பின்வரும் ஐந்து முக்கிய கேள்விகளுக்கான பதில்களை நாம் புரிந்துகொள்வதின் மூலமாக, வேதாகமம் காண்பிக்கும் சுவிசேஷத்தின் அறிவை பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் கேள்விகளை ஆராய்வோம்:
- தேவன் யார்?
- மனிதன் யார்?
- இயேசு கிறிஸ்து யார்?
- எனக்கு இதில் என்ன இருக்கிறது?
- நான் என்ன செய்ய வேண்டும்?
கேள்வி 1: தேவன் யார்?
நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதாகமும் மனிதனின் மனசாட்சியும் ஒரு ஒரே ஜீவனுள்ள தேவனின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்ட தேவனே! இந்த பிரபஞ்சத்தின் படைப்பாளியாக இருக்கிறார். தனது வார்த்தையின் வல்லமையால் வெறும் ஆறு நாட்களில் “ஒன்றுமில்லாமையிலிருந்து” அதாவது வெறுமையிலிருந்து இந்த ஒட்டுமொத்த சிருஷ்டியை உண்டாக்கினார். அவர் எல்லாவற்றையும் வெள்ளையும் கருப்புமாக இருக்கும் உலகத்தை உருவாக்கி, அவர் நம்மை மண்ணை உண்டு உயிர்வாழச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவருடைய ஒவ்வொரு சிருஷ்டிப்பிலும் உள்ள நுணுக்கமான திட்டமிடல், நிறம், அழகு, சமச்சீர்மை - இவை அனைத்தும் அவரது அழகு, ஞானம், வல்லமை மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்த தேவாதி தேவன் கர்த்தர் (LORD) என்றும் அழைக்கப்படுகிறார். - இது அவரது முழுமையான ஆட்சி மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அவரின் தன்மையை வலியுறுத்துகிறது. அவர் உலகத்தை உண்டாக்கினது மட்டுமல்லாமல், அதை நிலைநிறுத்தி ஆளுகிறார். அவரே மனிதனுக்கு சுவாசத்தையும் மற்ற அனைத்தையும் கொடுக்கின்றவர்; ஒவ்வொரு மனிதனின் காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கின்றவர். மேலும் அவர் பரிசுத்தமும், நீதியும் உள்ளவர். அவருடைய இந்த குணாதிசயங்கள் அவரை பாவத்தை வெறுக்கச் செய்கிறது.
அவரது நீதியான தன்மையின் பிரதிபலிப்பாக, அவர் ஒவ்வொரு மனிதனின் மனச்சாட்சியிலும் தமது சட்டத்தை எழுதியுள்ளார். இது நமது கடமைகளை வரையறுக்கிறது:
“பொறாமை கொள்ளக்கூடாது
பொய் சொல்லக்கூடாது
திருடக்கூடாது
விபசாரம் செய்யக்கூடாது
கொலை செய்யக்கூடாது
பெற்றோரை அவமதிக்கக்கூடாது
ஓய்வுநாளை மீறக்கூடாது
தேவனின் பெயரை வீணாக எடுத்துச் சொல்லக்கூடாது
சிலைகளை வணங்கக்கூடாது”
இந்த தேவன் எல்லாம் அறிந்தவர் - ஒவ்வொரு மனிதனின் செயல் மற்றும் எண்ணத்தை அறிந்தவர். நாம் அவரது சட்டத்தை மீறும் ஒவ்வொரு தருணத்தையும் பாவமாக பதிவு செய்கிறார். நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுக்காக நிச்சயம் ஒரு நாள் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். இந்த அனைத்தையும் அறிந்த கர்த்தர் நம்முடைய வெளிப்படையான வாழ்க்கையை மட்டுமல்ல, நம் உள்ளான இதயத்தையும் பார்க்கிறார். அவர் காம எண்ணங்களை விபச்சாரமாகவும், கோபத்தை கொலையாகவும் பார்க்கிறார், இவை அனைத்தையும் பாவமாக அங்கீகரிக்கிறார். ஒரு நீதியுள்ள தேவனாக, அவர் இறுதியில் அனைத்து பாவத்தையும் தண்டிப்பார். தேவன் முற்றிலும் பரிசுத்தமானவர்; சிறிதளவு பாவத்தையும் அவர் தாங்க மாட்டார். நாம் நித்தியமாய் ஜீவிக்கிறவருக்கு எதிராக பாவம் செய்வதால், நம் பாவங்களுக்கான தண்டனையும் நரகத்தில் நித்திய தண்டனைகளுக்கு தகுதியானது. இப்படிப்பட்டவர் தான் வேதம் சுட்டிக்காண்பிக்கும் தேவன்.
