படிப்புகள்: 12
Print
ஆசிரியர்: ஸ்டீபன் டேவிட்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

 

இந்தக் கேள்வி, திருச்சபையின் ஆராதனையின் போது ஒருவர் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியது அல்ல; தேவனுடைய சபையின் அங்கத்தவராக ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பற்றியது.

அப்போஸ்தலனாகிய பவுல் இதைக்குறித்து (1 தீமோத்தேயு 3:15) -ல் தெளிவாக சொல்கிறார், "தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது."

இந்த வேதப்பகுதியில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு சத்தியங்களைப் பார்ப்போம்.

முதலில், "தேவனுடைய வீட்டில்" மற்றும் "ஜீவனுள்ள தேவனுடைய சபையில்" என்ற வார்த்தை பிரயோகங்களை கவனியுங்கள். திருச்சபை என்பது தேவனுடையது. "நீங்கள் என்னுடையவர்கள்" என்று தேவன் திருச்சபையை சொல்லுகிறார். தேவனைத் தவிர வேறு யாருக்கும் திருச்சபையின் மீது அதிகாரம் இல்லை. திருச்சபை என்பது ஆண்டவர் தன்னுடைய சுய இரத்தத்தால் மீட்டெடுத்த ஒரு சமூகம்.

தேவனுடைய சபையின் மீது யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை திருச்சபைத் தலைவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பவுலோ தீமோத்தேயுவோ ஒருப்போதும் நாங்களே எஜமானர்கள் என்று திருச்சபையின் மீது அதிகாரம் செலுத்தவில்லை. மாறாக திருச்சபை தேவனுக்கே சொந்தமானது என்று உணர்ந்து, அதை வெளிப்படையாக அறிவித்தனர்.

இரண்டாவதாக, தேவனுடைய சபையில் "ஒருவன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்" என்ற கட்டளையைக் கடைப்பிடிக்க மறந்துவிடாதீர்கள். (1 தீமோத்தேயு 3:15). திருச்சபை தேவனுக்குச் சொந்தமானது என்பதால், அவருடைய திருச்சபை உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும், மற்றும் செயல்பட வேண்டும் என்பதை குறித்து அவரே கட்டளைகளை உருவாக்கி கொடுத்துள்ளார்.

சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்களில் உள்ளதை தேவனின் அதிகாரமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய திருச்சபையின் உறுப்பினர்களாக போதகர்களும் விசுவாசிகளும் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான துல்லியமான வழிகாட்டுதலை இந்தக் நிருபங்கள் நமக்கு வழங்குகின்றன.

வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், இன்று பலர் கிறிஸ்துவின் திருச்சபையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அவருடைய சித்தத்தின்படியான திருச்சபை உறுப்பினர்களாக இருக்க விரும்பவதில்லை. இருப்பினும், போதகர்களும் விசுவாசிகளும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தங்களுடைய ஊழியங்களை வழிநடத்தும் அதிகாரத்தை தேவன் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த வேத வசனத்தின் சத்தியம் மிகவும் முக்கியமானது. (1 தீமோத்தேயு 3:15) -ல், பவுல் தீமோத்தேயுவிடம், "நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்;" என்று கூறுகிறார். இதன் பொருள் தீமோத்தேயுவுக்கூட தனது சொந்த விருப்பப்படி திருச்சபையை வழிநடத்த அதிகாரம் இல்லை என்பது நமக்கு புரிகிறது. அப்போஸ்தலர்களின் போதனைகளின்படி அல்லது (பரிந்துரையின்படி) திருச்சபையை வழிநடத்துவதே அவரது பொறுப்பு. தீமோத்தேயு தனது ஊழியத்திலும் இவ்வாறே செய்ய வேண்டியதாய் இருக்கும் பட்சத்தில், இன்றைய நவீன விசுவாசிகள் மற்றும் போதகர்களைப் குறித்து என்ன சொல்வோம்..?

திருச்சபையின் செயல்பாட்டிற்கு வேதம் மட்டுமே இறுதியான அதிகாரம் மற்றும் வழிகாட்டியாகும். கிறிஸ்து நம்முடைய கர்த்தர் என்றும், நாம் அவருடைய சபையின் உறுப்பினர்கள் என்றும் நாம் அங்கிகரித்து ஏற்றுக்கொண்டால், தேவனுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளின்படி திருச்சபைக்கு நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம், தேவனுடைய மக்கள் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள்: தேவனுடைய வார்த்தையின்படி, அவருடைய திருச்சபையில் நீங்கள் செயல்படுகிறீர்களா?