படிப்புகள்: 241
Print

புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த ‘உலகத்தைக்’ குறித்தும், அதைக் குறித்த அவனது மனப்போக்கைக் குறித்தும் மிகக் குறைவாக எழுதப்படவில்லை. அதன் உண்மையான தன்மை வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது; மேலும், விசுவாசி அதற்கெதிராக முறையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறான். தேவனின் பரிசுத்தமான வார்த்தையானது பரலோகத்திலிருந்து வரும் வெளிச்சமாகவும், ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கையாகவும்’ (2 பேதுரு 1:19) இருக்கிறது. அதன் தெய்வீக ஒளிக்கதிர்கள் காரியங்களை அவற்றின் உண்மையான நிறத்தில் வெளிப்படுத்துகின்றன; காரியங்கள் தவறான அலங்கரிப்புகளாலும் கவர்ச்சியாலும் மறைக்கப்பட்டிருப்பதை அந்த ஒளிக்கதிர்கள் அவற்றுள் ஊடுருவி வெளிப்படுத்துகின்றன. அதிக பிரயாசமும் பணமும் செலவழிக்கப்பட்டு, கண்மூடித்தனமான ஏமாற்றுகளால் வெகுவாக உயர்த்தப்பட்டு மெச்சிக்கொள்ளப்படும் இந்த உலகமானது ‘தேவனுக்குப் பகை’ என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவருடைய பிள்ளைகள் அதனுடன் ‘ஒத்துப்போகவோ’ அல்லது தங்கள் ஆசையை அதன்மீது வைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இப்பகுதியானது நாம் இனி பார்க்கவிருக்கும் பகுதிகளைவிட எந்த வகையிலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததல்ல; மேலும், இதை உண்மையாய் வாசிப்பவர் தன்னை ஆராய்ந்து பார்க்கத் தேவனின் கிருபையையும் நாடுவார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குப் போதித்துள்ள போதனை இப்படியாகச் சொல்கிறது: "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய கலப்படமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1 பேதுரு 2:3). மேலும், இதுதான் தன்னுடைய உண்மையான நிலையா என்பதைக் கண்டுபிடிக்கும்படி, தன்னை உண்மையாகவும் சிரத்தையுடனும் பரிசோதித்துப் பார்க்கும்படியும் அது அறிவுறுத்துகிறது. வேதத்தைப் பற்றிய வெறும் அறிவுடன் நாம் திருப்தியடைந்துவிடாமல், நம்முடைய நடைமுறையான வளர்ச்சியைக் குறித்தும், கிறிஸ்துவின் சாயலுடன் ஒத்திருப்பதைக் குறித்தும் நாம் அதிக கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம்மை நாமே பரீட்சித்துப் பார்க்கக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், "என்னுடைய வேத வாசிப்பும் ஆராய்ச்சியும், உலகப்பிரகாரமான பற்றுதலிலிருந்து என்னை விடுவித்திருக்கிறதா?" என்பதே.

1. இந்த உலகத்தின் உண்மையான தன்மையைப் பகுத்தறியும் விதமாக நம்முடைய கண்கள் திறக்கப்படும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். ஒரு கவிஞன் இப்படியாக எழுதினான்: "கடவுள் பரலோகத்திலிருக்கிறார் - உலகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது." ஒருவகையில் இது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை என்றாலும், ‘உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறபடியால்’ (1 யோவான் 5:19) மற்றொரு வகையில் இது மிகவும் தவறாகும். நம்முடைய இருதயமானது இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலே பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்படுவதாலேயே, மனிதர்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்றிருப்பது "தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது" (லூக்கா 16:15) என்பதை நாம் அறிகிறோம். ‘உலகமானது’ மிகப்பெரும் ஏமாற்றுப்பேர்வழி, வெறுமையான குமிழி, மிகவும் கேடான ஒன்று, அது ஒருநாள் சுட்டெரிக்கப்படப் போகிறது என்பதை ஒரு ஆத்துமா கண்டுகொள்ளும்போது, அது தேவனுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

