பாவ மன்னிப்பின் ஆசீர்வாதங்கள்
படிப்புகள்: 103
Print
ஆசிரியர்: ஆர்தர் w. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

"இதற்காகப் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி ஜெபம் பண்ணுவானாக." (சங்கீதம் 32:6)

இந்த சங்கீத பகுதியின் துவக்கத்தில், தேவமனிதனான தாவீது மெய்யான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறார்; அழகு, மரியாதை, செல்வம் போன்ற உலக காரியங்களில் அல்ல பாவ மன்னிப்பில்தான் உள்ளது என்கிறார். "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ... அவன் பாக்கியவான்" (வசனம் 1). "மன்னிப்பது" என்பதற்கான எபிரேய வார்த்தை, "பார்வையிலிருந்து வெளியேற்றுவது" என்று பொருள்படும், இது எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது: "அந்நாட்களிலே யூதாவின் அக்கிரமம் தேடப்பட்டாலும் காணப்படாதிருக்கும்" (எரேமியா 50:20). இது மனித சிந்தனைகளால் புரிந்துகொள்ள முடியாத ஒரு ஆசீர்வாதம், இதுவே மற்ற எல்லா இரக்கங்களுக்கும் ஒரு அஸ்திவாரத்தை அமைக்கிறது. நான் இதைப் பற்றி ஐந்து கருத்துக்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்:

  1. பாவ மன்னிப்பு என்பது தேவனுடைய இலவசமான கிருபையின் செயல்.

"மன்னிப்பது" என்பதற்கான கிரேக்க வார்த்தை “கரிசோமை” (charizomai) மன்னிப்பின் மூலத்தைத் தெளிவாக்குகிறது. மன்னிப்பு நமக்குள்ளே இருக்கும் எதிலிருந்தும் எழவில்லை ஆனால் அது இலவசமான கிருபையின் (charis) தூய விளைவாகும். "உன் மீறுதல்களை நான், நானே என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்" (ஏசாயா 43:25). ஒரு கடன்கொடுத்தவர் ஒரு கடனாளிக்குக் கடனை மன்னிக்கும்போது, அவர் அதை இலவசமாகச் செய்கிறார். பாவ மன்னிப்பு என்பது இலவசமான தேவகிருபையின் இருதயத்திலிருந்து நூற்கப்பட்ட ஒரு அரச நூலாகும். அப். பவுல், "நான் இரக்கம் பெற்றேன்" என்று கதறுகிறார். (1 தீமோத்தேயு 1:13) "நான் இரக்கம் செய்யப்பட்டேன்." மன்னிக்கப்பட்டவன் இரக்கத்தால் நிறைந்தவன் ஆகிறான். கர்த்தர் ஒரு பாவியின் பாவத்தை மன்னிக்கும்போது, அவர் அவனுடைய கடனை மட்டும் செலுத்துவதில்லை அவனுக்கு ஒரு சுதந்தரத்தையும் கொடுக்கிறார்!

  1. பாவத்தை மன்னிப்பதில்,தேவன் குற்றத்தையும் தண்டனையையும் நீக்கிவிடுகிறார்.

பாவத்தின் குற்றம் நீதிக்காகக் கதறுகிறது. ஆதாம் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டவுடனே, அவன் "சுழன்று கொண்டிருக்கிற பட்டயத்தையும்" சாபத்தையும் எதிர்பார்த்தான். ஆனால் பாவ மன்னிப்பில், தேவன் பாவிக்குச் சலுகை காட்டுகிறார். அவர் அவனிடம், "நீ என் நீதியின் கைகளில் விழுந்து, மரிக்கத் தகுதியாயிருந்தாலும் நான் உன்னை விடுவிப்பேன், உனக்கு விரோதமாகச் சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் விடுவிக்கப்படும்" என்று அவனுக்கு கூறுவது போல் தெரிகிறது.

  1. பாவ மன்னிப்பு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக வருகிறது.

இலவசமான தேவகிருபை தூண்டுதல் மன்னிப்பின் காரணியாகும்; கிறிஸ்துவின் இரத்தம் அதின் தகுதிபெறும் காரணியாகும். "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை" (எபிரேயர் 9:22). நீதி, பாவியின் மீதோ அல்லது பரிகார பிணையாளின் மீதோ பழிவாங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மன்னிப்பும் கிறிஸ்துவின் இரத்தத்தின் விலையால் அளிக்கப்படுகிறது.

  1. பாவம் மன்னிக்கப்படுவதற்கு முன்பு,மனந்திரும்ப வேண்டும்.

