இன்றைய கிறிஸ்தவத்தில் நடக்கும் சம்பவங்களைக் கவனிக்கும்போது மனம் மிகவும் வேதனையடைகிறது. முதலாம் நூற்றாண்டின் கிறிஸ்தவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றைய கிறிஸ்தவம் உண்மையான கிறிஸ்தவமே இல்லை என்று தோன்றுகிறது. இயேசு கிறிஸ்து போதித்த உபதேசங்கள், அவர் செய்த ஊழியம், அப்போஸ்தலர்கள் பின்பற்றிய முறைகள், அவர்கள் போட்ட அஸ்திபாரம், அவர்களைப் பின்பற்றிய ஆரம்பகால அப்போஸ்தலர்களின் கிறிஸ்தவம் மற்றும் ஊழிய முறைகளுக்கும், இன்றைய ஊழியத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றே தோன்றுகிறது.
குறிப்பாக சபையின் மூப்பர்களும், தேவ ஊழியர்களும் முற்றிலும் வேதத்திற்கு முரணாக, உலகப்பிரகாரமான வழிகளில் நடக்கிறார்கள். அதுபோலவே சபையும் வேதத்தின்மேல் சார்ந்திருக்காமல், வேத அறிவு இல்லாத தேவ ஊழியர்களின்மேல் சார்ந்திருந்து தவறான பாதையில் செல்கிறது.
"உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்குகிறீர்கள்." (மத்தேயு 15:6).
இவ்வாறு தவறான பாதையில் திருச்சபை செல்வதற்கான காரணங்களைக் கவனிப்போம்.
1. வேதத்தின் மீதும் தேவன் மீதும் சரியான வாஞ்சை இல்லாமை:
இன்றைய கிறிஸ்தவர்களிடம் வேதத்தின் மீதும் தேவனுடைய மீதும் உள்ள வாஞ்சை மிகவும் குறைந்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மனிதன் உலகப்பிரகாரமான வேலைகளில் மூழ்கி, தேவன் மீதான அன்பு, அக்கறை மற்றும் உறவை இழந்துவிடுகிறான். காலையில் எழுந்தது முதல் வீடு மற்றும் அலுவலக வேலைகளில் மூழ்கிவிடுவதால், வேதத்தை வாசிக்காமலும், ஐந்து நிமிடங்கள்கூட முழு இருதயத்தோடு ஜெபிக்காமலும் இருக்கிறார்கள்.
வாலிபர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்களில் மூழ்கி, தேவனைப் பற்றிய அறிவில்லாமல் போகிறார்கள். இவர்களுக்கு வாஞ்சை இல்லாத காரணத்தால், வேத அறிவில்லாத ஊழியர்களின் வலையில் சிக்கி தவறான பாதையில் நடத்தப்படுகிறார்கள்; இதன் மூலம் சமுதாயத்தில் தேவனுடைய நாமத்திற்கு அவமானம் உண்டாகும் வகையில் செயல்படுகிறார்கள்.
"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷரால் போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." (ஏசாயா 29:13).
2. பரிசுத்த வேதத்தின் மூல அர்த்தங்கள் மற்றும் கருத்துகள் பற்றிய சரியான புரிதல் இல்லாமை:
திருச்சபை வேதத்தைக்குறித்து சரியான முறையில் ஆராயாமலும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமலும் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அநேகருக்கு வேத வசனங்களின் அடிப்படை அர்த்தங்கள்கூடத் தெரிவதில்லை. இதற்கு முக்கிய காரணம், அன்றாட வாழ்க்கையில் ஜெபமும் வேத வாசிப்பும் இல்லாததே ஆகும். அவை நம்முடைய அன்றாட வாழ்வில் இருந்து, நாம் முழு மனதோடு ஜெபித்து, தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தால், நிச்சயமாக தேவ ஊழியர் சொல்வது சரியா தவறா என்பது நமக்கு விளங்கும்.
மேலும், நமக்குக் கிடைக்கக்கூடிய வேத இறையியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசிப்பது, இணையதளத்தில் பல்வேறு வேத கருத்துகளை ஆராய்வது போன்றவற்றைச் செய்தால், ஒரு சிறந்த புரிதல் உள்ள கிறிஸ்தவனாக வாழ்ந்து, சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த முடியும்.
