நமது நம்பிக்கை
படிப்புகள்: 14
Print
ஆசிரியர்: ஜே.சி.ரைல்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 18 நிமிடங்கள்

 “நல்நம்பிக்கையை கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவன்...” (2 தெச 2:16)

“மாயக்காரரின் நம்பிக்கை அழிந்து போகும்.” (யோபு 8:13)

“மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?” (யோபு 27:8)

சர்வசாதாரணமாக நமது வாயில் வரும் ஒரு வார்த்தை 'நான் நம்புகிறேன்' என்பதாகும். எல்லோருமே இதைச் சொல்லுவார்கள். அதுவும் தேவபக்தி சம்பந்தமான காரியங்களில் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படும் அளவிற்கு வேறு எங்கேயும் இருக்காதென நான் நினைக்கிறேன். மனசாட்சியின் உறுத்தல்களை சமாளிப்பதற்கு இந்த வார்த்தையை மக்கள் சுலபமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். 'இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என நான் நம்புகிறேன்', 'ஒருநாள் நான் நல்லவனாக மாறிவிடுவேன் என நம்புகிறேன்', 'முடிவில் நான் மோட்சத்திற்குப் போய்விடுவேன்' என்றெல்லாம் ஜனங்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆனால் எதனால் அவர்கள் அப்படி நம்புகிறார்கள்? அவர்கள் விசுவாசம் எதன்மீது கட்டப்பட்டுள்ளது? அதைக் கேட்டால் பெரும்பாலும் அவர்களால் பதில் கூற முடியாது. ஆழமான கேள்விகளிலிருந்து தப்புவதற்காகப் பெரும்பாலும் அவர்கள் இம்மாதிரி கூறுவார்கள். "நம்புகிறேன்" என சொல்லிக் கொண்டே அவர்கள் வாழ்வார்கள்; "நம்புகிறேன்" என சொல்லிக் கொண்டே அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் ஆவார்கள்; "நம்புகிறேன்" என சொல்லிக் கொண்டே அவர்கள் மரித்தும் போவார்கள். பெரும்பாலும் முடிவில் அவர்கள் நரகத்தையே சென்றடைவார்கள்.

இந்த தியானத்தை வாசிப்பவர்கள் கருத்தோடு வாசிக்கும்படியாக நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், இந்த விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்" (ரோம 8:24) என்று வசனத்தில் காண்கிறோம். அப்படியானால் நம்முடைய நம்பிக்கை உறுதியாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்றும், நமது இருதயம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதென்றும், நமது ஆத்துமா தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறதென்றும் நம்புகிறோமா? அப்படியானால் அந்த நம்பிக்கை 'நல்நம்பிக்கையாகவும்', 'ஜீவனுள்ள நம்பிக்கையாகவும்', 'நம்மை வெட்கப்படுத்தாத நம்பிக்கையாகவும்' இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் (2 தெச 2:16, 1 பேது 1:3, ரோம 5:5).

நமது வழிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமது ஆத்துமாவின் நிலை எப்படியிருக்கிறது என்பதைக் குறித்து நேர்மையோடு ஆராய்வதில் தயக்கம் காட்டக் கூடாது. நம் நம்பிக்கை நல்லதாயிருக்கும்பட்சத்தில், இவ்விதமாக ஆராய்வதில் கேடு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. நமது நம்பிக்கை தவறானதாயிருந்தால், அதை உடனடியாக அறிந்து கொண்டு, நல்நம்பிக்கையை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

உண்மையான 'நல்நம்பிக்கைக்கு' ஐந்து அடையாளங்கள் உள்ளன. அவற்றை உங்களுக்கு விவரித்துக் காண்பிக்கப் போகிறேன். இவைகளைக் கொண்டு நமது நிலை எப்படியிருக்கிறது என சோதித்துப் பார்ப்போமாக. 'இவைகள் ஒவ்வொன்றையும் நான் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். என் ஆத்துமாவைக் குறித்த எனது நம்பிக்கையும் அதுதான்' என்று சொல்லக் கூடிய மனிதன் உண்மையிலேயே பாக்கியவான்.

1. நல்நம்பிக்கை என்பது மனிதனால் விளக்கக்கூடியது

முதலாவதாக, ஒரு மனிதன் தனது நம்பிக்கையைக் குறித்து விவரமாக விளக்க முடியும். வேதாகமம் என்ன கூறுகிறது? "உங்களில் இருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." (1 பேதுரு 3:15)

நமது நம்பிக்கை உறுதியாக இருந்தால், அதைப் பற்றி ஓரளவிற்காவது விவரிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் மரித்ததும் ஏன், எதனால், எந்த அடிப்படையில், எந்த காரணத்திற்காக நாம் மோட்சம் செல்வோம் என்று எதிர்பார்க்கிறோம் என்பதற்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். அதை இப்போது நாம் செய்யலாமா?

நான் கூற வருவதை யாரும் தவறாக அர்த்தப்படுத்தி விடாதிருங்கள். இரட்சிக்கப்படுவதற்கு மிகுந்த கல்வியறிவோ, அதிக ஞானமோ அவசியம் தேவை என்று நான் கூறவில்லை. ஒரு மனிதனுக்கு இருபது மொழிகள் தெரிந்திருக்கலாம்; தெய்வீகத்தைக் குறித்த விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவனாக இருக்கலாம்; இருந்தாலும் அவன் இரட்சிக்கப்படாதவனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயத்தில், இன்னொரு மனிதன் எழுதப்படிக்கத் தெரியாமலும், புரிந்து கொள்வதில் குறைவுள்ளவனாகவும் இருக்கலாம்; இருந்தாலும் இவன் இரட்சிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால், ஒரு மனிதன் தனது நம்பிக்கை என்ன என்பதையும், அதன் தன்மைகளையும் விளக்கிச் சொல்ல அறிந்திருக்க வேண்டும். தனக்கே தெரியாத ஏதோ ஒன்றை ஒருவன் விசுவாசிக்கிறான் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இரட்சிப்புக்கு நல்ல பேச்சுத் திறமை அவசியம் என்றும் நான் கூறவில்லை. உள்ளத்தில் நல்ல எண்ணம் இல்லாமல், வெறும் பேச்சுத் திறமையுள்ளவர்களாக சிலர் இருக்கலாம். அதே சமயத்தில் பரிசுத்த ஆவியினால் நல்ல உணர்வுகளை உள்ளத்தில் பெற்றுக் கொண்ட சிலர், அதிகமாகப் பேசத் தெரியாதவர்களாகவும் இருக்கலாம். கிறிஸ்துவின் நாமத்துக்காக அதிகமாகப் பேச முடியாத சிலர், அவருக்காக உயிரை விடவும் துணிவுள்ளவர்களாக இருப்பார்கள். இருந்தாலும், ஒருவன் நல்நம்பிக்கை உடையவனாக இருந்தால், தான் எதனால் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் சொல்லக் கூடியவனாக இருக்க வேண்டும். "நான் ஒரு பாவி என உணர்கிறேன்; கிறிஸ்து இல்லாமல் எனக்கு நம்பிக்கை கிடையாது" என்கிற அளவுக்காவது அவன் தனது நம்பிக்கையைக் குறித்துச் சொல்ல வேண்டும். எதுவுமே அவனால் சொல்ல முடியாதென்றால், அவனுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமா என நான் சந்தேகப்படுவேன்.

இரட்சிப்பின் நம்பிக்கையைக் குறித்து இந்த அளவுக்குத் தெளிவான அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அநேகர் எண்ணலாம். ஒருவன் ஞாயிறு தோறும் தவறாமல் ஆராதனைக்கு செல்பவனாகவும், தனது பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் செய்வித்துவிட்டவனாகவும் இருந்தால் போதுமானது என அவர்கள் நினைக்கிறார்கள். "இப்படிப்பட்ட தெளிவான அறிவு சபையின் போதகர்களுக்கும், வேதவல்லுநர்களுக்கும் மாத்திரமே தேவை" என அவர்கள் கூறுவார்கள். ஆனால், புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் எவராவது கிறிஸ்தவம் என்றால் என்ன என்பதை அறியாமல் இருந்திருப்பார்களா? ஒரு மனிதனுக்குத் தனது நம்பிக்கை என்னவென்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கு புதிய ஏற்பாட்டின் தரத்தினையே நான் சுட்டிக்காட்டுகிறேன். தான் நம்புவதை ஒருவன் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

