கீழ்ப்படியும் பழக்கத்திற்குப் பிள்ளைகளைப் பழக்குங்கள்
படிப்புகள்: 8
Print
ஆசிரியர்: ஜே. சி. ரைல்
வாசிப்பதற்கான நேரம்: 5 நிமிடங்கள்

 நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாவது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரியம் இது. இந்தப் பழக்கத்தைப் போல நம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வேறொரு பழக்கம் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். பெற்றோர்களே, பிள்ளைகள் உங்களுக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுத்தாலும், எவ்வளவு கண்ணீர் சிந்தச் செய்தாலும் சரி, அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியும்படி செய்யத் தீர்மானியுங்கள். எதிர்த்துக்கேள்வி கேட்பது, தர்க்கம் செய்வது, வாக்குவாதம் செய்வது, தாமதப்படுத்துவது அல்லது எதிர்த்துப் பேசுவது என எதற்கும் அங்கே இடமிருக்கக் கூடாது. நீங்கள் அவர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தால், அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி செய்யுங்கள்.

கீழ்ப்படிதலே உண்மையான விசுவாசத்தின் அடையாளமாகும். அதுவே கண்ணுக்குத் தெரியும் விசுவாசம்; அதுவே செயல்படும் விசுவாசம்; வாழ்க்கையில் விளங்கும் ஜீவனுள்ள விசுவாசம். ஆண்டவருடைய மக்களிடையே உண்மையான சீஷத்துவத்தைச் சோதித்தறியும் அளவுகோல் அதுவே. "நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்" (யோவான் 15:14). நல்ல முறையில் பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளைகளின் அடையாளம், பெற்றோர் கட்டளையிடுவதையெல்லாம் அவர்கள் செய்வதே ஆகும். தகப்பனையும் தாயையும் கனம்பண்ணும்படி ஐந்தாம் கற்பனை போதிக்கிறது. ஆனால், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குச் சந்தோஷத்தோடும், மனப்பூர்வமாகவும், உடனடியாகவும் கீழ்ப்படியாவிட்டால், அந்தக் கற்பனை எதிர்பார்க்கும் கனம் அங்கே எங்குள்ளது?

ஆரம்பத்திலிருந்தே கீழ்ப்படிவதைப் பரிசுத்த வேதாகமம் முழுவதும் வலியுறுத்துகிறது. ஆபிரகாமைக் குறித்து வேதம் சாட்சி கூறும்போது, அவன் தன் குடும்பத்தை வெறுமனே வளர்ப்பான் என்று கூறாமல், "தன் பிள்ளைகளுக்கும் தன் வீட்டாருக்கும் கட்டளையிடுவான்" (ஆதியாகமம் 18:19) என்று கூறுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இளவயதில் மரியாளுக்கும் யோசேப்புக்கும் "கீழ்ப்படிந்திருந்தார்" (லூக்கா 2:51) என்று சொல்லப்பட்டுள்ளது. யாக்கோபு இட்ட கட்டளைக்கு யோசேப்பு எவ்வளவு முழுமையாகக் கீழ்ப்படிந்தான் என்பதைக் கவனியுங்கள் (ஆதியாகமம் 37:13). "வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடையூறு செய்வான்" (ஏசாயா 3:5) என்று ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமையை ஒரு தீய காரியமாகக் கூறுவதைப் பாருங்கள். அப்போஸ்தலனாகிய பவுல், கடைசி நாட்களின் தீய அடையாளங்களில் ஒன்றாக மனிதர்கள் "தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்" (2 தீமோத்தேயு 3:2) இருப்பார்கள் என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள். ஒரு கிறிஸ்தவக் கண்காணியை (போதகரை) அலங்கரிக்க வேண்டிய குணங்களில் ஒன்றாக இந்தக் கீழ்ப்படிதலை அவர் எப்படிக் குறிப்பிடுகிறார் பாருங்கள்: "தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் ஆளுகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாய் இருக்க வேண்டும்." மேலும், "உதவிக்காரரானவர்கள்... தங்கள் பிள்ளைகளையும் தங்கள் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் ஆளுகிறவர்களுமாய் இருக்க வேண்டும்" (1 தீமோத்தேயு 3:4, 12). அதுமட்டுமின்றி, ஒரு மூப்பன் என்பவன் "துன்மார்க்கர் என்றும் அடங்காதவர்கள் என்றும் பேர்பெறாத விசுவாசமுள்ள பிள்ளைகளையுடையவனாயும்" (தீத்து 1:6) இருக்க வேண்டும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண விரும்புகிறீர்களா? அப்படியானால், அவர்களிடம் பேசும்போது கீழ்ப்படியவும், சொன்னதைச் செய்யவும் அவர்களைப் பழக்குங்கள். என்னை நம்புங்கள், நாம் முழுமையான சுயாதீனத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்ல; அதற்கு நாம் தகுதியானவர்களும் அல்ல. கிறிஸ்துவுக்குள் சுயாதீனம் பெற்றவர்கள் கூடச் சுமக்க வேண்டிய ஒரு நுகம் இருக்கிறது. "நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்கள் என்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" (கொலோசெயர் 3:24). இது நாம் எல்லாரும் ஆளுகை செய்வதற்காகப் படைக்கப்பட்ட உலகம் அல்ல என்பதையும், நம்மை விடப் பெரியவர்களுக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தெரிந்துகொள்ளும் வரை நாம் ஒருபோதும் சரியான இடத்தில் இருக்க மாட்டோம் என்பதையும் பிள்ளைகள் மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இளமையிலேயே கீழ்ப்படிய அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்; இல்லையென்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேவனுக்கு எதிராக முறுமுறுத்து, அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து தன்னிச்சையாகச் செயல்படலாம் என்ற வீணான எண்ணத்தோடு தங்களையே அழித்துக்கொள்வார்கள்.

வாசகரே, இந்த ஆலோசனை மிகவும் அவசியமான ஒன்று. பிள்ளைகள் பகுத்தறியும் திறன் பெறுவதற்கு முன்பே அவர்களைத் தாங்களாகவே முடிவெடுக்க அனுமதிப்பதையும், அவர்களின் கீழ்ப்படியாமை ஒரு தவறே அல்ல என்பதுபோல நியாயப்படுத்துவதையும் இன்றைய நாட்களில் நீங்கள் அநேக இடங்களில் பார்க்கலாம். பிள்ளைகளைக் கண்டிக்காத பெற்றோரும், தன் சுய இஷ்டப்படி நடக்கும் பிள்ளையும் என் கண்களுக்கு மிகவும் வேதனையான ஒரு காட்சியே. ஏன் வேதனையானது என்றால், தேவன் ஏற்படுத்திய ஒழுங்கு அங்கே தலைகீழாக மாற்றப்படுவதை நான் காண்கிறேன். அந்தப் பிள்ளையின் குணாதிசயம் இறுதியில் சுயநலம், பெருமை மற்றும் அகந்தை கொண்டதாக மாறும் என்பதை நான் உறுதியாக அறிவேன். அவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது பூமியில் உள்ள தங்கள் தகப்பனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க நீங்கள் அனுமதித்தால், வளர்ந்த பிறகு அவர்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் பிதாவுக்குக் கீழ்ப்படிய மறுப்பதில் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது.

பெற்றோர்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசித்தால், 'கீழ்ப்படிதல்' என்பது அவர்களின் கண்களுக்கு முன்பாக எப்போதும் இருக்கும் ஒரு மாறாத விதியாக இருக்கட்டும்.