"வணக்கம் ஐயா," என்று சொல்லியபடியே ஒரு முதியவரை நோக்கி ஒரு நபர் வந்தார். அந்த நபர் ஒரு கரத்தில் வேதாகமத்தையும், மற்றொரு கரத்தில் சுவிசேஷக் கைப்பிரதிகளையும் ஏந்தியவாறு, ஒரு கைப்பிரதியை அந்த முதியவரிடம் கொடுத்தார்.
அந்த முதியவர் இந்த நபரைப் பார்த்து, "இது என்ன?" என்று கேட்டார்.
அதற்கு அந்த நபர் முதியவரைப் பார்த்து, "ஐயா, இது தேவனுடைய அன்பைக் குறித்துச் சொல்லும் கைப்பிரதி!" என்றார்.
அதற்கு அந்த முதியவர், "எங்குப் பார்த்தாலும் இதுப்போன்ற மதப்பிரச்சாரக் கைப்பிரதிகள் தான்," என்று சற்றே வெறுப்போடு சொன்னார்.
உடனே அந்த நபர், "ஐயா! நரகத்தில் இப்படிப்பட்ட கைப்பிரதியே இருக்காது," என்று அமைதியாகச் சொன்னார்.
அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அந்த முதியவர் சற்று சிந்தனைக்குள்ளானார். 'நரகம்' என்ற வார்த்தை அவர் உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது. மீண்டும் மீண்டும் அது அவரின் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அந்த முதியவரின் இருதயம் திறக்கப்பட்டது. ஆம்! "நரகத்தில் கைப்பிரதி இருக்காது" என்ற உண்மையை ஏற்றுக்கொண்ட அந்த முதியவர், அந்த நபர் கொடுத்த கைப்பிரதியை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்.
அந்தக் கைப்பிரதியில் பின்வருமாறு எழுதியிருந்தது:
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16).
"அன்பு கூர்ந்தார்" என்ற இனிமையான அந்த வேத வசனம் முதியவரை மிகவும் கவர்ந்தது. மேலும் அதில், "நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே" (யாக்கோபு 4:13,14) என்றும்;
"இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும்... ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்" (பிரசங்கி 12:7, 14) என்றும் எழுதப்பட்டிருந்தது.
இயேசுகிறிஸ்து, "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" (லூக்கா 21:33) என்று சொன்னார். மேலும் வேதம் சொல்லுகிறது, "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" (எரேமியா 17:9).
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மனித இருதயத்தைப் பின்வருமாறு விவரித்தார்: "எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்" (மாற்கு 7:21,22).
சகல பாவங்களும் முதலில் இருதயத்தில் இரகசியமாகப் பிறந்து, பிறகே வெளிப்படும். "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23). "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி..." (ரோமர் 3:23).
பாவத்தின் பலனைப் பொறுத்து மனிதர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள். "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்" (வெளிப்படுத்துதல் 21:8).
அந்த முதியவர் இந்த வசனங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போது தேவன் அவருடைய இருதயத்தில் பேசினார். பரிசுத்தமான தேவனுக்கு முன்பாகத் தான் ஒரு பாவி என்பதை அவர் உணர்ந்தார். தனக்கு உண்டான யாவும் தன்னுடைய ஆத்துமாவை பரலோகத்திற்குக் கொண்டு செல்லாது என்பதையும்; அவருடைய கல்வியோ, கலாச்சாரமோ, புத்தியோ, ஞானமோ தன் பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து தன்னை விடுவிக்க முடியாது என்பதையும் அவர் கண்டுகொண்டார். அந்த முதியவர் எல்லா மக்களாலும் மதிக்கப்படுபவர்; மேலும், அவருக்குத் தேவையான உணவு, உடை என எல்லாவற்றையும் பெற்றுச் சுகபோகத்துடன் வாழ்ந்தார். ஆனால், அவர் இருதயத்தில் மட்டும் இனம் புரியாத பயமும், எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அவரைச் சூழ்ந்திருந்தது.
"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" (மாற்கு 8:36).
ஏழையானாலும், பணக்காரனாலும் யாராக இருந்தாலும் ஒரு நாள் மரிக்க வேண்டும்! அவ்வாறு மரித்து, இந்த உலகத்திலிருந்து தன்னுடைய சரீரத்தை விட்டுச் செல்லும்போது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்பதே தேவனின் நோக்கமும், அவருடைய அன்பான விருப்பமுமாக இருக்கிறது. நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக, பாவ மன்னிப்பும், தேவ சமாதானமும் நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கும். ஆனால் உலகச் செல்வம், உலக அறிவு மற்றும் உலகத்துக்குரிய நற்காரியங்கள் நம்மைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்லாது. "பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல," என்று இயேசுகிறிஸ்து சொன்னார் (லூக்கா 12:15).
அந்தக் கைப்பிரதியை வாசித்து முடித்த அந்த முதியவர், பரிசுத்த ஆவியானவரால் சிந்திக்கத் தூண்டப்பட்டார். 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை இரட்சிக்க முடியும்; என்னுடைய பாவங்களை மன்னித்து தேவனுடைய இராஜ்யத்தில் அவரால் சேர்க்க முடியும்,' என்ற விசுவாசம் அவருக்கு வந்தது. அந்த முதியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, தேவ சமாதானத்தைப் பெற்றார்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9). "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7). "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).