படிப்புகள்: 46
Print
ஆசிரியர்: ஜான் அங்கெல் ஜேம்ஸ் (1785-1859
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 20 நிமிடங்கள்

“முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் புத்தி சொல்லு” (தீத்து 2:3-5)

அருமை வார்த்தையான “தாய்” என்பதுடன் எவ்வளவோ அழகான நினைவுகள் மற்றும் இணைப்புகள் சேர்ந்து உள்ளன! அந்த சத்தம் ஒலிக்கும்போது, ஒரு துறவியின் இதயத்திலோ அல்லது ஒரு ஞானியின் உள்ளத்திலோ இருக்கும் மிக மிருதுவான உணர்வுகள் விழித்தெழுகின்றன. அந்தச் சொல்லின் அழகும் அதற்குள் இருக்கும் சக்தியும், இளவரசனுக்கும் இயற்கை விவசாயிக்கும், கிராமவாசிக்கும் மேன்மையான தத்துவஞானிக்கும் ஒரேபோல தெரியும். குழந்தைகள் முதலில் கற்றுக் கொள்வது அந்தச் சொல்லையே! அந்த வார்த்தையின் கவர்ச்சியை குழந்தையின் இதயம் முதலில் உணர்கிறது. இந்தச் சொல்லுக்கான இசையை கேட்டதும், அது பெற்றோரின் உள்ளத்தை அதிகம் உந்துகிறதா, அல்லது குழந்தையின் உள்ளத்தையா என்பதைக் கூற இயலாது. ஒடுக்குமுறை, அறியாமை, அல்லது தவறான செயல்களால் மனிதாபிமானம் அரைமிருக நிலையில் தள்ளப்பட்டாலும் கூட, தாய்மையின் பாசத்தின் இறுதி சுடரினையும் அந்த வகையிலான கடைசி உணர்வினையும் முற்றிலுமாக அழிக்க முடிந்ததில்லை. ஒரு தாய் தனது பிள்ளைக்காகக் காண்பிக்கும் அன்பின் இத்தகைய வலிமை, நல்லதற்கும் பயனுள்ள நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும், அதற்கேற்ப வழிநடத்தப்பட வேண்டும்...

சமீபத்தில் நடைபெற்ற ஒரு போதக கருத்தரங்கில், சுமார் நூற்றிருபதுக்கும் மேற்பட்ட அமெரிக்க ஊழியர்கள் ஒரே விசுவாச ஐக்கியத்தில் ஒன்றாகக் கூடிவந்தனர். அந்தச் சந்திப்பில், ஒவ்வொருவரும் தங்களது வாழ்வின் மாற்றத்திற்கான காரணமாக தேவன் பயன்படுத்திய நபர்களைக் குறிப்பிடுமாறு அழைக்கப்பட்டனர். இந்த 120 பேரில் எத்தனை பேர் அந்த மரியாதையை தங்கள் தாய்க்கே அளித்தார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? 120 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோர்! இதோ உண்மையான நிகழ்வுகள் இவை எண்ணற்ற பிற உதாரணங்களில் சிலவே தாயின் அதிகாரத்தை நிரூபிக்கவும், அதே நேரத்தில் அவளது பொறுப்பையும் விளக்கிக்காட்டவும் உதவுகின்றன. ஆனால் இதற்கான விளக்கம் என்ன? இந்தச் செல்வாக்கை தாய்க்கு தருவது என்ன? அவளது வலிமையின் இரகசியம் என்ன? பல காரணங்கள் இருக்கின்றன:

முதலாவதாக, சந்தேகத்திற்கு இடமின்றி, தேவனுடைய கட்டளை இருக்கிறது. நம்மைப் படைத்தவரும், சமூக வாழ்க்கையின் உறவுகளை உருவாக்கியவரும், நமது பல்வேறு உறவுகளின் அனைத்து இனிமையான தாக்கங்களையும் மென்மையான உணர்திறன்களையும் வழங்கியவருமான அவர், தனது குழந்தையின் ஆன்மாவின் மீது ஒரு தாயின் அதிகாரம் இவ்வளவு வலிமையானதாக இருக்க வேண்டும் என்று நியமித்தார். இது தேவனுடைய ஏற்பாடு, இதை மறந்துவிடும் அல்லது புறக்கணிக்கும் பெண் அந்தத் தெய்வீக நிறுவனத்திற்குக் கீழ்ப்படியாதவள். குழந்தையை தனது இயல்பின் மீது தாயின் சக்திக்கு எளிதில் வளையக்கூடியதாகவே தேவன் ஏற்படுத்தி உள்ளார்;.

இதைத் தொடர்ந்து ஒரு தாயின் அன்பு வருகிறது, இது ஒரு தந்தையின் அன்பை விட வலுவானது, எல்லா வகையிலும் மென்மையானது. அவளுடைய பாசத்தில் பகுத்தறிவு இல்லாவிட்டாலும், உள்ளுணர்வு அதிகமாக உள்ளது. அவள் தன் குழந்தையின் சரீரத் தேவையுடன் அதிகம் தொடர்புடையவள், அந்த பிள்ளையை தன் வயிற்றில் சுமந்து, தன் மார்பிலிருந்து பிள்ளைக்கு உணவளித்து, தொட்டிலில் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறாள். இவை அனைத்தும் இயற்கையாகவே; வேறு எதுவும் உருவாக்க முடியாத ஒரு அத்தியாவசிய உணர்வை உருவாக்குகின்றன. இப்போது அன்பு என்பது மனித நடத்தை மற்றும் அதற்கான மிகப்பெரிய ஊக்க சக்தியாகும். “மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்" என்கிறார் தேவன். (ஓசியா 11:4). மனிதனின் இயற்கையான அமைப்பு மற்றும் நற்செய்தி மார்க்கம் ஆகிய இரண்டின் உண்மையான தத்துவம் இங்கே வெளிப்படுகிறது. மனித இயல்பு அன்பால் இயக்கப்படுவதற்கும், ஆளப்படுவதற்கும் அதிகம் விரும்புகிறது. கடுமையின் சங்கிலிகளால் இழுக்கப்படுவதற்கும் பதிலாக பாசத்தின் கயிறுகளால் இழுக்கப்படுவதற்காகவே அது உருவாக்கப்பட்டது. பெண்ணின் இதயம் அன்பு செலுத்தவே உருவாக்கப்பட்டது. மேலும் மற்ற பாலினத்தை விட அவளால் அவளுடைய குழந்தையின் மீது மிகவும் மென்மையாகவும், இனிமையாகவும், தியாகமுடனும் அன்பு செலுத்த முடிகிறது. இது அவளை மிகவும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆக்குவதால் அவன் அதிக செல்வாக்கு மிக்கவளாக ஆகிறாள். அவளுடைய வார்த்தைகள் மிகவும் மென்மையாகவும், அவளுடைய புன்னகை அதிக வெற்றியைத் தருவதாகவும், அவளுடைய முகபாவனை மிகவும் கட்டளையிடுவதாகவும் இருக்கின்றன, ஏனெனில் அவை அதிபயங்கரமாகவோ அல்லது வெறுக்கத்தக்க விதத்திலும் வருகிறதில்லை. தான் வளர்க்கும் சிறிய பூச்செடி தன் இதழ்களை அவள் முகத்தின் மென்மையான பிரகாசத்திற்கு மிக எளிதாகத் திறக்கிறது...

