ஆதி திருச்சபையின் முன்மாதிரி
படிப்புகள்: 9
Print
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 8 நிமிடங்கள்

 

மெய்யான மறுமலர்ச்சியை வாஞ்சிக்கிற ஒரு திருச்சபை எப்படி இருக்கும், அந்த திருச்சபையின் சுபாவம் என்ன, அதன் இலக்கணங்கள் மற்றும் நோக்கங்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையின் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்போஸ்தலர் 2:42-ம் வசனத்தை நாம் சிந்திப்போம். "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நிய ஐக்கியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."

இந்த வசனத்தில் தேவன், அப்போஸ்தலர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஆதி திருச்சபையை நமக்கு ஒரு முன்மாதிரியாக வைத்துள்ளார். மெய்யாகவே தேவன் ஏற்படுத்திய சபை எத்தகைய சுபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு தெளிவான முன்மாதிரியை இந்த வசனம் நமக்குக் காட்டுகிறது. இந்த வசனத்தை நாம் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாமும் ஒரு சபையாக சரியான வழியில் பயணிக்கிறோமா என்பதை சிந்தித்து, உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

சபையின் மெய்யான சுபாவத்தை மறப்பதனால் வரும் விளைவுகள்

ஒரு சபையில் எப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுகின்றனவோ, அதற்குக் குறியீடான முக்கிய காரணம், அந்த சபை தன்னுடைய 'அடிப்படை சுபாவத்தை' மறந்துபோனதே ஆகும். இதை அப்போஸ்தலர்கள் தங்கள் நிருபங்களில் பலமுறை சுட்டிக்காட்டியிருப்பதை நாம் கவனிக்கலாம். கொரிந்து சபைக்கு எழுதப்பட்ட முதலாம் நிருபத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அந்த சபையில் பல பிரச்சனைகள் இருந்தன. அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு ஒரு திருச்சபையின் மெய்யான சுபாவத்தை நினைவுபடுத்துகிறார்.

  1. பிரிவினைகள்: கொரிந்து சபையில், "நான் பவுலைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன்" என்று மக்கள் தங்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாம் அனைவரும் ஒரே சிந்தை, ஒரே அன்பு, ஒரே நோக்கம் கொண்டவர்களாக தேவனை ஆராதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சபையின் சுபாவத்தை மறந்து பிரிந்து நின்றார்கள்.
  2. பாவம் மற்றும் துன்மார்க்கம்: அதே சபையில், அஞ்ஞானிகளுக்குள்ளும் காணப்படாத கொடிய வேசித்தனம் காணப்பட்டது. ஆயினும் அவர்கள் அதைக் குறித்துத் துக்கப்படாமல், அப்படிப்பட்டவனைச் சபைக்குள் அனுமதித்தார்கள். "கொஞ்சம் புளித்தமாவு பிசைந்தமாவு முழுவதையும் புளிப்பாக்கும்" என்று பவுல் எச்சரிக்கிறார். புளித்தமாவு போன்ற அந்தப் பாவத்தை சபையிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். சபை என்பது புதிதாக பிசைந்த மாவு போன்றது; அதில் பாவம் கலக்கக்கூடாது என்பதே சபையின் சுபாவம்.
  3. ஆவிக்குரிய வரங்கள்: ஆவிக்குரிய வரங்களைக் குறித்தும் அவர்களுக்குள் குழப்பம் இருந்தது. சில வரங்கள் பெரியவை, சில வரங்கள் சிறியவை என்று எண்ணி பெருமைப்பட்டார்கள். பவுல் அவர்களைப் பார்த்து, "சரீரம் ஒன்றாயிருந்தாலும், அதில் எப்படி பல அவயவங்கள் இருக்கிறதோ, அதுபோல நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருக்கிறோம்" என்று சபையின் சுபாவத்தை விளக்குகிறார். கண்கள் கால்களைப் பார்த்து எனக்கு நீ தேவையில்லை என்று சொல்ல முடியாது. சபை என்பதும் அப்படித்தான்; அனைவரும் சமமே.

ஒருவர் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதாலோ, அல்லது ஒரு போதகராகவோ, மூப்பராகவோ இருப்பதாலோ மட்டும் சபையின் மெய்யான நோக்கம் நிறைவேறிவிடாது. சிலரோ, "நாங்கள் அநேக வருடங்களாக சபையில் இருக்கிறோம், அப்பொல்லோ, கேபா போன்ற பெரிய தலைவர்களால் வழிநடத்தப்பட்டோம்" என்று பெருமை பேசலாம். ஆனால், அவர்கள் அனைவரும் யாருக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்கள்? நமக்காக மரித்து, சிலுவையைச் சுமந்தது இயேசு கிறிஸ்து ஒருவரே! எனவே, நாம் கிறிஸ்துவுக்கே சொந்தமானவர்கள் என்ற அடிப்படை சத்தியத்தை மறக்கும்போதுதான், சபையில் பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.

"அவர்கள்" என்பது யாரைக் குறிக்கிறது?

அப்போஸ்தலர் 2:42-ல் "அவர்கள்" என்ற வார்த்தையோடு வசனம் தொடங்குகிறது. இந்த "அவர்கள்" யார்? பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தபோது, பேதுரு எழுந்து நின்று ஒரு வல்லமையான சுவிசேஷ செய்தியைப் பிரசங்கித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்டு, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டவர்களே அவர்கள்.

தங்கள் பாவங்களை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த ரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி, பகிரங்கமாக ஞானஸ்நானம் பெற்றவர்களையே இங்கு "அவர்கள்" என்று பரிசுத்த வேதம் சுட்டிக்காட்டுகிறது.

