நம்முடைய ஆத்துமா
படிப்புகள்: 12
Print
ஆசிரியர்: ஜே.சி.ரைல்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

 "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" (மாற்கு 8:36)

நமது காதுகளில் எக்காள சத்தம்போல் முழக்கமிடும் இந்த வசனப்பகுதி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் சொல்லப்பட்டதாகும். உன்னதமான மற்றும் சிறப்பான சத்தியங்களை உள்ளடக்கிய இந்த வசனம், நமது ஆத்துமா சம்பந்தப்பட்டது. "மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை (ஆத்துமாவை) நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" என்ற மிக முக்கியமான கேள்வியை இது எழுப்புகிறது.

இயேசுகிறிஸ்து கேட்ட இந்தக் கேள்வியை விளக்குவதற்கு, சில எளிமையான கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். இதை மிகுந்த கவனத்தோடும், அதிக அக்கறையோடும் ஆழமாக வாசிக்கும்படி உங்களை அன்போடு வேண்டுகிறேன். இது உங்கள் அழியாத ஆத்துமாவின் மதிப்பைப் பற்றியது. நமது ஆத்துமாவின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடிப்பதே, நாம் பரலோகத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் படியாகும்.

1. நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு அழியாத ஆத்துமா உள்ளது

என்னுடைய ஆக்கத்தை இந்தத் தலைப்பைக் கொண்டு தொடங்குவதில் நான் வெட்கப்படவில்லை. இதை வாசிக்கும் சிலருக்கு இது விசித்திரமாகவோ முட்டாள்தனமாகவோ தோன்றலாம். "யார் இதைப் போன்ற காரியங்களைச் சிந்திக்கிறார்கள்? யாருக்குத் தங்கள் ஆத்துமாவைப் பற்றிய சந்தேகங்கள் எழுகின்றன?" என்று சிலர் வியப்படையலாம். உலகம் தற்போது தனது முழுக் கவனத்தையும் ஆடம்பரமான உலகப் பொருட்கள் மீது செலுத்துகிறது என்பதை நான் மறக்கவில்லை. நாம் நாகரிகம் முன்னேறிய காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புதிய கண்டுபிடிப்புகள், வர்த்தகம், ஏற்றுமதி, வங்கிகள், கடைகள், தங்கம் என உலகக் காரியங்களைப் பெரிதுபடுத்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்தக் காலப்பகுதியில் நேரத்தைக் குறித்த தவறான எண்ணங்களும், நித்தியத்தைக் குறித்த ஒரு மூடுபனியும் மனிதர்களின் கண்களை மறைத்துக் காணப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியனுக்கும் வேதாகமத்தின் அடிப்படைக் கொள்கைகளை எடுத்துக் காண்பிப்பது தலையாய கடமையாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கேட்ட இந்தக் கேள்வியை ஒவ்வொரு மனிதனிடமும் நாம் கொண்டு செல்லாவிட்டால், நமக்கு ஐயோ! "இந்தத் தற்போதைய உலகமே எல்லாம் அல்ல; நாம் வாழும் இந்தப் பூமிக்குரிய வாழ்க்கை மட்டுமே நிரந்தரமான வாழ்க்கை அல்ல" என்று மக்களிடம் கதறி அழுது சொல்லாவிட்டால் நமக்கு ஐயோ!

ஆம், நாம் ஒவ்வொருவரும் நமது இருதயங்களில் என்றுமே அழியாத ஒரு ஆத்துமாவைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நமது சிந்தனையில் ஆழமாகப் பதிக்க வேண்டும். இன்று நமது நேரமும் சிந்தனைகளும் உண்பதற்கும், உடுப்பதற்கும், நம்மைச் சந்தோஷப்படுத்துவதற்குமே செலவிடப்படுகின்றன. எந்த ஒரு மனிதனுக்கும் இந்தச் சரீரம் நிரந்தரமானது கிடையாது. ஒரு உன்னதமான காரியம் வசிக்கும் இடமே நமது சரீரம்; அந்த உன்னதமான காரியமே நமது அழியாத ஆத்துமா.

மரணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முடிவல்ல. நமது கடைசி மூச்சு நிற்கும்போதோ, மருத்துவர் கைவிடும்போதோ எல்லாம் முடிந்துவிடுவதில்லை. மனிதனின் சரீரம் மண்ணோடு மண்ணாகப் போகும்போதும் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. இறந்த மனிதனை இந்தச் சமுதாயம் விரைவில் மறக்கலாம்; அவனது இடத்தை வேறொருவர் நிரப்பலாம். ஆனால், மரணத்திற்குப் பின்பும் மனிதனின் ஆத்துமா வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

இதை நிரூபிக்காமல் நான் விடமாட்டேன். மனிதனின் சிந்தனை ஆயிரக்கணக்கான காரியங்களைக் குறித்துச் சிந்தித்தாலும், அதற்கு மத்தியில் "ஒவ்வொரு மனிதனும் என்றுமே அழியாத ஆத்துமாவைப் பெற்றிருக்கிறான்" என்ற சத்தம் ஆக்ரோஷமாகக் கேட்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுவே உண்மை. "எனக்கு ஆத்துமா இருப்பதை நான் பார்க்கவில்லையே" என்று நீங்கள் கேட்கலாம். உலகத்தில் நுண்ணோக்கியோ அல்லது தொலைநோக்கியோ இல்லாமல் பார்க்க முடியாத பல காரியங்கள் இருப்பதுபோலவே ஆத்துமாவும் காணக்கூடாதது.

ஆத்துமாவை நாம் பார்க்காவிட்டாலும், அதை நாம் உணருகிறோம். தனிமையில் இருக்கும்போதும், மரணத் தருவாயில் இருக்கும் நண்பனின் அருகிலும், நெருங்கிய உறவுகள் மரணக் குழியில் இறங்கும்போதும் இதை உணர முடியும். "உயர்ந்தவன் முதல் தாழ்ந்தவன் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை வரப்போகிறது" என்ற எண்ணம் அப்போது இருதயத்திலிருந்து எழுகிறது.

உலகெங்கும் சென்று பாருங்கள். மெய்யான தேவனைக் குறித்த அறிவில்லாமல் சிலை வழிபாட்டில் இருந்த தேசங்களில்கூட, மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையைக் குறித்த நம்பிக்கை இருந்ததை வரலாறுகள் கூறுகின்றன. எகிப்து, கிரேக்கம், ரோம் முதல் இந்தியப் பழங்குடியினர் வரை எங்கும் பேசப்படுகிற ஒரே செய்தி: "இந்த உலகம் மட்டுமே நமது வாழ்க்கை அல்ல. நாம் ஒவ்வொருவருக்கும் அழியாத ஆத்துமா ஒன்று உள்ளது" என்பதே.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் உங்களுக்கு நீங்களே பின்வருமாறு சொல்லிக்கொள்ளுங்கள்: "இந்த உலகம் என்னிடமிருந்து ஒருநாள் கடந்துபோகப் போகிறது. இப்போது நான் வாழ்கிற இந்த வாழ்க்கை நிரந்தரமல்ல. பணத்திற்கும், வேலைக்கும், வியாபாரத்திற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. மரணத்திற்குப் பின் எனக்கு ஒரு வாழ்க்கை வரப்போகிறது. நான் என்றுமே அழியாத ஆத்துமாவைப் பெற்றிருக்கிறேன்."

கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற பொக்கிஷம் உங்கள் ஆத்துமா. அது ஒரு விலையுயர்ந்த முத்து போன்றது. உலகத்தின் அனைத்து உடைமைகளும் அதற்கு ஈடாகாது. ஒரு ஏழைத் தொழிலாளியின் பலவீனமான குழந்தைகூட, தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது; ஏனெனில் அந்தக் குழந்தைக்கு என்றுமே அழியாத ஆத்துமா உள்ளது. அண்டசராசரங்களும் அழிந்துபோகும் காலத்திலும்கூட, மனிதனின் ஆத்துமா நித்தியத்திற்கும் வாழும்.