பலர் இந்த உண்மையான தேவனின் இருப்பை சந்தேகிக்கிறார்கள், ஒருவேளை தேவன் இருந்தால் "உலகத்தில் இவ்வளவு துன்பம் ஏன்?" என்று கேள்வி கேட்கிறார்கள். இதற்கான பதிலைப் புரிந்துகொள்ள, அடுத்து "மனிதன் யார்?" என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி 2: மனிதன் யார்?
மனிதன் தேவனுடைய சிருஷ்டிப்பு என்று வேதம் சொல்லுகிறது. முதல் மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளை தேவன் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும் படைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்ப்படியாமல் போய் அவருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். இதுவே "மனிதகுலத்தின் வீழ்ச்சி". இதன் விளைவாக அவர்களிடமிருந்து பிறந்த அனைவரும் பாவம் செய்யக்கூடிய இயல்பைப் பெற்றனர். டோமினோக்களின் சங்கிலியைப் போல, அவர்களுக்குப் பின்வரும் நாம் அனைவரும் பாவத்தின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில குணாதிசயங்களைக் கடத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உதாரணமாக, கண், தோல், நிறம் போன்றவை நமது பெற்றோரிடமிருந்து வருகிறது போல, தவறு செய்யும் போக்கும் நமது மரபணுவில் வந்துள்ளது! அது தலைமுறை தலைமுறையாகக் மனிதர்களில் கடத்தப்படுகிறது. நாம் தவறானதை நேசிக்கும் இயல்புடன் பிறந்திருக்கிறோம். மேலும் ஒவ்வொரு நாளும் மனிதர்களில் நோயின் அறிகுறிகளைப் பார்க்கிறோம், படிக்கிறோம், நாமும் அனுபவிக்கிறோம். ஒவ்வொரு நாளும், நாம் தேவனின் பரிசுத்த சட்டத்தை மீறுகிறோம்:
- பொறாமை
- வஞ்சகம்
- பொய்
- திருட்டு
- வெறுப்பு
- விவாகரத்து
- தேவனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பணம், புகழ் போன்றவற்றை வணங்குதல்
எல்லாவற்றையும் துளைக்கும் தேவனுடைய பரிசுத்த கண்கள் நம்முடைய பேராசை, கோபம், கசப்பு, காமம், சுயநலம், பழிவாங்குதல், கூச்சலிடுதல், கடுமையான வார்த்தைகள், சாபங்கள் மற்றும் பிறரை திட்டுதல் போன்ற நமக்குள் மறைந்திருக்கும் பாவங்களின் வேர்களைக் கூட பாவங்களாகப் பார்க்கின்றன. இவைகளால் மனிதகுலம் கெட்டுப்போயுள்ளது. அதை நாம்தான் கெடுத்தோம், பரிசுத்தமான தேவன் அல்ல! உங்களைச் சுற்றி இருக்கிற இப்போதைய உலகத்தைப் பாருங்கள். நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய் பாருங்கள். மனிதகுலம் நொறுங்குவதையும், சீர்குலைவதையும், கெட்டுப்போவதையும் நாம் பார்க்கமுடியும். அதை மாற்றுவது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது.
மனிதர்களின் இந்த சீர்குலைந்த இயல்பு, அவர்கள் ஜீவனுள்ள பரிசுத்தமான தேவனை வெறுக்கவும், அவரிடமிருந்து தங்களைத் தூரமாக விலக்கவும் செய்கிறது. தேவனைப் பற்றிய அவர்களின் உள்ளார்ந்த அறிவை மறைக்கிறது. இதன் விளைவாக மனிதகுலம் தங்கள் சுய விருப்பங்களுக்கு ஏற்றபடி பல தெய்வங்களை உருவாக்கியது. இதன் காரணமாக பல மதங்கள் பிறந்தது. இயற்கையும், மனிதர்களின் மனசாட்சியும் தேவன் யார் என்பதை சாட்சி பகர்கின்றது. ரோமர் 2-ம் அதிகாரம் சொல்கிறது. ஆனால் மனிதர்கள் தங்களின் பாவத்தினால் சத்தியத்தை அடக்கி வைக்கிறார்கள்.
