ஆசாரியர்களும் ஆசாரியத்துவமும்
படிப்புகள்: 19
Print
ஆசிரியர்: நிவன் தாமஸ்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 9 நிமிடங்கள்

 முன்னுரை: 'ஆசாரியன்' என்றால் ஆசாரிய ஊழியம் செய்கிறவன் என்று பொருள். ஆசாரியன் செய்யும் வேலையை, அதாவது அவன் செய்ய வேண்டிய கடமையை 'ஆசாரியத்துவம்' (அல்லது ஆசாரிய ஊழியம்) என்று அழைக்கிறோம்.

வேதாகமத்தில் 'ஊழியக்காரன்', 'ஊழியம்' ஆகிய வார்த்தைகளும் ஆசாரியன், ஆசாரியத்துவம் என்ற வார்த்தைகளுக்கு ஒத்த சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் 'Priest' அல்லது 'Minister' என்றும், 'Priesthood' அல்லது 'Ministry' என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கே ஆசாரியத்துவம் அல்லது ஊழியம் செய்வது என்பது உன்னதமான தேவனுக்குச் செய்வதாகும். அப்படியானால், அவ்வளவு மகத்துவமான தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ற தகுதியும் இருக்க வேண்டும் அல்லவா! அந்தத் தகுதிகள் என்ன? அந்த ஆசாரியர்கள் யார்? அந்த ஆசாரியத்துவம் என்ன? என்பதைப் பற்றி நாம் வேதாகமத்தில் சற்று ஆராய்ந்து பார்ப்போம்!

பழைய ஏற்பாட்டில் லேவியர்கள் மட்டுமே ஆசாரியர்கள்: இஸ்ரவேலர்களின் 12 கோத்திரங்களில் லேவி கோத்திரமும் ஒன்று. அந்த கோத்திரத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமே தேவன் தமக்கு ஊழியம் செய்யும்படி ஆசாரியர்களாகவும் பிரதான ஆசாரியர்களாகவும் தெரிந்துகொண்டார்.

"இதோ, இஸ்ரவேல் புத்திரரிலிருந்து உங்கள் சகோதரராகிய லேவியரை நான் பிரித்தெடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும்படி, அவர்களைக் கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட தத்தமாக உங்களுக்கு ஒப்புக்கொடுத்தேன். ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கடுத்த எல்லாவற்றிற்காகவும், திரைக்குள்ளானதற்குக்கடுத்த எல்லாவற்றிற்காகவும், உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் செய்யக்கடவீர்கள்..." (எண்ணாகமம் 18:6,7).

"இனி இஸ்ரவேல் புத்திரர் பாவம்சுமந்து சாகாதபடிக்கு, ஆசரிப்புக் கூடாரத்தண்டையில் சேராதிருக்கக்கடவர்கள். லேவியர்மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த பணிவிடையைச் செய்யக்கடவர்கள்; தங்கள் அக்கிரமத்தை அவர்களே சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்." (எண்ணாகமம் 18:22,23).

"நான் கிருபாசனத்தின்மேல் மேகத்தில் விளங்குவேன்; ஆகையால், உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடிக்கு, பரிசுத்த ஸ்தலத்திலுள்ள திரைக்குள்ளாகப் பெட்டியின்மேலிருக்கிற கிருபாசனத்திற்கு முன்பாக எப்பொழுதும் பிரவேசிக்கலாகாது என்று அவனுக்குச் சொல்." (லேவியராகமம் 16:2).

"இஸ்ரவேல் புத்திரரின் சகல பாவங்களும் நீங்கும்படி, வருஷத்திற்கு ஒருதரம் அவர்களுக்காகப் பிராயச்சித்தம் செய்யவேண்டியது. இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது..." (லேவியராகமம் 16:34).

"அவன்... ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பிராயச்சித்தம் செய்யக்கடவன்." (லேவியராகமம் 16:33; எபிரெயர் 9:7).

