்கிறோம் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் ஆவியானவர் உதவியின்றி தேவனிடம் வருவது என்பது ஆயிரத்தில் ஒறு என்று சொல்லக் கூடிய அளவுக்கு, அசாத்தியமான காரியம் என்று கூறலாம். "அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்" (1 கொரிந்தியர் 2:10) தேவனிடம் வருகிற வழியை மட்டுமல்ல, அவரிடம் எதை வாஞ்சிக்க வேண்டுமென்றும் ஆவியானவர் நமக்குக் காண்பிக்கிறார். ஆகையால்தான் மோசே ''நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்;" என்று சொல்லுகிறார் (யாத்திராகமம் 33:13). ஆவியானவர் என்னுடையதிலிருந்து எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்' என்று இயேசு கூறியுள்ளார். (யோவான் 16:14)

ஆறாவது பலவீனம்

ஆவியானவரின் துணையின்றி ஒருவன் தன் தீழ்ப்பான நிலையை அறிந்தாலும், அவரிடம் வருகிறதற்கான வழியை அறிந்திருந்தாலும், தேவன் கிறிஸ்து, இரக்கம் இவற்றில் அவனுக்கு பங்கில்லை. ஒரு தீழ்ப்பான பாவிக்கு, தன் பாவ உணர்வோடு, கடவுளது கோபத்தை உணர்ந்தவனாக, அவரிடம் வந்து 'பிதாவே' என்று அழைப்பது உலகிலேயே மிகப் பெரிய கடினமான காரியமாகும். அதோடு மாய்மாலமான கிறிஸ்தவனுக்கு இது மிகக் கடினமான காரியம். கடவுள் தனது தந்தை என்று அவனால் கூற முடிவதில்லை. அவ்வாறு கடவுளைத் தன்னால் அழைக்க தைரியமில்லை என்று கூறலாம். எனவேதான் ஆவியானவர் மக்கள் இருதயங்களில் அனுப்பப்பட்டு, தேவனை 'அப்பா பிதாவே' 'என்று கூப்பிடப் பண்ணவேண்டும்.

மனித சக்தியால் செய்ய முடியாத ஒன்றை ஆவியானவரின் உதவியால் நாம் செய்ய முடிகின்றது (கலாத்தியர் 4:6) ஆவியானவர் உதவி கொண்டுதான் நாம் தேவனது பிள்ளைகளென்றும், மறுபிறப்பின் அனுபவத்தையும், அறிந்துகொள்ள முடியும். ஆவியானவர் துணை கொண்டுதான், இரக்கத்தின் கிரியை தன்னில் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆத்துமா நம்பிக்கையோடு அறிந்து கொள்ளுகிறது. இதுதான் கடவுளை நாம் சரியாக அறிந்து கொண்டிருப்பதற்கு அடையாளம்.

ஏதோ கர்த்தரின் ஜெபத்தை பாராமல் படிப்பது, சொல்வது என்பது ஒரு அர்த்தமற்ற காரியமாகும். ஜெபத்தின் ஜீவன் இதில்தான் இருக்கிறது. அதாவது 'ஆவியானவரில்' அல்லது 'ஆவியானவரோடு' என்றிருத்தலாகும். அப்படி இருக்கும்பொழுது தான் அவன் பாவ உணர்வோடு தேவனிடம் வந்து இரக்கத்திற்காக, ஆவியானவர் பெலத்தோடு, 'பிதாவே' என்று கதற முடிகின்றது. அந்த 'பிதாவே' என்ற ஒரு வார்த்தை, விசுவாசத்தோடு சொல்லப்படும் பொழுது, மக்கள் சொல்லுகின்ற, அர்த்தமற்ற, அனலற்ற, ஆயிரம் ஜெபங்களை விட மிக விலையுயர்ந்ததாக அமைகின்றது.

இதைப் பற்றி நாம் நினைப்பதே கிடையாது. பிள்ளைகளுக்கு கர்த்தரின் ஜெபம், விசுவாசப்பிரமாணம் இவற்றை கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அவற்றின் உண்மை அர்த்தத்தை அவர்கள் உணர்வதில்லை. தங்கள் தீழ்ப்பான தன்மையையும், கிறிஸ்துவின் மூலம் கடவுளிடம் வருவது இன்னதென்பதை உணராமல் இருக்கிறார்கள்.

