பழைய ஏற்பாட்டு வரலாற்றைக் கற்பதற்கான ஐந்து காரணங்கள்
படிப்புகள்: 17
Print
ஆசிரியர்: Dr. டேவிட் முர்ரே
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 7 நிமிடங்கள்

 ஒவ்வொரு மனிதனின் வரலாறும் "ஒரு முட்டாளால் சொல்லப்பட்ட, எந்த அர்த்தமும் இல்லாத, வெறும் சத்தமும் ஆத்திரமும் நிறைந்த ஒரு கதை" என்று ஷேக்ஸ்பியர் எழுதினார். ஆனால், தனிப்பட்ட மனித வாழ்வு மற்றும் உலக சரித்திரத்தைக் குறித்த கிறிஸ்தவர்களின் பார்வை முற்றிலும் மாறுபட்டது; தேவன் அதை நியமித்து, ஒழுங்குபடுத்தி, அர்த்தமுள்ள, தீர்க்கமான, மற்றும் நிச்சயிக்கப்பட்ட ஒரு நோக்கத்தை நோக்கி அதை வழிநடத்துகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

இருப்பினும், அநேக கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு சரித்திரத்தின் பயன் மற்றும் அதன் துல்லியத்தன்மை குறித்து ஒரு எதிர்மறையான எண்ணத்தையே கொண்டுள்ளனர். காலத்தாலும், புவியியல், சமுதாய மற்றும் இறையியல் ரீதியாகவும் இது நமக்கு "வெகு தொலைவில்" இருப்பதாகவே அடிக்கடி கருதப்படுகிறது. "இதனால் எனக்கு என்ன பயன்?" மற்றும் "இதை நான் ஏன் படிக்க வேண்டும்?" என்பவை பொதுவான கேள்விகளாக எழுகின்றன. அதை நாம் படிப்பதற்கும், அதிலிருந்து பிரயோஜனம் அடைவதற்கும் இதோ ஐந்து காரணங்கள்:

1. பழைய ஏற்பாட்டு சரித்திரம் ஒரு மெய்யான சரித்திரம்

இஸ்ரவேலர்களின் அண்டை நாட்டார் தங்கள் நம்பிக்கைகளை கற்பனையான, விரிவான, "உலகிற்கு ஒவ்வாத" கட்டுக்கதைகளின் மூலம் வெளிப்படுத்தினர். மாறாக, இஸ்ரவேலைக் குறித்த பழைய ஏற்பாட்டு சரித்திரங்கள், நிஜமான காலகட்டத்தில், உண்மையான மனிதர்களையும், மெய்யான தேவனையும் உள்ளடக்கிய நிஜமான சம்பவங்களை விவரிக்கின்றன. இஸ்ரவேலரின் விசுவாசத்தின் உண்மைத்தன்மை, அவர்களுடைய சரித்திரத்தின் உண்மைத்தன்மையின் மீதே நிலைத்திருந்தது.

அதேபோல, வேதாகமப் பதிவுகளின் உண்மைத்தன்மையை நாம் இழந்துபோனாலோ அல்லது கைவிட்டாலோ, நாம் சத்தியத்தையே இழந்துவிடுகிறோம். நாம் நமது கிறிஸ்தவ விசுவாசத்தையும் இழந்துபோகிறோம்; ஏனென்றால், அது தொடர்பில்லாத தத்துவ ஊகங்களின் (philosophical speculations) அடிப்படையில் அமையாமல், மனித சரித்திரத்தில் தேவன் செய்த அற்புதச் செயல்களின் அடிப்படையிலேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டுச் சரித்திரங்களை, அவற்றின் துல்லியத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்த அசைக்கமுடியாத நம்பிக்கையோடு நாம் அணுகும்போது, அது நமக்குள் அசைக்கமுடியாத விசுவாசத்தைக் கட்டியெழுப்பும்.

2. பழைய ஏற்பாட்டு சரித்திரம் தேவனாலே தெரிந்துகொள்ளப்பட்ட சரித்திரம்

வரலாற்று ஆசிரியர்கள் எவ்வளவுதான் மறுத்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த நோக்கம் இருக்கும். பெரும்பாலும் அது வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த சம்பவங்கள் மற்றும் அவற்றை ஒழுங்குபடுத்திய விதம் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் அந்த நோக்கத்தை நாம் அறிந்துகொள்ளலாம். பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்கும் ஒரு நோக்கம் இருந்தது; அதுவே அவர்கள் நிகழ்வுகளைத் தேர்ந்தெடுக்கவும், ஒழுங்குபடுத்தவும், பதிவுசெய்யவும் வழிகாட்டியது. இங்குள்ள ஒரே வித்தியாசம், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், அவர்களுடைய தெரிவுசெய்தல் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டது (Divinely inspired). ஆகையால், அது எவ்வகையிலும் அதன் உண்மைத்தன்மையைக் குறைப்பதில்லை.

