ஒரு புதிய படைப்பு
படிப்புகள்: 121
Print
ஆசிரியர்: ஆர்தர் w. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

மீட்புக்கு இரண்டு விஷயங்கள் முற்றிலும் அவசியமானவை: முதலாவது பாவத்தின் குற்ற உணர்விலிருந்தும் அதின் தண்டனையிலிருந்தும் விடுதலை, இரண்டாவது பாவத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அதனுடைய இருப்பிலிருந்தும் விடுதலை. முதலாவது, கிறிஸ்துவின் மத்தியஸ்த பணியால் பெறப்படுகிறது; இரண்டாவது, பரிசுத்த ஆவியின் பயனுள்ள செயல்பாடுகளால் நிறைவேறுகிறது. முதலாவது, இயேசு கிறிஸ்து தேவனுடைய மக்களுக்காகச் செய்ததின் ஆசீர்வாதமான பலனாகும்; இரண்டாவது, பரிசுத்த ஆவி தேவனுடைய மக்களில் செய்யும் பிரமாண்டமான செயலின் விளைவாகும். முதலாவது, ஒருவன் தாழ்மையாக தன்னை தாழ்த்தி கிறிஸ்துவை விசுவாசத்தோடுப் பற்றிக்கொள்ளும்போது அவனுக்கு விடுதலை கிடைக்கிறது; அப்போது தேவன் அவரை எல்லாவற்றிலிருந்தும் நீதிமானாக்கி, நடுங்கி, மனந்திரும்பும், விசுவாசிக்கும் பாவியானா அவனை தேவன் முழுமையாக மன்னிக்கிறார். இரண்டாவது, மறுபிறப்பு, பரிசுத்தமாக்கல், மற்றும் மகிமைப்படுத்துதல் ஆகிய தெய்வீக ஆசீர்வாதங்கள் அவனுடைய வாழ்க்கையில் படிப்படியாக, வெவ்வேறு கட்டங்களில் நிகழ்கிறது. மறுபிறப்பில், பாவம் அதன் மரண காயத்தைப் பெறுகிறது, ஆனால் மரணத்தை அல்ல. பரிசுத்தமாக்கலில், புதுப்பிக்கப்பட்ட ஆத்துமா தன்னுள் இருக்கும் அழுக்கின் குழியைப் பார்க்கிறது, மேலும் தன்னை வெறுக்கவும் பகைக்கவும் கற்றுக்கொள்கிறது. மகிமைப்படுத்தலில், ஆத்துமா சரீரம் இந்த இரண்டும் பாவத்தின் ஒவ்வொரு அடையாளத்திலிருந்தும் மற்றும் அதின் விளைவிலிருந்தும் என்றென்றுமாக விடுவிக்கப்படுகிறது.

மறுபிறப்பு இல்லாமல் எந்த ஆத்துமாவும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. ஆவிக்குரிய காரியங்களை நேசிக்க ஒருவர் ஆவிக்குரியவராக மாற வேண்டும். இயற்கையான மனிதன் அவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவற்றின் போதனையின் சரியான கருத்தை தெரிந்துயிருக்கலாம், ஆனால் அவற்றை நேசிக்க முடியாது (2 தெசலோனிகேயர் 2:10), அவற்றில் தனக்கான மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க முடியாது. தேவனுடன் வாழ்ந்து, அவருடைய பிரசன்னத்தில் நித்திய மகிழ்ச்சியை அனுபவிக்க, மனிதனுக்குள் அவனுடைய பாவத்திலிருந்து அவனை பரிசுத்தமாக்கக்கூடிய ஒரு அடிப்படை மாற்றம் நிகழ வேண்டும்; அந்த மாற்றம் இந்த பூமியிலே நிகழ வேண்டும்.

தன் வாழ்நாள் முழுவதையும் பாவத்தில், அதாவது தன்னைத் திருப்திப்படுத்துவதில் செலவழித்தவன், எவ்வாறு பரிசுத்தத்தின் உலகில் நுழைய முடியும்? ஆட்டுக்குட்டியானவரின் பாடலுக்கு அவனது இதயம் இசைந்து எப்படி ஆட்டுக்குட்டியானவரின் பாடலைப் பாட முடியும்? விசுவாசத்தின் கண்ணாடி வழியாக மங்கலாகக் கூட தேவனைப் பார்க்காதவன், தேவனின் பயங்கரமான மகிமையை நேருக்கு நேர் எவ்வாறு தாங்க முடியும்? நீண்ட நாட்கள் இருளில் மூழ்கியிருந்த கண்களுக்கு, மதிய வெயிலின் பிரகாசமான கதிர்கள் திடீரென தாக்கும்போது அது கடுமையான வேதனையை உண்டாக்குவதைப் போல, மறுபிறப்படையாதவன் ஒளியாக இருக்கிறவரைக் காணும்போதும் இருக்கும். அத்தகைய காட்சியை வரவேற்பதற்குப் பதிலாக, “பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்” (வெளிப்படுத்தல் 1:7); ஆம், அவர்களின் வேதனை அதிகமாக இருக்கும், அவர்கள் மலைகளையும் பாறைகளையும் நோக்கி, “நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்” (வெளிப்படுத்தல் 6:16) என்று கூறுவார்கள். என் அன்பு வாசகரே, தேவன் உங்களுக்கு மறுபிறப்பை தராவிட்டால்  இதுவே உங்களின் நிலையாக இருக்கும்.

மறுபிறப்பு நிகழ்வது, வீழ்ச்சியின்போது நடந்தவற்றிற்கு தலைகீழான நிகழ்வாகும். மீண்டும் பிறந்தவர், கிறிஸ்துவின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் செயல்பாட்டின் மூலமாகவும், தேவனுடனான ஐக்கியத்திற்கும் தோழமைக்கும் மீட்டெடுக்கப்படுகிறார்: முன்பு ஆவிக்குரியரீதியாக மரித்திருந்தவர், இப்போது ஆவிக்குரியரீதியாக உயிர்ப்பிக்கப்படுகிறார் (யோவான் 5:24). ஆவிக்குரிய மரணம் ஒரு தீய கொள்கையின் நுழைவால் ஏற்பட்டதைப் போல, ஆவிக்குரிய வாழ்க்கை ஒரு பரிசுத்த கொள்கையின் அறிமுகமாகும். தேவன் ஒரு புதிய கொள்கையை, பாவத்தைப் போலவே உண்மையானதும் வலிமையானதுமான ஒரு கொள்கையை அவனுக்கு அளிக்கிறார். தெய்வீக கிருபை இப்போது வழங்கப்படுகிறது. ஒரு பரிசுத்தமான இயல்பு அவனுடைய ஆத்துமாவில் கொடுக்கப்படுகிறது. உள்ளார்ந்த மனிதனுக்கு ஒரு புதிய ஆவிக்குரிய மனநிலை அளிக்கப்படுகிறது. ஆனால் அவனுக்குள் புதிய திறன்கள் உருவாக்கப்படுவதில்லை. மாறாக, அவனுள் இருக்கும் உண்மையான திறன்கள் வளப்படுத்தப்படுகின்றன, உயர்த்தப்படுகின்றன, வலுவூட்டப்படுகின்றன.

மறுபிறப்பை பெற்றவர் “கிறிஸ்து இயேசுவில் ஒரு புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;” (2 கொரிந்தியர் 5:17). இது உங்களில் உண்மையா? நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பிரசன்னத்தில் இந்தக் கேள்விகளால் நம்மைச் சோதித்து ஆராய்ந்து கொள்வோம். பாவத்தை நோக்கி என் இதயம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது? அதற்கு அடிபணிந்த பிறகு ஆழ்ந்த அவமானமும் தெய்வீக துக்கமும் உள்ளதா? அதன் மீது ஒரு உண்மையான வெறுப்பு உள்ளதா? என் மனசாட்சி உண்மையாகவே மென்மையாயாய் இருக்கிறதா? அதினால் உலகம் “சிறிய தவறுகள்” அல்லது “சிறிய விஷயங்கள்” என்று அழைக்கும் காரியங்களால் என் சமாதானம் குலைக்கப்படுகிறதா? என்னுள் பெருமையும் சுய விருப்பமும் எழும்போது நான் தாழ்மையடைகிறேனா? என் உள்ளார்ந்த கெட்ட காரியங்களை வெறுக்கிறேனா? உலகத்தை நோக்கிய என் பற்றுகள் மரித்துவிட்டனவா? அவை தேவனை நோக்கி உயிரோடு இருக்கின்றனவா? பொழுதுபோக்கு நேரங்களில் என் மனதை என்ன ஈர்க்கிறது? ஆவிக்குரிய பயிற்சிகள் எனக்கு இனிமையானதும் மகிழ்ச்சியானதுமாக உள்ளதா? அல்லது சுமையானதும் சோர்வானதுமாக உள்ளதா? “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103) என்று நான் உண்மையாகச் சொல்ல முடியுமா? தேவனுடன் இருக்கும் உறவு எனக்கு உயர்ந்த மகிழ்ச்சியை தருகிறதா? தேவனின் மகிமை இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் புனிதமானதா?