அப்போஸ்தலனாகிய பவுல், ஆவியோடு விண்ணப்பித்தலுக்கும், கருத்தோடும் விண்ணப்பித்தலுக்குமுள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தார். எனவேதான், 'நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன். நான் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்' என்று கூறுகிறார். இதற்குக் காரணம் கொரிந்து சபையில் மக்கள் தங்கள் நன்மைக்கென்று மட்டும் காரியங்களை (ஜெபத்தை) செய்தார்களேயொழிய மற்றவர்கள் நன்மையை பற்றிக் கருதவேயில்லை. எனவேதான் நான் இதைப்பற்றி எழுத விரும்புகிறேன். அநேகருக்கு பல பாஷை வரங்கள் இருந்தும் அதை சுயமேன்மைக்காக தங்கள் வரங்களை மக்கள் உபயோகிக்க முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதற்காகவே இவ்வதிகாரத்தை பவுலடியார் எழுதியுள்ளார். புரியாத ஒரு பாஷையில் நான் ஜெபித்தால். அதனால் எனக்கும், மற்றவர்களுக்கும் பிரயோஜனம் இருக்காது. (1 கொரிந்தியர் 14:3, 4, 12, 19, 24, 25) எனவே, 'நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம். பண்ணுவேன் என்று அப். பவுல் கூறுகிறார்.
இருதயம் ஜெபத்தில் சேர்ந்தே செயல்பட வேண்டியதின் அவசியத்தைப் போலவே நமது கருத்தும் அதில் சேரவேண்டும். கருத்தோடு செய்யப்படுகின்ற ஜெபமானது, அதில்லாமல் செய்யப்படுகின்ற ஜெபத்தைவிட அதிக ஆற்றலோடும், பயனுள்ளதாயும் அமையும் என்பது நிச்சயம். எனவேதான், அப். பவுல் கொலோசேயருக்கு எழுதும்பொழுது. 'நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் ஜெபம் பண்ணுகிறோம்' என்று கூறுகிறார். (கொலோசியர் 1:9) மேலும் எபேசியருக்கு அப். பவுல் எழுதும்பொழுது 'தேவனை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்கு அளிக்கத்தக்கதாக' என்று கூறுகிறார். (எபேசியர் 1:17) மேலும், பிலிப்பியருக்கு அவர் எழுதும்பொழுது, 'உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் (பிலிப்பியர் 1:9) என்று கூறியுள்ளார். சரியான அறிவு, உணர்வு என்பது நம் எல்லா சரீர அல்லது ஆவிக்குரிய காரியங்களில் நன்மையாகவே அமையும் என்பது நிச்சயம். ஆகவே, இவ்வாறான அறிவு நமக்கு நம் ஜெபத்திலும் மிகத் தேவையானதாக இருக்கின்றது. கருத்தோடு ஜெபித்தல் என்றால் என்ன என்று கீழே பார்ப்போம்.
'கருத்தோடு'' என்று கூறும்பொழுது, நம் தாய் மொழியில் ஜெபிப்பதைக் குறிப்பதோடு, நடைமுறையில் எவ்வாறு அது அமைய வேண்டுமென்பதை காட்டுவதாகவும் இருத்தல் வேண்டும். பொருத்தமான ஜெபங்களை தேவனிடம் ஏறெடுக்க நமக்கு ஆவிக்குரிய அறிவு இருத்தல் வேண்டும்.
