“கர்த்தாவே, நீர் உம்முடைய ஜனங்களுக்குச் செய்யும் தயவின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.” — சங்கீதம் 106:4
ஒரு மனிதன், தேவனுடைய இரட்சிப்பினால் தான் “சந்திக்கப்பட வேண்டும்” என்ற வாஞ்சைக்குள்ளாக எவ்வாறு நடத்தப்படுகிறான்? அதை அவன் எப்படிக் கற்றுக்கொள்கிறான்? முதலாவது, ஆக்கினைத்தீர்ப்பு என்றால் என்ன என்பதை அவன் சற்றேனும் அறிந்திருக்க வேண்டும். ஆக்கினைக்குள்ளானவர்களுக்கு மட்டுமே இரட்சிப்பு பொருத்தமானதாய் இருக்கிறது. “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார்” என்று வேதம் கூறுகிறது; ஆகவே, இழந்துபோனவர்களுக்கு மட்டுமே இரட்சிப்பு உரியதாய் இருக்கிறது. தேவனுடைய இரட்சிப்பின் மேன்மையை ஒரு மனிதன் போற்றி மதிக்க வேண்டுமென்றால், அதற்கு முன்பாக, தான் முற்றிலும் இழந்துபோனவன் கைவிடப்பட்ட நிலையிலிருப்பவன் என்பதை அவன் உணர்ந்தாக வேண்டும்.
அவன் எவ்வாறு இந்த இழந்துபோன நிலையை அடைகிறான்? தன்னுடைய வெளிப்படையான பக்திமார்க்கத்தை இழந்து, தன் சுயநீதியை இழந்து, தன் சுயபெலனை இழந்து, தன் சுயநம்பிக்கையை இழந்து, தன் எதிர்பார்ப்புகளையெல்லாம் இழந்து, மாம்சத்திற்குரிய சகல மேன்மைகளையும் இழப்பதனாலேயே அந்த நிலையை அடைகிறான். இவை அனைத்தும் தேவனுடைய கரத்தினால் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டு, உரிந்துகொள்ளப்படுவதனாலேயே அவன் இவ்வாறு வெறுமையாக்கப்படுகிறான்.
தான் ஒன்றுமில்லாதவன், தன்னிடம் ஒன்றுமில்லை, தனக்கு ஒன்றும் தெரியாது என்ற இத்தகைய முற்றிலும் திக்கற்ற தரித்திர நிலைக்கும், ஆவிக்குரிய வெறுமைக்கும் கொண்டுவரப்பட்ட மனிதனே உண்மையாகத் தேவனைத் தேடுகிறான். அவனே நள்ளிரவுச் சாமங்களிலும், தன் தனிமையின் வேளைகளிலும், தன் இல்லத்தின் அமைதியிலும், ஏன், சில வேளைகளில் இரவும் பகலுமாகத் தன் ஆத்துமாவில் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்பட வேண்டுமென்று கதறி, பெருமூச்சுவிட்டு, கெஞ்சி, மன்றாடித் தேடி ஜெபிக்கிறவனாய் இருக்கிறான். “கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்” என்பதே அவனது ஏக்கமாய் இருக்கிறது.
தேவன் தன்னைச் சந்திக்க வேண்டும் என்று அவன் வாஞ்சிக்கிறான். தேவன் தாமே வந்து தன்னோடு தங்கவும், தன் இருதயத்தைத் தமது வாசஸ்தலமாக்கிக் கொள்ளவும், தம்மைத் தனக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கவும், தன்னோடு அமர்ந்து, தன்னோடு போஜனம் பண்ணி, தன்னோடு சஞ்சரித்து, தன்னுடைய சொந்த தேவனாகத் தனக்குள்ளே வாசம் பண்ணவும் வேண்டுமென்றே அவன் ஏங்குகிறான். ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆத்துமா இதற்குக் குறைவான எதனாலும் திருப்தியடைய முடியாது. தேவனுடைய சந்திப்பு அவனுக்கு நிச்சயம் தேவை. பூர்வகாலத்துப் பரிசுத்தவான்களுக்குத் தேவன் என்னென்ன செய்தார் என்பதை வேதத்தில் வாசிப்பது மட்டுமே அவனுக்குப் போதுமான பிரயோஜனத்தைத் தராது; தனக்கென்று பிரத்தியேகமான ஒன்றை, தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்யும் ஒன்றையே அவன் வாஞ்சிக்கிறான். தன்னை மகிழ்வித்து, இளைப்பாறுதல் தந்து, தேற்றி, ஆசீர்வதித்து, தன் ஆத்துமாவுக்குப் பிரயோஜனமாய் இருக்கக்கூடியதும், தன் பாரங்களை நீக்கித் தன் ஆத்துமாவைச் சமாதானத்தில் நிலைநிறுத்தக்கூடியதுமான ஒன்றையே அவன் நாடுகிறான். ஆகையால், தேவனுடைய பிரசன்னமும் வல்லமையும், அவருடைய இரக்கமும் அன்பும் தன் ஆத்துமாவைச் சந்திக்க வேண்டும் என்ற அந்தத் தெய்வீகச் சந்திப்பையே அவன் முழு இருதயத்தோடும் வாஞ்சிக்கிறான்.