லேவியர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தேவன் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்? தேவனுடைய சுத்த கிருபையினாலும் இரக்கத்தினாலுமே இந்தப் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

"உங்களுக்கு நான் ஆசாரிய பட்டத்தைக் கிருபையாகக் கொடுத்தேன்; அணுகுகிற அந்நியன் கொல்லப்படக்கடவன்." (எண்ணாகமம் 18:7).

அந்த ஆசாரியர்களும் பிரதான ஆசாரியர்களும் செய்ய வேண்டிய வேலை, அதாவது ஆசாரியத்துவம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்வோம். ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும்படியே அவர்கள் கர்த்தரால் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்.

"அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நீக்கக்கூடாத அதே பலிகளை அநேகந்தரம் செலுத்துகிறவனாயும் நிற்பான்." (எபிரெயர் 10:11).

"ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனுஷரிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டு, பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைக்குறித்து ஏற்படுத்தப்படுகிறான்." (எபிரெயர் 5:1).

"இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனைகளை நிறைவேற்றும்படிக்கு எப்பொழுதும் முந்தின கூடாரத்திற்குள் பிரவேசிப்பார்கள். இரண்டாங் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் பிரவேசிப்பான்; அப்படிப் பிரவேசிக்கும்போது, தன் அஞ்ஞானத்தினாலாய பிழைகளுக்காகவும் ஜனங்களின் அஞ்ஞானத்தினாலாய பிழைகளுக்காகவும் செலுத்தும் இரத்தமில்லாமல் பிரவேசிக்கமாட்டான்." (எபிரெயர் 9:6,7).

அதாவது, ஆசாரியர்கள் முதல் கூடாரத்தில் இருந்து ஜனங்களுக்காகப் பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தி ஊழியம் செய்வார்கள். பிரதான ஆசாரியன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலமாகிய இரண்டாவது கூடாரத்திற்குள் பிரவேசித்து தனக்காகவும், ஆசாரியர்களுக்காகவும், எல்லா ஜனங்களுக்காகவும் பலிகளைச் செலுத்துவான். இதுவே பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஆசாரியத்துவமாகும்.

புதிய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் யார்? பழைய ஏற்பாட்டில் லேவியர்களும் ஆரோனின் சந்ததியினரும் ஆசாரியர்களாக இருந்தார்கள். அப்படியானால் புதிய ஏற்பாட்டில் ஆசாரியர்களோ அல்லது ஆசாரியத்துவமோ இருக்கிறதா? சிந்தித்துப் பார்ப்போம்!

"கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குப் பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்; வெள்ளாட்டுக்கடா, இளங்காளை என்பவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." (எபிரெயர் 9:11,12).

"அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் வெளிப்படும்படி பிரவேசித்திருக்கிறார்." (எபிரெயர் 9:24).

இதன் பொருள், புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமது பிரதான ஆசாரியராக இருக்கிறார். பரிசுத்தாவி தம்முடைய பக்தர்களின் மூலமாக சபையைப்பற்றியும் விசுவாசிகளைப்பற்றியும் கூறியுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்:

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2:9).

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராகவும், சபை அதாவது விசுவாசிகள் அனைவரும் ஆசாரியர்களாகவும் நியமிக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம். பழைய ஏற்பாட்டில் லேவியர்களே ஆசாரியர்கள். "நம்முடைய கர்த்தர் யூதகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; ஆசாரியர்களைக்குறித்துப் பேசுகையில் மோசே அந்தக் கோத்திரத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே." (எபிரெயர் 7:14). அதுபோலவே சபையை எடுத்துக்கொண்டால், கிறிஸ்தவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தையும் சேர்ந்தவர்கள் அல்லவே! அதாவது இங்கே ஆசாரியர்கள் லேவியர்கள் அல்ல, மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

"ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டுவது அவசியமே." (எபிரெயர் 7:12). லேவியர்களின் முறைமையின்படி அல்லாமல் வந்த ஆசாரியர்களின் ஆசாரியத்துவம் என்ன என்பதை இப்போது நாம் கவனிப்போம்!

"இவரோ என்றென்றைக்கும் இருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவத்தை உடையவராயிருக்கிறார். மேலும், தமதுமூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகலால் அவர்களை முற்றுமுடிவாய் இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்." (எபிரெயர் 7:24,25).

அதாவது கிறிஸ்து தமது ஆசாரியத்துவத்தின்படி, விசுவாசிகளாகிய நாம் தேவனால் அங்கீகரிக்கப்படுவதற்காக நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்படியானால் விசுவாசிகளாகிய நமது ஆசாரியத்துவம் என்ன என்பதைப் பார்ப்போம்:

"நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்." (1 பேதுரு 2:5).

இங்கே விசுவாசிகளாகிய நாம் நமது ஆசாரியத்துவத்தின்படி ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்த வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் நாம் எவ்வாறு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்த முடியும்? இது குறித்து பவுல் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்!

"புறஜாதியார் பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடப்பித்து, புறஜாதியாருக்கு இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனாயிருக்கும்பொருட்டு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே..." (ரோமர் 15:15,16).

எனவே, ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துவது என்பது சுவிசேஷத்தின் மூலமாகப் புறஜாதிகளின் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி தேவனுக்கு அர்ப்பணிப்பதே ஆகும்! இதுவே நமக்குள்ள ஆசாரியத்துவத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதுமட்டுமல்லாமல்,

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப்பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர் 12:1).

"ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்." (எபிரெயர் 13:15,16).

சகோதர சகோதரிகளே! பழைய ஏற்பாட்டு ஊழியத்திற்கும் புதிய ஏற்பாட்டு ஊழியத்திற்கும் உள்ள வித்தியாசங்களையும், ஒப்புமைகளையும் கவனித்தீர்கள் அல்லவா! புதிய ஏற்பாட்டு ஊழியம் எவ்வளவு மகிமையானது என்பதைப் பாருங்கள்:

"புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமை பிரகாசித்தபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவான ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியை அளிக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த விசேஷத்தில் மகிமையற்றது; இதைப்பார்க்கிலும் சிறந்த மகிமை இதற்கு உண்டாயிருக்கிறபடியினாலே அப்படிச் சொல்லுகிறேன். ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே." (2 கொரிந்தியர் 3:6-11).

"இப்படிப்பட்ட ஊழியத்தை நாங்கள் உடையவர்களாயிருந்து, இரக்கம்பெற்றபடியால், நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவவசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை வெளிப்படுத்துகிறோம்." (2 கொரிந்தியர் 4:1,2).

"இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்." (ரோமர் 7:6).

இனிமேலும் நாம் ஆவியின்படியே ஆசாரிய ஊழியம் செய்வோமாக! ஆமென்.

முடிவுரை: "அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது." (2 கொரிந்தியர் 3:14) என்று பவுல் இஸ்ரவேலர்களைக் குறித்துப் பேசுகிறார். இனி நம்மைக் குறித்து ஏதாவது சொல்ல வேண்டுமா? நாமும் அதே முக்காட்டுடன் இருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்!

"ஆதலால், நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்தச் சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்." (யாத்திராகமம் 19:5,6).

"நம்மைத் தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு..." (வெளிப்படுத்தின விசேஷம் 1:6).

நாம் அனைவரும் (போதகர்கள், மூப்பர்கள், விசுவாசிகள் அதாவது கிறிஸ்தவர்கள் அனைவரும்) ஆசாரியர்கள் என்றும், நம் அனைவரின் முக்கியமான ஆசாரிய ஊழியம் சுவிசேஷத்தை அறிவிப்பதே என்றும் வேதாகமம் சொல்கிறது. ஆனால் சிலரே ஆசாரியர்கள் என்றும், மற்றவர்கள் ஆசாரியர்கள் அல்ல என்றும் தவறாகப் போதித்து, தவறாக நடந்துகொண்டிருக்கிறோம்.

"என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. நாமெல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்." (யாக்கோபு 3:1,2).