ஆ! உன்னுடைய அவல நிலையை, தீழ்ப்பான நிலையை, முதலில் உணர்ந்துகொள்! உன்னுடைய குருட்டாட்டத்தையும், அறிவின்மையையும் காட்டும்படி அவரிடம் கதறி அழு. அவரை 'பிதாவே' என்றழைப்பதற்கு முன் இதைச் செய். பாவ உணர்வடைவதற்குமுன், கடவுளை பிதாவே என்றழைப்பது நாம் நமக்கு சொந்தமல்லாத ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதுபோலாகும். நீங்கள் 'பிதாவே' என்றழைக்கிறீர்கள். ஆனால், கடவுள் நீங்கள் தேவ தூஷணம் சொல்வதாக சொல்கிறார். கடவுள் சொல்கிறார். "யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்றும் பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில்,' "தங்களை யூதரென்று சொல்லியும், யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள்" (வெளிப்படுத்தல் 3:9; 2:9).

ஒரு பாவி, தன்னை பரிசுத்தமுடையவனைப் போல நடிக்கும் பொழுது அவனை அதிக சாபம் சேரும். யூதர் இயேசுவிடம் யோவான் 8 -ல் சொன்னதுபோல இருக்கும். அவர்களது மாய்மாலத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினார் (யோவான் 8:41-45). இன்றைக்கும் கூட விபசாரக்காரர், திருடர், குடிகாரர், தவறாய் ஆணையிடுகிறவர். பொய்யர் போன்றவர் ஆலயத்திற்கு வந்து தங்கள் தேவதூஷண தொண்டைகளினாலும், மாய்மால இருதயங்களினாலும், பிதாவே! என்று அழைக்கும்பொழுது, நீதிமான்களைப்போல் காட்சியளிக் கின்றனர். ஒவ்வொரு தடவையும் இவ்வாறு செய்யும் பொழுது தேவதூஷணம் சொல்லுகிறார்கள். அதே சமயம் நேர்மையாக நடக்கிறவர்களை நாம் மதிப்பதில்லை. ஆனால் மாய்மாலங்களோடு இருப்பவர்களை நேர்மையானவர்கள், தேவமக்களென்று நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையான தேவ மக்களை, சண்டைக்காரர், எதிர்க்கின்றவர்கள், கோபிக்கிறவர்கள் 'என்றும் நினைக்கிறோம்.

நான் அதை சற்று விளக்கமாக கூற விரும்புகிறேன்.

  1. i) நம்முடைய முக்கிய ஜெபம், கர்த்தருடைய ஜெபமாக இருக்கலாம். அதன் முதல் வார்த்தைகளாகிய 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே 'என்பவற்றின் உண்மை அர்த்தம் நமக்கு தெரியுமா? மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து நீ, ‘எங்கள் பிதாவே ' என்று கூப்பிடமுடிகிறதா? உனக்கு உண்மையில் மறுபிறப்பின் அனுபவம் உண்டா? புத்திரசுவிகாரத்தின் ஆவியை நீ பெற்றிருக்கிறாயா? கிறிஸ்துவில் நீ உன்னைப்பார்த்து, கிறிஸ்துவின் அவயமாக தேவனிடம் வரமுடிகின்றதா? இதையெல்லாம் அறியாதவாறு 'எங்கள் பிதாவே' என்று சொல்லுகிறாயா? உன் தகப்பன் பிசாசானவன் அல்லவா? (யோவான் 8:44) மாமிசத்தின் கிரியைகளை நீ நிறைவேற்றவில்லையா? ஆனாலும் தேவனைப் பார்த்து 'எங்கள் பிதாவே ' என்று சொல்லுகிறாய். தேவ பிள்ளைகளை நீ துன்பப்படுத்துகிறவனல்லவா? அநேக தடவைகளில் நீ அவர்களை துன்புறுத்தவில்லையா? இருந்தபோதிலும் உன்னுடைய தீழ்ப்பான தொண்டையிலிருந்து 'எங்கள் பிதாவே' என்று கூப்பிடுகிறாய். நீ துன்புறுத்துகிற வெறுக்கிற மக்களின் தகப்பன் அவர். சாத்தானும் தேவ சமூகத்தில் வந்து நிற்பதற்கு சமானமாக இது காணப்படுகிறது. (யோபு 1:6-7)
  2. ii) மேலும், உன் இருதயத்தில் 'உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக' என்று சொல்லுகிறாயா? உண்மையோடும். நேர்மையோடும் அவருடைய நாமம், பரிசுத்தம், மகிமை இவற்றின் முன்னேற்றத்திற்காக முயற்சிக்கிறாயா? உன் இருதயமும், பேச்சும் இதற்கு ஒத்திருக்கிறதா ? தேவன் கட்டளையிட்டு உணர்த்துகிற எல்லாவற்றிலும், நீதியோடு கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சிக்கிறாயா? கடவுளுடைய அங்கீகாரம் பெற்று அவரைப் பிதாவே என்றழைக்கும் பொழுது, உன் வாழ்க்கை இவ்வாறு அமையும். மற்றப்படி தேவனைப்பற்றிய எண்ணங்கள் உன் இருதயத்தில் இடம் பெறாது. என் நாவினால் சொல்வதை உன் செய்கையில் மறுதலிப்பதனால், நீயே உன்னை ஒரு சபிக்கப்பட்ட, மாய்மாலமான மனிதன் என்பதை உணர்ந்து கொள்வாய்.