அ. கருத்தோடு ஜெபித்தல், ஆவியானவர் நமக்கு கொடுக்கின்ற அறிவிலிருந்து உண்டாகின்றது. ஒரு மனிதனுக்கு பாவமன்னிப்பின் அவசியமோ அல்லது நியாயத்தீர்ப்பின் ஆக்கினையிலிருந்து விடுதலையோ வேண்டுமானால் அதை இவ்வகை ஆவிக்குரிய அறிவிலிருந்துதான் நாம் பெற்றுக்கொள்ளமுடியும். மற்றப்படி, ஒன்று அதை வாஞ்சிக்கமாட்டோம், அல்லது அதைக்குறித்து கவலைப்படாமலே இருந்துவிடுவோம். இப்படித்தான் லவோதிக்கேயா சபை காணப்பட்டது என்று வெளி. 3:14ல் வாசிக்கிறோம். அவர்களுக்கு ஆவிக்குரிய கருத்து (அறிவு) இல்லாதிருந்தது. தாங்கள் நிர்ப்பாக்கியரும், பரிதபிக்கப்படத்தக்கவரும், குருடரும், நிர்வாணியுமாயிருப்பதை உணராதிருந்தார்கள். அதனால் அவர்களது ஆராதனை கிறிஸ்துவுக்கு வெறுப்பாயிருந்தது. எனவே 'நான் உன்னை வாந்தி பண்ணிப்போடுவேன்' என்று கூறுகிறார். (வெளிப்படுத்தல் 3:16,17. ஆவிக்குரிய அறிவில்லாதவர்களும், மற்றவர்களைப் போல வார்த்தைகளைச் சொல்லலாம். ஆனால், இரண்டிற்கும் எத்தனை வேறுபாடு உள்ளது! ஒருவர் தான் விரும்புவதை ஆவிக்குரிய அறிவோடு சொல்கிறார். மற்றவர் வெறும் வார்த்தைகளைச் சொல்லுகிறார் என்று அறிதல் வேண்டும்.
ஆ. ஆவிக்குரிய அறிவு, கடவுளது இருதயம், நம் ஆத்துமாவுக்கு தேவையான காரியங்களை கொடுக்கக் காத்திருப்பதை உணர்கிறது. தாவீது, தேவன் தன் மீது கொண்டுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளுகிறார். (சங்கீதம் 40:5) அதைப்போலவே அந்த கானானிய ஸ்தீரியைக் கூட சொல்லலாம். அவளுடைய ஆவிக்குரிய அறிவினாலும், விசுவாசத்தினாலும், கிறிஸ்து கூறிய சில வெளிப்படையான கோப வார்த்தைகளுக்கு பின்னால் மறைந்திருந்த அவருடைய இரக்கத்தையும், சம்மதத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. அவளும் கோபமடையக்கூடிய வார்த்தையை கேட்டாலும் தான் பெறவிரும்பிய இரக்கத்தை பெறும் வரை அங்கிருந்து போகவில்லை. (மத்தேயு 15:22-28)
தேவனது இருதயத்தில் இருக்கின்ற, பாவிகளை இரட்சிக்க வேண்டுமென்ற ஆவலை நாம் காணும்பொழுதுதான் நம் ஆத்மா அவரிடம் வந்து அவரது மன்னிப்பிற்காக கெஞ்சவேண்டி வரும். ஒரு மனிதன் ஒரு சாக்கடையில் நூறு பவுன் மதிப்புள்ள ஒரு முத்தைப் பார்த்தும் அதனுடைய மதிப்பை உணராதிருந்தால், அதை அப்படியே எடுக்காமல் விட்டுவிடுவான். ஆனால் அதன் மதிப்பை அறிந்திருந்தானானால், எப்படியாவது அதை எடுத்துவிடுவான். இதைப்போலவே ஆத்துமாவும் கடவுளுடைய காரியங்களின் மதிப்பை அறிந்திருந்தால் அதை பெற்றுக்கொள்ளாமல் விட்டுவிடவே மாட்டாது. தேவனது காரியங்களின் மதிப்பு ஒருவனுக்கு தெரிந்திருந்தால் அதற்காக தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முயற்சி செய்து அழுது அதைப் பெற்றுக்கொள்ளும் வரை விட்டு விடமாட்டான். சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள அந்த இரு குருடர்களும், இயேசுவால், தமது வியாதிகளை சுகமாக்க முடியுமென்று அறிந்திருந்தபடியால், அழுது கூப்பிட்டார்கள். மற்றவர்கள் அதட்டினாலும் அதிகமதிகமாக அழுது கூப்பிட்டார்கள். (மத்தேயு 20:29-31) என்று பார்க்கிறோம்.