ஆதியாகமம் 3-ம் அதிகாரம் உலக துன்பத்தின் தொடக்கத்திற்கு காரணமாக மனிதகுலம் தேவனிடமிருந்து பிரிந்து செல்வதையும், தேவனின் ஆளுகையை மக்கள் நிராகரிப்பதே காரணம் என்கின்றது. அது பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட விளைவுகளை விவரிக்கிறது. இதில் பிரசவ வலி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகள் மூலம் மனவேதனை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள், திருமண உறவுகளில் போராட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும். ஆண்களுக்கு தொழில் ரீதியான துன்பத்தை வேதம் கோடிட்டுக் காட்டுகிறது. அவர்களின் கடின உழைப்பின் மூலம் தங்கள் குடும்பங்களுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் இவைகளின் அழுத்தங்கள் மற்றும் சவால்களை வகைப்படுத்தப்படுகிறது. யோசித்துப் பாருங்கள், இன்றைய நாட்களில் ஏன் திருமண மோதல்கள், கீழ்ப்படியாத குழந்தைகள் மற்றும் வேலை ஸ்தலங்களில் ஏற்படும் மன அழுத்தங்களால் சமாதானமின்மை ஏற்படுகிறது. இவை அனைத்தும் எதற்கு வழிவகுக்கின்றன? பிரகாசமான எதிர்காலத்திற்கா? இல்லை! இதன் மூலம் மனிதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இறுதியில் மரணத்திற்கு நேராய் வழி நடத்துகிறது. வேதம் இந்த அனைத்து விளைவுகளையும் நமது வீழ்ச்சியிலிருந்து பின்தொடர்கிறது என்று சொல்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு துன்பத்திற்கும், வலிகளுக்கும், கண்ணீருக்கும் மூல காரணம் “SIN” (பாவம்) என்ற சிறிய வார்த்தை. இந்த ‘பாவம்’ மனிதனின் இக்கட்டான நிலையை விளக்குகிறது. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதையே வேதம் பாவமென்று வரையறுக்கிறது.
பாவம் ஏதேன் தோட்டத்திற்குள் நுழைந்து ஒட்டுமொத்த உலகிற்கும் சாபத்தை கொண்டு வந்தது. ஆதாமும் அவனுடைய சந்ததிகளும் தொழில் சம்பந்தமான அழுத்தங்களாலும், மரணத்தாலும் சபிக்கப்பட்டனர். ஏவாளும் அவள் மகள்களும் வலி மற்றும் துக்கத்துடன் குழந்தைகளைப் பெறுவதாக தீர்ப்புக்கு உள்ளனார்கள். இப்போது உலகம் முழுவதும் உள்ள பாவத்தின் விளைவைப் பாருங்கள் - வாழ்க்கை அழுகையுடன் தொடங்கி தொடர்ந்து கண்ணீரும், துன்பங்களும், சண்டைகளும், ஏமாற்றங்களும், வறுமையும், நோயும், குற்றமுள்ள மனசாட்சியும், அமைதியற்ற மனமும், திருப்தியற்ற இதயத்துடன் தொடர்கிறது; இவை அனைத்தும் அழிவிற்கும், மரணத்திற்கு வழிவகுக்கின்றன. லட்சக்கணக்கான கல்லறைகள் மற்றும் சமாதிகளை நினைத்துப் பாருங்கள், எத்தனை கோடிக்கணக்கான கல்லறைகள். இந்த மக்கள் அனைவரையும் கொன்று, இத்தனை கல்லறைகளைத் தோண்டியது எது? வேதம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).
மேலும் மோசமான செய்தி என்னவெனில் மனிதகுலம் இயல்பாகவே இந்த வீழ்ச்சியடைந்த நிலையிலிருந்து தப்பிக்க முடியாததாக சித்திரிக்கப்படுகிறது. மரணத்தை நோக்கிய தவிர்க்க முடியாத வீழ்ச்சியைத் தடுக்க முடியாமல், பின்னர் தெய்வீக தீர்ப்புக்கு உட்பட்டு, இந்த பரிசுத்த தேவனுக்கு எதிராக செய்த அனைத்துப் பாவங்களுக்காக நரகத்தில் நித்திய தண்டனை பெறுவார்கள்.
ஓ! இது எவ்வளவு இருளான, கடுமையான செய்தி! ஆம், இந்த கெட்ட செய்தியை, இந்தக் கொடிய நிலையின் தீவிரத்தை முதலில் புரிந்துகொண்டால்தான், வேதம் கூறும் நற்செய்தியின் மகத்துவத்தை முழுமையாக உணர முடியும். இப்போது நாம் இரண்டு கேள்விகளுக்குப் பதில் பெற்றுவிட்டோம். ஒன்று ‘தேவன் யார்?’ அடுத்தது ‘மனிதன் யார்?’
கேள்வி 3: இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து, திரித்துவத்தின் இரண்டாம் நபர் மற்றும் தேவனுடைய ஒப்பற்ற ஒரே பேறான குமாரன். அவர் தேவனுக்குச் சமமான மகிமையும் அதிகாரமும் உடையவர். ஆனாலும், அவர் நம்முடைய மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டு, மிகுந்த மனத்தாழ்மையோடு அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்த மண்ணில் முப்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அவர், பூமியில் அவர் வாழ்ந்த முப்பத்து மூன்று வருடங்களில், அதிசயமான அற்புதங்கள், அதிகாரமுள்ள போதனைகள் மற்றும் பரிபூரணமான பரிசுத்த வாழ்க்கையின் மூலம் தனது தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்தினார்.
பாவிகளாய் இருக்கும் நம் நிலையை அறிந்த அவர், நமக்கு அவசியமான இரண்டு மாபெரும் தேவைகளை நிறைவேற்றினார்:
நமக்குப் பதிலாக (பிரதிநிதியாக) ஒரு பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்தார்: முதல் ஆதாம் நமக்கு பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தார். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசு, நமக்காக பரிபூரணமான நீதியை சம்பாதித்துத் தந்தார்.
சிலுவையில் அளவிட முடியாத அவமானத்தையும், துயரத்தையும் ஏற்று, வேதனைகளைச் சகித்து, நம்முடைய பாவங்களுக்குப் பரிகார பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்தார்
பாவிகளுக்காக இயேசுகிறிஸ்து நிறைவேற்றின பரிகார பலியை தேவன் ஏற்றுக்கொண்டாரா? ஆம், மூன்றாம் நாளில் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதன் மூலம் தேவன் தனது அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார். இதுவே உண்மையான நற்செய்தி! (1 கொரிந்தியர் 15:3-4) -ல், அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்; அதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள், அதிலே நிலைத்திருக்கிறீர்கள். கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், அடக்கம் பண்ணப்பட்டார் என்றும், வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.”
கேள்வி 4: எனக்கு என்ன கிடைக்கும்?
பணம், வசதி மற்றும் ஆரோக்கியம் போன்ற சாதாரண உலகத் தேவைகளுக்கு மேலாக - தேவன் நிச்சயமாக நம்முடைய தேவைகளைக் கவனிக்கிறார். ஆனால் அதைவிட அளவிட முடியாத மகத்தான ஆசீர்வாதங்கள் உள்ளன! தேவன் நம்முடைய ஆழ்ந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய நம்முடைய பிதாவானவர் என்று வேதம் அழகாக சித்திரிக்கிறது. வேதாகமம், நாம் தேவனிடமிருந்து விலகி, பாவமான வாழ்க்கையால் போராடுகிறோம் என்பதை விளக்குகிறது. நாம் மனம்திரும்பி அவரிடம் திரும்பி வரும்போது, அவர் நம்மை வெறுமனே வரவேற்பதில்லை; அவர் மாபெரும் விருந்தை நடத்துகிறார்! உங்களுக்காகக் காத்திருக்கும் இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் வரை, அவற்றின் மகிமையை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. சில முக்கியமான வரங்களைப் பார்ப்போம்:
- மன்னிப்பு (Forgiveness)
உங்கள் கடந்தகால, தற்போதைய மற்றும் எதிர்கால பாவங்கள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு பாவம்கூட உங்களைக் குற்றவாளியாக்கவோ, தண்டிக்கவோ முடியாது. இந்த ஆழ்ந்த மன்னிப்பை அனுபவிப்பது உங்கள் மனசாட்சிக்குள் இணையற்ற சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
- நீதிமானாக்கல் (Justification)
மன்னிப்புக்கு மேலாக, கிறிஸ்துவின் சொந்த நீதி உங்கள் கணக்கிலே வைக்கப்படுகிறது. தேவனின் முன்பாக நீங்கள் பரிபூரணமாக நீதிமானாக அறிவிக்கப்படுகிறீர்கள்!
- தத்தெடுப்பு (Adoption)
நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் அவரது அன்புக்குரிய சொந்த மகனாக / மகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்த தெய்வீக தத்தெடுப்பின் மூலம் விலைமதிப்பற்ற, அளவிட முடியாத ஆசீர்வாதங்கள் உங்களுக்குச் சொந்தமாகின்றன.