சபைக்கு வருவது என்பது ஏதோ பொழுதுபோக்கிற்காகவோ, நேரத்தைக் கழிப்பதற்காகவோ அல்லது பிரசங்கங்களை கேட்டுப் போவதற்காகவோ அல்ல. சபையின் நோக்கமே அதுவல்ல. யார் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவைத் தரிசித்து, மனமாற்றம் அடைந்து, "நான் இயேசுவுக்கே சொந்தம்" என்று தீர்மானிக்கிறார்களோ, அவர்களே இந்த மெய்யான சபையின் அங்கத்தினர்கள்.

இந்த மெய்யான திருச்சபையானது நான்கு முக்கிய காரியங்களில் உறுதியாய்த் தரித்திருந்தது:

  1. அப்போஸ்தலருடைய உபதேசம்

திருச்சபை எதன் அடிப்படையில் கட்டப்பட வேண்டும்? இன்று பல சபைகளில் உலகப் பிரகாரமான தத்துவங்கள், மனிதர்களுடைய கருத்துக்கள், பாரம்பரியம் மற்றும் ஜாதி பிரிவினை சார்ந்த எண்ணங்கள் புகுந்துவிட்டன. ஆனால் ஆதி திருச்சபை, அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கற்றுக் கொண்ட வேதபூர்வமான சுத்தமான உபதேசத்தின் மீதே கட்டப்பட்டிருந்தது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவும், திருச்சபையின் ஒவ்வொரு காரியமும் வேதாகமத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். மனிதர்களுடைய பாரம்பரியங்களுக்கோ, வெறும் சடங்காச்சாரங்களுக்கோ திருச்சபையில் இடமிருக்கக்கூடாது.

  1. அந்நியோந்நிய ஐக்கியம்

ஐக்கியம் என்றால் என்ன? இன்று பலரும், ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்து வெளியே வந்து தேநீர் அல்லது காபி குடித்துக்கொண்டு அரசியல் பேசுவதையோ, உலகக் காரியங்களைப் பேசுவதையோ தான் 'ஐக்கியம்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேதம் சொல்லும் ஐக்கியம் அதுவல்ல.

மெய்யான ஐக்கியத்திற்கு அடிப்படையே 'அன்பு' தான். அந்த அன்பு எப்படிப்பட்டது தெரியுமா? 1யோவான் 3:16 சொல்லுகிறது, "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்." ஒருவருக்கொருவர் தங்கள் உயிரையே கொடுக்கும் அளவுக்கு ஆழமான அன்பைக் கொண்டிருப்பதுதான் சபையின் மெய்யான ஐக்கியம். வேறுபாடுகள் இன்றி, ஒருவரை ஒருவர் தாங்கி, ஒரு சரீரமாக வாழ்வதே உண்மையான ஐக்கியமாகும்.

  1. அப்பம் பிட்குதல் & கர்த்தருடைய பந்தி

அப்பம் பிட்குதல் என்பது வெறும் சடங்கு அல்ல. இது இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவு கூறும் ஒரு பரிசுத்தமான காரியம். "பரிசுத்த பந்தியில் பங்குபெறுகிறோம்" என்று சொல்லிக்கொண்டு, வாழ்க்கையில் எவ்வித பரிசுத்தமும் இல்லாமல் இருப்போமானால், அது நமக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்குப் பதிலாக நியாயத்தீர்ப்பையே கொண்டுவரும் என்று வேதம் எச்சரிக்கிறது. கர்த்தருடைய பந்தியில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும், நாம் அவருடைய மரணத்தை அவர் வருமளவும் தெரிவிக்கிறோம் என்ற சத்தியத்தை உணர்ந்து, பயபக்தியோடு அதில் பங்குபெற வேண்டும்.

  1. ஜெபம் பண்ணுதல்

"என் வீடு ஜெபவீடு என்னப்படும்" என்று ஆண்டவர் கூறினார். சபை என்பது ஜெபிக்கிற இடமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று பல சபைகள் ஜெபிக்கிற இடமாக இல்லாமல், வியாபார ஸ்தலங்களாகவும், உலகக் கொண்டாட்டங்களுக்கான இடங்களாகவும் மாறிவருவது வேதனைக்குரியது. ஆதி திருச்சபை ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்தது. அவர்கள் கூடி ஜெபித்தபோது வீடே அதிர்ந்தது. ஒரு சபையில் ஜெபம் குறையும்போது, அங்கே உலகத்தின் சத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஜெபமே ஒரு சபையின் உயிர் மூச்சு.

முடிவுரை

அன்பானவர்களே, ஆதி திருச்சபையின் முன்மாதிரியை இன்று நாம் சிந்தித்தோம். நமது திருச்சபையை, அப்போஸ்தலர் 2:42-ல் உள்ள அளவுகோலை வைத்து நாம் அளந்து பார்க்க வேண்டும்.

இந்த நான்கு காரியங்களும் எந்த திருச்சபையில் வைராக்கியமாகப் பின்பற்றப்படுகிறதோ, அங்கே மனித முயற்சியின்றி பரிசுத்த ஆவியானவரே மாபெரும் எழுப்புதலை (மறுமலர்ச்சியை) கொண்டு வருவார். வெறும் எழுப்புதல்! எழுப்புதல்! என்று கூப்பாடு போடுவதினால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆதி திருச்சபையின் மாதிரியை பின்பற்றி ஒரு மெய்யான சபையாக நாமும் மாறுவதற்கு, நம்மை நாமே தேவனுடைய கரங்களில் அர்ப்பணிப்போம். தேவன் தாமே இந்த வார்த்தைகளை வாசிக்கிற உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவாராக!