“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” ஏசாயா 45:22”
நான் இந்த கட்டுரையை கிறிஸ்தவ தாய்மார்களுக்கு எழுதியுள்ளேன்; கிறிஸ்தவர்கள் அல்லாத சிலரும் இதைப் படிக்கக்கூடும் என்பதால், தேவனுடைய ஆவியானவரை அறியாத அவர்களுக்கும் (ரோமர் 8:16) சில வார்த்தைகளைச் சேர்த்தே எழுதி அனுப்ப வேண்டும் என்று உணர்கிறேன்.
அன்பு வாசகரே! நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு விரைவாகப் பதில் சொல்லாதீர்கள். கடைசி நாளில் தாங்கள் தவறாக நினைத்துக்கொண்டிருந்ததை அறிந்துகொள்ளும் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று இப்போது கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் ஏமாற்றத்தோடு வாழ்வது மட்டுமல்லாமல், ஏமாற்றத்தோடு இறப்பதும் உண்டு என்று தேவனுடைய வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று தங்களைத் தாங்களே மகிழ்வித்துக்கொண்டு, நரகத்திலே தங்கள் கண்களைத் திறக்கும் வரை அவர்கள் தவறைக் கண்டுபிடிக்கவே மாட்டார்கள். ஆகையால், "நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்களா?" என்ற இந்தக் கேள்வியை நாங்கள் உங்கள்மேல் சுமத்துவதை விசித்திரமாக எண்ணாதீர்கள்.
இந்தப் பயங்கரமான கேள்வியைச் சிந்தியுங்கள். இதை உங்கள் முன்னிலையில் வைத்துக்கொள்ளுங்கள். இயேசுவை விசுவாசிப்பதின் மூலம் உங்கள் இருதயமும் வாழ்க்கையும் மாறப்படாதவரை நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்ல என்பதை உங்களுடைய நினைவில் கொள்ளுங்கள். (எபேசியர் 4:21).
அப்படியானால் உங்கள் இருதயத்தின் நிலை என்ன? உங்கள் இருதயம் இந்த வாழ்க்கையின் அற்பமான விஷயங்களிலும், வீணானவைகளிலும் ஆசை வைத்துள்ளதா? அல்லது "கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிற இடமாகிய மேலானவைகளில்" (கொலோசெயர் 3:1) ஆசை வைத்துள்ளதா? அது துன்மார்க்கமான ஆசைகளின் வாசஸ்தலமா?அல்லது அது சமாதானம், அன்பு மற்றும் பரிசுத்த மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆலயமா? இதில் உங்கள் வாழ்க்கையின் நிலை என்ன?
நீங்கள் உங்கள் கண்களுக்குத் தோன்றியபடியெல்லாம், "இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாக" வாழ்கிறீர்களா? (எபேசியர் 2:2) அல்லது நீதியின் கனியைக் கொண்டுவந்து, உலகத்திலிருந்து தன்னைக் கறைபடியாமல் காத்துக்கொண்டு சுவிசேஷத்திற்கு ஏற்ற நடத்தையால் இரட்சிப்பின் தேவனாகிய இயேசுவின் போதனையை அலங்கரிக்கிறீர்களா? (யாக்கோபு 1:27), ஓ! ஏமாறாதீர்கள்! உங்கள் இருதயமும் வாழ்க்கையும் மாறப்படாவிட்டால், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்ல. நீங்கள் சத்தியத்தை விசுவாசித்து இவ்வாறு மாறப்படும் வரை, நீங்கள் "நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும்" இருக்கிறீர்கள். (அப்போஸ்தலர் 8:23) சமயக் கடமைகளை வெளிப்புறமாக நீங்கள் ஆசரிப்பதால் அது உங்களை இரட்சிக்க முடியாது. உங்களுடைய இனிய பண்புகள் உங்களை இரட்சிக்க முடியாது. உங்களுடைய உலக நீதி உங்களை இரட்சிக்க முடியாது. உங்களுடைய தர்மங்கள் உங்களை இரட்சிக்க முடியாது. இவை அனைத்தோடும் கூட, பரலோகத்தின் வாசல் உங்களுக்கு மூடப்பட்டதையும், "புறம்பான இருளிலே அழுகையும் பற்கடிப்பும்" உண்டாகும் என்பதையும் நீங்கள் காணலாம். (மத்தேயு 8:12) இதை நம்புவதில் தயங்குகிறீர்களா? "இது கடினமான வார்த்தை" என்று சொல்கிறீர்களா? அன்பு வாசகரே! இது என் வார்த்தை மட்டுமேயானால், அது ஒரு சிறிய விஷயமாக இருக்கும். ஆனால் இது உங்களை நியாயந்தீர்க்கப் போகிறவரின் வார்த்தையாகும்: "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (யோவான் 3:3).
இவை "விசுவாசமுள்ளவரும் உண்மையுள்ளவருமான சாட்சி"யின் (வெளிப்படுத்தல் 3:14) வார்த்தைகளாகும். அவருடைய வார்த்தைகளில் ஒன்று நிறைவேறாமல் போவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது நலமானது. ஆகையால், தேவன் கிருபையுள்ளவர், ஒருவேளை எல்லாவற்றிற்கும் பிறகு அவர் உங்களைத் தப்பவைக்கலாம் என்று சொல்லி, இந்த வார்த்தைகளின் பயங்கரத்தை குறித்து கவனமற்று இருந்துவிடாதீர்கள். தேவன் கிருபையுள்ளவர் என்று நான் அறிந்திருக்கிறேன். மேலும், அதைக்குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவர் அப்படியில்லாவிட்டால், இதற்கு முன்பே நீங்களும் நானும் ஒரு துளி நம்பிக்கைகூட இல்லாமல், நிராசையின் சிறையில் அடைக்கப்பட்டிருப்போம். ஆனால் தேவன் கிருபையுள்ளவர் மட்டுமல்ல, உண்மையுள்ளவர் என்பதும் நான் அறிவேன். அவருடைய கிருபை ஒருபோதும் அவருடைய வேதவார்த்தைகளை அழிக்கும் விதத்தில் செயல்படாது. அவருடைய கிருபை அளவில்லாததாக இருந்தாலும், "சுவிசேஷத்தின் வார்த்தையாகிய சத்தியத்தை" (கொலோசெயர் 1:5) தள்ளிவைக்கிறவர்களுக்கு அது கொடுக்கப்படாது. ஏனென்றால் இது அவருடைய சொந்த வெளிப்படையான வாக்குறுதியைப் பொய்யாக மாற்றும். அவருடைய கிருபை இப்போது அவருடைய வார்த்தையில் உங்களுக்குக் காட்டப்படுகிறது. அவருடைய கிருபை பாவத்திற்கான பரிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது, அதன் மூலம் நீங்கள் இப்போது இரட்சிக்கப்படலாம்! அவருடைய கிருபை இந்தப் பரிகாரத்தை விசுவாசத்தின் அடிப்படையில் உங்கள் முன்வைக்கிறது. ஆனால் நீங்கள் "இவ்வளவு மகத்தான இரட்சிப்பைப் புறக்கணித்தால்" (எபிரெயர் 2:3), கோடாரி மரத்தின் வேரில் வைக்கப்பட்டு நீங்கள் வெட்டப்படும்போது, உங்களைப் பொறுத்தவரை அவருடைய கிருபை உங்களிடம் முற்றிலும் நிறுத்தப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிருபையை நீங்கள் அவமதித்ததால், தேவனுடைய நீதியின் பயங்கரமான விளைவுகளை அனுபவிக்க விடப்படுவீர்கள். "நான் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?" (அப்போஸ்தலர் 16:30) என்று கேட்கிறீர்களா? தேவனுக்கு ஸ்தோத்திரம், பதில் அருகில் இருக்கிறது: "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்" (அப்போஸ்தலர் 16:31) தேவன் தாமே ஒரு பலியாக ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தம் செய்துள்ளார். அவர் "நம்முடைய எல்லா அக்கிரமங்களையும் அவர் மேல் போட்டார்" (ஏசாயா 53:6). "அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்படுத்தப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்" (ஏசாயா 53:5). ஆகையால், "உலகத்தின் பாவத்தைத் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை பாருங்கள்." (யோவான் 1:29) பிதாவினிடத்தில் குமாரன் மூலம் வாருங்கள், அப்பொழுது உங்களை ஒருக்காலும் வெளியே தள்ளமாட்டார் (யோவான் 6:37).
நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கான செயல் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது! இயேசு மீறுதல்களை முடித்து, பாவங்களுக்கு முடிவுகட்டி, நித்திய நீதியைக் கொண்டுவந்துவிட்டார் (தானியேல் 9:24). தேவனின் கிருபாசனத்தை நீங்கள் அணுகுவதற்கான வழியை அவர் திறந்துள்ளார்; இப்போது நீங்கள் புண்படுத்திய தேவன் அந்த கிருபாசனத்தில் அமர்ந்து, மன்னிப்பையும் ஜீவனையும் வழங்குவதைக் காணலாம். உங்கள் ஆத்துமா ஜீவிக்கும்படி அவரிடத்தில் வாருங்கள் என்று அவருடைய கிருபையான குரல் அழைக்கிறது —ஆம், உங்கள் ஆத்துமா பிழைக்கும்படி அவரிடம் வரும்படி கெஞ்சி மன்றாடுகிறது (மத்தேயு 11:28-30).
உங்கள் மனசாட்சி, அது எவ்வளவு குற்றமுள்ளதாக இருந்தாலும், இம்மானுவேலின் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நீதியின் மீது வைத்துவிடுங்கள்., (ஏசாயா 7:14), அப்பொழுது நீங்கள் நிராகரிக்கப்படமாட்டீர்கள். "தேவபக்தியற்றவர்களை நீதிமானாக்குகிறவர்" (ரோமர் 4:5) மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்பு, அவருடைய இரக்கத்தைப் பெறுவதற்கு உங்களால் ஏதாவது செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கிரியைகளால் நீங்கள் ஏற்றுக்கொள்ளபட முயற்சிக்காதீர்கள். உங்கள் கையில் எந்த பணத்தையும் கொண்டுவராதீர்கள். தேவன் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை வியாபாரப் பொருளாக்க மாட்டார். அவர் நித்தியஜீவனை இலவசமாக கொடுப்பார்; அல்லது கொடுக்க மாட்டார். நீங்கள் அதை இலவசமாகப் பெற வேண்டும், குற்றவாளியாகவும், கண்டனம் செய்யப்பட்டவராகவும், அதை பெற்றுக்கொள்ள எந்த தகுதியும் அற்றவராக உணர்ந்து ஒரு பாவியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் அதைப் பெறமாட்டீர்கள். இந்த வார்த்தை அவருடைய சொந்த கிருபையான வார்த்தைகள் அல்லவா? "ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்." (ஏசாயா 55:1). எனவே, "நான் கர்த்தருக்கு முன்பாக எதைக் கொண்டு வருவேன்" (மீகா 6:6) என்று இனி விசாரிக்காதீர்கள். ஏனென்றால், "இந்த வார்த்தை எனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." (ரோமர் 10:8-10).