இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லுவது சரியா?
படிப்புகள்: 874
Print
ஆசிரியர்: லூக்கா கண்ணன்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

கிறிஸ்தவ வட்டாரத்தில் இக்காலங்களில் எதற்கெடுத்தாலும் 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்ற வார்த்தையை உபயோகிப்பதை அநேகர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வார்த்தைக்கு அத்தனை பெரிய வல்லமை இருப்பதாக ஏராளமான கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு, "இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லிவிட்டுப் போ" என்று அனுப்புவது; பரீட்சை எழுதும்போது "இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லிவிட்டு எழுது" என ஆலோசனை கூறுவது; பயங்கரமான சொப்பனம் கண்டு நடுஇரவில் எழும் சிறுபிள்ளைகளிடம் கூட, "இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லிவிட்டுப் படு, பயம் நீங்கும்" என்று சொல்லிக் கொடுப்பது; ஏன், தடுக்கி விழுந்து எழுந்தாலோ அல்லது ஜலதோஷம் பிடித்து ஒரு தும்மல் போட்டாலோ கூட 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்று சொல்வது... இதெல்லாம் என்ன பழக்கம்?

பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகள் தாங்கள் பேசுவது என்னவென்று விளங்காமலேயே அந்நிய பாஷை பேசுகிறார்கள் என்றால், அந்நிய பாஷை பேசாத ஆழமான விசுவாசிகளும், பெற்றோர்களும், ஏன் மிஷனரி ஊழிய வாஞ்சை உள்ளவர்களும்கூடப் பொருளின்றி 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்று கூறுவதுதான் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. வேத வசனத்தை ஆழமாகத் தியானிப்பவர்கள்கூடவா அர்த்தம் புரியாமல் கண்டதற்கெல்லாம் இப்படிச் சொல்வது?

இயேசுவின் இரத்தத்தின் மேன்மையை முதலில் அறிந்து கொள்ளுங்கள். இயேசு சிந்திய இரத்தத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ளுங்கள். 'இயேசுவின் இரத்தம்' என்பது ஒரு மந்திர வார்த்தையல்ல. 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்று சொல்வதால் மட்டும் வியாதி சுகமாகிவிடாது. "இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லிவிட்டுப் பரீட்சை எழுதினால், விடைகள் தானாகவே மனதில் வந்துவிடும், அப்படியே எழுதித் தேர்ச்சி (Pass) பெற்றுவிடலாம்" என்ற தவறான எண்ணத்தைப் பிள்ளைகளுக்குப் போதிக்காதீர்கள். வயிற்று வலி வந்தால், "இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி வயிற்றில் சிலுவை போடு" என்று தவறாகக் கற்றுக்கொடுக்காதீர்கள்.

குறுக்குவழி ஆசீர்வாதத்திலேயே பழக்கப்பட்ட நம் கிறிஸ்தவப் பரம்பரையில், 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்பதும் ஒரு குருட்டு மந்திர வார்த்தையாகிப் போனதுதான் வேதனை.

அப்படியானால், இயேசுவின் இரத்தம் எப்போது அற்புதத்தை உண்டாக்கும்?

பரீட்சைக்குச் செல்லும் முன், வீட்டில் அந்தந்தப் பாடங்களை ஜெபத்தோடு படித்து ஆயத்தம் செய்யப் பிள்ளைகளைப் பழக்குங்கள். பரீட்சை அறையில் கேள்வித்தாள் வாங்கியவுடன், படித்தது ஞாபகத்திற்கு வரவும், நல்ல ஞாபக சக்திக்காகவும் ஒரு சிறு ஜெபம் செய்யக் கற்றுக்கொடுங்கள். அந்த ஜெபம் நிச்சயம் பலன் கொடுக்கும். அதைவிடுத்து, வெறுமனே 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்று கூறினால் எந்தப் பலனும் கிடைக்காது; எந்த ஆசீர்வாதமும் கிட்டாது; சுகமும் கிடைக்காது. அந்த வார்த்தைக்கு மந்திர சக்தி கிடையாது.

இயேசுவின் இரத்தத்தின் வல்லமையைப் புரிந்து, விசுவாசித்து, பாவ அறிக்கை செய்து, அந்த இரத்தத்தால் விசுவாசத்தில் கழுவப்படும்போதுதான் அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களின் ஜெபம் மட்டுமே கேட்கப்படும்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தியதின் காரணத்தைப் புரிந்துக்கொண்டு, பாவ அறிக்கை செய்தால் மட்டுமே இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுவீர்கள். 1 யோவான் 1:7-ன் படி, "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்". ஆனால், இன்று 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்ற வார்த்தையை மட்டுமே உபயோகித்து ஏராளமான பாடல்கள் வெளிவந்து மறைந்துவிட்டன.

சுகமளிக்கும் அற்புதக் கூட்டங்களில் இவ்வார்த்தையை உபயோகிக்காத ஊழியர்களே இல்லை எனலாம். இவர்கள் இதைத் தவறாக உபயோகிப்பது மட்டுமல்லாமல், கூட்டத்தில் ஜெபிக்கும் மக்களையும் 'இயேசுவின் இரத்தம் ஜெயம்' என்று கத்தவும், கதறவும், அழவும் வைக்கிறார்கள். இது மிகப்பெரும் பரிதாபம். அந்த மக்களும் அதன் அர்த்தம் விளங்காமலே, அதைச் சொல்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை உணராமலே அழுது புரள்கிறார்கள்.