iii) மேலும், 'உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல. பூமியிலேயும் செய்யப்படுவதாக' என்று நீ சொல்லுகிறாயா? இல்லை. வெளிப்படையாக நீ அப்படி சொன்னபோதிலும், உண்மையில் அவர் வானத்தில் வரும்பொழுது, எக்காளம் தொனிக்கும்பொழுது, மரித்தோர் எழுந்திருக்கும் பொழுது, நீ உன்கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியபொழுது, நீ ஓடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பாயல்லவா? இவ்விதமான எண்ணங்கள் கூட உனக்கு வெறுப்பாயிருக்கிறதல்லவா? தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலே செய்யப்பட்டால், நீ பிழைப்பது எப்படி?

பரலோகத்தில் தேவனுக்கு எதிர்ப்பே கிடையாது. அவ்வாறே பூலோகத்தில் தேவனுக்கு எதிர்ப்பே கிடையாது. அவ்வாறே பூலோகத்தில் ஏற்பட்டால், நீ நரகத்திற்கல்லவா அனுப்பப்பட வேண்டும். இதைப் போலவே கர்த்தருடைய ஜெபத்தின் மற்ற பகுதிகளை கூட நீ வாசித்து புரிந்துகொள்ளலாம். வெளிப்படையாக மட்டும் அதை அறிக்கை செய்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாமல், மாய்மாலமாக ஜீவித்துக் கொண்டிருக்கிற மக்களின் நிலையை சிந்தித்து பார். அப்படிப்பட்டவர்களில் நீயும் ஒருவனா? தேவனே இதை உனக்கு தெளிவாக்கி போதிக்க வேண்டுகிறேன். எதையும் அவசரப்பட்டு, புத்தியில்லாமல் செய்யவேண்டாம்: முக்கியமாக உன் வார்த்தைகளை குறித்து எச்சரிக்கையாயிரு. எனவேதான், ஞானி இவ்வாறு சொல்லுகிறார். "நீ மனம் பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு". (பிரசங்கி. 5:2)

ஏழாவது பலவீனம்

ஆவியானவரோடு சேர்ந்து ஜெபித்தால்தான் நம் ஜெபம் கேட்கப்படும். ஏனெனில், ஆவியானவர்தான் ஆத்துமாவை அல்லது இருதயத்தை தேவனிடம் உயர்த்திக் காட்ட முடியும். ''மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்' '(நீதிமொழிகள் 16:1). தேவ சம்பந்தப்பட்ட எந்த காரியத்திலும், குறிப்பாக ஜெபத்தில், இருதயமும், நாவும் ஒரே திசையில் செல்லவேண்டுமானால், தூய ஆவியானவரால் அது பக்குவப்படுத்த வேண்டும். நாவானது தானாக செயல்படக்கூடியது. பயமின்றி அல்லது ஞானமின்றிகூட பேச துணிந்துவிடும். தூய ஆவியானவரால் ஆளப்படுகின்ற இருதயத்தோடு இணைந்து செயல்படும்பொழுது தேவன் விரும்புகிற, கட்டளையிடுகின்ற காரியங்களையே நாவானது பேசும்.