இ. நமது அறிவு, ஆவியானவரால் தெளிவாக்கப்படும்பொழுது, ஆத்துமா தேவனிடம் வருவதற்காக வழி காட்டப்படும். ஆத்துமாவுக்கு நல்ல ஊக்கமும் அளிக்கப்படுகிறது. அவ்வாறு வழிகாட்டப்படாத ஒரு ஆத்துமா மிகவும் சஞ்சலப்பட்டும் வழியை கண்டுகொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஆத்துமாவுக்கு எப்படி ஆரம்பிப்பது, எப்படிச் சொல்வது என்று அறியாமல், மனம் சோர்ந்து, ஆபத்தான நிலையில் இருப்பதாக நாம் அறியலாம்.
ஈ. ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட அறிவானது, தேவனது வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொள்ளுகின்ற தைரியத்தை அடைகிறது. அதனால் பெலன்மேல் பெலன் பெற்றுக்கொள்ளுகிறது. சாதாரணமாக, மனிதர் நமக்கு சில காரியங்களை கொடுக்கப்போகிறோமென்று சொன்னாலே நம் இருதயம் எவ்வளவு ஆவலோடு பொங்கி நிற்கிறது என்பதை அறிவோம்.
உ. ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட அறிவோடு தேவனிடம் வரும்பொழுது, சில சமயங்களில் தேவன் நமக்கு கடந்த காலங்களில் பாராட்டின நன்மைகளை அவரிடமே எடுத்துச்சொல்லிக் கெஞ்சி ஜெபிக்கலாம். யாக்கோபு அவ்வாறு செய்தார். (ஆதியாகமம் 32:9) எப்பிராயீம் தன் குற்றங்களைக் குறித்து வெட்கப்பட்டு அதற்காக மனஸ்தாபப்பட்டு, துக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். (எரேமியா 31:18-20). அப்படிச் செய்யும் பொழுது எப்பிராயீம் தன்னை தேவனுக்கு உகந்தவனாக மாற்றிக்கொண்டு அவரது மன்னிப்பையும் பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். எப்பிராயீம் தன்னைப்பற்றி வருத்தப்படும் பொழுது பின்வருமாறு கூறுவதைப் பார்க்கிறோம். ‘தேவனே, நீரே என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்;' நான் மனஸ்தாபப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னை விலாவில் அடித்துக் கொண்டிருக்கிறேன் நாணிக்கொண்டுமிருக்கிறேன். என் இளவயதின் நிந்தையை சுமந்து வருகிறேன்" இப்புலம்பலைக் கேட்ட தேவன் தன் உடன் பதிலை சொல்லுகிறார். "எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்கு பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாக பேசினது முதல் அவனை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காக கொதிக்கிறது, அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் ". எனவே, ஆவியோடு மட்டுமல்ல, கருத்தோடும் ஜெபிக்க வேண்டுமென்பதை உணருகிறோம்.
ஒரு உதாரணத்தை வைத்து விளக்கலாம். நம்முடைய வாசலில் இரண்டு பேர் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களென்று வைத்துக்கொள்வோம். ஒருவன், மிகவும் ஏழ்மையான நிலையிலும், பசியோடும், காலில் காயத்தோடு நடக்கமுடியாமலும், அதேசமயம் மற்றெருவன் நல்ல சுகத்தோடும். காணப்படுகிறார்களென்று வைத்துக்கொள்வோம். பலத்தோடும் ஆனால் இருவரும் ஒரே வார்த்தைகளைச் சொல்லி நம்மிடம் பிச்சை கேட்கிறார்களென்றும் வைத்துக்கொள்வோம். இருந்தபோதிலும், உண்மையாகவே வறுமையிலும், பசியிலும் இருக்கிறவனுடைய வேண்டுதல், சுகமாயிருக்கிறவனுடைய வேண்டுதலை விட அதிக உருக்கமாயும், நம் இரக்கத்தைத் தூண்டுகிறதாயும் அமையுமல்லவா? இதைப் போலவே நம்மில் சிலர் தேவனிடம் பழக்கத்தின் பேரிலும், சடங்காச்சாரமாகவும் ஜெபிக்கிறோம். சிலர் மனக்கிலேசத்தில் போய் ஜெபிக்கிறோம். முதல் தரத்தார் தங்கள் மூளை அறிவையும். எண்ணங்களையும் வைத்து ஜெபிக்கிறார்கள். ஆனால் 'சிறுமைபட்டு, ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்'. (ஏசாயா 66:2). என்று கர்த்தர் கூறுகிறார்.