நீங்கள் ஏழையாக இருக்கலாம், பலவீனமானவராக இருக்கலாம்; ஆனால் உங்களுக்கு ஆத்துமா இருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் எல்லாவற்றைக் காட்டிலும் அவனது ஆத்துமாவே மிகவும் முக்கியமானது.

உண்மையாகவே உங்களுக்கு ஆத்துமா இருக்கிறது என்பதை நினைத்து வாழ்கிறீர்களா? நாம் உலகப் பொருட்களைச் சேர்ப்பதற்கு மட்டும் அனுப்பப்படவில்லை; தேவனையும், அவர் தரும் இரட்சிப்பையும் தேடுவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளோம். உங்கள் வேதத்தை வாசியுங்கள். ஜெபத்தில் தேவனைத் தேடுங்கள். ஆராதனைக்குச் செல்லுங்கள். "ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?" என்று யாராவது கேட்டால், "எனக்கு என்றுமே அழியாத ஆத்துமா இருப்பதால் நான் இதையெல்லாம் செய்கிறேன்" என்று தைரியமாகப் பதில் சொல்லுங்கள்.

2. மனிதன் தன் சொந்த ஆத்துமாவை இழக்க நேரிட்டால்...

இது இந்தக் கட்டுரையின் மிகவும் துக்கமான ஒரு பகுதி; ஆனால் இதை எழுத நான் தயங்கவில்லை. மனிதர்களுக்கு ஆத்துமாவின் நிலைமையையும், அதன் இழப்பால் ஏற்படும் பயங்கரத்தையும் எடுத்துக்கூறாமல், வெறும் சமாதான வார்த்தைகளை மட்டும் பேசும் ஊழியர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன்.

நரகமும் உண்டு என்பதை விசுவாசிப்பவன் நான். மனிதனின் ஆத்துமா நரகத்திற்குச் சென்றால், மறுபடியும் பழைய நிலைமைக்கு வரமுடியாது என்ற உண்மையை விசுவாசிப்பவன் நான். ஒரு குருடன் செங்குத்தான மலையை நோக்கிச் சென்றால், "நில்லுங்கள்" என்று கத்தமாட்டீர்களா? அதுபோலவே, உங்கள் ஆத்துமா நித்திய நரகத்தை நோக்கிச் செல்கிறது என்று எச்சரிப்பதே உங்கள்மீது நான் கொண்டுள்ள உண்மையான அன்பாகும்.

பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் நாம், நமக்கு நாமே நன்மை செய்துகொள்ளப் பலவீனர்களாக உள்ளோம். ஆனால், தீமை செய்வதற்கோ நம்மிடம் அசுர பலம் உள்ளது. உன்னுடைய ஆத்துமாவை உன்னால் இரட்சிக்க முடியாது என்பதை மறந்துவிடாதே! உன்னுடைய சொந்த இருதயத்தை உன்னால் மாற்ற முடியாது. ஆனால், உன்னுடைய ஆத்துமாவை நீயே இழந்துபோகச் செய்ய முடியும். இது ஒரு பயங்கரமான பரிதாப நிலை.

ஒரு மனிதன் எப்படித் தன் ஆத்துமாவை இழந்துபோக முடியும்? எண்ணற்ற வழிகள் இருந்தாலும், அவற்றை மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்:

