படிப்புகள்: 20
Print
ஆசிரியர்: ஜே.சி. ரைல்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 1:30 நிமிடங்கள்

 

மனித வாழ்க்கையின் அனைத்து உறவுகளிலும், கணவன் மனைவி உறவைப் போல வேறெந்த உறவையும் இவ்வளவு பயபக்தியுடன் கருதக்கூடாது; இவ்வளவு எச்சரிக்கையுடன் மேற்கொள்ளக்கூடாது. இந்த உறவு திட்டமிட்டும், ஆலோசனையுடனும், தேவபயத்துடனும் மேற்கொள்ளப்பட்டால், இவ்வுலகில் இதைப் போல மகிழ்ச்சியைத் தரக்கூடிய வேறு எந்த உறவும் இருக்கமுடியாது. ஆனால், அறிவுரை இல்லாமல், அலட்சியமாக, வெறுக்கத்தக்க வகையில், சிந்திக்காமல் இந்த உறவில் இறங்கினால், இதைப் போல துன்பத்தைத் தரக்கூடியது வேறு எதுவும் இருக்கமுடியாது. "கர்த்தரில்" திருமணம் செய்துகொள்ளும்போது, மற்ற அனைத்து நன்மையை காட்டிலும் ஆத்துமாவிற்கு பெரிய நன்மை கிடைக்கிறது. ஆனால் உங்கள் சுய கற்பனையிலும், கோபத்திலும் அல்லது உலக காரணங்களுக்காக மட்டுமே திருமணம் செய்யும்போது, அது ஆத்துமாவிற்கு மற்றெல்லா தீங்கைக்காட்டிலும் பெரிய தீங்காக இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களுக்கு நினைப்பூட்டுவது மிகவும் அவசியமாக இருக்கிறது. வாழ்க்கையில் மற்ற முடிவுகளைக்காட்டிலும் திருமணமானது அலட்சியத்துடனும், தன்னிச்சையாகவும், தேவனை மறந்தும் மேற்கொள்ளப்படுவது வருத்தத்திற்குரிய உண்மையாகும். தங்கள் திருமணத்திற்கு கிறிஸ்துவை அழைக்க நினைக்கும் இளம் தம்பதிகள் மிகக் குறைவு! துரதிர்ஷ்டவசமாக, உலகில் நிறைந்துள்ள துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் மகிழ்ச்சியற்ற திருமணங்களே ஒரு பெரிய காரணம் என்பது வருத்தம் தரும் உண்மையாகும். தாங்கள் தவறு செய்துவிட்டதை மக்கள் தாமதமாக உணர்கிறார்கள், பிறகு வாழ்நாள் முழுவதும் வேதனையில் வாடுகிறார்கள். திருமண விஷயத்தில் இந்த மூன்று விதிகளைப் பின்பற்றுபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முதல் விதி: கர்த்தருக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்வது, மேலும் தேவனின் ஒப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபித்த பிறகே திருமணம் செய்துகொள்வது. இரண்டாவது விதி: தம் துணைவரிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதைத் தவிர்ப்பது, திருமணம் என்பது இரு பாவிகளின் ஐக்கியம் தான் என்பதையும், இரு தேவதூதர்களின் ஐக்கியம் அல்ல என்பதையும் நினைவில் கொள்வது. மூன்றாவது விதி: ஒருவருக்கொருவர் பரிசுத்தமடைவதற்காக முதலாவதாக முயற்சி செய்வது. தம்பதியினர் அதிக அதிகமாக பரிசுத்தத்தில் வளர்ந்தால் அந்தளவிற்கு, அவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.