சீர்திருத்த திருநாளின் அவசியம்...
படிப்புகள்: 7
Print
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு மாபெரும் சீர்திருத்தத்தின் விளைவாக இன்றைய திருச்சபைகளுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை இன்றைய அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அந்த சீர்திருத்தத்தின் பலனை அனுபவிக்கிறவர்களாகிய நாம், அதற்காக தேவனுக்கு மிகுந்த நன்றிகளைச் செலுத்துவதற்கு கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

உண்மையாகவே, இந்த சபை சீர்திருத்தம் எவ்வாறு தொடங்கியது என்று நாம் வரலாற்றை திருப்பி பார்த்தால், அதற்கான விதை “மார்ட்டின் லூதர்” அவர்களின் மனதில், ரோமர் நிருபத்தின் மூலமாகவே விதைக்கப்பட்டது. ரோமர் 1:15-17 வரையிலான வசனங்களில், குறிப்பாக 17-ஆம் வசனத்தில், "நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்" என்ற மாபெரும் சத்தியத்தை நாம் வாசிக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில், முழுநேர ஊழியம் செய்பவர்களான பலரால் இந்த வசனத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. "எங்களுக்கு நிலையான வருமானம் இல்லை, நாங்கள் விசுவாசத்தினால் வாழ்கிறோம்" என்று அவர்கள் பொருளாதார ரீதியாக இதை விளக்குகிறார்கள். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே அந்த அர்த்தத்தில் இந்த வசனத்தை சொல்லவில்லை. மனிதர்களுக்கு நித்திய ஜீவன் எவ்வாறு அருளப்படுகிறது என்பதையும், இரட்சிப்பின் உபதேசத்தையுமே அவர் அங்கு விவரிக்கிறார். தேவன் அருளும் மகிமையை அடைவதற்கு மனிதன் எந்தவித முயற்சினால் முடியாது, யாராக இருந்தாலும் நீதிமான்கள் அல்ல என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். எனவே, ஒரு மனிதனை தேவனுக்கு முன்பாக நீதிமானாக்குவது அவனுடைய சொந்தக் செயல்பாடுகளினால் அல்ல; தேவன் இலவசமாக அளிக்கும் நீதியை, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்ற சுவிசேஷ சத்தியத்தை மார்ட்டின் லூதர் அந்த வசனப்பகுதில் ஆழமாகக் கற்றுக்கொண்டார்.

இந்த சத்தியம் அவரை மிக தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. "நான் எல்லாவற்றையும் துறந்து, முழு உண்மையோடு சேவித்துவரும் எனது ரோமன் கத்தோலிக்க சபை, வேத சத்தியத்திற்கு முற்றிலும் முரணாகப் போதித்துக் கொண்டிருக்கிறதே! மனிதனுடைய கிரியைகளினாலே இரட்சிப்பு என்று அது போதிக்கிறதே!" என்று அவர் வேதனைப்பட்டார். அதுவும் வேதம் போதிக்கும் நற்கிரியைகள் அல்ல; சபை உருவாக்கிய மனித சடங்காச்சாரங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும், பாவமன்னிப்புச் சீட்டுகளை வாங்குவதன் மூலமாகவும் பரலோகத்தைச் சம்பாதிக்கலாம் என்ற போலி உபதேசத்தை எதிர்த்துப் போராட அவர் துணிந்தார். பரிசுத்த வேதத்தின் அடிப்படையிலான அவரது ஆய்வின் முடிவாக உருவானதே, புகழ் பெற்ற 95 கொள்கைகள் அவற்றையே அவர் விட்பென்பர்க் என்ற தேவாலயக் கதவில் ஆணியடித்துத் தொங்கவிட்டார்.

அவர் வெளிப்படையாக எழுப்பிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்விகளின் சுருக்கம் இதுதான்:

இந்தக் கேள்விகளே பின்னாளில் சபை சீர்திருத்த இயக்கத்திற்கு அசைக்க முடியாத அடித்தளமாக அமைந்தன. இதிலிருந்து வெளிவந்த ஐந்து மாபெரும் உபதேசத் தூண்களைத்தான் இன்று நாம் 'ஐந்து தூண்கள்' என்று அழைக்கிறோம்:

  1. Sola Scriptura (வேதம் மட்டுமே): சபைக்கு ஒரே இறுதிப் பிரமாணம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே.
  2. Sola Gratia (கிருபை மட்டுமே): நமது இரட்சிப்புக்கு ஒரே ஆதாரம் தேவனுடைய கிருபை மட்டுமே.
  3. Sola Fide (விசுவாசம் மட்டுமே): இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்வதற்கான ஒரே கருவி விசுவாசம் மட்டுமே.
  4. Solus Christus (கிறிஸ்து மட்டுமே): தேவனால் நாம் அங்கீகரிக்கப்படுவதற்கு ஒரே மத்தியஸ்தர் கிறிஸ்து மட்டுமே.
  5. Soli Deo Gloria (தேவனுக்கு மட்டுமே மகிமை): இரட்சிப்பிலும், சிருஷ்டிப்பிலும் சகல மகிமையும் தேவனுக்கு மட்டுமே உரியது.

இவை அனைத்தும் இந்த சீர்திருத்த இயக்கத்தின் வாயிலாக நாம் பெற்றுக்கொண்ட மாபெரும் பொக்கிஷங்கள். இந்த சத்தியங்களுக்காகவே திருச்சபை இன்றும் சமரசம் மாறாமல் நிலைநிற்க வேண்டிய அவசியம் உள்ளது.

சமூகத்தில் சீர்திருத்தத்தின் தாக்கம்

இந்த சபை சீர்திருத்த இயக்கம் திருச்சபையை மட்டும் தான் சீர்படுத்தியதா? கிறிஸ்தவ சமூகத்தை மட்டும்தான் பாதித்ததா? என்று நாம் சிந்தித்தால், நிச்சயம் இல்லை! இந்த இயக்கம் பொது சமூகத்தின் ஒவ்வொரு கோணத்திலும் ஊடுருவி மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக, பொருளாதார, சட்டம் மற்றும் அரசியல் அமைப்புகள் என அனைத்தையும் இன்றுள்ள நவீன சமூகம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மேம்படுத்தியதில் இந்த சீர்திருத்த இயக்கத்திற்குப் மாபெரும் பங்குண்டு.

இதை நாம் இந்திய அரசியலமைப்போடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இன்று நாம் பின்பற்றும் சட்டங்கள் எங்கிருந்து வந்தன? இது முழுவதுமாக நமது சொந்தப் படைப்பா? அல்லது இந்த தேசத்தில் உள்ள சனாதன தர்மம் என்று சொல்லிக்கொள்ளும் மனுநீதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதா? இல்லை. நாம் மேற்கத்திய நாடுகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட ஒரு அரசியலமைப்பையே இன்று பெருமளவில் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதை நான் சொல்லவில்லை; ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான கோல்வால்கர் 'Bunch of Thoughts' என்ற தனது புத்தகத்தில், "நமது இந்திய அரசியலமைப்பில் நம்முடையது என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை; எல்லாம் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கப்பட்டதுதான்" என்று வேதனையோடு விமர்சித்துள்ளார். அவர்கள் வலியுறுத்தும் வர்ணாசிரம மற்றும் சனாதன தர்மம் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு, அனைவருக்கும் சம உரிமையளிக்கும் ஒரு புதிய அரசியலமைப்பை பரிசுத்த வேதாகமம் நமக்குக் கொடுத்திருப்பதால்தான், இன்று அதை அவர்கள் மாற்றத் துடிக்கிறார்கள்.

நாம் கடன் வாங்கிய அந்த மேற்கத்திய நாடுகளுக்கு அந்தச் சட்டங்கள் எங்கிருந்து வந்தன? என்று பார்த்தால் அது வேதாகமத்திலிருந்து வந்தன! எனவே, இந்திய அரசியலமைப்புக்கும் அதன் சட்டங்களுக்கும் மறைமுக அடித்தளமாக கொண்டது நமது பரிசுத்த வேதாகமம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர்ந்த கோட்பாடுகள் வர்ணாசிரம தர்மத்தை போதித்த இந்த நாட்டில் எப்படி வந்தன? அவை வேதாகமத்தின் உபதேசங்களிலிருந்தே வந்தன.

உபாகமம் 17:14-19 வரையில் உள்ள வசனத்தை நாம் வாசிக்கும்போது, "சட்டத்தின் ஆட்சி" என்ற உன்னதக் கோட்பாட்டை நாம் கற்றுக்கொள்கிறோம். இஸ்ரவேலர்கள் ஒரு ராஜாவை ஏற்படுத்த நினைக்கும்போது, அந்த ராஜா நியாயப்பிரமாணத்தின் (சட்டத்தின்) ஒரு நகலை எழுதித் தன்னுடனே வைத்துக்கொண்டு, அதன்படி நாட்டை ஆள வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதாவது, நாட்டை ஆளப்போவது ஒரு தனி நபர் அல்ல; மாறாக, சட்டமே ஆள வேண்டும்! இந்தக் கோட்பாட்டை பரிசுத்த வேதாகமத்திலிருந்தே உலக நாடுகள் கற்றுக்கொண்டன.

திருச்சபைக்கான அழைப்பும், நமது பொறுப்பும்

ஆனால், இன்று நாம் எதிர்க்கொள்ளும் வேதனையான கேள்வி என்னவென்றால்: இந்திய நாட்டின் சட்டங்கள் வேதாகமத்தின் கொள்கைகளை எதிரொலிக்கின்றன என்பது உண்மை என்றாலும், இன்று கிறிஸ்தவ சபைகளை வேதாகமம் ஆளுகிறதா? என்று பார்த்தால் மிக வேதனையானது. இன்று அநேக சபைகளில் மனித பாரம்பரியங்களும், சடங்காச்சாரங்களுமே மேலோங்கி நிற்கின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட முறைகள் தேவனுடைய வார்த்தைக்கு இருக்க வேண்டிய இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. சிலர் தங்களுக்கு தேவனிடத்தில் இருந்து நேரடியாக தரிசனங்கள் வருவதாகவும், தேவன் தங்களோடு பேசுவதாகவும் கூறிக்கொண்டு பரிசுத்த வேதத்தின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். "வேதாகமத்தைத் தவிர வேறு எங்கும் தெய்வீக வெளிப்பாடு இல்லை" என்ற சத்தியத்திற்கு நாம் எப்போது மனந்திரும்பி வருகிறோமோ, அப்போதுதான் சபைகளில் உண்மையான சீர்திருத்தம் மீண்டும் துளிர்க்கும்.

ஆண்டுதோறும் நினைவுகூறப்படும் அக்டோபர் 31-ம் தேதி சீர்திருத்த நாளில், தேவன் வேதத்தின் மூலமாக நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு மாபெரும் பொறுப்பை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். 1பேதுரு 3:15-ஐக் கவனியுங்கள்:

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்."

இந்த நிருபம் உலகெங்கும் சிதறி வாழும் சாமானிய விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது. சுவிசேஷத்தின் சத்தியத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உரியது. ஆங்கில வேதாகமத்தில் இது 'Answer' என்றும், கிரேக்கத்தில் 'Apologia' என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆதாரங்களை வைத்துத் தன் தரப்பு நியாயத்தை எப்படி வாதாடுகிறாரோ, அதைப்போல சுவிசேஷ சத்தியத்தை தர்க்கரீதியாகவும் தெளிவாகவும் தற்காத்துப் பேசும் 'அப்போலோஜியா' (Apologetics) செய்யும் பொறுப்பைக் குறிக்கிறது.

"சுவிசேஷம் அறிவிப்பது என் வேலை இல்லை, அது திருச்சபை போதகர்கள் அல்லது முழுநேர ஊழியர்களின் வேலை" என்றோ, "என் வாழ்க்கையே அவர்களுக்கு ஒரு சுவிசேஷமாக இருக்கட்டும், நான் வார்த்தைகளால் சொல்லத் தேவையில்லை" என்றோ பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. நான் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும், அதை மற்றவர்கள் பார்க்கும்போது, "இவர் மிகவும் நல்ல மனிதர்" என்று மனிதனாகிய என்னைத்தான் புகழுவார்களே தவிர, தேவனை அல்ல. எனக்குள் இந்த நற்குணத்தை உருவாக்கிய அந்த சுவிசேஷத்தை நான் என் வாயைத் திறந்து அறிவிக்கும்போது மட்டுமே, அவர்கள் உண்மையான இரட்சகரான இயேசுவை அறிந்துகொள்வார்கள்.

"மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்." விளக்கின் சுபாவமே வெளிச்சம் கொடுப்பதுதான். அப்போஸ்தலர் 8-ஆம் அதிகாரத்தில், சபை துன்புறுத்தப்பட்டு சிதறிப்போனபோது, அப்போஸ்தலர்கள் எருசலேமில் தங்கிவிட, சிதறிப்போன சாதாரண விசுவாசிகள்தான் எங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவித்தார்கள்.

கடைசியாக, இதை நாம் எப்படிச் செய்ய வேண்டும்? "சாந்தத்தோடும், பயத்தோடும் (வணக்கத்தோடும்) சொல்ல வேண்டும்" என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. வாதிடுவதற்கோ, சண்டையிடுவதற்கோ நாம் அழைக்கப்படவில்லை. யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு அன்போடும் சாந்தத்தோடும் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

எனவே, சுவிசேஷத்திற்காகக் கேள்வியெழுப்புகிறவர்களுக்குச் சரியான பதிலளிப்பதும், அதை சாந்தத்தோடும் அன்போடும் செய்வதுமே நம்முடைய பிரதான கடமை. இன்றைய திருச்சபைகள் மறந்த அந்த சீர்திருத்த சத்தியங்களுக்கு நாம் மீண்டும் திரும்புவோம். தேவன் தாமே உலகளாவிய திருச்சபையை சத்தியத்தின் பக்கமாக திருப்புவராக ஆமென்.