நாம் மேலும் செல்லும்முன்னர், ஒரு கிறிஸ்தவன் நேசிக்க மறுக்க வேண்டிய ‘உலகத்தை’ வரையறை செய்வோம். பரிசுத்த வேதாகமத்தின் பக்கங்களில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான பொருள்களில் இந்த வார்த்தை காணப்படுகிறது. ஆனாலும், அதன் பின்னணியத்தைக் கூர்ந்து கவனித்தால், அதன் நோக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்த ‘உலகம்’ என்பது ஒரு அமைப்பு அல்லது காரியங்களின் ஒழுங்கமைப்பு; அது தன்னில்தானே முழுமையுள்ளதாய் இருக்கிறது. எந்தவொரு அந்நியப் பொருளும் அதனுள் நுழைய முடியாது; அப்படியே நுழைந்தாலும் அது அதன் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது. உலகமானது வீழ்ந்துபோன மனிதத் தன்மையாகும்; அதுவே மனிதக் குடும்பங்களிலும் செயல்படுகிறது. அதனுடைய பண்புகளுக்கேற்ற கட்டமைப்பையே நடைமுறை வழக்கமாக அது வெளிப்படுத்துகிறது. இது ஒரு ‘மாம்ச சிந்தையின்’ ராஜ்யம்; "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது" (ரோமர் 8:7). எங்கெல்லாம் ‘மாம்ச சிந்தை’ இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘உலகம்’ இருக்கிறது; ஆகவே ‘உலகப்பிரகாரமானது’ என்பது தேவனில்லாத உலகமாகும்.

2. உலகமானது எதிர்க்கப்பட வேண்டிய மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய சத்துரு என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட" (1 தீமோத்தேயு 6:12) ஒரு கிறிஸ்தவன் அழைக்கப்படுகிறான்; அப்படியானால், சந்தித்து முற்றிலுமாக அழித்துப்போட வேண்டிய எதிரிகள் இருக்கிறார்கள் என்று பொருள். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற பரிசுத்த திரித்துவம் இருப்பதுபோலவே, மாம்சம், உலகம் மற்றும் பிசாசு என்ற தீய திரித்துவமும் இருக்கிறது. தேவனுடைய பிள்ளை அவற்றுடன் ஒரு முடிவான போர் புரிய அழைக்கப்படுகிறான். ‘முடிவான’ என்று நாம் சொல்வதற்குக் காரணம், ஒன்று அவன் அவற்றை வெற்றிகொள்வான் அல்லது அவை அவன்மீது வெற்றி கொள்ளும். என் வாசகரே, ‘உலகமானது சாவுக்கேதுவான பகை’ என்பதை உங்கள் மனதில் உறுதியாக முடிவு செய்துகொள்ளுங்கள். "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்" (1 யோவான் 5:4) என்று எழுதப்பட்டுள்ளதால், உங்கள் இருதயத்திலிருந்து உலகப் பற்றை முற்றிலுமாக நீங்கள் அழித்துப் போடாவிட்டால், நீங்கள் தேவனுடைய பிள்ளையல்ல.

இந்த உலகம் ஏன் ‘மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்பதற்கான பல காரணங்களில், பின்வரும் காரணங்களும் உள்ளன. முதலாவதாக, அதனுடைய கவர்ந்திழுக்கும் பொருள்கள் அனைத்தும், ஒரு ஆத்துமாவிற்கு தேவன்மீதுள்ள பற்றைச் சிதறடித்து, அவனை தேவனுக்கு அந்நியனாக்கிவிடுகின்றன. காணப்படுகிறவைகள், இருதயத்தைக் காணப்படாதவைகளிலிருந்து திருப்பிவிடும் தன்மையுடையதாக இருப்பதால் அப்படியாகிறது. இரண்டாவதாக, இந்த உலகத்தின் ஆவியானது, கிறிஸ்துவின் ஆவிக்கு முற்றிலும் முரணானது; ஆகவேதான், "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்" (1 கொரிந்தியர் 2:12) என்று அப்போஸ்தலன் எழுதினான். மூன்றாவதாக, இதன் கவலைகளும் கரிசனைகளும் பக்திவிருத்திக்கும் பரலோக வாழ்க்கைக்கும் எதிரானவைகள். மற்ற மனிதர்களைப்போல, ஒரு கிறிஸ்தவனும் வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்; ஆனாலும் அவன் வேலை செய்யும்போது, தன் வேலையைச் செய்வதைத் தாண்டி, இச்சையான எதிலும் மனதைச் செலுத்தாதபடி தன்னைத் தொடர்ச்சியாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

"நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவான் 5:4). தேவன் அருளிய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும். இப்பொழுது மறைந்திருந்தாலும், நிச்சயமான நித்தியத்தின் உண்மைகளால் இருதயம் நிறைந்திருக்கும்போது, கேடு விளைவிக்கும் உலகப் பொருட்களின் தாக்கத்திலிருந்து அது விடுவிக்கப்படுகிறது. விசுவாசக் கண்கள் உலகப் பொருட்களின் உண்மை நிறத்தை அறிந்துகொண்டு, அவைகள் வெறுமையானவை, மாயையானவை என்பதையும், மேலான நித்தியத்தின் மகிமையான காரியங்களுடன் அவை எவ்வகையிலும் ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்பதையும் கண்டுகொள்கின்றன. கிறிஸ்துவின் பரிபூரணத்தையும், தேவப் பிரசன்னத்தையும் உணர்ந்துகொள்ளுதல், இந்த உலகத்தை வெறுமையைவிடக் கீழானதாக்கிவிடுகிறது. தெய்வீக மீட்பர் தன்னுடைய பாவத்திற்காக மரித்து, தன்னுடைய விடாமுயற்சிக்காகவும் இறுதி இரட்சிப்பிற்காகவும் எல்லாக் காரியங்களையும் அவர் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஒரு கிறிஸ்தவன் பார்க்கும்போது, "உம்மைத் தவிர இவ்வுலகத்தில் எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை" என்று அவன் வியக்கிறான்!

இந்த வரிகளை வாசிக்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? முந்தைய பத்தியில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளலாம்; ஆனால், உங்களுடைய வாழ்க்கை உண்மையில் எப்படி இருக்கிறது? மறுபடியும் பிறவாதவர்கள் மிகவும் மதிப்புமிக்கதாக எண்ணும் காரியங்கள் உங்களைக் கவர்ந்திழுத்து அடிமையாக்குகின்றனவா? அவன் மகிழ்ந்திருக்கும் உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து விலகிவிடு, அவன் துன்மார்க்கன்: உங்களுடைய நிலையும் இதுதானா? அல்லது உங்களுடைய தற்போதைய மகிழ்ச்சியும் திருப்தியும், உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட முடியாத ஆவிக்குரிய பொக்கிஷங்களின்மீது இருக்கிறதா? இந்தக் கேள்விகளை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; தேவனுடைய பிரசன்னத்தில் இவற்றை உண்மையாய் எண்ணிப் பார்க்கும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவற்றுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான பதிலே உங்கள் ஆத்துமாவின் உண்மை நிலையைக் காட்டும்; மேலும், "நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி" என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்களா என்பதையும் அது சுட்டிக்காட்டிவிடும்.

3. நம்மை இப்பொழுதிருக்கிற ‘பொல்லாத பிரபஞ்சத்தினின்று’ விடுவிக்கும்படி கிறிஸ்து மரித்தார் (கலாத்தியர் 1:4) என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். தேவகுமாரன் நியாயப்பிரமாணத்தை ‘நிறைவேற்ற’ மட்டுமல்ல (மத்தேயு 5:17), ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கும்’ (1 யோவான் 3:8), ‘இனிவரும் கோபாக்கினைக்கு நம்மை நீங்களாக்கி இரட்சிக்கவும்’ (1 தெசலோனிக்கேயர் 1:10), பாவத்திலிருந்து நம்மை மீட்கவும் (மத்தேயு 1:21), மேலும் இந்த உலகத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி அதன் கவர்ந்திழுக்கும் தாக்கத்திலிருந்து ஆத்துமாவை விடுவிக்கவும் இவ்வுலகிற்கு வந்தார். பழங்காலத்தில் தேவன் இஸ்ரவேலரோடு செயல்பட்ட விதத்திலிருந்து இது முன்குறிப்பாய் அமைகிறது. அவர்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள்; ‘எகிப்து’ இந்த உலகத்திற்கான ஒரு அடையாளம். பார்வோனுக்குச் செங்கற்களைச் செய்வதில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு, அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் யெகோவா, தம்முடைய வல்லமையினால், அவர்களை அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவித்து, ‘இரும்பு உலையிலிருந்து’ வெளியே கொண்டுவந்தார். கிறிஸ்துவும் அதையேதான் செய்தார். அவர் விசுவாசிகளின் இருதயங்களிலுள்ள உலகத்தின் அதிகாரத்தை உடைக்கிறார். உலகத்தின் இன்பங்கள் மீதான நாட்டத்திலிருந்தும், உலகம் தங்களை ஒதுக்கித்தள்ளிவிடுமோ என்ற பயத்திலிருந்தும் அவர் அவர்களை விடுவிக்கிறார்.