மோட்சப் பிரயாணம் (Pilgrim's Progress) என்கிற புத்தகத்தில் 'புத்தியீனன்' (Ignorance) என்கிறவனைக் குறித்த சம்பவம் எழுதப்பட்டுள்ளது. வீண்நம்பிக்கை (Vain-hope) என்கிறவனின் படகில் ஏறி எந்த கஷ்டமும் இல்லாமல் அவன் ஆற்றைக் கடந்துவிடுவான். ஆனால் அந்தப் பரலோகப் பட்டணத்துக்குள் நுழைவதற்கு அங்கே அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதைக் காண்பான். யாரை விசுவாசிக்கிறேன், எதை விசுவாசிக்கிறேன் என்பதை நன்கு அறிந்திருப்பவர்களைத் தவிர்த்து, வேறு யாருக்கும் அங்கே இடம் கிடையாது. அவனிடம் அத்தாட்சிப் பத்திரம் ஏதும் இல்லாததால், அவன் பரலோகத்தின் வாசலிலிருந்து நரகத்திற்குத் தள்ளப்படுகிறான். இது நாம் சிந்திக்க வேண்டிய ஒரு எச்சரிப்பு.

கிறிஸ்தவர்களிடையே வெவ்வேறு அளவிலான விசுவாசம் இருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், 'நல்நம்பிக்கை' உடைய எந்த மனிதனும் தனது நம்பிக்கையைப் பற்றி ஓரளவாவது நிச்சயமாகக் கூறமுடியும்.

2. நல்நம்பிக்கை என்பது வேதவாக்கியங்களின் மூலமாக உருவாகும் நம்பிக்கை

தாவீது என்ன சொல்லுகிறார்? "உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்." (சங் 119:81, 49). பவுல் என்ன சொல்லுகிறார்? "தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது." (ரோம 15:4).

நமது நம்பிக்கை நல்லதாக இருக்குமானால், அதற்கு ஆதாரமாக வேதாகமத்திலுள்ள ஏதாவதொரு வசனத்தையோ அல்லது உண்மையையோ காண்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நமது நம்பிக்கை தேவனுடைய வசனத்தின் மூலமாக உருவாகியிருக்க வேண்டும். நமது ஆத்துமாவின் நிலையைக் குறித்து மனதில் வெறுமனே நல்ல உணர்வுகளைக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று நம்மை நாமே மெச்சிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு வேதத்திலிருந்து சரியான ஆதாரம் காட்ட முடியாதவர்களாய் இருந்தால், அது வெறும் கற்பனையே.

மரிக்கும் தறுவாயில் இருக்கிறவர்கள், "இந்த உலகத்தின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை" என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு வேதத்தைக் குறித்த அறிவு சற்றும் இருக்காது. சுவிசேஷத்தின் ஒரு உண்மையைக்கூட அவர்களால் உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்க முடியாது. வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டிராமல், வெறும் மன உணர்வுகளை மாத்திரம் கொண்டிருப்பது நல்நம்பிக்கையை ஏற்படுத்தாது.

ஒரு மனிதன் தன்னுடைய நம்பிக்கை எந்த அளவுக்குச் சரியாக இருக்கிறது என்பதை அறிய விரும்பினால், அவன் தனது இருதயத்தில் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஏதாவது வசனமோ, அல்லது கோட்பாடோ காணப்படுகிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். லண்டன் சிறையில் மரிக்கும் தறுவாயில் இருந்த ஒரு திருடன், சிலுவையில் தொங்கிய மனந்திரும்பின கள்ளனைப் பற்றிய லூக்கா சுவிசேஷப் பகுதியை உறுதியாகப் பற்றிக் கொண்டு ஆறுதல் அடைந்தான். மரணப்படுக்கையிலிருந்த முதியவர் ஒருவர், "இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவா 1:7) என்கிற வசனத்தின் மூலம் சமாதானம் அடைந்தார். இதுவே உண்மையான கிறிஸ்தவர்களின் அனுபவம். வெட்கப்பட்டுப் போகாத அந்த நம்பிக்கையை ஒருபோதும் தேவனுடைய வார்த்தையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