  1. வெளிப்படையான பாவங்கள்: வெளிப்படையான பாவங்களைத் தொடர்ச்சியாகச் செய்வதன் மூலமாகவும், சரீர இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமையாவதன் மூலமாகவும் ஆத்துமாவைக் கொல்ல முடியும். பாலியல் ஒழுக்கக்கேடு, குடிப்பழக்கம், நேர்மையின்மை, பொய் ஆகியவை நரகத்திற்குச் செல்லும் குறுக்கு வழிகள்.
  2. தவறான மார்க்கங்கள் (போதனைகள்): தேவனால் அருளப்படாத, மனித எண்ணங்களால் உண்டான பாரம்பரிய சடங்குகளையும் தவறான போதனைகளையும் பின்பற்றும்போது ஆத்துமா இறந்துபோகிறது. தவறான மதம் ஆத்துமாவுக்கு விஷம் போன்றது. குருடனான தலைவர்களைப் பின்பற்றினால் இருவரும் குழியில் விழுவார்கள்.
  3. அலட்சியமும் இருமனமும்: உங்கள் பெயர் சபைப் புத்தகத்தில் மட்டும் இருந்து, ஜீவபுஸ்தகத்தில் இல்லாமல் போகலாம். தெய்வபயத்தின் வேஷத்தைத் தரித்து, அதன் வல்லமையை மறுதலிக்கலாம். ஆத்துமாவை அற்பமாக எண்ணி, கிறிஸ்தவத்தைக் குறித்துச் சரியான முடிவெடுக்காமல் இருமனதோடு வாழ்வதும் நரகத்திற்கே வழிநடத்தும்.

இந்த மூன்று வழிகளில் ஒன்றில்தான் அநேகர் தங்கள் ஆத்துமாக்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். "கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாய் இருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13) என்று இயேசு கூறினார்.

ஆத்துமா இழந்துபோனால் அதற்கு யார் பொறுப்பு? நாமே பொறுப்பு! நியாயத்தீர்ப்பின் நாளில் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. இழந்த ஆத்துமா ஒரேயொரு இடத்திற்கு மட்டுமே செல்ல முடியும்; அது நரகம். புழு சாவாமலும், அக்கினி அவியாமலும் இருக்கும் நரகமே இழந்த ஆத்துமாவுக்குச் சேருமிடம்.

அன்பான வாசகரே! உங்கள் சொந்த இருதயத்தை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் அழிவின் பாதையிலா அல்லது இரட்சிப்பின் பாதையிலா இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

3. ஆத்துமாவின் இழப்பே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

ஆத்துமா இழப்பைப் பற்றிய காரியங்களை எந்த மனிதனாலும் முழுமையாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மரண இருளின் பள்ளத்தாக்கைக் கடந்து நித்தியத்தில் கண் விழிக்கும்வரை, ஆத்துமாவின் உண்மையான மதிப்பை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

உலகத்தின் அனைத்துச் செல்வங்களும் உங்களுடையதாக இருக்கலாம்; உலகத்தின் அனைத்துப் புகழும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், உங்கள் ஆத்துமாவை நீங்கள் இழந்துபோனால், தேவனுடைய பார்வையில் நீங்கள் தரித்திரரே. உங்கள் செல்வங்கள் உங்களுடன் வராது. பிறக்கும்போது எப்படி நிர்வாணியாய் வந்தீர்களோ, அப்படியேதான் செல்வீர்கள். மரணத்திற்குப் பிறகு ஆத்துமாவை மீட்பதற்கு எந்தப் பாவக்கடனையும் செலுத்த முடியாது என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஒருமுறை ஆத்துமா இழந்தால், அது என்றென்றைக்கும் இழந்ததே!

ஆத்துமாவின் மதிப்பை அறிய விரும்புகிறீர்களா? மரணத் தருவாயில் இருக்கும் மனிதர்களின் வார்த்தைகளைக் கேட்டுப் பாருங்கள். மரணமும், நியாயத்தீர்ப்பும், நித்திய நரகமும் கண்ணுக்குத் தெரியும்போது, நாத்திகர்களும்கூடத் தங்கள் கொள்கைகளை உதறித் தள்ளுகிறார்கள். தாமஸ் பெயின், வால்டேர் போன்றோர் கூடத் மரணக் குழிக்கு முன்பாகத் தங்கள் தத்துவங்கள் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தனர்.