குழந்தையின் குணாதிசயத்தில் அது வளர்ந்து வரும் காலத்தில் அதிக பங்கு தாயைச் சேர்ந்தது. குழந்தையின் சிந்தை, உணர்ச்சி, விருப்பம் மற்றும் மனசாட்சியின் வெளிப்பாடு ஆகியவை அவளுடைய கவனத்திலேயே வளர்ந்தேறுகின்றன. அவள் குழந்தையின் சரீர வளர்ச்சியில் மட்டுமல்லாமல் அதன் ஆத்தும வளர்ச்சியிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறாள். குழந்தையின் நன்மை அல்லது தீமைக்கு நேரான துவக்கத்தில் அதனுடைய மனமும் இருதயமும் அவள் கரத்திலேயே இருக்கின்றன. குழந்தை பேசத்துவங்குவதும் சிந்திக்கத் துவங்குவதும் அவளுடைய போதனையின் வழியாகவே உண்டாகிறது. குழந்தைகள் எப்போதும் அவளுடன் இருப்பதால் தாயிடம் இருந்தே நன்மை தீமை அனைத்தையும் கற்றுக்கொள்கின்றன. அவைகளுக்கான முதல் குணாதிசய முன்மாதிரி தாய் தான். சரி, தவறு ஆகிய செயல்வடிவங்களின் பிரதிபலிப்புகளைக் குழந்தைகள் தாயிடமிருந்தே கற்றுக்கொள்கின்றன. தாயின் உணர்ச்சிகள், இரக்கம், நற்குணங்கள் மற்றும் தவறுகள் என அவளுடைய வார்த்தைகள், கோபம் மற்றும் செயல்களின் வெளிப்பாடுகள் அனைத்தையுமே குழந்தைகள் கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனவே அவன் தன்னையும் அறியாமல் தான் கற்றுக்கொடுக்கும் காரியங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் முன்னே அவள் செயல் மற்றும் வார்த்தைகளின் வழியாகவும் பாடம் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். எனவே குழந்தைகளை வளர்க்கும் ஒவ்வொரு தாயும் தன் வலிமையை உணரும் மேன்மையான சிந்தை உடையராய் இருக்க வேண்டும். அவர்களுடைய தாக்கத்தின் வலிமையையும் மேன்மையையும் ஆழமாய் உணர்ந்து தாயானவள் செயல்பட வேண்டும்.

எனவே, தாய்மார் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பைக் குறித்த முழுமையான புரிதல் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். நான் பிள்ளைகளின் சரீர பயிற்சிகளைக் குறிப்பிடவோ, அல்லது அவர்களின் புத்திக் கூர்மையான கலாச்சாரத்தையோ குறிப்பிடவில்லை. அவர்களது சமுகம் சார்ந்த, ஒழுக்கம் சம்பந்தப்பட்டதும் ஆவிக்குரிய வாழ்வு சம்பந்தப்பட்டதுமான பயிற்சியையே இங்கே குறிப்பிடுகிறேன். ஒரு தாயின் முக்கிய பொறுப்பும் நோக்கமும் குணாதிசய வளர்ச்சியே. அவர் வெறுமனே அறிவைப் புகட்டுபவர் என்றில்லாமல் நற்பண்புகளை வளர்க்கிறவராய் இருக்க வேண்டியது. அவர்களுடைய முக்கியமான செயல்பாடு இருதயப் பக்குவத்துடன் வாழ்வைக் கொண்டு செல்வது எப்படி என்பதைப் பற்றியதாக இருக்க வேண்டும். பிள்ளைகள் என்ன கற்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதிலும் தாயார் கருத்தாய் இருக்க வேண்டும். இந்தக் குழந்தைகள் வருங்கால சமுகத்தின் உறுப்பினர்களாக, குடும்பத் தலைவர்களாக வரப்போகிறவர்கள் என்பதையும் தங்கள் நித்தியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள் என்பதையும் தாயார் உணர வேண்டும். இரண்டு உலகத்திற்கும் ஏற்ற குணாதிசய வளர்ச்சியே முக்கிமான நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை நான் திரும்பவும் சொல்கிறேன். ஒரு தாய் தன் பிள்ளையைக் குறித்து இவ்வாறு நினைக்க வேண்டும்: “இந்தக் குழந்தை இரு உலகங்களிலும் வாழ்ந்து அதற்கேற்ப தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே அதற்கான ஆயத்தத்தை நான் இதன் குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் வளர்த்தெடுக்க வேண்டும். அதன் சுபாவத்தையும் இம்மைக்குரிய மற்றும் மறுமைக்குரிய ஆனந்தத்திலும் வேண்டிய அஸ்திபாரத்தைக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது.” இதைச் செய்வதற்கு எனக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன? என்ன மாதிரியான ஜாக்கிரதை அதற்குத் தேவை? என்னவெல்லாம் தேவை?

உங்கள் பொறுப்பின் மகத்தான தன்மையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை நிச்சயமாக அவசியம். ஒரு பெற்றோராக, குறிப்பாக ஒரு தாயாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு பொறுப்பாக இருப்பது ஒரு மகத்தான விஷயம். இது நிகழ்காலத்திற்கும் நித்தியத்திற்கும் உரிய பொறுப்பு. ஓ பெண்ணே! உன் குழந்தையின் இம்மைக்குரிய அல்லது நித்தியத்திற்குமான நல்வாழ்வு அதன் துவக்கக் காலத்தில் இருந்தே உன் வழிநடத்துதலுக்கும் செல்வாக்குக்கும் ஏற்பவே இருக்கிறது. குழந்தையின் சரீரப் பராமரிப்பு, பூமியில் அதன் எதிர்கால இருப்புக்கான ஆரோக்கியம், வீரியம் மற்றும் ஆறுதல் அனைத்தும் உன்னைப் பொறுத்தது. நம் கவனக்குறைவின் விளைவாகவோ, கீழே விழுந்ததாலோ அல்லது விபத்தினாலோ, அந்தக் குழந்தையின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டாலோ அல்லது கைகால்களில் சிதைவு ஏற்பட்டாலோ, நமக்கு எத்தனை கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தும் பாருங்கள்! அப்படிப் பாதிக்கப்பட்ட பிள்ளை வாழ்நாள் முழுவதும் ஊனமாய்க் இருக்கும் நிலை ஏற்பட்டால் அதைக் குறித்த குற்ற உணர்ச்சி எத்தனை அதிகம் நம்மை வாட்டும்! இவை அனைத்தும் என் கவனக்குறைவால் ஏற்பட்டு விட்டதே என்ற அழுத்தம் நம் ஆத்துமாவை சோகத்திற்குள்ளாக்கி, உடைக்கப்பட்ட பாத்திரமாகவே நம்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