ஆகவே, மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன: "மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டும்" (லூக்கா 24:47). ரோமின் போப் சொல்வதுபோல மனந்திரும்புதல் மன்னிப்பைப் சம்பாதிப்பதல்ல. கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய கண்ணீரை கழுவ வேண்டும் ஆனால் மனந்திரும்புதல் என்பது மன்னிப்புக்கான ஒரு தகுதியே தவிர, அதுவே காரணம் அல்ல. பாவத்திற்காகத் தாழ்மையுள்ளவன், மன்னிக்கும் இரக்கத்தை அதிகம் மதிப்பான். இருதயத்தில் துக்கத்தின் மேகங்கள் மட்டுமே இருக்கும்போது, இப்போது தேவன் ஒரு மன்னிப்பைக் கொண்டுவரும்போது அது ஒரு மேகத்தில் ஒரு வானவில்லை நிறுத்துவது போல, கோபத்தின் வெள்ளம் அவனை மூழ்கடிக்காது என்று பாவிக்குச் சொல்லும்போது அந்த வானவில்லைப் பார்த்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்! இதற்கு முன்பு கண்ணீரில் மூழ்கியிருந்த ஆத்துமா, இப்போது தேவனிடம் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் அன்பினால் உருகுகிறது (லூக்கா 7:38, 47).

  1. பாவத்தை மன்னிக்கும் தேவன்,அதை இனிமேல் நினைவுகூருவதில்லை. (எரேமியா 31:34)

கர்த்தர் நம்மை முந்தைய அன்பற்ற செயல்களுக்காகக் கடிந்துகொள்ள மாட்டார். "அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" (மீகா 7:19). பாவம் தண்ணீரில் மீண்டும் எழும்பும் மிதவை கட்டையைப்  போல எறியப்படாது. ஆனால் ஆழத்திற்குச் செல்லும் ஈயத்தைப் போல எறியப்படும். இந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்திற்காக நாம் அனைவரும் எப்படிப் பாவத்திற்கு எதிராக பாடுபட வேண்டும்!

(அ) மன்னிப்பு இல்லாதிருப்பது எவ்வளவு துக்கமானது! மன்னிப்பு கிடைக்காத ஒரு குற்றவாளிக்கு நிலைமை மோசமாகவே இருக்கும். தேவனுடைய சாபங்கள் அனைத்தும் மன்னிக்கப்படாத பாவியின் மீது முழுபலத்துடன் நிலைநிற்கின்றன; அவனுடைய ஆசீர்வாதங்களும் கூட சாபமாயிருக்கிறது (மல்கியா 2:2). கடன் வைத்திருந்தும் மகிழ்ச்சியாக இருந்த ஒரு சிப்பாயைப் பார்த்து ரோமப்பேரரசன்  ஆச்சரியப்பட்டார். தேவனுடைய சாபங்கள் அனைத்திற்கும் வாரிசான ஒரு பாவி மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? அவன் எவ்வளவு சீக்கிரம் தண்டிக்கப்பட்டவர்களிடையே தன் இருப்பிடத்தைப் பெறுவான் என்பது அவனுக்குத் தெரியாதா!

(ஆ) மன்னிப்பைப் பெற்றிருப்பது எவ்வளவு இனிமையானது! அல்லது மன்னிக்கப்பட்ட ஆத்துமா நரகத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு வெளியே இருக்கிறது (ரோமர் 8:33). சாத்தான் குற்றம் சாட்டலாம். ஆனால் கிறிஸ்து விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழைக் காட்டுவார்!

(இ) மன்னிக்கப்பட்ட ஆத்துமா தைரியத்துடன் தேவனிடம் ஜெபத்தில் செல்ல முடியும். பாவத்தின் குற்றம் ஜெபத்தின் சிறகுகளை ஒடுக்குகிறது, அதனால் அது கிருபையின் சிங்காசனத்திற்குப் பறந்து செல்ல முடியாது. ஆனால் கிறிஸ்துவின் மன்னிப்பு நம்மில் தைரியத்தை உருவாக்குகிறது. மன்னிக்கப்பட்டவன் தன் அரசனை ஆறுதலுடன் நேருக்கு நேர் பார்க்க முடியும்.

பாவமன்னிப்பின் இந்த பெரிய இரக்கத்தை தாவீது பெற்றிருந்தார், இது வசனம் 5-இல் காணப்படுகிறது: "நீர் என்னை மன்னித்தீர்." மேலும் அவர் தேவனை "மன்னிக்கிற தேவன்" என்று கண்டறிந்ததால் (நெகேமியா 9:17), அவர் இந்த வசனத்தில் மற்றவர்களைக் தேவனை தேடும்படி ஊக்கப்படுத்தினார்: "இதற்காகப் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி ஜெபம் பண்ணுவானாக." என்கிறார்.