தாவீது ராஜா 'கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்' என்று கூறுகிறார் (சங்கீதம் 25:1) பரிசுத்த ஆவி ஒத்தாசையின்றி ஒருவன் தேவனிடம் வந்து விண்ணப்பிக்க முடியாது. எனவேதான் தேவனது ஆவியானவரை 'விண்ணப்பங்களின் ஆவி' என்று அழைக்கப்படுகிறது. (சகரியா 12:10) ஆவியானவர் விண்ணப்பம் செய்ய நமக்கு உதவி செய்கிறார். எனவே பவுல், "வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி" என்று கூறுகிறார். (எபேசியர் 6:18) எனவேதான், 'ஆவியோடு ஜெபித்தல்' என்ற தலைப்பு கொடுத்துள்ளேன்.

நம் முழு இருதயம் ஜெபத்தில் இராவிட்டால், உயிரில்லாத வெறும் சத்தமாகவே அது இருக்கும்; ஆவியினால் உயர்த்தப்படாத எந்த இருதயமும் கடவுளிடம் ஜெபிக்க முன்வராது.

எட்டாவது பலவீனம்

எவ்வாறு இருதயமானது ஆவியானவரால் ஜெபத்தில் உயர்த்தப்படவேண்டுமோ, அப்படியே அங்கே ஆவியானரால் நிறுத்திவைக்கப்படவும் வேண்டும். அதுதான் சரியாக ஜெபிக்கும் முறையாகும். முதலாவது நான் நினைப்பது என்னவெனில், ஜெப்புத்தகங்கள் மூலம் நம் இருதயத்தை சரியான நிலையில் வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அது கடவுளின் வேலை. இரண்டாவது அவை இருதயத்தை அதே நிலையில் வைத்திருக்கவும் இயலாது. மோசேயினால் தனது கையை நீண்ட நேரம் ஏறெடுக்க இயலாதிருந்தது என்று வாசிக்கிறோம். (யாத்திராகமம் 17:12) அப்படியானால் இருதயத்தை அதே நிலையில் வைத்திருப்பது எத்தனை கடினம் என்று நினைத்துப் பாருங்கள்!

இவ்வாறான மேலெழுச்சியான, கவலையீனமான ஜெபத்தை பார்த்து ஆண்டவர் மிகவும் வருத்தப்படுகிறார். "வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னை கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது" (எசாயா 29:13). மேலும், "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாய் போதித்து'' என்று அப்படிப் பட்டவர்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (மத்தேயு 15:9) நான் ஜெபத்தை பற்றி என் சொந்த அனுபவத்தை சொல்ல விழைகின்றேன். ஒருவேளை அக்கருத்துக்களை வைத்து நீங்கள் என்னைப்பற்றி விபரீதமாகக்கூட நினைக்கலாம். ஆனால் நான் சொல்பவை முற்றிலும் உண்மையென்று அறிவேன்.

நான் ஜெபம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது என் இருதயம் தேவனிடம் வரமறுக்கின்றது, அங்கே தன் கவனத்தை செலுத்த மறுக்கின்றது. ஆகையால் நான் முதலில் செய்வது, கிறிஸ்துவின் மூலமாக தம்மிடத்தில் என் இருதயத்தை கொண்டுவரும்படி தேவனிடம் ஜெபிப்பேன். அதன்பிறகு அவ்விடத்திலே என் இருதயத்தை வைத்திருக்குமாறு தேவனை கெஞ்சிக் கேட்டுகொள்வேன். அநேக தடவைகளில் எனக்கு எவற்றிற்காக ஜெபிக்க வேண்டுமென்றே தெரியாதிருந்தது. அப்படிப்பட்ட குருடனாய், அறிவீனனாய் இருந்திருக்கிறேன். ஆனால், அவர் கிருபை எத்தனை அளவிறந்தது! அவரே நமக்குப் போதிக்கிறவர். (சங்கீதம் 86:11).