வேதாகமத்தின் மூலமாக வராத எந்த நம்பிக்கையையும் குறித்து எச்சரிக்கையாயிருக்கும்படி நான் அறிவுரை கூறுகிறேன். அரண்மனையில் வசிக்கும் ராணியானாலும், குடிசையில் வாழும் ஏழையானாலும், தத்துவ மேதையாயிருந்தாலும், அவர்களுக்கு நல்நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் இந்த வேதாகமத்திலிருந்து ஜீவ தண்ணீரைக் கட்டாயம் பருக வேண்டும். உங்கள் வேதாகமத்தைப் படியுங்கள்; உங்கள் வேதாகமத்தோடு இணைந்திருங்கள்.

3. நல்நம்பிக்கை என்பது இயேசுக்கிறிஸ்துவின் மீது முழுவதுமாகச் சார்ந்திருக்கும் நம்பிக்கையாகும்

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிடம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து "நமது நம்பிக்கையாயிருக்கிற" என்கிறார் (1 தீமோ 1:1). கொலோசெயரிடம், "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்" என்கிறார் (கொலோ 1:27).

நல்நம்பிக்கையுள்ள ஒரு மனிதன், பாவமன்னிப்பு மற்றும் இரட்சிப்பு குறித்த தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் தேவகுமாரனாகிய இயேசுவின் மீட்பின் பணியினாலேயே நிறைவேறுவதைக் காண்கிறான். தனது பாவநிலையை அவன் அறிந்திருக்கிறான். சுபாவத்தின்படி தன்னை ஒரு குற்றவாளியாகவும், தேவசமாதானத்தை இழந்து நிற்பவனாகவும் உணருகிறான். ஆனால் பாவமன்னிப்பும் தேவனோடு சமாதானம் ஆகுதலும் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாகத் தனக்கு இலவசமாகக் கிடைப்பதைக் காண்கிறான். அவன் தன் எல்லா பாவங்களோடும் தன்னையே இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து, அவரைச் சார்ந்து கொள்கிறான். இயேசுவும் சிலுவையில் அவருடைய பரிகார பலியும் மாத்திரமே அவன் ஆத்துமாவின் நம்பிக்கைக்கு அடித்தளமாயிருக்கிறது.

இயேசுக்கிறிஸ்துவின் மீது இல்லாமல் வேறு எதிலாவது கொண்டிருக்கும் நம்பிக்கை மணலின் மீது கட்டப்பட்டதாகும். "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுக்கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." (1 கொரி 3:11).

நல்நம்பிக்கைக்கு உரிய மெய்யான அடித்தளம் "கிறிஸ்து" மாத்திரமே. அவரே கன்மலை; அவரே திடஅஸ்திபாரமுள்ள மூலைக்கல்!

மரணப்படுக்கைகளில் இருப்பவர்களில், தங்கள் பாவங்களைக் குறித்து ஆழமாக உணர்ந்து, கிறிஸ்துவை இறுகப் பற்றிக் கொண்டிருப்பவர்களைக் காண்பதே ஊழியர்களாகிய எங்களுக்கு மன ஆறுதலைத் தரும். ஜோன் லம்பார்ட் (John Lambert) என்கிற பரிசுத்தவான் தீக்கிரையாக்கப்பட்டு மரிக்கும் தறுவாயில், "கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமில்லை! கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமில்லை!" என்று முழங்கினார். இதுவே நல்நம்பிக்கையின் அடையாளம்.

4. நல்நம்பிக்கை என்பது இருதயத்திற்குள்ளாக உணரப்படும் நம்பிக்கை

பவுல் என்ன சொல்கிறார்? "தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோம 5:5).

