கிறிஸ்துவை மையப்படுத்திய வேத விளக்க பிரசங்கம்
படிப்புகள்: 176
Print
ஆசிரியர்: லெவி பேக்கரிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 8 நிமிடங்கள்

 பிரசங்கம் என்றால் உண்மையில் என்ன?

நமது பிரசங்கத்தின் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் குறித்து சிந்திப்பதற்கு முன்பாக, பிரசங்கம் என்றால் என்ன என்பதை நாம் வரையறுக்க வேண்டியது அவசியமாகும். நமது ஞாயிறு ஆராதனையில் அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

அப்போஸ்தலனாகிய பவுல், தன் ஆவிக்குரிய குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில், "சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாயிருந்து, திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு" (2 தீமோத்தேயு 4:2) என்று கட்டளையிடுகிறார்.

'பிரசங்கம்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு, ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்து 'அறிவிப்பு செய்தல்' அல்லது 'பறைசாற்றுதல்' என்பதே அடிப்படை அர்த்தமாகும். நாம் இதுபோன்று பல அறிவிப்புகளை அனுதினமும் கேட்கிறோம். அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்கள் தலைவர்களின் நடவடிக்கைகளைக் குறித்து அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். சமூக வலைத்தளங்கள் பல்வேறு குழுக்கள், வணிகங்கள் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான அறிவிப்புகளாலும் விளம்பரங்களாலும் நிறைந்துள்ளன. ஆனால் இவை எதுவும் பிரசங்கம் ஆகாது.

ஒரு சாதாரண அறிவிப்பை பிரசங்கமாக மாற்றுவது அந்த அறிவிப்பின் உள்ளடக்கமே ஆகும். பவுல் தீமோத்தேயுவிடம் "திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு" என்று கூறுகிறார். எனவே, பிரசங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கொண்டிருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தியதாகவும், உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியைப் பறைசாற்றுவதாகவும் இருக்க வேண்டும்.

துக்கரமாக, இன்று அநேக சபைகளின் பிரசங்க பீடங்களில் இருந்து சொல்லப்படும் பல காரியங்களை உண்மையான பிரசங்கம் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது. பல நேரங்களில் இந்தப் பிரசங்கங்கள் வெறும் உலகப்பிரகாரமான சுய முன்னேற்றப் பேச்சுகளாகவே அமைந்துவிடுகின்றன. இடையிடையே ஒன்றிரண்டு வேத வசனங்கள் மேம்போக்காகக் குறிப்பிடப்படலாம்; ஆனால் அந்தப் பேச்சின் உள்ளடக்கம் வேதத்தின் அடிப்படையில் இருப்பதில்லை.

‘கிறிஸ்து அரசர்’ (Christ the King) சபையாகிய நாங்கள், பிரசங்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். இதனால்தான் எங்கள் திருச்சபையின் அடிப்படை விதியானது, எங்கள் பிரசங்கத்தின் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் தெளிவாக வரையறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பிரசங்கத்திற்கென்று ஒரு சரியான செய்தியும் முறையும் உள்ளது. அதுவே கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வேத விளக்கவுரை முறையாகும்.

பிரசங்கத்தின் செய்தி: கிறிஸ்துவை மையமாகக் கொண்டது

முதலாவதாக, பிரசங்கத்தின் செய்தி கிறிஸ்துவை மையமாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும். பிரசங்கம் என்பது சுவிசேஷத்தை அறிவிப்பது என்று சொன்னால், நாம் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கவில்லை எனில், நாம் உண்மையில் பிரசங்கிக்கவே இல்லை!

அப்போஸ்தலனாகிய பவுல் தனது நிருபங்களில் இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். கொரிந்தியர்களுக்கு எழுதும்போது, சபையில் நடக்கும் பல பிரிவினைகளைக் குறித்து அவர் வேதனைப்படுகிறார். சபை விசுவாசிகள் வெவ்வேறு அப்போஸ்தலர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு தங்களுக்குள் விரோதங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் (1 கொரிந்தியர் 1:11-13 பார்க்கவும்). ஆனால், ஊழியத்தின் முழு நோக்கமும் தங்களுக்குப் பின்னால் கூட்டத்தைச் சேர்ப்பதல்ல, மாறாக மக்களைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துவதே என்பதைப் பவுல் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

பவுல் அவர்களுக்கு இவ்வாறு நினைவூட்டுகிறார்: "சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடேயாவது ஞானத்தோடேயாவது அறிவிக்க வரவில்லை. இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" (1 கொரிந்தியர் 2:1-2).