தாய்மையின் கடமைகளை நிறைவேற்றும்படியாக எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான தேவ பக்தியில் உங்களைத் தகுதிப்படுத்துங்கள். தன் இல்லத்தை மகிழ்ச்சியுடன் வலம் வரும் அந்தக் குழந்தை இப்போது அறியாமையில் இருந்தாலும் தன் பாலகப் பருவத்தைப் பற்றி ஒன்றும் அறியா அப்பாவியாக இருந்தாலும் அது பாதுகாக்கப்பட வேண்டிய இளம் அழியா உயிர் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த விஷயத்தைப் பற்றிய அக்கறை பெற்றோரின் மகிழ்ச்சியையே அணைத்துப்போடும் அளவுக்கு அதிகமானது என்பதை மனதில் வைக்க வேண்டும். ஆனால், ஒரு தாய் தன் மார்பில் பால் குடித்து, முகத்தில் இனிமையாகச் சிரிக்கும் குழந்தை, இன்னும் பேசக் கற்றுக்கொள்ளாதிருந்தும் நன்றி சொல்வதைப் போலத் தெரிகிறது. அல்லது தொட்டிலில் மென்மையாக உறங்கிக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தை, சுவாசிக்காமல் வாழ்ந்தது போல் மென்மையாக சுவாசிக்கிறான். அதே நேரத்தில் தான் நேசிக்கும் குமாரன் இரட்சிப்பில்லாமல் மரிக்கும் சூழல் வந்தால் அவளுக்குள் உள்ள நடுக்கத்தை விவரிக்க இயலாது. “நீ இந்த உலகில் ஊதாரியாகவும், மறுமையில் ஒரு அரக்கனாகவும் வாழ வேண்டுமா!" போன்ற ஒரு எண்ணத்தால் அவளுக்குள் வரும் கார்மேகம் அவளுடைய ஆத்துமா நடுங்கப்பண்ணுகிறது.

இதுபோன்ற அதிபயங்கர உணர்ச்சியோடு இல்லாமல், தாயானவள் தன் அன்புப் பிள்ளை இந்த உலகில் பரிசுத்தமாக, உபயோகமுள்ள, மகிழ்ச்சியான கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்து மறுமையில் அழிவில்லா மகிமை அடையும் என்கிற நம்பிக்கையுடன் காணப்பட வேண்டும். ஒவ்வொரு பெற்றோரின் எண்ண ஓட்டமும் இதைப் போன்றே காணப்பட வேண்டும். எல்லாருமே தங்கள் இல்லம் நித்தியத்திற்கு நேராக நடத்தும் வேதாகமப் பள்ளி, தங்கள் பிள்ளைகள் அதில் மாணவர்கள், தாங்கள் அவர்களின் ஆசிரியர்கள், பக்தியுள்ள வாழ்வு அவர்களின் பாடம் என்று கருத வேண்டும். ஆம், குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுடனும் தேவன் இந்தக் கட்டளையைத் தருகிறார்: “இந்தக் குழந்தையைக் கொண்டு போய், எனக்காக வளர்த்திடு!” இது சிருஷ்டிகரான தேவனுக்கே சொந்தமான பிள்ளைகளின் ஒன்று. வளர வேண்டிய விதத்தில் வளர்த்து, கர்த்தருக்கேற்ற சிட்சையில் பரமாரித்து உருவாக்க அனுப்பப்பட்ட பிள்ளை. மோளோகிற்குத் தங்கள் பிள்ளைகளைப் பலி செலுத்திய செயலை நினைத்தாலே நமக்குக் கொலைநடங்குகிறது. தங்கள் பிள்ளையை தேவபக்தியில் வளர்க்க வேண்டிய கடமையை உதாசீனம் செய்து, அவர்கள் தேவனைப் பற்றியும் தங்கள் நித்திய எதிர்காலத்தைப் பற்றியும் எந்த அறிவும் இல்லாமல் வளர்ப்பது எத்தனை அதிபயங்கரம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால், யாராவது, தான் உணராத, நடைமுறையில் பின்பற்றாத ஒரு மதத்தைப் பயனுள்ள வகையில் கற்பிக்க முடியுமா? எனவே, ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு அதைக் கற்பிக்க வேண்டுமானால், முதலில் அவளுடைய இருதயம் தேவ பக்தியால் ஆழமாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். இது இல்லாமல், அவளுக்கு கற்பிக்க விருப்பமோ, ஜெபம் செய்ய மனமோ அல்லது நம்பிக்கை கொள்ளும் உரிமையோ இருக்க முடியுமா? தாய்மார்களே, உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்குமான உறவில், நீங்கள் தேவனைப் பற்றிச் சொல்லும் முதல் கருத்தைத் திறந்த மனதோடு உங்கள் பிள்ளை ஏற்கும்போது உங்களில் இருக்கும் உன்னதமான சந்தோஷத்தைக் கற்பனை செய்ய முடியுமா? அல்லது பெத்லகேமில் பிறந்த அந்த தெய்வீகக் குழந்தைக்கு நேராக நீங்கள் அவனை வழிநடத்தும்போது எப்படி இருக்கிறது? அவர் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தவர், இரட்சகராக வளர்ந்தவர், “சிறு குழந்தைகள் என்னிடம் வர அனுமதியுங்கள்" என்று சொன்னவர் (மாற்கு 10:14), அவர்களைத் தனது கரங்களில் எடுத்துக்கொண்டு அவர்களை ஆசீர்வதித்து, பின்னர் சிலுவையில் அவர்களின் இரட்சிப்புக்காக மரித்தாரே? அல்லது நீங்கள் அவர்களிடம் ஆண்டவரின் வாசஸ்தலமான பரலோகத்தைப் பற்றியும் அவருடைய தேவதூதர்களைப் பற்றியும் பேசும்போது? ஓ, உங்கள் குழந்தையின் கண்ணில் காணப்படும் தேவனைக் குறித்த முதல் தேடலின் பார்வை, அதன் பக்தியின் வெளிச்சத்தில் வரும் முதல் கண்ணீர். அந்தக் குழந்தையின் கரிசனையுடன் வெளிப்படும் முதல் கேள்வி, அதன் உதடுகளில் இருந்து சுவாசிக்கும் முதல் விண்ணப்பம். இவைகளைக் காண்பது எத்துணை ஆனந்தம். இதுபோன்ற காட்சிகளால் எத்தனை பெண்களின் இதயங்கள் மகிழ்ச்சியால் பொங்கிப் பரவசம் அடைந்துள்ளன! அவளது உணர்ச்சிப் பெருக்கால் முழங்காலில் விழுந்து, தன் நெஞ்சத்துக்கு அருகான தன் குழந்தைக்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபத்திற்கான பதிலை சுவாசிக்கிறாள். அவன் ஆச்சரியத்துடன் தன்னில் வந்த சொல்லில் விளக்க முடியாத சக்தியை உணர்ந்தாலும் அதை அவனால் சரியாக வெளிப்படுத்தவோ, புரிந்து கொள்ளவோ முடியாது.