- பராமரிப்பது (Provision)
அன்புள்ள தந்தை போல, தேவன் இந்த பூமியில் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார் (பிலிப்பியர் 4:19).
- கண்டிப்பு (Correction)
நீங்கள் வழிதவறினாலும், அவர் அன்போடு உங்களை சீரான பாதையில் வழிநடத்துகிறார் (எபிரெயர் 12).
- தெய்வீக நிர்வாகம் (Providence)
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், விதிவிலக்கு இன்றி அது எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் உங்கள் நித்திய நன்மைக்காகவே திட்டமிடப்பட்டுள்ளது (ரோமர் 8:28).
- தேவனுடைய சமாதானம் (Peace of God)
தேவனோடு ஆழ்ந்த மற்றும் நிலையான சமாதானத்தையும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஊடுருவும் உங்கள் இதயத்திற்குள் ஒரு அமைதியையும் அனுபவிப்பீர்கள். இந்த சமாதானம் ஒரு நதிபோல் பாயும்; உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேடிய அமைதியைக் கொண்டுவரும். உங்கள் ஆத்துமா ஏங்கிக் கொண்டிருந்தது இதுதான் என்பதை அப்போது நீங்கள் உணருவீர்கள்.
- புதிய இருதயம் (New Heart)
உங்கள் பழக்கவழக்கங்களிலும் குணத்திலும் உண்மையான மற்றும் நிலையான மாற்றத்திற்கான ஆசை இருந்தாலும், பெரும்பாலும் அவை தோல்வியடைந்த புத்தாண்டு தீர்மானங்களை போலவே இருக்கிறது. இங்கே அதற்கான விடை இருக்கிறது. தேவன் உங்களில் உள்ளான மனமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய இருதயத்தையும், மறுபிறப்பையும் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறார். போதைப்பழக்கம், ஆபாசம், கோபம், பேராசை போன்ற ஒவ்வொரு அழிவுகரமான பழக்கத்தையும் வெல்ல முடியும். நீங்கள் ஒரு காலத்தில் விரும்பிய கெட்ட காரியங்கள் தற்போது அருவருப்பாக மாறும், மேலும் நீங்கள் ஒரு காலத்தில் புறக்கணித்த நல்ல காரியங்கள் இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக மாறும். தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில் சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் விரும்புகின்ற ஒரு புதிய விருப்பத்தை உங்களில் கண்டுபிடிப்பீர்கள்.
- நித்திய ஜீவன் (Eternal Life)
உங்களில் மரண பயத்தை நீக்கி, மரணம் ஒரு முடிவு அல்ல, மாறாக அது ஒரு மகிமையான வாழ்க்கையின் ஒரு புதிய ஆரம்பம் என்ற அறிவின் மூலம், தேவன் நித்திய ஜீவனை உங்களுக்கு பரிசாக வழங்குகிறார். இயேசு உயிர்த்தெழுந்தது போலவே தானும் உயிர்த்தெழுவேன் எனும் கல்லறையைத் தாண்டிய அசைக்க முடியாத நம்பிக்கையை நீங்கள் பெறுகிறீர்கள். பரலோகத்தில் ஒரு நித்திய சுதந்தரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை அறிந்துக் கொள்கிறீர்கள்.
- மகிமைப்படுத்தல் (Glorification)
இறுதியாக, நீங்கள் தேவனுடைய சுதந்தரமான வாரிசாக முடிசூட்டப்படுவீர்கள்! அவர் உடைய அனைத்தும் உங்களுக்குச் சொந்தமாகும்!
உண்மையில், இந்த ஆசீர்வாதங்கள் முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன! அவை உங்களை தூய்மையான பேரின்பத்தின் உச்சிக்கு உயர்த்தி, உங்கள் இதயத்தில் நிரம்பி வழியும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றன! இந்த மாபெரும் ஈவுகள் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையானது என்பதை நீங்கள் உணரவில்லையா?