கிறிஸ்துவானவர் தம்முடைய பிள்ளைகளின் பாவங்களைப் போக்கத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார்; அதன் விளைவாக, இவ்வுலகத்தின் தீய சக்தியிலிருந்தும் அதன் ஆளுகையிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும். அதன் பிரபுவாகிய சாத்தானிடமிருந்தும், அதனுள் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் இச்சைகளிலிருந்தும், அதற்குச் சொந்தமான மனிதனின் வீண்பேச்சுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட முடியும். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட செயலைச் செய்ய, பரிசுத்தவான்களுக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுடன் இணைந்து செயல்படுகிறார். அவர் அவர்களுடைய நினைவுகளையும் உணர்வுகளையும் இவ்வுலகக் காரியங்களிலிருந்து பரலோகத்தை நோக்கித் திருப்புகிறார். தம்முடைய வல்லமையைச் செயல்படுத்தி, அவர்களைச் சூழ்ந்துள்ள நன்னெறிகெட்டு நடக்கச் செய்யும் தாக்கங்களிலிருந்து அவர்களை விடுவித்து, பரலோகத்தின் தரத்திற்கு அவர்களை மாற்றுகிறார். ஒரு கிறிஸ்தவன் கிருபையிலே வளரும்போது, இதை அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்கிறான். தற்போதைய ‘தீய உலகத்திலிருந்து’ தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ள விரும்புகிறான்; ஆகவே, தன்னை முற்றிலுமாக விடுவிக்கும்படி அவன் தேவனைக் கெஞ்சுகிறான். முன்பு அவனைக் கவர்ந்திழுத்த ஒன்று, இப்பொழுது அவனுக்குத் துக்கத்தைத் தருகிறது. அவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனை மிகவும் துக்கப்படுத்தும் அந்த இடத்திலிருந்து, தான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்திற்காக அவன் ஏங்குகிறான்.

4. உலகத்திலிருந்து நம்முடைய இருதயங்களின் பற்று நீக்கப்படும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்" (1 யோவான் 2:15). ஒரு பிரயாணிக்கு அவனது வழியிலுள்ள தடங்கல் எது? ஓடுபவனுக்கு அவன்மீதுள்ள ஒரு பாரமான சுமை, பறக்கும் பறவைக்கு அதைக் கவர்ந்திழுத்துப் பின்பு அதன் கால்களை இறுகப் பிடித்துக்கொள்ளும் பசை – அதுபோலவே ஓட்டத்தைத் தொடருகிற ஒரு கிறிஸ்தவனுக்கு இவ்வுலகப் பற்று காணப்படுகிறது. அது ஒன்று தேவனுடைய வழிகளிலிருந்து அவனை முழுவதுமாகத் திருப்பிவிடும், அல்லது அவனை உலகத்திற்குள்ளாக மயக்கி இழுத்துவிடும், அல்லது அவனை வலுக்கட்டாயமாக தேவனைவிட்டு வெளியே தள்ளிவிடும். உண்மை என்னவென்றால், இருதயத்திலிருந்து அந்தத் தீய சிந்தைகள் அகற்றப்படும்வரை, தெய்வீக வழிநடத்துதல்களுக்கு நம்முடைய காதுகள் செவிடாகவே இருக்கும். இந்த உலக உணர்வுகளிலிருந்து நாம் மேலெழும்பாதவரை, தேவனுக்குக் கீழ்ப்படிதலை நாம் முழுமையாகச் செயல்படுத்த இயலாது. வழுவழுப்பான உருண்டையின்மீது தண்ணீர் தங்காமல் வழிந்துவிடுவதைப் போல, மாம்ச சிந்தையிலிருந்து பரலோக சத்தியமும் வழிந்துவிடுகிறது.

உலகம் கிறிஸ்துவைவிட்டுப் பின்னிட்டுத் திரும்பியிருக்கிறது; அவருடைய நாமம் பல இடங்களிலே அறிவிக்கப்பட்டாலும், அது அவருடன் எந்த மெய்யான தொடர்பையும் ஏற்படுத்துவதில்லை. உலகத்தின் எல்லா விருப்பங்களும் வடிவமைப்புகளும் சுயத்தைப் பிரியப்படுத்துபவையே. அவர்களுடைய நோக்கமும் நடக்கையும் வேறு வகையிலேயே இருக்கட்டும்; சுயம் பிரதானமானதாகவும், சுயத்தைப் பிரியப்படுத்த அவர்கள் எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தட்டும். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது. தேவன் குறித்திருக்கும் காலம் வரை அவர்கள் இந்த உலகத்திலே வாழ வேண்டும். அவர்கள் இங்கே இருக்கும்போது தங்கள் வாழ்க்கைக்காகச் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தைத் தாங்க வேண்டும், உலகப்பிரகாரமான வேலைகளையும் கவனிக்க வேண்டும். ஆனால், உலகம் அவர்களை மகிழ்விக்குமென்றாலும், அதிலே அன்புகூற அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்களுடைய ‘பொக்கிஷமும்’ ‘பங்கும்’ வேறொரு இடத்திலே கண்டுகொள்ளக்கூடியதாய் இருக்கிறது.

இந்த உலகமானது விழுந்துபோன மனிதனின் ஒவ்வொரு உள்ளுணர்வையும் கவர்ந்தழைக்கிறது. இது அவனை மயக்க ஆயிரக்கணக்கான பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை அவனது கவனத்தைக் கவர்கின்றன; அந்தக் கவனம், அதைக் குறித்த ஆசையையும் விருப்பத்தையும் அவனில் தோற்றுவிக்கிறது. உணர்வற்ற விதமாக, அவை அவனுடைய இருதயத்தில் மிகவும் ஆழமான பதிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. எல்லா வகைகளிலும் அவை மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. உலகத்தின் கவர்ச்சியும் கவர்ந்திழுக்கும் தன்மையும் பல்வேறுபட்ட வகைகளில் இருப்பினும், அதனுடைய நோக்கமும் இன்பமும் இவ்வுலகத்தின் மகிழ்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆகையால், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன?" (மத்தேயு 16:26). ஒரு கிறிஸ்தவன் ஆவியானவரால் நடத்தப்படுவதால், அவர் ஆத்துமாவிற்குக் கிறிஸ்துவைக் காண்பிப்பதின் மூலமாக அவனுடைய நினைவுகள் இந்த உலகத்திலிருந்து திசைதிருப்பப்படுகின்றன. ஒரு சிறுகுழந்தை தனக்கு மிகவும் பிரியமான ஒன்றைப் பெற்றுக்கொள்ள, தன்னிடமுள்ள ஒரு மதிப்பற்ற பொருளை உடனடியாக விட்டுவிட எப்படி ஆயத்தமாயிருக்குமோ, அதைப் போல தேவனுடன் ஐக்கியம் கொண்டிருக்கும் ஒரு இருதயம் சொல்லும்: "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு... எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்" (பிலிப்பியர் 3:8).

5. உலகத்தைவிட்டுப் பிரிந்து வாழும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். "உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாயிருக்கிறான்" (யாக்கோபு 4:4). இப்படிப்பட்ட வசனம் நம் ஒவ்வொருவரையும் முற்றுமுழுவதுமாக ஆராய்ந்து நம்மை நடுங்கச் செய்ய வேண்டும். தேவகுமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கக் காரணமான இந்த உலகத்தில், எப்படி நான் அதன் இன்பங்களை விரும்பி அதனுடன் ஒத்துப்போக முடியும்? அப்படிச் செய்தால் அது அவருடைய எதிராளிகளுடன் என்னை அடையாளப்படுத்திவிடுமே! ஓ! என்னுடைய வாசகரே, இதில் எந்தத் தவறும் செய்துவிடாதீர்கள். இப்படியாக எழுதப்பட்டுள்ளது: "ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" (1 யோவான் 2:15). பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பிள்ளைகளைக் குறித்து, "அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்" (எண்ணாகமம் 23:9) என்று சொல்லப்பட்டுள்ளது. உறுதியாக அவனது குணத்திலும், நடத்தையிலும், விருப்பங்களிலும், நாட்டங்களிலும் காணப்படும் அந்த வித்தியாசம்—மறுபிறப்படைந்தவனையும் மறுபிறப்படையாதவனையும் வேறுபடுத்தும் அந்த ஆவிக்குரிய வித்தியாசம்—அவனை நிச்சயமாக உலகத்திலிருந்து பிரித்தெடுக்கும். வேறொரு உலகத்தில் குடியுரிமை இருப்பதாகவும், வேறொரு ஆவியினால் நடத்தப்படுவதாகவும், வேறொரு சட்டத்தினால் ஆளப்படுவதாகவும் சொல்லிக்கொள்ளும் நாம், இவை அனைத்தையும் அவமதிப்பவர்களோடு கைகோர்த்துச் செல்ல முடியாது! நம்மில் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நம்முடைய கிறிஸ்தவப் பிரயாணத்தை வெளிப்படுத்தட்டும். "இந்தச் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமலிருப்பதின்" (ரோமர் 12:2) மூலமாக, நாம் உண்மையில் ‘அடையாளப் புருஷராய்’ (சகரியா 3:8) இருக்கக்கடவோம்.

6. உலகத்தின் மீதான வெறுப்பைச் செயல்படுத்தும்போது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். உலகத்தின் தோற்றத்தையும் அதன் ஒழுங்கான தன்மையையும் பாதுகாக்க எத்தனை கடின முயற்சிகள் எடுக்கப்படுகின்றன! தன்னுடைய மதிக்கத்தக்க பொதுவான நடைமுறை, நாகரிகமான மொழிநடை, உபகாரங்கள் மற்றும் அறநிலையங்கள் போன்ற செயற்கையான காரியங்களின் மூலம் அது தனக்கு மரியாதை தேடிக்கொள்ள முயலுகிறது. அப்படியே அதன் பெயரளவு திருச்சபைகளும், பேராலயங்களும், அதன் ஆயர்களும், பேராயர்களும் உட்புறத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் சீர்கேட்டை வெளிப்புறமான அலங்கரிப்புகளால் மூடி மறைக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். தனக்கு ஒரு நன்மதிப்பைக் கொடுக்க அதனுடன் ‘கிறிஸ்தவம்’ சேர்க்கப்படுகிறது. கிறிஸ்துவின் ‘நுகத்தை’ தங்கள்மேல் சுமந்துகொள்ளாத ஆயிரக்கணக்கானவர்கள், பரிசுத்த கிறிஸ்துவின் நாமத்தை மட்டும் தங்கள் உதடுகளில் சொல்கிறார்கள். அவர்களைக் குறித்து தேவன் சொல்கிறார்: "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" (மத்தேயு 15:8).

அப்படிப்பட்டவர்களைக் குறித்து ஒரு உண்மையான கிறிஸ்தவனின் மனப்போக்கு எப்படியாக இருக்க வேண்டும்? வேதத்தின் பதில் தெளிவானது: "இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு" (2 தீமோத்தேயு 3:5). "நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (2 கொரிந்தியர் 6:17). இந்தத் தெய்வீகக் கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது அவர்களை என்ன தொடரும்? நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நிரூபணம் செய்வோம்: "நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகிக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது" (யோவான் 15:19). குறிப்பாக எந்த ‘உலகம்’ இங்கே காட்டப்படுகிறது? இதற்கு முந்தைய வசனம் இக்கேள்விக்குப் பதில் தரட்டும்: "உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்." எந்த ‘உலகம்’ கிறிஸ்துவைப் பகைத்து அவரை மரணத்திற்கு நேராகத் துன்பப்படுத்தியது? சமய உலகம்; தேவனுடைய மகிமைக்குத் தங்களை வைராக்கியம் உள்ளவர்களைப் போலக் காட்டிக்கொண்டவர்களே. இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்துவை அவமதிக்கும் பெயரளவு கிறிஸ்தவ உலகத்தைவிட்டுப் பின்னிட்டுத் திரும்பட்டும்; அவனது மிகவும் கொடூரமான, ஆழமான மற்றும் நன்னெறியற்ற எதிராளிகள் யாரெனில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டு உலகப்பிரகாரமாய் வாழ்பவர்களே! "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்" (மத்தேயு 5:11-12). ஆ! என் சகோதரரே, இது ஒரு ஆரோக்கியமான அடையாளம். சமய உலகம் உங்களை வெறுக்கும்போது, நீங்கள் உண்மையாகவே வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறீர்கள் என்பதற்கு அது ஒரு உறுதியான அடையாளமாகும். ஆனால் மற்றொரு வகையில், உங்களுக்கு உலகத்தின் ‘திருச்சபைகளிலோ’ அல்லது ‘கூடுகைகளிலோ’ ஒரு ‘நற்பெயர்’ இருக்குமென்றால், தேவனால் வரும் மகிமையைவிட மனுஷரால் வரும் மகிமையை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்று பயப்படுவதற்கு அதிகக் காரணங்கள் உண்டு! 

7. நாம் இந்த உலகத்தைவிட்டு உயர்ந்த நிலையை அடையும்போது, வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம். முதலாவது, அதனுடைய வழக்கங்களிலிருந்தும் நடைமுறைகளிலிருந்தும் உயர்த்தப்பட வேண்டும். இந்த உலகமானது அதன் நடைமுறை வழக்கத்திற்கும், நாளின் பாணிக்கும் (Trend/Style of the day) அடிமைப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் தேவனுடன் நடக்கும் ஒருவன் அப்படியில்லை: அவனது பிரதானமான கரிசனையெல்லாம் ‘அவரது குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதே’. இரண்டாவதாக, அதனுடைய பாதுகாப்பிலிருந்தும் கவலையிலிருந்தும் உயர்த்தப்பட வேண்டும். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களைக் குறித்து இப்படியாகச் சொல்லப்பட்டுள்ளது: "பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டென்று அறிந்து" (எபிரெயர் 10:34), தங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடப்பட விட்டார்கள். மூன்றாவதாக, அதனுடைய சோதனைகளுக்கு மேலாக உயர்த்தப்பட வேண்டும்: ‘தேவனில் மகிழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு’ இந்த உலகத்தின் கண்ணைக் கூசும் மற்றும் மின்னும் பொருட்களில் என்ன கவர்ச்சி இருக்க முடியும்? அது எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு அது ஒன்றுமேயில்லை! நான்காவதாக, அதனுடைய கருத்துக்களுக்கும் ஏற்றுக்கொள்ளுதல்களுக்கும் மேலாக உயர்த்தப்பட வேண்டும்: உலகத்திலிருந்து சுதந்தரமாயிருக்கவும், அதன் வீணான கருத்துக்களை மீறி நடக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் முழு இருதயமும் தேவனைப் பிரியப்படுத்துவதில் வைக்கப்பட்டிருக்குமென்றால், தேவனற்றவர்கள் உங்களைப்பற்றி கூறும் குறைகளைப்பற்றி நீங்கள் முற்றிலும் கவலையற்றவர்களாய் இருப்பீர்கள். 

இப்பொழுது, என் வாசகரே, இந்த அதிகாரத்தில் உள்ளவைகளை வைத்து உண்மையாகவே உங்களை அளந்துபார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடியுங்கள். முதலாவதாக, உங்களுடைய ஓய்வு நேரங்களில் உங்கள் மனதின் முன்னால் நிற்கும் காரியங்கள் எவை? உங்கள் மனது எதைக் குறித்து ஓடிக்கொண்டிருக்கிறது? இரண்டாவதாக, உங்களுடைய தெரிந்தெடுப்புகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்கின்றன? ஒரு மாலை நேரத்தையோ அல்லது ஓய்வு நாளின் மதிய வேளையையோ எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று முடிவுசெய்யும்போது, நீங்கள் எதைத் தெரிந்தெடுக்கிறீர்கள்? மூன்றாவதாக, எந்தத் தருணங்களில் நீங்கள் அதிகமாக வருந்துகிறீர்கள்? ஏதோ ஒரு உலகப் பொருளை இழந்தபொழுதா? அல்லது தேவனுடனான ஐக்கியத்தை இழந்தபொழுதா? எது உங்களை மிகவும் துக்கப்படுத்துகிறது? உங்களுடைய திட்டங்கள் தோல்வியைத் தழுவியபொழுதா? அல்லது கிறிஸ்துவுக்குள் உங்கள் இருதயம் குளிர்ந்தபொழுதா? நான்காவதாக, நீங்கள் கலந்துரையாட உங்களுக்கு மிகவும் பிடித்த தலைப்பு எது? அன்றைய நாளின் உலகச் செய்தியை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா? அல்லது ‘முற்றிலும் அழகுள்ளவரைப்’ பற்றிப் பேசுபவர்களைச் சந்திப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய ‘நல்ல எண்ணங்கள்’ நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அல்லது அவைகள் வெறுமையான கனவுகள்தானா? நீங்கள் முழங்காலில் செலவிடும் நேரம் முன்னைவிட அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? தேவனுடைய வார்த்தை உங்களுக்குச் சுவைக்க இனிதாயிருக்கிறதா? அல்லது உங்கள் ஆத்துமா அதன்மீதுள்ள இனிய சுவையை இழந்துவிட்டதா?