நல்நம்பிக்கை உடையவன் அந்த நம்பிக்கையைக் குறித்த உணர்வுள்ளவனாய் இருக்கிறான். மற்றவர்கள் உணராத அந்த நம்பிக்கை தனக்குள் இருப்பதை அவன் உணர்கிறான். நன்மையான எதிர்காலம் தனக்குக் காத்திருக்கிறது என்கிற திடமான நம்பிக்கையை உடையவனாய் இருக்கிறான். சில நேரங்களில் அவன் நம்பிக்கையில் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்திருக்கலாம்; சில நேரங்களில் மனசோர்வுற்று கலக்கமடைந்திருக்கலாம். ஆனால் இந்த நல்நம்பிக்கையை உடைய எல்லா மனிதரும், அது தமக்குள்ளாக இருப்பதை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

இன்றைய காலத்தில் அதீத ஆர்வக்கோளாறினாலும், வீண் சிந்தனைகளினாலும் உணர்ச்சிவசப்படுதலைப் 'பரிசுத்த ஆவியின் கிரியை' என அநேகர் தவறுதலாக விளங்கிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக 'பக்தி உணர்வு' என்கிற சொல்லே மக்கள் மத்தியில் வெறுப்பை விளைவிக்கிறது. ஆனால், மெய்யான கிறிஸ்தவர்கள் அடையும் உணர்வுகளை வேதாகமம் தெளிவாக விவரிக்கிறது. சமாதானம், இளைப்பாறுதல், சந்தோஷம், ஆவியானவரின் சாட்சி, இரட்சிப்பின் நிச்சயம் ஆகியவைகளை உண்மை கிறிஸ்தவர்கள் அனுபவிப்பார்கள். இத்தகைய உணர்வுகளில் கொஞ்சமாவது ஒருவன் தன் இருதயத்தில் உணரவில்லை என்றால், அவனிடம் 'நல்நம்பிக்கை' இல்லை என்றுதான் தீர்மானிக்க வேண்டும்.

களைத்துப் போன ஒரு மனிதன் படுக்கையில் படுத்திருக்கும்போது இளைப்பாறுதலை அனுபவிக்காமல் இருப்பானா? பாலைவனத்தில் தாகத்தோடு இருப்பவன் குளிர்ந்த நீரைப் பருகியும் புத்துணர்ச்சி அடையாமல் இருப்பானா? அப்படியென்றால், மரித்திருந்த நிலையிலிருந்து ஜீவனைப் பெற்று, பாவமன்னிப்படைந்து, புதுசிருஷ்டியாக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவன், தேவாவியானவர் தனக்குள் இருப்பதை உணர முடியாது என்பது எப்படிச் சாத்தியமாகும்?

உள்ளத்தால் உணர முடியாத எந்த நம்பிக்கையையும் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உள்ளான அனுபவம் இல்லாத கிறிஸ்தவத்தைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். கிறிஸ்துவும் ஆவியானவரும் எங்கே இருக்கிறார்களோ அங்கே அவர்களது பிரசன்னம் நிச்சயமாக உணரப்படும்!

5. நல்நம்பிக்கை என்பது வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரியும் நம்பிக்கை

வேதாகமம் என்ன சொல்லுகிறது? "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்." (1 யோவா 3:3).

நல்நம்பிக்கை உடைய மனிதன், அதைத் தன் வாழ்நாளிலெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பான். அது அவனுடைய வாழ்க்கையிலும், குணத்திலும், தினசரி நடவடிக்கைகளிலும் ஊடுருவி இருக்கும். அது அவனைப் பரிசுத்தமுள்ள, தேவபக்தியுள்ள, நல்மனசாட்சியுள்ள மனிதனாக வாழத் தூண்டும். யார்மேல் அவன் விசுவாசம் வைத்திருக்கிறானோ அவரைப் பிரியப்படுத்தவும், அவருக்காகச் சேவையாற்றவும் அவனைத் தூண்டும்.