கிறிஸ்துவைக் குறித்தும், சிலுவையில் அவர் செய்து முடித்த இரட்சிப்பின் காரியத்தையுமே பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவித்தார். அவருடைய பிரசங்கம் ஆரம்பம் முதல் இறுதி வரை கிறிஸ்துவை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது. அவர் அந்தச் செய்தியைக் கவர்ச்சிகரமாக்கவோ, அதில் எதையும் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ முயற்சிக்கவில்லை. மாறாக, "உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு" (1 கொரிந்தியர் 2:5) இயேசுவின் சுவிசேஷம் அதின் தூய்மையில் வெளிப்பட அனுமதித்தார்.

இன்றும் நமது செய்தி அதேதான். இது புதிய ஏற்பாட்டுப் பிரசங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நாம் எண்ணிவிடக் கூடாது; பழைய ஏற்பாட்டிலிருந்தும் நாம் கிறிஸ்துவையே பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, இயேசு இன்னும் தம்மை அறிந்துகொள்ளாத இரண்டு சீஷர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எருசலேமில் நடந்த சம்பவங்களைக் குறித்து அவர் கேள்விப்பட்டாரா என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். அந்த உரையாடலின் ஊடே, இயேசு அவர்களுக்குப் பிரசங்கிக்கத் தொடங்கினார். "மோசே முதலான சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்" (லூக்கா 24:27) என்று லூக்கா நமக்குக் கூறுகிறார்.

பின்னர், அதே கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தி சீஷர்களிடம் கூறுகிறார்: "மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே" (லூக்கா 24:44).

பழைய ஏற்பாட்டின் முப்பரிமாண அமைப்பை, அதாவது (நியாயப்பிரமாணம் - தீர்க்கதரிசனங்கள் - சங்கீதங்கள்) பயன்படுத்தி, அதில் உள்ள அனைத்தும், அதாவது நமது பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களும், இறுதியில் தம்மைக் குறித்தே பேசுகின்றன என்பதை இயேசு நிரூபிக்கிறார். பழைய ஏற்பாடு கிறிஸ்துவை முன்னோக்கிக் காட்டுகிறது, சுவிசேஷப் புத்தகங்கள் கிறிஸ்துவின் வாழ்வையும் கிரியைகளையும் பதிவு செய்கின்றன, மற்றும் புதிய ஏற்பாட்டின் மீதமுள்ள பகுதிகள் கிறிஸ்துவைப் பின்னோக்கிச் சுட்டிக்காட்டுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பரிசுத்த வேதம் அனைத்தும் கிறிஸ்துவையே மையமாகக் கொண்டுள்ளது.

பிரசங்கத்தின் முறை: வேத விளக்கவுரை

அது உண்மை என்றால், நாம் வேதாகமம் முழுவதையும் பிரசங்கிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16-17) என்று பவுல் தீமோத்தேயுவிடம் கூறும்போது, இதைப் புரிந்துகொள்ள நமக்கு மீண்டும் உதவுகிறார்.

வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவ ஆவியினால் அருளப்பட்டதும் நமக்குப் பிரயோஜனமுள்ளதுமாக இருப்பதாலும், வேதவாக்கியங்கள் அனைத்தும் இறுதியில் கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுவதாலும், எல்லாப் பிரசங்கங்களும் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வேத விளக்கவுரையாகவே இருக்க வேண்டும். அப்படியானால், வேத விளக்கவுரை மற்றும் வசனங்களை வரிசையாக விளக்கிப் பிரசங்கிப்பது என்றால் என்ன?

'விளக்கவுரை' என்பது ஒன்றை மூடியிருப்பதிலிருந்து திறந்து காட்டுவது அல்லது வெளிப்படுத்துவதாகும். அதனுடன் தொடர்புடைய விதத்தில், 'வேத விளக்கவுரை' என்பது ஒரு பொருளைப் பற்றிய முழுமையான மற்றும் ஆழமான விளக்கமாகும். இதை விளக்குபவர் மற்றும் போதிப்பவர், அதிலுள்ள பொருளை எடுத்துக் கேட்போருக்கு அதைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் விவரிக்கிறார்.