இன்னும் ஆத்துமாவின் மதிப்பைத் தெளிவாக அறிய வேண்டுமா? லூக்கா 16-ஆம் அதிகாரத்தில் உள்ள ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமையைப் படித்துப் பாருங்கள். நரகத்தில் வேதனைப்பட்ட ஐசுவரியவான், தன் சகோதரர்களின் ஆத்தும இரட்சிப்பைக் குறித்து அக்கறைகொண்டு ஆபிரகாமிடம் கெஞ்சினான். மரணத்திற்குப் பின் கண் திறக்கும்போது மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆத்துமாவின் மதிப்பை அறிய கல்வாரி மலைக்குச் செல்லுங்கள். மனிதனின் ஆத்துமாவை மீட்பதற்காகச் செலுத்தப்பட்ட விலை என்ன? தங்கம், வெள்ளி அல்ல; தூதர்களின் தியாகம் அல்ல; தேவனுடைய நித்திய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தமே அந்த விலை! சிலுவையில் அவர் பட்ட வேதனைகளும், சந்தித்த மரணமுமே நமது ஆத்துமாவை மீட்கப் போதுமான விலையாக இருந்தது.

ஒரு மனிதன் தன் ஆத்துமாவை அழித்துக்கொண்டிருக்கும் காட்சியைவிடப் பரிதாபமான காட்சி வேறு ஏதுமில்லை. எருசலேம் நகரத்தின் ஆத்துமாக்கள் அழிவை நோக்கிச் செல்வதைப் பார்த்துத்தான் இயேசு கண்ணீர் விட்டார் (லூக்கா 19:41). எல்லாவற்றின் மதிப்பும் ஒருநாள் மாறும். பணம் காகிதமாகப் பார்க்கப்படும்; தங்கம் குப்பையாக எண்ணப்படும். ஆனால், அப்போது உங்கள் அழியாத ஆத்துமாவின் மதிப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள். விலைமதிப்பற்ற முத்தை அமிலத்தில் கரைத்துக் குடித்த மதியற்ற எகிப்திய ராணியைப்போல், தேவன் உங்களுக்கு அளித்த ஆத்துமாவை வீணாக்கிவிடாதீர்கள்!

4. மனிதனின் ஆத்துமா எப்படி இரட்சிக்கப்பட முடியும்?

ஆரம்பமுதல் துக்கமான எச்சரிக்கைகளைச் சொன்ன நான், இப்போது ஒரு சமாதானத்தின் நற்செய்தியோடு இதை நிறைவு செய்யப் போகிறேன். எந்த ஒரு மனிதனின் ஆத்துமாவும் இரட்சிக்கப்பட முடியும் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன். "என் ஆத்துமா இரட்சிக்கப்பட வழி இருக்கிறது" என்ற நற்செய்தி உங்களுக்காகவே!

நாம் இயற்கையிலேயே பாவிகள்; தேவன் மிகவும் பரிசுத்தமானவர்; இந்த உலகம் கிறிஸ்தவ வாழ்க்கைக்குக் கடினமானது என்பது உண்மையே. ஆயினும், எந்த ஒரு ஆணும் பெண்ணும் பாவத்தின் வல்லமையிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் தப்பித்து, தேவனுடைய நித்திய மகிமையை அடைய முடியும். அது எப்படிச் சாத்தியம்? மூன்று காரியங்களை நான் முன்வைக்கிறேன்:

1. கிறிஸ்து இயேசு பாடுபட்டு மரித்தார்: "கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களினிமித்தம் ஒரேதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). கிறிஸ்துவின் மரணம் நமது பாவங்களுக்குப் பலியாகச் செலுத்தப்பட்டது. அவர் மூலமாகப் பரலோகத்தின் வாசல் திறக்கப்பட்டது. பாவிகளைக் கழுவ ஒரு நீரூற்று உண்டாக்கப்பட்டது. உங்களுக்காகவே, உங்கள் மேலுள்ள அன்பினாலேயே இயேசு சிலுவையில் மரித்தார்.

2. கிறிஸ்து இன்றும் உயிரோடிருக்கிறார்: பாவிகளுக்காக மரித்த அதே இயேசு, இன்றும் பிதாவின் வலது பாரிசத்தில் நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவரிடம் வருகிறவர்களைத் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றுகிறார். கல்வாரியில் சிந்திய இரத்தத்தின் மூலமாக இன்றும் பாவிகளுக்கு முழுமையான மன்னிப்பை வழங்கி, நித்திய ஜீவனை அளிக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.