உங்கள் பக்தி உண்மையானதாக இருந்தால், இந்த வேலையின் மகத்துவத்தையும் உங்கள் சொந்த முயற்சியால் இந்த வேலையைச் சரியாகச் செய்ய பெலன் உங்களிடம் இல்லை என்பதைப் போதிக்கும். உங்கள் பணியெல்லாம் அழிவுக்குரியவர்களை உலக வாழ்விற்காகவும் அழிவற்ற ஆத்துமாவை தேவனுக்காக, பரலோகத்திற்காக மற்றும் நித்தியத்திற்காகவும் ஆயத்தப்படுத்துவது தான். உங்கள் இயலாமை பற்றிய நடுக்கத்துடன் கூடிய சிந்தை உங்களில் இருப்பதுடன், விசுவாசமுடன் ஊக்கமான ஜெபம் செய்து உங்களைத் தேவனிடம் அர்ப்பணியுங்கள். ஜெபிக்கிற தாய்மாரே, அந்த உன்னத சிந்தையுடன் காத்திருங்கள். உங்களை நம்பாதிருங்கள். விசுவாசமுள்ள ஜெபத்தில், சர்வ வல்லவரின் உதவியைப் பெறுங்கள்.

நான் ஏற்கனவே சொன்னதை மறந்துவிடாதீர்கள், பாசம் என்பது ஒவ்வொரு மனித இதயத்திலும் உள்ள பூட்டைத் திறக்க தேவன் உருவாக்கிய தங்கச் சாவி. அதைப் பயன்படுத்தும்போது எந்த அசைக்க முடியாதத் தடைகளும் விலகி எளிதாகத் திறந்து விடும். கடுமை என்பதற்கு இடமே இல்லை, பெண்களில் இருப்பதில்லை. ஆனால் அதே பாசம் வேதம் அனுமதிக்காத தேவையற்ற மற்றும் மதியீனமான சுகங்களுக்காகக் கீழிறங்க விடாதிருங்கள். நான் பாசத்தைக் காண்பிக்கும் நேரத்தில், அது அதிகாரத்தைக் கெடுப்பதை அனுமதிக்கக்கலாகாது. ஒரு பெற்றோர் மிகவும் கடுமையானராக இருக்கக்கூடாது என்றாலும் அவர் தனது குழந்தைகளுக்கு அடிமையாகவும் இருக்கக்கூடாது. குடும்பத்தில் தந்தைக்குறிய தலைமையை எதிர்த்தும் மீறியும் செயல்படும் குழந்தைகள் உள்ள வீட்டைப் பார்ப்பது மிகவும் வேதனையானது. தந்தையின் செங்கோலை உடைத்து, பிள்ளையே ஆளுகை செய்யும் குடும்பம் என்பது பெற்றோருக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தும் காட்சியே. தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படியவில்லை என்றால் அது பிள்ளையுடைய தவறு. அன்பின் கரங்களில் உறுதியான பிடிப்பும் விடாமுயற்சியும் வெளிப்படும் ஆளுகை உடைய குடும்ப அமைப்பு உறுதியாக கீழ்ப்படிதலை உருவாக்கும். எனினும் அந்தத் தலைமைப் பண்பு கனிவு, ஞானம் மற்றும் அதிகாரத்தின் கலவையாக இருக்க வேண்டியது. கீழ்ப்படிதல் என்பது அதிகாரத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டிய கடமை என்று பிள்ளைகள் உணர வேண்டும், வெறும் பாசத்திற்கு இணங்கும் செயலாக இருக்கக்கூடாது. அதிகாரம் அதிக கண்டிப்பினால் இறுக்கமடையவும் கூடாது, பாசத்தினால் இணங்கிப்போகும் நிலைக்கு இறங்கவும் கூடாது. கீழ்ப்படிவது இனிமையானது என்பதால் மட்டுமல்ல, கீழ்ப்படிவது சரியானது என்பதாலும் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

விவேகமுள்ள தாய் தன் பிள்ளைகளை அவர்களுடைய மனநிலைமைக்கு ஏற்ப நடத்துவதில் கவனம் செலுத்துவார். சில குடும்பங்களில் பலதரப்பட்ட குணநலன்களுடன் நபர்கள் இருப்பதுபோலவே பிள்ளைகளும் அவ்வாறே இருக்கின்றனர். ஒரு குழந்தை முன்முனைப்புடனும் பிறருக்கு இடையூறாகவும் காணப்பட்டால் அதைக் கண்டித்துச் சரி செய்ய வேண்டும். வேறொரு குழந்தை பயத்தால் முயற்சியைக் கைவிடுமானால் அதை ஊக்கப்படுத்தி தைரியப்படுத்த வேண்டும். ஒன்று நம்பிக்கையை ஊட்டுவதன் மூலமும் மற்றொன்று பயத்தை விலக்கும்படி ஆலோசனை தருவதன் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று மிக நெருக்கமானதாகவும் தயக்கம் நிறைந்ததாகவும் இருக்கும்போது அதற்கு தயக்கம் இல்லாமல் எல்லாருடனும் பழக ஊக்கம் தர வேண்டும். சில குழந்தைகள் அதிகம் வெளிப்படைத்தன்மையுடனும் வெகுளியாகவும் இருக்குமானால் அவைகளுக்கு எச்சரிப்பையும் சுயகட்டுப்பாடையும் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகக் கற்றறிந்து அவற்றுக்கேற்றபடி நடத்த வேண்டியது அவசியம். போலித்தனம் மருத்துவத்திலிருந்தும் கல்வியில் இருந்தும் புறந்தள்ளப்பட வேண்டியது. ஒரே மருந்து அனைத்துவிதமான நோய்களுக்கும் பொருந்தாதது போல, ஒரே மாதிரியான நடத்துதல் எல்லா மனங்களுக்கும் பொருத்தமாக இருக்காது. தன் உறவின் பொறுப்புகளை நிறைவேற்றும் தாயானவள் தன் கடமைக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படவும், அதற்கான தியாகங்களைச் செய்யவும் சில குறைகளைத் தாங்கிக்கொள்ளவும் வேண்டும். தாய்ப் பறவை தன் குஞ்சுகளை அடைகாக்கும் காலத்தில் தனிமையையும் சுய-வெறுப்பையும் செயல்படுத்தும் பொறுமை மிக்க அர்ப்பணிப்பைப் பார்த்து யார் தான் ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியும்? அந்தப் பறவை தன் சுதந்தரத்தையும், இன்பங்களையும் இந்தக் கடமைக்காக ஒதுக்கி விடுகிறது. ஒரு தாய்ப்பறவை ஆறறிவற்ற தன் இயற்கை உணர்வால் இவ்வளவு தியாகம் செய்வதுபோல, ஒரு பெண்ணும் தன் பிள்ளைகளுக்காக அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தியாகம் செய்ய விரும்ப வேண்டும்.