வேத விளக்கவுரைப் பிரசங்கத்திற்கும் இதே முறைதான் பொருந்தும். இந்தப் பிரசங்க முறையில், போதகரின் ஒரே குறிக்கோள், கொடுக்கப்பட்ட வேதப் பகுதியிலிருந்து வேதத்தின் சத்தியத்தை முன்வைத்து, அதனைத் தனது சபையாருக்குப் பொருத்திப் பேசுவதே ஆகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேத விளக்கவுரைப் பிரசங்க முறையில் பரிசுத்த வேதமே அந்தச் செய்தி முழுவதையும் ஆளுகை செய்கிறது; பிரசங்கிப்பவர் அல்ல. வேதாகமம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே பிரசங்கிப்பவர் கூறுகிறார். பிரசங்கத்தின் மையக் கருத்து அந்த வேதப்பகுதியின் மையக் கருத்தாகவே இருக்க வேண்டும்.

மேலும், எல்லாப் பிரசங்கங்களும் முழு வேதாகமத்தின் பின்னணியிலும், குறிப்பாகப் பிரசங்கிக்கப்படும் குறிப்பிட்ட புத்தகத்தின் பின்னணியிலும் பிரசங்கிக்கப்பட வேண்டும். அதாவது, வேத விளக்கவுரைப் பிரசங்கம் என்பது வேதாகமத்தின் புத்தகங்களை வசனம் வசனமாகப் பிரசங்கிக்கும் முறையோடு இணைந்து செயல்படுகிறது.

நாம் வேத விளக்கவுரைப் பிரசங்கத்தை வலியுறுத்துகிறோம் என்பதற்காக, ஒரு குறிப்பிட்ட தலைப்பைக் குறித்து தனிப்பட்ட பிரசங்கம் செய்வது எப்போதுமே பொருத்தமற்றது என்று அர்த்தமல்ல. ஆனால், ஒவ்வொரு பிரசங்கத்திற்கும் ஒரு வேதப்பகுதி இருக்க வேண்டும்; அந்த வேதப்பகுதியே பிரசங்கத்தை வழிநடத்த வேண்டும், ஒருபோதும் பிரசங்கம் வேதப்பகுதியைத் தடம் மாற்றக் கூடாது.

வேத விளக்கவுரைப் பிரசங்கத்தில் பல நன்மைகள் உள்ளன. இது நமது கவனத்தை முக்கிய இலக்காகிய 'கிறிஸ்துவின்' மீது நிலைநிறுத்துகிறது! இந்த முறை, வழுவாததும் பிழையற்றதுமான ஒரே அதிகாரமான, தேவ ஆவியினால் அருளப்பட்ட வசனத்தில் பிரசங்கியாரை உறுதியாக நிலைத்திருக்கச் செய்கிறது. மேலும், போதகர் தொடர்ந்து வேத வசனங்களுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருப்பதால், அவர் தனக்குப் பிடித்தமான சொந்தக் கருத்துகளைப் பிரசங்கிப்பதைத் தடுக்கவும் இது உதவுகிறது.

திருச்சபையார் வெறும் மனிதனுடைய அபிப்பிராயங்களைக் கேட்காமல், தங்களுக்கான தேவனுடைய ஜீவ வார்த்தையையே கேட்கிறார்கள் என்ற நம்பிக்கையை இது அவர்களுக்கு அளிக்கிறது. நாம் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட வேதப் புத்தகத்தை வசனம் வசனமாகப் படிக்கும்போது, நாமெல்லாரும் திருவசனத்தின் சிறந்த ஆவிக்குரியவர்களாக வளரவும் இது உதவுகிறது.

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வேத விளக்கவுரைப் பிரசங்கத்தைக் குறித்து இன்னும் நிறைய சொல்ல முடியும். ஆனால், கிறிஸ்துவை அரசராகக் கொண்ட திருச்சபையில் நீங்கள் எத்தகைய பிரசங்கத்தை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய ஒரு தெளிவை இது உங்களுக்கு அளித்திருக்கும் என்று நம்புகிறேன். புகழ்பெற்ற பியூரிட்டன் போதகரான வில்லியம் பெர்கின்ஸ் (William Perkins 1558–1602) கூறியது போல, "கிறிஸ்துவுக்குத் துதியாக, கிறிஸ்துவின் மூலமாக, ஒப்பற்ற கிறிஸ்து ஒருவரையே பிரசங்கிக்க" நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்மை அப்படியே செய்ய உண்மையுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வாராக.