3. சுவிசேஷத்தின் வாக்குத்தத்தங்கள் இலவசமானவை: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28). இந்த வாக்குத்தத்தங்கள் எந்தப் பாகுபாடும் இன்றி உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்டுள்ளன. எந்த ஒரு பாவியும் இயேசுவிடம் வந்து இலவசமாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் ஆத்துமாவை இழந்துபோனால், அது இரட்சிப்பைப் பெற வழியில்லாததால் அல்ல; மாறாக, நீங்கள் ஜீவனை அளிக்கிற இயேசுவண்டை வராததே காரணம்.

இறுதி அழைப்பும் அறிவுரைகளும்

எனது இருதயத்தின் வாஞ்சை உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே. முடிவாக, மூன்று ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கிறேன்:

1. உலக வாழ்க்கையை மட்டும் நேசிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை: உங்கள் சரீரக் கவலைகளுக்காக உங்கள் ஆத்துமாவை மறந்துவிடாதீர்கள். பணத்தையும் உலக வாழ்வையும் தேடி, வரப்போகும் நித்திய வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள். இன்றிலிருந்து "எனக்கு ஓர் அழியாத ஆத்துமா இருக்கிறது" என்ற உணர்வோடு வாழுங்கள். வேதம் வாசிப்பதற்கும், ஜெபிப்பதற்கும், இயேசுவைப் பின்பற்றுவதற்கும் வெட்கப்பட வேண்டாம். பாவம் செய்வதற்கு மட்டுமே வெட்கப்படுங்கள். "நான் விலையேறப்பெற்ற ஆத்துமாவைப் பெற்றுள்ளேன், அதை ஒருபோதும் இழக்க மாட்டேன்" என்று உறுதிகொள்ளுங்கள்.

2. ஆத்தும இரட்சிப்பை வாஞ்சிப்பவர்களுக்கு ஓர் அன்பின் அழைப்பு: தாமதமில்லாமல் இன்றே இயேசுவிடம் வாருங்கள். உங்கள் பாவங்களையும் பயங்களையும் அவரிடம் ஒப்படையுங்கள். மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் தேவதூதர்கள் முன்பாக மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது (லூக்கா 15:10). நீங்கள் ஏழையாக இருக்கலாம், வயதானவராக இருக்கலாம், இருள் சூழ்ந்த பாவியாகக் கூட இருக்கலாம். உங்கள் பாவம் சிவேரென்றிருந்தாலும், இயேசுவின் இரத்தம் அதைப் பனியைப்போல வெண்மையாக்கும். மனம் திரும்பிய கள்ளனைப்போல, "ஆண்டவரே, என்னை நினைத்தருளும்" என்று ஜெபியுங்கள். இயேசு ஒருபோதும் உங்களைத் தள்ளிவிட மாட்டார்.

3. விசுவாசிகளுக்கு ஓர் அறிவுரை: நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், கர்த்தரை முழுமனதோடு பற்றிக்கொண்டு, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருங்கள். பாதை குறுகியதாக இருக்கலாம்; உலகத்தின் பாடுகள் வரலாம். ஆனால் இயேசு உங்களை மறக்கமாட்டார். அவருக்காக வெட்கப்படாமல் தைரியமாய் நில்லுங்கள். அத்தோடு நின்றுவிடாமல், மற்ற ஆத்துமாக்களையும் இரட்சிப்பின் பாதையில் வழிநடத்துங்கள். உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சுவிசேஷத்தைப் பகிருங்கள். நரகத்தை வெறுமையாக்கி, பரலோகத்தை நிரப்ப உழையுங்கள்.

உலகம் தரும் மரியாதைகள் சீக்கிரம் மறைந்துவிடும்; ஆனால், கிறிஸ்து தரும் ஜீவகிரீடத்தின் மகிமை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அந்த மகிமையான கிரீடத்திற்காக இன்றே பிரயாசப்படுங்கள்! ஆமென்.