ஊ. நாம் தெளிவாக்கப்பட்ட கருத்தோடு ஜெபிக்கும் பொழுது, ஜெபத்தின் அர்த்தமும் அதன் முறையும் மிகவும் உபயோகமானதாக அமையும் என்பது உறுதி. ஒருவன் தனது கருத்தைத் தெளிவாக வைத்திருக்கும்பொழுது நன்மை தீமை எதுவென்று எளிதாகப் புரிந்து கொள்ளவும், அதோடு மனிதனின் அபாத்திரத்தன்மையையும், கடவுளின் இரக்கத்தையும் புரிந்துகொள்ளவும் முடிகின்றது. அதனால் அவனுடைய ஆத்துமாவுக்கு, மற்றவர்களால் எழுதப்பட்ட ஜெபங்களின் போதனை அவசியப்படாது. அப்படிப்பட்டவனுக்கு வேதனை ஏற்படும்பொழுது, ஜெபிக்கவேண்டுமென்று யாருமே சொல்லிக்கொடுக்க தேவையில்லை. தானாகவே ஜெபிக்க ஆரம்பிப்பான். தனது ஆவியில் ஏற்படுகின்ற நெருக்கம்,உணர்வு இவைகளால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்வான். கடவுளிடம் ஜெபத்தில் அழுது தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவான். இவ்வாறு தாவீது ராஜா செய்தார் என்று வாசிக்கிறோம். (சங். 116:3,4). மேலும், (சங்கீதா 38:1-12) -ல் தாவீது ராஜா, தமது துன்பத்தில் தேவனிடத்தில் முறையிடுவதை வாசிக்கிறோம்.
எ. நம்முடைய தெளிவாக்கப்பட்ட கருத்து, நம்மைக் கடைசி வரை. நமது கடமையாகிய ஜெபத்தில் நிலைத்திருக்கப்பண்ண வேண்டும். தேவனுடைய மக்கள் சாத்தானுடைய தந்திரம், ஏமாற்றும் வகை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருக்கிறார்கள். சாத்தான் நம்முடைய காத்திருத்தலின் மூலம் நம்மை ஆயாசப்படுத்தி, நம்மேல் தேவனுக்கு பிரியமில்லை என்பதுபோல் காட்டிவிடுவான். நீ ஜெபித்துக் கொண்டேயிருந்தாலும், அதற்கு பதிலொன்றுமில்லை? என்று நம்மிடம் சாத்தான் சொல்லுவான். உன்னுடைய இருதயம் கடினப்பட்டு, குளிர்ந்து இறந்துவிட்டது. நீ ஆவியோடு ஜெபிப்பதில்லை. ஆர்வத்தோடு ஜெபிப்பதில்லை. மற்ற காரியங்களை பற்றி அதிக கவலைப்படுகிறாய், ஜெபிப்பதுபோல் நடிக்கிறாய். எனவே, மாய்மாலக்காரனே நீ ஜெபிப்பதில் பயனில்லை, அதை விட்டுவிடு என்று அவன் சொல்லுவான்.