ஒரு வீட்டில் வெளிச்சம் இருந்தால் அது ஜன்னல்களின் வழியாக வெளியே பிரகாசிக்கும். ஒரு மனிதனின் ஆத்துமாவில் உண்மையான நம்பிக்கை இருக்குமானால் அது அவனுடைய நடக்கைகளில் தென்படும். அதை உங்களால் காண்பிக்க முடியாவிட்டால், ஒருவேளை உங்கள் நம்பிக்கை மாயையாக இருக்கலாம்.

"நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராய் இருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாய் இருக்கிறான்" (1 யோவா 3:7). ஒரு மனிதனை நேர்மையானவனாகவும், உண்மையுள்ளவனாகவும், அன்புள்ளவனாகவும், தாழ்மையுள்ளவனாகவும் வாழும்படியாகச் செய்யாத நம்பிக்கை தேவனிடமிருந்து வந்ததல்ல. அது வெறும் உதடுகளின் பேச்சாக மாத்திரமே இருக்கும்.

போலியான/தவறான நம்பிக்கைகள்

கீழ்க்காணும் தவறான நம்பிக்கைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்:

  1. ஆவிக்குரிய அறிவை மையமாகக் கொண்ட நம்பிக்கை: சிலர் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அறிந்திருப்பார்கள். வேதசத்தியங்களின் மீது விவாதம் செய்வார்கள். ஆனால் அவர்களுக்குள் ஆவியின் கனிகளான அன்பு, தாழ்மை, சாந்தம், கிறிஸ்துவின் சிந்தை காணப்படாது. அன்பு இல்லாத நம்பிக்கை என்பது நம்பிக்கையே அல்ல (1 கொரி 13).
  2. தெரிந்துகொள்ளுதலைத் தவறாகப் புரிந்துகொண்ட நம்பிக்கை: தேவனுடைய தீர்மானத்தின்படி தாங்கள் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக சிலர் தைரியமாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் இரகசியமாகப் பாவங்களைச் செய்கிறவர்களாக இருப்பார்கள். பரிசுத்தத்தை நோக்கி வழிநடத்தாத 'தெரிந்துகொள்ளுதல்' தேவனால் ஏற்பட்டதல்ல; அது பிசாசினால் உருவானது.
  3. சுவிசேஷத்தைக் கேட்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டும் நம்பிக்கை: சிலர் நல்ல பிரசங்கங்களைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு கண்ணீர் சிந்துவார்கள். ஆனால் வாழ்க்கையில் உலகத்தின் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பார்கள். உலகத்தோடு ஒத்துப் போவதைத் தடுக்காத நம்பிக்கை, நம்பிக்கையே அல்ல.

நம்முடைய இருதயத்திலும், வாழ்விலும் ஒரு பரிசுத்த தாக்கத்தை உருவாக்காத எந்த நம்பிக்கையையும் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். பரிசுத்த ஆவியின் முத்திரையைக் கொண்டிராத அந்தப் போலி நம்பிக்கை, பரலோகம் செல்வதற்கு ஒருபோதும் உதவாது.

நடைமுறை ஆலோசனைகள் (முடிவுரை)

நல்நம்பிக்கைக்கு அடையாளமாக ஐந்து முக்கியமான குறிப்புகளைப் பார்த்தோம்:

  1. அது மனிதனால் விவரித்துச் சொல்லக் கூடியது.
  2. அது வேதாகமத்தின் மூலமாக உருவாவது.
  3. அது கிறிஸ்துவை முழுவதுமாகச் சார்ந்திருப்பது.
  4. அது இருதயத்திற்குள்ளாக உணரப்படுவது.
  5. அது வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிவது.

சத்தியங்களை அறிந்து கொண்ட மாத்திரத்தில் பயனில்லை; அவைகளை நமது ஆத்துமாவில் உணர்ந்து கீழ்ப்படிய வேண்டும். அதற்கான மூன்று ஆலோசனைகள்:

1. உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: "உங்கள் ஆத்துமாவைக் குறித்த உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை என்ன?"