அவளுடைய பொறுப்பில் உள்ள குழந்தைகளுக்காக சமூக வாழ்க்கையின் சில இன்பங்களையும், ஆவிக்குரிய நண்பர்களுடன் பெரும் நன்மைகளைக்கூட தியாகம் செய்ய வேண்டி வரும். தன் குழந்தைகள் மீது ஒரு தாயாக அதிகாரம் செலுத்த விரும்புகிறவள் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்…. ஒரு தாய் வெளியே எங்கும் செல்லாமல் அல்லது பிறருடைய ஐக்கியத்தில் பங்குகொள்ளாமல், தன் சொந்த வீட்டில் சிறையில் அடைத்து வைத்திருக்கும்  கைதி போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தனது குடும்பத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அவளுக்கும் அவ்வப்போது ஓய்வு தேவை. குறிப்பாக கர்த்தரை ஆராதித்து இன்புறும் ஐக்கியம் அவளுக்குக் கட்டாயம் தேவை. சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் முழுமையான அடிமைகளாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் வீட்டிலிருந்து ஆலயத்திற்குக் கூட ஒருபோதும் நகர மாட்டார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு தீவிரமான பிழை... இதற்கு நேரெதிர் துருவத்தில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக கூட, ஒரு சமூக விருந்தையோ அல்லது பொதுக் கூட்டத்தையோ விட்டுவிடமாட்டார்கள். தனது குழந்தைகள், தனது வீடு மற்றும் தனது கணவருக்காக இதுபோன்ற பல தியாகங்களைச் செய்யத் தயாராக இல்லாத பெண், திருமண வாழ்க்கையில் நுழைவதைப்பற்றி ஒருபோதும் நினைக்கக்கூடாது.

இளம் வயதிலேயே உங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அவர்களின் படிப்பினைக்கும் ஏற்ற சிறந்த முறையை உபயோகிக்கும்படி புத்திசாலித்தனமாகவும், புதுமையாகவும், கவனமாகவும் இருங்கள். கல்வி, குறிப்பாக ஆவிக்குரிய போதனை என்பது ஒரு வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தை வாசிப்பது, ஒரு மறைகல்வியின் போதனை, அல்லது ஒரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது மட்டுமே என்றும், இது முடிந்ததும் அனைத்தும் முடிந்துவிடும் என்றும் கற்பனை செய்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் வளர்க்கும் ஒரே திறமை நினைவாற்றல் மட்டுமே. பிள்ளைகளின் புத்திக்கூர்மை, விருப்பங்கள் மற்றும் மனசாட்சி ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு கிறிஸ்தவ தாய் கவனத்தை ஈர்ப்பதற்கும் அதைத் தக்க வைத்திருப்பதற்கும் சிறந்த முறையைக் கண்டுபிடிக்க தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அவள் ஒருபோதும் கவனச் சிதறலுக்கு இடம் கொடாதபடிக்கு நீண்ட நேரம் கவனம் திசைமாற இடமளிக்கக்கூடாது.

உங்கள் வேத போதனைகளில் பழகியவர்களாக இருங்கள். இயல்பாகவே வரும் உரையாடல்கள் மூலமாகக் கற்றுக்கொடுப்பது, ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கும் சம்பிரதாயப் பாடங்களைவிட சிறப்பானது. பொதுவான வாழ்க்கைப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்களைப் போதிப்பது என்பது உலகரீதியான பாடங்களில் இருந்து புனிதமான பாடங்களுக்குச் செல்லும் மாற்றத்தை புறக்கணிப்பதை விடச் சிறந்தது. வெறுமனே ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளிச்சத்திற்கு நடத்துவதைவிட, எல்லாவற்றையும் கடவுளிடம் இணைத்துக் காண்பித்து, வேதத்தின் சத்தியங்களை வாழ்வின் ஒவ்வொரு மணி நேர நிகழ்வுகளுடன் இணைத்துக் காண்பிப்பது சிறப்பானது. தியானத்திற்கான காலம் திரும்ப வரும்போது அனைத்து ஆவிக்குரிய சத்தியங்களையும் ஒரே வடிகாலில் தள்ளுவதைவிட, மேற்கண்ட வழிகளில் பிள்ளைகளை நடத்துவதால் அவர்தம் இதயங்களை தங்கள் மேலான ஆசிரியருக்குத் திறக்கும் வழி உண்டாகும். அவர் பயங்கரமான திகிலூட்டும் சக்தி அல்ல, எந்தவித பிணைப்பும் இல்லாமல் தூரத்தில் நிற்பவரும் அல்ல, மாறாக அன்புக்கும் பயபக்திக்கும் உரியவர். “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” (உபாகமம் 6:6,7).

தாய்மார்களே, நீங்கள் அத்தகைய செல்வாக்குடன் இருப்பதால், உங்கள் பொறுப்பில் அதிகம் கவனம் செலுத்துங்கள். ஆண்டவர் உங்களுக்கு வழங்கிய இத்தகைய அதிகாரத்துடன், உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே பொறுப்பு... உங்கள் கணவர்களுக்கு நீங்கள் பொறுப்பு. அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை உங்களிடம் ஒப்படைக்கிறார்கள்... நீங்கள் தேவனுடைய திருச்சபைக்கும் பொறுப்பு உடையவர்கள். ஏனென்றால் பக்தியுள்ள குடும்பங்களில் தரப்படும் போதனையே பிள்ளைகள் இரட்சிப்படைவதற்கான முக்கியமான வழிமுறையாக இருக்கிறது, இருக்கவும் வேண்டும். கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இரட்சிப்பிற்காக சபை ஊழியர்களை எதிர்பார்த்திருப்பது ஒரு மாபெரும் தவறு. ஐயோ! இதுதான் இந்த நாட்களின் முக்கிய தவறு. பெற்றோரின் பொறுப்பில் இருந்து வரவேண்டிய நன்மைகளுக்காகப் பிரசங்க மேடையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...

எல்லாவற்றிலும், சரியாகத் துவங்குவது இன்றியமையாதது. துவக்கமே வளர்ச்சியையும் முடிவையும் தீர்மானிக்கிறது. கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள், எவ்வளவு நீண்ட காலமாகவும், வேண்டுமென்றேயும் நிலைத்திருந்தாலும், புத்திசாலித்தனம், உறுதிப்பாடு மற்றும் தேவ ஆசீர்வாதத்தால் சரிசெய்யப்படலாம். இல்லையென்றால் சீர்திருத்தத்தால் எந்த பயனும் இல்லை. ஆனால் தவறுகளைத் திருத்துவதை விட அவற்றைத் தவிர்ப்பது எவ்வளவு சிறந்தது மற்றும் எளிதானது! பல தாய்மார்கள் தங்கள் தவறுகளைத் திருத்துவதற்கு மிகவும் தாமதமாகும்போது அதை உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தவறான ஆளுகையின் கீழும் நடத்துதலின் செல்வாக்கிலும் வளர்ந்து நிலையான கெட்ட பழக்கத்தை உடையவர்களாகின்றனர். அந்தப் பழக்கத்தை எந்தவித ஞானம், உறுதி, கண்டிப்பு அல்லது பாசத்தினால் திருத்த முடியாத நிலைக்குப்; போய்விடுகிறது. மேலும் பெற்றோர் தங்கள் பொறுப்புகளைப் பற்றிய சரியான மனப்பான்மையுடன் வாழ்க்கையைத் தொடங்கவில்லையே என்கிற தவிர்க்கமுடியாத கசப்பான வருத்தங்களை வெளிப்பத்த வேண்டியதாகிறது.