இப்படிப்பட்ட சமயத்தில், நீ சரியான கருத்தோடு இராவிட்டால். ஒருவேளை நீ 'கர்த்தர் என்னை கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்' என்று சொல்லலாம். (ஏசாயா 49:14) ஆனால் உண்மையில் கருத்தோடு இருந்தால், 'நான் ஆண்டவரைத்தேடி, அவருக்காகக் காத்திருப்பேன், அவர் மௌனமாயிருந்தாலும் ஆறுதல் அளிக்காவிட்டாலும், அவரை நான் விடமாட்டேன்' என்று சொல்லுவோம். (ஏசாயா 40:27) தேவன் யாக்கோபை சிநேகித்தார், ஆனாலும் அவனை ஆசீர்வதிக்குமுன்பு அவனைத் தன்னோடு போராடவைத்தார். (ஆதியாகமம் 32:25-27) தாமதிப்பதினால் நம் மேல் அவருக்கு பிரியமில்லை என்று நினைக்காமல், சில சமயங்களில் தம்மை தமது பரிசுத்தவான்களின் கண்களுக்கு மறைத்துக் கொள்ளுகிறார். (ஏசாயா 8:17) என்று அறிதல் அவசியம். தமது பிள்ளைகள் ஜெபித்துக் கொண்டேயிருப்பது அவருக்குப் பிரியம். நாம் பரலோக கதவுகளைத் தட்டிக் கொண்டிருப்பதைப் பார்ப்பது அவருக்குப்பிரியம். ஒருவேளை நம் ஆத்துமா, என்னை சோதிப்பது அவருக்கு பிரியமோ, நான் அழுவதை ஏன் அவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று கூட நினைக்கலாம்.
இயேசு சொன்ன உவமையில், அந்த விதவை, நியாயாதிபதி தாமதம் செய்தாலும், தனக்கு நீதி எப்படியாவது கிடைக்குமென்று நம்பினாள் என்று கூறப்பட்டிருக்கிறது. (லூக்கா 18:1-6) நாம் கடவுளுக்கு காத்திருப்பதை விட அவர் நமக்காக அதிக நாட்கள் காத்திருக்கின்றார் என்பதை உணரவேண்டும். எனவே, தாவீது 'கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்' என்று சொல்லுகிறார். (சங்.40:1) இப்படிச் சொல்வதற்கு, நமது கருத்து தெளிவாக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய உலகில் அநேக கடவுளுக்குப் பயந்த விசுவாசிகள், தங்களது கருத்து ஆவியானவரால் தெளிவாக்கப்படாததால் சாத்தானின் சோதனை ஏற்படும்பொழுது தங்கள் விசுவாசத்தை, ஜெபத்தை விட்டு விடுகிறார்கள். தேவன் அவர்கள் மீது இரக்கப்பட்டு, அவர்கள் ஆவியோடும். கருத்தோடும் ஜெபிக்க உதவிசெய்வாராக.
இதைப்பற்றி எனது அனுபவத்தைக்கூற விரும்புகிறேன். ஆனால் தேவன் எப்படிப்பட்ட பெரிய பாவிகள் மீதும் இரங்கக்கூடும் என்று அறிந்தேன். சுகமாயிருக்கிறவர்கள் மீதல்ல. வியாதியஸ்தன் மீது, நீதிமான்கள் மீதல்ல, பாவிகள் மீது, நிறைவுள்ளவர்கள் மீதல்ல. குறைவுள்ளவர் மீதே தேவன் தமது கிருபையை, இரக்கத்தை பொழிகிறார் என்று அறிந்தேன். பரிசுத்த ஆவியானவர் உதவியால். அவர் மீது அண்டிக்கொண்டேன். அவர் கரத்தை பிடித்துத் தொங்கிகொண்டேன். அவர் உடனே பதில் கொடுக்காவிட்டாலும், அவரிடம் சென்று அழக் கற்றுக்கொண்டேன். இப்படிப்பட்ட சோதனையில், துன்பத்தில் இருக்கின்ற தமது ஏழைமக்களை, தேவன் தாமே விடுவிப்பாராக. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. (அப்போஸ்தலர் 2:3). தேவன் நமக்கு ஆவியோடும், கருத்தோடும் ஜெபிக்க உதவி செய்வாராக.