இந்தக் கேள்வியை நான் உங்கள் ஆவிக்குரிய நன்மைக்காகவே கேட்கிறேன். நீங்கள் எந்த சபைக்குப் போகிறீர்கள் என நான் அறிய விரும்பவில்லை; உங்கள் உறவினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. தேவனுக்கு முன்பாக நீங்கள் நிற்கும்போது, உங்களைக் காப்பாற்றப்போகும் உறுதிப்பாடு உங்களிடம் இருக்கிறதா? காலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நித்திய வாழ்க்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எந்த விதமான அத்தாட்சியும் இல்லாமல், 'நான் பரலோகத்திற்குச் செல்வேன்' என்று வெறும் உரிமை மாத்திரம் கோருகிறீர்கள் என்றால், அது புத்தியீனமே. போலியான நம்பிக்கைகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். துறைமுகத்தில் அழகாகத் தோன்றும் கப்பல், கடலின் புயலைச் சந்திக்கும்போதுதான் அதன் தரம் தெரியும். அதுபோலவே, கடினமான சூழ்நிலைகளிலும் மரண நேரத்திலும் போலி நம்பிக்கைகள் உங்களைக் கைவிட்டுவிடும்.

2. நல்நம்பிக்கை இல்லையென்றால், உடனடியாக அதைத் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள்

அந்த நல்நம்பிக்கை இலவசமாகவும் தாராளமாகவும் வழங்கப்படுகிறது. கடந்த கால வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அது தடையல்ல. "விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்" (வெளி 22:17). இயேசுக்கிறிஸ்து சிலுவையில் சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாகப் பாவமன்னிப்பும் தேவனோடு ஒப்புரவாகுதலும் உண்டாயிருக்கிறது. களைப்படைந்தவர்களுக்கு இளைப்பாறுதலாகவும், வியாதிப்பட்டவர்களுக்கு மருந்தாகவும் இயேசு இருக்கிறார். சிறிதும் தாமதிக்காமல், தாழ்மையான ஜெபத்தோடு, நேர்மையாக அவரை நாடிச் செல்லுங்கள். உங்களைப் பற்றிக் கூறிக்கொள்ள எந்த நன்மையும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, "பாவிகளை இயேசு ஏற்றுக் கொள்கிறார்" என்கிற நம்பிக்கையோடு அவரிடம் செல்லுங்கள்.

3. நல்நம்பிக்கை உங்களிடம் இருக்குமானால், அதைக் காத்துக்கொள்ளுங்கள்

உங்களுக்கு நல்நம்பிக்கை இருக்குமானால் அதை அதிக ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ளுங்கள். உலக நேசத்திற்கு இடமளிக்காமல், ஜெபத்தினாலும் வேதவாசிப்பினாலும் அதைப் பிரகாசமாக வைத்திருங்கள். அந்த நம்பிக்கையை எப்போதும் உங்கள் வலது கரத்திலே, உபயோகிப்பதற்குத் தயாராக வைத்திருங்கள். திடீரென வரும் சோதனைகளையும் வியாதிகளையும் சந்திக்க அது தேவைப்படும். உபயோகிக்கத் தயாராக இல்லாத தீயணைப்பு வண்டியையோ, கடலில் செல்லத் தயாராக இல்லாத கப்பலையோ போல உங்கள் நம்பிக்கை வீணாகிவிடக் கூடாது.

மேலும், அந்த நம்பிக்கை அதிகமதிகமாகப் பெருக ஜெபியுங்கள். கொஞ்சத்தில் திருப்தி அடையாமல் முழு நிச்சயத்தை அனுபவிக்க வாஞ்சியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்த தேவனுடைய இலவசமான கிருபைக்காக தினமும் அவரைத் துதியுங்கள். உலகத்தார் கேலி செய்தாலும், உபத்திரவங்கள் வந்தாலும், கலங்காமல் முன்னேறிச் செல்லுங்கள். நமது இளைப்பாறும் இடம் அதிக தொலைவில் இல்லை. அங்கே இயேசுவைக் காண்போம்; எப்போதும் கர்த்தரோடே இருப்போம். ஆகவே நல்நம்பிக்கையோடு இயேசுவைப் பின்பற்றுவோம்!