எனவே, பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை வாசிக்கும்போது, ஆசிரியர் ஏன் இந்தக் குறிப்பிட்ட சம்பவங்களை, இந்தக் குறிப்பிட்ட கோணத்தில் தேர்ந்தெடுத்தார் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அந்த ஆசிரியர் தம்முடைய ஆதி வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பிய செய்திக்கு இது உங்களை வெகுவாக அருகில் கொண்டு செல்லும்.

3. பழைய ஏற்பாட்டு சரித்திரம் தற்காலத்திற்கும் ஏற்ற சரித்திரம்

பழைய ஏற்பாட்டுப் பிரசங்கங்கள் பெரும்பாலும் தற்காலத்திற்கு ஒவ்வாதவை என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றன. பழைய ஏற்பாட்டுக் காலத்து உலகிற்கும் நவீன உலகிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், இந்த "கால இடைவெளியை" பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை மறந்துவிடுவதன் மூலம் இணைக்க முடியாது. அப்படி செய்ய முயற்சிப்பது பிரசங்கத்தை வேண்டுமானால் தற்காலத்திற்கு ஏற்றதாக மாற்றலாம், ஆனால் அது வேதவசனங்களை தொடர்பற்றதாக ஆக்கிவிடும்.

மாறாக, பழைய ஏற்பாட்டு சரித்திரத்தின் சரியான புரிதல், ஆதிகாலத்து மக்களுக்கு, அந்த காலகட்டத்திலும் இடத்திலும் சொல்லப்பட்ட ஆதி செய்தியைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது; இதைச் சரியாகச் செய்துவிட்டால், அங்கிருந்து தற்காலத்திற்கான செய்தியை இணைக்கும் பாலத்தை அமைப்பது மிகவும் எளிதானதும் பாதுகாப்பானதுமாக இருக்கும்.

4. பழைய ஏற்பாட்டு சரித்திரம் நோக்கமுள்ள சரித்திரம்

அநேக வரலாற்றுப் புத்தகங்கள் ஒவ்வொரு சம்பவத்தின் என்ன, எப்போது, எங்கே, எப்படி ஆகியவற்றை மட்டுமே கூறுகின்றன. பல சரித்திரங்கள் "ஏன்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சிப்பதில்லை; அப்படி முயற்சிப்பவையும் நம்பகத்தன்மை அற்றவையாகவே நிரூபணமாகின்றன.

மாறாக, வேதாகம சரித்திரம் ஒரு தெளிவான நோக்கத்தைக் கொண்டுள்ளது: இது தேவனுடைய மனதையும் இருதயத்தையும், தேவையிலுள்ள பாவிகளின் நன்மைக்காகப் படிப்படியாக வெளிப்படுத்துகிறது (Progressive revelation). தேவனே வேதாகமத்தின் மையப்பொருளும், கதாநாயகனும் ஆவார். எனவே, ஒரு பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை நாம் வாசிக்கும்போது, பின்வரும் மூன்று கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்:

இந்தக் கடைசி கேள்வி, வேத அதிகாரங்களை ஒன்றோடொன்று தொடர்பில்லாத தனித்தனி சம்பவங்களாக நாம் வாசிப்பதைத் தவிர்க்கப் பெரிதும் உதவும்.

5. பழைய ஏற்பாட்டு சரித்திரம் மீட்பின் சரித்திரம்

பழைய ஏற்பாடு என்பது மீட்பின் சரித்திரமாகும் (Redemptive history). பாவிகளைத் தம்மண்டை மீட்டுக்கொள்ளும் நோக்கத்திற்காக தேவன் மனித சரித்திரத்தைத் தீவிரமாக வழிநடத்துகிறார். அந்த மீட்பின் நோக்கத்தையும், மீட்பராகிய கிறிஸ்துவையுமே கிருபையாக வெளிப்படுத்தும்படி, பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்களைப் பரிசுத்த ஆவியானவர் ஏவி எழுதச் செய்தார் (லூக்கா 24:27).

அப்படியானால், வேதாகம சரித்திரம் என்பது நமக்கு வெறும் இறையியலைக் கற்பிக்கும் சரித்திர உண்மைகள் மட்டுமல்ல. இந்த சரித்திர உண்மைகள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை (God's elect) அவரிடம் கொண்டுவரவே செயல்படுகின்றன. வேதவசனங்கள் நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்க வல்லவைகளாயிருக்கின்றபடியால் (2 தீமோத்தேயு 3:15), இதை நாம் தியானிப்பதற்கு இதைவிட மேலான வேறு என்ன காரணம் நமக்கு வேண்டும்?