ஜெப நேரத்தில் நமது இருதயங்களில் அநேக பொத்தல்கள் இருப்பதை நாம் உணருகிறோம். தேவனுடைய சமூகத்திலிருந்து எப்படியாவது தப்பித்துகொள்ள இருதயத்தில் அநேக பக்கவழிகளும், பிரிந்து செல்லும் பாதைகளும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளவே முடியாது. எவ்வளவு பெருமை, எத்தனை மாய்மாலம் இருதயத்தில் இருக்கின்றது என்று நாம் அறிந்து கொள்ளவே முடியாது. ஆவியானவர் துணையில்லாவிட்டால், ஆத்மாவுக்கும், தேவனுக்கும் ஜெபத்தில் சரியான உறவு இருக்க முடியாது. ஆனால், ஆத்துமாவில் ஆவியானவர் வரும்பொழுது மட்டுமே ஜெபம் உண்மை ஜெபமாக மாறுகின்றது. மற்றப்படி அப்படி இருப்பதில்லை.

ஒம்பதாவது பலவீனம்

மேலும், நாம் ஆவியானவரின் உதவி, பெலத்தோடு ஜெபித்தால்தான், நாம் முறையான வகையில் ஜெபிக்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம். ஆவியானவரின் துணையின்றி, இருதயம் உத்தமத்தோடும். பிரியத்தோடும் ஜெபிக்க இயலாது; பெருமூச்சுகளோடும், ஏக்கத்தோடும் தனது இருதயத்தை கடவுளிடம் ஊற்றிவிட இயலாது. ஜெபத்தில் ஒருவனுடைய வாய் முக்கியமல்ல. அவனுடைய இருதயம் பிரியத்தோடு, வாஞ்சையோடு இருந்தாலும், தன்னுடைய விருப்பத்தை வெளிக் கொணர முடிவதில்லை. அவனுடைய விருப்பங்கள் பலவாறாக, பெலமுள்ளவையாக, வல்லமையுள்ளவையாக இருந்தாலும், இருதயத்திலிருந்து வருகிற வார்த்தைகளாலும், கண்ணீராலும், பெருமூச்சுகளாலும், அவிருப்பங்களை சரிவர வெளிக்கொணரமுடிவதில்லை. ஏனெனில், "அந்தப்படியே ஆவியானவரும் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். அவரே நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்." (ரோமர் 8:27)

வெறும் வார்த்தைகளாலான ஜெபம் ஒரு பரிதாபமான ஜெபம். உண்மையாக தேவனிடம் ஜெபிக்கிற மனிதன் எவனும் தன் விருப்பத்தை, பிரியத்தை, தன் வாஞ்சையை, வார்த்தையின் மூலமோ அல்லது எழுத்தின் மூலமோ வெளியிடமுடிவதில்லை.

மிக அருமையான ஜெபங்கள் வார்த்தைகளல்ல, வெறும் பெருமூச்சுகளாகவே இருக்கும். ஜெபத்தில் அடங்கியிருக்கின்ற இருதயத்தை, ஜீவனை, ஆவியை, வார்த்தையில் வெளிப்படுத்தும் பொழுது ஜெபம் ஆழமற்ற, சக்தியற்றதாக காணப்படுகிறது. மோசே எகிப்தைவிட்டு வெளியேறி வந்து, பார்வோனால் விரட்டப்பட்டும் இஸ்ரவேலரால் நிந்திக்கப்பட்டும் இருந்த சமயம், அவன் தேவனை நோக்கி முறையிட்டான். (யாத்திராகமம் 14:15) உண்மையிலே, அவர் தன் ஆத்துமாவில் பெருமூச்சுகளோடும், அழுகையோடும், ஆவியிலே விண்ணப்பம் செய்திருக்கவேண்டும். மேலும், 'தேவன் ஆவிகளுக்கு தேவனாயிருக்கிறார்' என்று பார்க்கிறோம். (எண்ணாகமம் 16:22) அதோடு, (1 சாமுவேல் 16:7) -ல் தேவன் இருதயத்தைப் பார்க்கிறார் என்றும் நாம் அறியவேண்டும்.

தேவன் நமக்கு காட்டுகின்ற ஏதாவது ஒரு வேலையை நாம் செய்ய ஆரம்பிக்கும் கட்டத்தில், அதிகக் கடினமாகவே இருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் மனிதராக நமது சுய பெலத்தில் அதைச்செய்ய முடிவதில்லை. ஆனால் மேற்கூறிய ஜெபம் என்பது ஒரு கடமை மட்டுமல்ல. அது மிகத் தலையாகிய கடமையாக இருக்கின்றது. ஆகையால் தான் பவுலடியார் 'நான் ஆவியோடு விண்ணப்பம் செய்வேன்' என்று சொல்லும்பொழுது, ஆவியானவர் துணையின்றி நாம் ஜெபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மற்ற மனிதர் எழுதினதையோ, பேசினதை வைத்தோ நாம் ஜெபித்தல் என்பது கூடாத காரியம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

பத்தாவது பலவீனம்

ஆவியானவர் துணையில்லாவிட்டால், நாம் ஜெபிக்கின்ற கடமையில் தவறிவிடுவோம். அதை செய்தாலும்கூட இடையில் சோர்ந்துவிடுவோம். ஜெபம் என்பது தேவனின் சட்டமும் கூட என்று அறிதல் அவசியம். இவ்வுலக வாழ்க்கை முழுவதும் தவறாது அதை நாம் கடைபிடித்தல் தேவை. ஏற்கனவே, நாம் பார்த்ததுபோல, ஒருவனுடைய இருதயத்தை ஜெபத்தில் கொண்டுவருவதும், அதை அங்கேயே நிறுத்திவைப்பதும் ஆவியானவர் துணையின்றி மிகக்கடினம் என்று கவனித்தோம்.

எனவே இயேசு 'சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்' (லூக்கா 18:1) -ல் கூறியுள்ளார். மேலும் 'மாயக்காரன் எப்பொழுதும் தொழுது கொண்டிருப்பானோ' என்று (யோபு 27:10) -ல் பார்க்கிறோம். அப்படி அவன் ஜெபித்தாலும் நீண்ட ஜெபம் செய்து, தான் ஒரு மாய்மாலக்காரன் என்று காட்டுவான் என்று இயேசு கூறுகிறார். (மத்தேயு 23:14).

உண்மை ஜெபத்தின் வல்லமையை விட்டுவிட்டு அதை வெறும் சடங்காச்சாரமாக செய்வது அநேகருக்கு அது மிக எளிதாக இருக்கும். ஆனால் ஜெபத்தை ஜீவனோடு, ஆவியோடு ஆவியானவர் துணையின்றி ஏறெடுப்பது ஒரு மனிதனுக்கு மிகக் கடினமாயிருக்கும். தேவன் காதுகள் கேட்கத்தக்கதாக ஜெபிப்பது ஒரு மனிதனுக்கு மிகக் கடினமாயிருக்கும். யாக்கோபு ஜெபிக்க ஆரம்பித்தது மட்டுமல்ல, பிடிவாதமாக தொடர்ந்து அதில் நிலைத்து நின்றார் என்று (ஆதியாகமம் 32:26) -ல் பார்க்கிறோம். 'ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்' என்று (எபேசியர் 2:18) -ல் கூறப்பட்டிருக்கிறது.

யூதா நிருபத்தில், கெட்ட மனிதர் மீது தேவனது நியாயத்தீர்ப்பு வரும்பொழுது, பரிசுத்தவான்கள் எங்ஙனம் சுவிசேஷத்தின்மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாய் பற்றிக் கொண்டு நிற்கவேண்டுமென்பதைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. "உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி' (யூதா 20) என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி நிலைநிற்பவர்களுக்கு மட்டுமே நித்ய பரலோக வாழ்வு உண்டு என்று நாம் அறியவேண்டும். நிலைநிற்க வேண்டுமானால், ஆவியில் ஜெபிக்க வேண்டும்.

சாத்தானும், அந்திக்கிறிஸ்துவும் உலகத்தை ஏமாற்றுவது எப்படியெனில், மக்களை தமது கடமைகளை, ஜெபத்தை, பிரசங்கத்தை செய்வதை, கேட்பதை, ஒரு வேஷமாக, ஒரு சடங்காச்சாரமாவே செய்யத்தூண்டுவதன் மூலமேயாகும். எனவேதான் பவுலடியார் தீமோத்தேயுவுக்கு எழுதும் பொழுது 'கடைசிக் காலத்தில் மக்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு' (2 தீமோத்தேயு 3:5) என்று கூறுகிறார்.