இதை யோசித்துப் பாருங்கள்: மன்னிப்பு இல்லாமல் நாம் நம்முடைய கடந்தகாலப் பாவங்களின் சுமையாலும், நிகழ்காலப் பாவங்களின் நெருக்கதாலும், எதிர்காலத்தில் அதிகமான பாவங்களாலும் கட்டப்பட்டிருக்கிறோம். நீதிமானாக்கப்படாமல், நாம் கண்டிக்கப்பட்டவர்களாகவும், ஒருபோதும் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் இருக்கிறோம். புத்திரசுவிகாரம் இல்லாமல், நாம் இந்த கொடுமை நிறைந்த உலகத்தில் அனாதைகளாக தவிப்போம். தேவனுடைய ஈவுகள் இல்லாமல், நம் சொந்த சக்தியிலும் கவலைகளிலும் மட்டுமே சிக்கியிருப்போம். அவருடைய கண்டிப்பு இல்லாமல், இருளில் தடுமாறி, தவறான பாதைகளில் தள்ளாடுவோம். அவருடைய தெய்வீக கரம் இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை குழப்பத்திற்கு ஆளாகி, எல்லாமே நம்முடைய அழிவுக்கு வேலை செய்யும். அவருடைய சமாதானம் இல்லையென்றால், நம்முடைய இருதயங்கள் அமைதியற்றதாகவும், திருப்தியற்றதாகவும் இருக்கும். புதிய இருதயம் இல்லாமல், நாம் விரும்பத்தகாத நடத்தைகளின் சுழற்சியில் சிக்கி, மாற முடியாமல் தவிப்போம். நித்திய ஜீவன் இல்லையென்றால், நாம் நம்பிக்கையின்றி இறுதி நியாயத்தீர்ப்பின் பயத்தையும், ஆத்துமா இழப்பையும் எதிர்கொள்கிறோம். இறுதியாக, மகிமையடைதல் இல்லாமல், நாம் நித்திய சுதந்தரத்தை இழப்பது மட்டுமல்லாமல், நரகத்தின் நித்திய கோபத்திற்கு ஆளாவோம்!
பாவியான என் அன்பான நண்பனே! இந்த அளவிட முடியாத ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! இத்தகைய சிறப்பான உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆசீர்வாதங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்போது, ஒரு நிமிடம்கூட பாவத்தால் சிதைந்த வாழ்க்கையை வாழாதீர்கள்!
கேள்வி 5: நான் என்ன செய்ய வேண்டும்?
இந்த அற்புதமான ஆசீர்வாதங்களை உண்மையிலேயே அனுபவிக்க, சுவிசேஷம் இரண்டு அடிப்படை நிபந்தனைகளை முன்வைக்கிறது:
- மனந்திரும்புதல் (Repentance)
இது ஒரு ஆழமான உணர்வோடு தொடங்குகிறது. - நீங்கள் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்வது. "பாவம்" என்ற சிறிய வார்த்தைக்குப் பின்னால் உள்ள பெரும் பாரத்தை புரிந்துகொள்வது. இதுவே உங்கள் வாழ்க்கையின் எல்லா போராட்டங்களுக்கும், துன்பங்களுக்கும் மூல காரணம் என்பதைப் புரிந்துகொள்வது. உண்மையான மனந்திரும்புதல் என்பது உங்கள் பாவங்களிலிருந்து விலகி, உங்கள் அன்பான தகப்பனாகிய தேவனை நோக்கி முழு மனதுடன் திரும்புவதாகும். இது உங்கள் மனதையும் இருதயத்தையும் மாற்றுவது, உங்கள் சொந்த வழிகளை விட்டு, தேவனின் வழியைத் தழுவும் முடிவு.
- விசுவாசம் (Faith)
இது இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பது: அவர் தேவனுடைய குமாரன் என்றும், அவர் முழுமையான தெய்வீகமானவர் மற்றும் முழுமையான மனிதனுமானவர் என்று நம்புவது. மேலும் அவர் தம்முடைய வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் என்ன சாதித்தார் என்பதை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நம்புவதை உள்ளடக்கியது. அவருடைய கோபநிவராண பலியே உங்கள் பாவங்களுக்கு இறுதிப் பரிகாரம் என்றும், அவர் மூலம் மட்டுமே நீங்கள் தேவனுடன் ஒப்புரவாக முடியும் என்றும் நம்புவது.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் போது முன்பு விவரித்த அளவிட முடியாத அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களுடையவையாகும்! உங்கள் பாவத்திற்காக மனந்திரும்புங்கள், திறந்த மனதுடன் தேவன் பக்கமாய் திரும்புங்கள், இயேசு கிறிஸ்துவில் உங்களின் முழு விசுவாசத்தை வையுங்கள். அப்போது, பேரானந்தமும், ஜீவனின் நிறைவும் உங்களுக்குக் காத்திருக்கிறது!
தேவனுடைய சமாதனம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக...