போதகரின் தனிப்பட்ட ஜெபம்
படிப்புகள்: 19
Print
ஆசிரியர்: சார்லஸ் எச். ஸ்பர்ஜன்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 தேவ ஊழியனும் ஜெப ஜீவியமும்

மற்றெல்லா மனிதர்களைப் பார்க்கிலும் பிரசங்கி அதிகமாய் ஜெபம் பண்ணுகிறவனாக விளங்க வேண்டும். அவன் சாதாரண கிறிஸ்தவர்களைப் போல மட்டும் ஜெபம் செய்தால் போதாது; அப்படிச் செய்தால் அவன் மாயக்காரனாகவே காணப்படுவான். "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்னும் கட்டளையைக் காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, உலகிலுள்ள யாவரிலும் கிறிஸ்தவப் போதகனுக்கே அதிகம். அவனுக்குப் பலத்த சோதனைகளும், விசேஷித்த துன்பங்களும், முக்கியமான கடமைகளும் உண்டு.

ஆகையால், போதகனானவன் பலனடையும்படி சர்வவல்லவரை நோக்கிக் கூப்பிடவும், "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" என்று சொல்லவும் ஏவப்படுகிறான்.

1. ஜெப அறையே சிறந்த படிப்பறை

தேவனோடிருக்கும் ஐக்கியத்தினால் சிறந்த ஆவிக்குரிய அனுபவம் ஏற்படுகிறது. இறையியல் கல்லூரிகளில் பெறும் அறிவைவிட இந்த அனுபவம் மேலானது. மகா சிருஷ்டிகர் போதகனைப் பூரண சற்பாத்திரமாக்குவதற்குக் கையாடும் கருவி அவனது தனி ஜெபமே.

வேத வியாக்கியானிகள் நல்ல போதகர்கள் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், வேத நூலாசிரியராகிய பரிசுத்த ஆவியானவரே அவர்களைவிடச் சிறந்த போதகர்.

2. பிரசங்கிக்கும் வேளையில் ஜெபத்தின் வல்லமை

பிரசங்கம் செய்வதற்கு மற்றெல்லாவற்றைப் பார்க்கிலும், ஜெபத்தின் மூலமாய்த் தேவனோடு பேசி, நேரே ஜனங்களிடம் சென்று பிரசங்கிப்பதே சிறந்த ஆயத்தமாகும். மனிதர்களுக்காகத் தேவனிடத்தில் வல்லமையாய் வேண்டிக் கொள்பவர்களால் மட்டுமே, தேவ காரியத்திற்காக மனிதர்களிடத்தில் வல்லமையாய்ப் பேச முடியும்!

ஜெபம் நம்மை உள்ளத்திலிருந்து பேசச் செய்யும். பிரசங்கம் பண்ணும்போதும் பல புதிய யோசனைகள் மனதில் உதிப்பது நிச்சயம். பரிசுத்த ஆவியானவர்மேல் சார்ந்து கொள்ளும் போதகர்கள், பிரசங்கம் செய்யும்போதே திடீரென வெளிப்படும் அந்த எண்ணங்களை, 'பரலோகத்திலிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொக்கிஷங்கள்' என்று சொல்வார்கள்.

போர் புரியப் புறப்படும்போது ஜெபம் செய்யாதவன், போர் நடக்கும்போது ஜெபிக்கத் துணிவானோ? கர்த்தருக்குக் காத்திருந்து ஜெபித்துக் கொண்டிருந்த அப்போஸ்தலர்கள் மேல் அக்கினி நாவுகள் இறங்கினது போல, ஜெபத்தில் தரித்திருக்கிற தேவ ஊழியர்கள் யாவர் பேரிலும் ஆவியானவரின் அருள் இறங்குவது நிச்சயம்.

3. பிரசங்கத்திற்குப் பின் கண்ணீரின் மன்றாட்டு

உண்மையுள்ள பிரசங்கி பிரசங்கம் முடித்தபின் கிருபாசனத்தண்டையல்லாமல் வேறெங்கே ஓடுவான்? பிரசங்கத்தை வைராக்கியமாயும் வல்லமையாயும் பண்ணவில்லையென்று உணரும்போது, அக்குற்றத்தைத் தேவனிடத்தில் அறிக்கையிட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். கடினப்பட்ட பாவிகளைக் குணப்படுத்துவதற்குத் தாங்கள் செய்த பிரயாசமெல்லாம் வீணாய்ப் போனது என்று காணும்போது எரேமியாவைப்போல அழலாம்:

"நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்துக் கர்த்தரின் மந்தை சிறைப்பட்டுப்போனது என்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்."

ஓர் உழவன் தன் விதை சீக்கிரமாய் முளைக்க அதைத் தண்ணீரில் ஊறவைப்பது போல, நாமும் நமது போதனைகளைத் தேவ சந்நிதிக்கு முன்பாகக் கண்ணீரில் நனைப்போமேயாகில், அவைகளின் விளைவு நமக்கு அதிசயமும் அதிக சந்தோஷமுமாயிருக்கும்.

டேவிட் பிரெய்னார்ட் (Brainerd) என்னும் போதகரின் சாட்சி:

"ஓய்வு நாள் காலை இரண்டு மணிநேரம் பரிசுத்த அலுவல்களில் கழிக்கவும், அழியாத ஆத்துமாக்களுக்காகப் பாடுபட்டு ஜெபிக்கவும் பலப்பட்டேன். அது விடியற்காலமாயினும் என் தேகம் முழுவதும் வியர்வையால் நனைந்து போயிற்று."

4. சபை மக்களுக்கான பரிந்துரைப்பு ஊழியம்

நமது சபையார் மக்கெதோனியன் அழைப்பைப் போல, "நீர் வந்து ஜெபத்தின் மூலமாய் எங்களுக்கு உதவி செய்யும்" என்று நம்மைக் கூப்பிடுகிறார்கள். நாம் கர்த்தருக்கு உண்மையான ஊழியரானால், ஆவிக்குரிய பிரகாரம் மார்பதக்கத்தைத் தரித்து, திரைச்சீலைக்குள் சென்று சபைக்காக மன்றாடும் ஆசாரியராக நிற்போம். நமது சபையில் மன்றாட வேண்டிய ஆத்தும நோயாளிகள் அநேகர் உளர்:

5. ஜெபிக்காத பிரசங்கி: ஓர் எச்சரிக்கை

தன் வேலையைத் தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆவலாய் விண்ணப்பம் பண்ணாத போதகன் மிகவும் அகந்தையுள்ள வீணான மனுஷனே. அவனது நிலையை பின்வருமாறு கூறலாம்:

6. தனித்திருக்கும் நேரங்கள் (Retreats)

ஜெபத்திற்கும் தியானத்திற்கும் என்று தனியான நேரங்களை ஒதுக்குவது உத்தமம். நமது ஆவிக்குரிய வைராக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கு நமது வழக்கமான ஜெப வேளைகள் போதாதென்றால், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் தனித்திருந்து ஜெபம் செய்வது நலமாயிருக்கும். ஆவிக்குரிய சிந்தையுடைய சகோதரர்கள் கூடி, தெய்வீக சம்பாஷணை செய்து உருக்கமாய் ஜெபித்தால், ஆத்துமாவுக்குப் புதிய உற்சாகமும் உயிர்ப்பும் உண்டாகும்.