ஒரு தாய் நன்றாகத் துவங்கினால், அது நன்றாகவே தொடர வாய்ப்புள்ளது. இது போலவே சரியாகத் தொடங்காதவர்கள் வாழ்வில் நன்றாக முன்னேற முடியாது என்பதும் உண்மை. அவளது முதலாவது குழந்தையை நடத்தும் விதம் அடுத்தடுத்த பிள்ளைகளை நடத்துவதிலும் தொடரும். இந்தக் குறிப்பிட்ட குடும்ப சரித்திரத்தின் முக்கியமான தருணத்தை எத்தனை அதிகம் ஜாக்கிரதையுடனும் ஜெபத்துடனும் நிதானித்துப் பார்க்க வேண்டும்! வாஸ்தவத்தில் இந்தக் காரியத்தில் ஒரு மனைவியானவள் தாயாக மாறும்வரை கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று நினைப்பது தவறு. வரப்போகும் புதிய கடமைகளை நிறைவேற்ற சரியாக ஆயத்தப்பட வேண்டியது அவசியம்... நாம் சீக்கிரம் நம்பிக்கையோடு நுழையப்போகிற  எந்தச் சூழலுக்காகவும் நம்மை ஆயத்தப்படுத்துவது நமக்குத் தகுதியானது. நாம் எதிர்பார்க்கும் சூழல்களை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்படி வரப்போகும் காரியங்களைக் குறித்த முறையான திட்டமிடுதல் என்னும் பண்பு மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கு வரப்போகும் தாய்மைப் பொறுப்பைக் குறித்து முன்னமே திட்டமிடாத தாயானவள் அந்த முக்கியமான உறவில் வெற்றிகரமாக செயல்பட முடியாது... ஒரு இளம் மனைவி பிள்ளைப்பெறுவதைப் பற்றிய வாய்ப்பு தன் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகுமோ என்று பயப்படுகிறதும் இருக்கிறது. வேறு சிலர் தங்களுக்கு வரப்போகும் பிள்ளைகளின் சரீர நன்மைக்காகவே அதிகம் ஆயத்தம் செய்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனது, இருதயம் மற்றும் மனசாட்சியின் வளர்ச்சி பற்றிய முக்கியப் பொறுப்பிற்காக ஆயத்தப்பட மறந்து விடுகிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கான கடமைகளை நிறைவேற்ற விரும்பும் தாயானவள் அந்த செயல்களை நன்றாகச் செய்வதற்கான பயிற்சிக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தன் மனதை அறிவினால் நிரப்பும்படி அவள் வாசிக்க வேண்டும். எல்லாத் தரப்பிலும் இருந்து பயனுள்ள தகவல்களை அவள் சேகரிக்க வேண்டும். அவளுடைய பண்புகள் நிலையானவையாகவும், திட்டங்கள் ஆயத்தமாக்கப்பட்டதாகவும், நோக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். அவள் போதிக்கவும் பிள்ளைகளைச் சரியாக நடத்தவும் தேவையான எல்லா நற்பண்புகளையும் வளர்க்க வேண்டும். அதற்காகப் பக்குவப்டுத்தப்பட்ட சிந்தை, முன்னெச்சரிக்கை, துரிதான பார்வை மற்றும் பலதரத்தில் வெளிப்பட வேண்டிய விவேகம் அவளை நிரப்ப வேண்டியது. குழந்தை வளர்ப்புக்கான செயல்களைப் பற்றிய பழக்கங்கள், ஒழுங்கு அவளுக்கு மிகவும் அவசியமானவை. அது மட்டுமல்லாமல் குழந்தை வளர்ப்புக் குறித்த நல்ல இனிமையான உணர்வுகளையும் அவள் வளர்க்க வேண்டும். தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி உறுதியான பொறுமையுடன் செயல்பட அவள் தன்னைப் பக்குவப்படுத்த வேண்டும். மனித சுபாவம் குறித்த அறிவும் மனித இருதயத்தை நடத்தும் வழியும் அவளுக்கு மிக முக்கியமான தேைவாயனவை. எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய பக்தியுள்ள வாழ்வு அவளில் திறம்பட செயல்படுவதற்கான பக்குவத்தையும் அதைச் செயல்படுத்துவதற்கான வல்லமையான வழிமுறையையும் உருவாக்கும். தன் பிள்ளைகளின் கண்களும் காதுகளும் தாயாரின் நடத்தையை உற்று நோக்குபவைகள் என்பதால் அவள் எப்போதும் தன் செயல்களை ஆராய்ந்து பார்க்கத் தவறக்கூடாது. பிள்ளை வளர்ப்புக்கான் சூழல் வரும் முன்னர் ஆயத்தமாவது மட்டுமல்லாமல், குழந்தையை வளர்க்கும்போதும் அவள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களுக்கு அதிக ஆயத்தம் தேவை. வேறு சில சந்தர்ப்பங்களுக்குக் குறைவான ஆயத்தமே தேவை.

மறுபடியும் தன் குழந்தையின் நலன் மற்றும் ஆறுதல் குறித்து மிகுந்த அக்கறையுடன் தாய் விளங்குவதை நாம் அடிக்கடி காண்கிறோம். அனைத்து விக்ஷயங்களிலும் அதிக ஈடுபாடு காண்பிக்கும் அவளுடைய இந்த அக்கறை, தன் குழந்தையின் மீதான சந்தோக்ஷத்துடன் இணைந்தது. தன் குமாரனைக் குறித்து அவளுக்கு அத்துணை பெருமிதமும் மகிழ்ச்சியும் இருக்கிறது. ஏனெனில் ஒரு அழிவில்லாத கடவுளின் படைப்பு தனது பொறுப்பில் விடப்பட்டுள்ளதைப் பற்றிய மேன்மையான பரிசுத்தமான பிரதிபலிப்பு அவளை நிரப்புகிறது. அவள் தன் குமாரனின் இம்மையையும் மறுமையையும் குறித்த அக்கறையோடு விழித்திருக்க வேண்டியவள். தன் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியில் அவளுடைய கவனம் செலவிடப்படுகிறது. அந்தக் குழந்தையின் புரிதல், விருப்பம், பாசம், மனசாட்சி போன்றவை குறைந்த அளவில் திறக்கப்பட்டாலும், அவைகள் துவக்கத்தில் புறக்கணிக்கப்படுகின்றன. தீமைக்கு நேரான சார்பு நிலை கவனம் பெறாமலும் கட்டுப்படுத்தப்படாமலும் வளர்கிறது. நல்ல சுபாவ வளர்ப்பு குறித்த நியாயமான அக்கறை இல்லாமலேயே காலம் கடக்கிறது. விருப்ப உணர்ச்சிகள் கட்டுப்பாடே இல்லாமல் அனுமதிக்கப்பட்டு, பிடிவாதமாக மாறும் அளவிற்கு மாறுகிறது. தன் பிள்ளையைத் திருத்த போதுமான நேரம் இருக்கிறது என்று சொல்லி அதற்கான ஒழுக்கத்தைத் தாமதப்படுத்தும் தாயானவள், அந்தப் பிள்ளையை ஒழுக்கத்திற்குள் கொண்டு வரும் போது இது எவ்வளவு கடினமான காரயம் என்று ஆச்சரியப்படுகிறாள். உண்மையாகவே என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. துவக்கத்தில் கண்டு கொள்ளப்படாத பிள்ளை வளர்த்தியிலும் பெலத்திலும் பிடிவாத குணம் நிறைந்தவனாகவும், சுய விருப்பத்தை முதன்மைப் படுத்துகிறவனாகவும் வளர்ந்து விடுகிறான். இப்போது தாயாள் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தகப்பன் தன் வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவதால் தன் மனைவிக்கு உதவி செய்யவோ நேரம் இல்லை. இந்த நிலையை சாலமோன் ஞானி இவ்வாறு விவரிக்கிறார்: “தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” (நீதிமொழிகள் 29:15).

இளம் தாய்மாரே, நன்றாகத் துவங்குங்கள். அந்த முதல் குழந்தையை நிதானமுடன் நடத்துங்கள். உங்கள் திறன், பாசம், ஜாக்கிரதை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தும் அவனைப் பயிற்றுவிப்பதில் செலவிடப்படட்டும். இந்த வகையில் உருவாக்கப்படும் நற்பண்புகள் பின்நாட்களில் மற்ற பிள்ளைகளும் பின்பற்றி வருவதற்கு இலகுவாக அமையும். முதல் குழந்தையைப் பற்றிய புதுமை உங்களில் ஏற்படுத்தும் பாசங்கள் மற்றும் ஆர்வங்கள் உங்களைக் கவனமற்றவர்களாக மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பழக்கங்களுக்குக் கவனம் செலுத்துவதைத் தவறவிடுகிறீர்கள். முதல் குழந்தைதான் நல்ல தாயை அல்லது நிதானமற்ற தாயை உருவாக்குகிறது.

முதல் குழந்தையுடன் உங்கள் தாய்வழி சிறப்பைத் தொடங்குவது மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கும், தொடர்ந்து சேர்க்கப்படும் ஒவ்வொருவருக்கும், நான் ஏற்கனவே கூறியது போல்,  பயிற்சியைசீக்கிரமாகவே தொடங்குவது அதிக முக்கியத்துவமானது. ஒரு குழந்தையின் கல்வி எழுத்துக்களுடன் தொடங்குவதில்லை. அது ஒரு தாயின் பார்வையுடன் தொடங்குகிறது. ஒரு தந்தையின் பாராட்டு அல்லது கண்டிப்பு அடையாளத்துடன், ஒரு சகோதரியின் மென்மையான கையசைப்புடன், அல்லது ஒரு சகோதரனின் உன்னதமான சகிப்புத்தன்மையுடன் துவங்குகிறது. கரங்களில் தவழும் பூங்கொத்துகளின் வழியாகவும், புல்வெளிகளில் ரசிக்கும் எறும்புகளின் அசைவிலும், இரைந்து செல்லும் வண்டுகளிலும் கண்ணாடி போன்ற தேன் கூடுகளிலும், இனிய நடைபயணங்களிலும் தொடர்கிறது. இயல்பாக வெளிப்படுத்தப்படும் பாசமும் கனிவும் கொண்ட வார்த்தைகள், கனிவான செயல்பாடுகளின் மீதான நாட்டம் ஆகியவற்றில் இருந்து பிள்ளைகள் பாடம் படிக்க வேண்டும். ஆம், இதெல்லாம் செய்யப்படுவதற்கு முன்பு, பூக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகள் மூலம் குழந்தைக்குக் கற்பித்தல் பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பு, ஒரு தாயின் பார்வை, அவள் ஒப்புதல் அல்லது கண்டிப்பின் வழியாக ஒழுக்கப் பயிற்சியைத் துவங்கலாம்.

தாய்மார் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் தங்கள் பிள்ளைகளின் முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் முக்கியமானவை அல்ல என்று நினைப்பதுதான். ஆனால் உண்மை என்னவென்றால், குணாதிசய உருவாக்கத்தில் அந்த நாட்கள் மிகவும் முக்கியமானவைகள் என்பது தான். இந்த முக்கியமான தருணங்களில் தான் குழந்தையின் வாழ்வில் பண்புகள் விதைக்கப்படுகின்றன, பழக்கங்கள் உருவாகின்றன, அவனுடைய உலக வாழ்வுக்கான மற்றும் நித்தியத்திற்கான அடிப்படைக் குணநலன்கள் பல வர்ணங்களை எடுக்கின்றன. ஒரு குழந்தை பேசத் துவங்குவதற்கும் முன்பே ஒழுக்க சம்பந்தமான பயிற்சிக்கு உட்படுகிறது. குழந்தையின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும் முன்னரே அதன் மனசாட்சி அல்லது அறம் சார்ந்த சிந்தை விவேகமுள்ள தாயாரால் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆகவே துவக்கத்தில் இருந்தே தன் தாயார் எதைச் சரி என்றும் எதைத் தவறு என்றும் காண்கிறார் என்பதை அவன் புரிந்து கொள்வதுடன், அம்மாவுக்கு எது பிடிக்கிறது – பிடிக்கவில்லை என்பதையும் அறிகிறான். கொடூரமான விலங்குகளுக்கே இந்த வித்தியாசத்தை உணர முடியுமானால் இளம் குழந்தைகளால் ஏன் இதை உணர முடியாது? இந்த விலங்குகளுக்கு இருக்கும் புரிதலைவிட குழந்தைகளின் புரிதல் துவக்கத்தில் குறைவாகவே உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அநேக நேரங்களில் என் பிள்ளை கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும் பயிற்சி பெறும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்று பெற்றோர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்த மாதிரி சிந்தையில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சில வருடங்கள் அல்லது மாதங்கள் அவர்கள் போக்கில் இருக்க அனுமதிக்கிறவர்கள் அதற்கான விலையை உணரும்போது, அவர்கள் கற்கும் பாடங்களை அவர்களால் சீக்கிரம் மறக்க முடியாது. புத்திக்கூர்மை சார்ந்த பயிற்சியைப் பிள்ளைகள் பெறும் முன்பதாக அறம் சார்ந்த பயிற்சிகளைப் பெற வேண்டியது அவசியம். பாசத்தையும் மனசாட்சியையும் வளர்ப்பது கல்வியின் தொடக்கமாகவும் அடித்தளமாகவும் இருக்க வேண்டும். அது குழந்தையின் வளர்ச்சியையும், அதற்குப் பயிற்சி அளிப்பவர்களின் அல்லது கற்பிப்பவர்களின் ஒவ்வொரு தொடர்முயற்சியையும் எளிதாக்கும்... பயம், அச்சமும் மற்றும் கவலையும் நிறைந்த தாய்மார்களே, பயப்பட வேண்டாம்! ஜெபம் தேவ உதவியையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு வரும்.

ஒரு இளம் தாய் மிகவும் பொதுவாக விழக்கூடிய மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றுமொரு ஆபத்து பிள்ளைகளின் நியாயமற்ற விருப்பங்களுக்கு அனுமதி தருவது தான். அன்பாக இருங்கள். நீங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அன்பற்ற, கடின இதயம் கொண்ட தாய் தன் பாலினத்தையும் உறவையும் அவமதிக்கிறாள். அன்பு அவளுடைய சக்தி, அவளுடைய கருவி... அது இல்லாமல் அவளால் எதையும் செய்ய முடியாது, அவள் அன்பில்லாமல் இருப்பது மிகவும் மோசம். “நான்  நேசிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;" (வெளிப்படுத்துதல் 3:19) என்று சொன்ன தெய்வீக பெற்றோரின் அன்பைப் போல தாயின் அன்பும் இருக்க வேண்டும். ஒரு குழந்தை, வெற்றி புன்னகையுடன், கெஞ்சும் குரலுடன் அல்லது அழும் கண்களுடன், தான் பெற வேண்டிய நல்லதல்லாததைக் கேட்கும்போது, “கிடையாது" என்று சொல்ல முடியுமா? அவனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு காரியத்தை அவனில் இருந்து எடுத்தால் அது அவனுக்கு வேதனையைத் தந்தாலும் அதை உங்களால் செய்ய முடிகிறதா? அவனுடைய தவறுகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்ற உங்கள் நிதானிப்புக்கு எதிராக உங்கள் மனம் அலைபாயும்போதும் உங்களால் சரியானதைச் செய்ய முடிகிறதா? அவ்வாறு செய்யும் சமயத்தில், அவன் உங்கள் கழுத்தில் ஒட்டிக்கொண்டு அழுதாலும், அவனை உங்கள் கைகளிலிருந்து விலக்க முடியுமா? அவனுக்குக் கடினமானதாகவும், ஆனால் உங்களுக்கு அவசியமானதாகவும் இருக்கும் கட்டளைக்கு அவனைக் கீழ்ப்படியப்பண்ண முடியுமா? அவனுடைய அழுகையைக் கண்டு உங்கள் மனம் இளகாமல் உங்கள் நோக்கத்தில் உறுதியுடன் செயல்பட்டு அவனுடைய ஒழுக்கத்தில் விட்டுக்கொடுக்காமலும் இருக்க முடியுமா? அல்லது நீங்களோ போட்டியில் இருந்து விலகி உங்களை ஆற்றிக்கொண்டு, அவனுடைய அழுகையைத் தணித்து விடத்துடிக்கும் தாயாக செயல்படுகிறீர்களா?  மேற்கண்ட உறுதியைப் பிள்ளைகளின் சிட்சையில் காண்பியாதவள் தாயாக இருக்கத் தகுதியற்றவள். குடும்பத்தில் ஒழுக்கம் அவசியம். பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிய வேண்டும். இதை விட்டுக் கொடுத்தால், உங்கள் பிள்ளைகளை தீமையில் வளரப் பயிற்சி தருகிறீர்கள், நன்மை செய்ய அவன் பயிற்சி பெறவில்லை. இங்கேயும் நான் திரும்பவும் சொல்கிறேன். சீக்கிரம் துவங்குங்கள். இலகுவும் மிருதுவுமான நுகத்தைச் சீக்கிரம் போட்டு விடுங்கள். குதிரை இளம் கன்றாக இருக்கும்போதே கட்டுப்படுத்தப்படுகிறது. காட்டு விலங்குகள் இளமையில் இருக்கும்போதே அடக்கப்படுகின்றன. மனித இனமும் விலங்குகளும் விரைவில் ஒழுக்கத்தின் சக்திக்கு அப்பாற்பட்டவையாக வளர்கின்றன... உங்கள் குழந்தைகளை நித்தியத்திற்கு நியமிக்கப்பட்ட அழியாத உயிரினங்களாகவும், பரலோகத்தின் இன்பங்களை அனுபவிக்கக்கூடியவர்களாகவும் பார்க்கும்போது,  குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களின் மனதில் ஆவிக்குரிய பக்தியால் நிரப்ப நீங்கள் பாடுபடுவீர்கள். அழியாமையின் சிந்தையே அற்பத்தனம் மற்றும் முக்கியத்துவமின்மையிலிருந்து அனைத்தையும் மீட்டெடுக்கிறது. அந்த சீரிய சிந்தையைப் பார்க்கிலும் தாயின் மரியாதை வேறு எந்த அளவிலும் எழுவதில்லை.

சர்வவல்லவரின் இறையாண்மை நியமனத்தால், அவள் ஒரு தற்காலிக இருப்புக்கு அல்ல, ஒரு அழியாத உயிரைப் பெற்றெடுத்திருக்கிறாள்;! அவளுடைய பால் குடிக்கும் குழந்தை, பலவீனமாகவும் உதவியற்றதாகவும் தோன்றினாலும், அதன் உள்ளே பகுத்தறிவுள்ள ஆத்துமா, ஒரு அறிவுசார் சக்தி, காலத்தால் அழிக்கமுடியாத ஒரு ஆவி இருக்கிறது. அதற்கு மரணம் இல்லை. அது நாம் காண்கிற சூரியனின் மகிமைகளையும், விண்ணில் காணும் ஏனைய வஸ்துக்களின் மகத்துவத்தையும் மிஞ்சும். இவை அனைத்தும் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றி, அவற்றின் படைப்பின் நன்மையான முடிவுக்கு வரும்போது, அவையாவும் அழிந்துபோகும். ஆனால் நித்தியத்தின் எல்லையற்ற யுகங்கள் முழுவதும், இந்த எளிய குழந்தையின் ஆத்துமா நித்தியரின்  சிங்காசனத்தின் முன் பிரகாசிக்கும். பரிசுத்த மகிழ்ச்சியாலும் தெய்வீக அன்பினாலும் நிரம்பி தன்னைப் படைத்த அநாதி தேவனை அந்த ஆத்துமா உயர்த்திக் கொண்டே இருக்கும். தாய்மார்களே, உங்கள் மேன்மை இது தான். உங்களுக்கான உயர்வான மதிப்பு இது தான். சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனுடைய குமாரர்களையும் குமாரத்திகளையும் பயிற்றுவிக்கவும், கர்த்தராகிய இயேசு ஆயத்தப்படுத்தச் சென்ற அவருடைய பிதாவின் வீட்டின் பல மாளிகைகளில் வசிக்கப் போகும் பரிசுத்த குடும்பத்தைத் தயார்படுத்தவும் அழைக்கப்பட்டதில் உங்கள் செழுமையான வேறுபாட்டை உணர்ந்து மதிக்கவும். இந்த மகிமையான வேலைக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். ஆனால் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் விவேகத்துடன் இருங்கள், இல்லையெனில் நீங்கள் உண்மையான பக்திக்கு ஏதுவான முயற்சி எடுப்பதற்குப் பதிலாக, எதிர்மறையான வஞ்சகத்தை உருவாக்குவீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு விசுவாசத்தைக் கற்பிக்கும்போது நீங்கள் மிகுந்த பாசத்தையும், மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி, பிள்ளைகளை ஈர்க்கக்கூடிய புன்னகையுடன் கற்பியுங்கள்;. ஒரு அணுகுமுறை ஒரு தேவதூதனைப் போன்ற அணுகுமுறையாகட்டும். விசுவாசத்தை அதன் அனைத்து அழகு, அன்பு, புனிதத்தன்மை மற்றும் விவரிக்க முடியாத இனிமை ஆகியவற்றில் பிரதிநிதித்துவப்படுத்துங்கள். அவர்கள் அதை உங்கள் குணத்திலும், உங்கள் உதடுகளிலிருந்தும் கேட்கட்டும்.