3. திருச்சபையின் நலனுக்கான சரியான புரிதலும் பொறுப்பும் இல்லாமை:
கிறிஸ்தவத்தின் மீதும், வேதத்தின் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடக்கும்போது, அநேக பெரிய தேவ ஊழியர்களும், போதகர்களும் சரியான முறையில் எதிர்வினையாற்றாமலும், குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்காமலும் இருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். அவர்கள் தங்களுடைய சொந்த சபைகளைப் பாதுகாத்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, யாரும் வெளியே வந்து அரசாங்கத் தலைவர்களுடன் பேசுவதையோ, ஊடகங்களில் கண்டனம் தெரிவிப்பதையோ நாம் பார்ப்பதில்லை.
இதற்கு முக்கிய காரணம், திருச்சபையின் மீது பொறுப்பு இல்லாமையும், சுயநலவாதிகளாக மாறிப்போனதுமே ஆகும். சட்டப்பூர்வமாகச் சென்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் இன்றைய சபை மூப்பர்களும், தேவ ஊழியர்களும் எந்தவொரு முன்முயற்சியும் எடுக்காமல் முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர். இது மிகவும் வருத்தத்திற்குரியது. அதேபோல கல்வியறிவில்லாத, வேத அறிவில்லாத, சுயநல மற்றும் பண ஆசை கொண்ட ஊழியர்களின் கைகளிலிருந்து திருச்சபையைக் காப்பாற்றுவதில் யாரும் சரியான பொறுப்பை ஏற்பதில்லை. இதனால் புறஜாதிகள் மத்தியில் கர்த்தருடைய நாமத்திற்கு கடுமையான அவமானம் உண்டாகிறது. புறஜாதிகள் சபையைப் பார்த்து கேலி செய்யும் நிலைமை உருவாகிறது.
"எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்களைக்கொண்டு தூஷிக்கப்படுகிறதே." (ரோமர் 2:24).
4. தேவனுக்குச் சேரவேண்டிய மகிமையை சபை மூப்பர்கள் திருடிக்கொள்வது:
சபையில் யாராவது மனந்திரும்பினாலும், சுகம் பெற்றாலும், ஆசீர்வாதம் பெற்றாலும், அது எங்களால்தான், எங்கள் ஊழிய அமைப்பினால்தான் நடந்தது என்று சொல்லிக் கொண்டு, தேவனுக்கு வர வேண்டிய மகிமையை அநேக சபை மூப்பர்கள் அபகரிக்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயலாகும்.
மனந்திரும்புதல், ஆசீர்வாதம், சுகமளித்தல் என்பவை, அந்த மனிதனின் மீது தேவன் வைத்திருக்கும் அன்பினாலும், அந்த மனிதனுக்கு தேவன்மேல் இருக்கும் விசுவாசத்தினாலும் நடைபெறுகிறது. இந்தச் செயல்பாட்டில் தேவ ஊழியர் வெறுமனே ஒரு கருவியாகச் செயல்படுகிறாரே தவிர, தம்மாலோ அல்லது தம்முடைய ஊழிய அமைப்பாலோ இது நடந்தது என்று கூறி சபையைத் தவறான பாதையில் நடத்துவது மிகவும் வஞ்சகமான செயலாகும்.
"கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொண்டு, கேடான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுவார்கள்." (2 பேதுரு 2:1).
5. இன்றைய சபை மற்றும் சபை மூப்பர்களின் ஆடம்பரமான உலகப்போக்குகள்:
சபை மூப்பர்களும், சபையில் உள்ள அநேக மக்களும் பெயரும், புகழும், கனமும் பெறுவதற்காக மிகவும் மோசமான உலகப்பிரகாரமான போக்குகளைப் பின்பற்றுகிறார்கள். ரசிகர் மன்றங்களை உருவாக்குவது, தங்களைப் பின்பற்றுவோரைச் சேர்த்துக்கொள்வது, அல்லது சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர வழிகளில் தாங்கள் பெரியவர்கள் என்றும், பிரபலமானவர்கள் என்றும் மற்றவர்கள் புகழும்படி நடந்துகொள்வது அவர்களின் மோசமான போக்குகளுக்கு சான்றாகும். தங்கள் ஊழிய அமைப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களைப்போலவோ அல்லது வியாபார நிறுவனங்களைப்போலவோ மாற்றுவதில் அவர்கள் சற்றும் பின்வாங்குவதில்லை.
தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள விதவிதமான ஃபேஷன் ஆடைகளை அணிவது, வர்ணங்களைப் பூசிக்கொள்வது, தங்கள் பொருளாதார நிலைக்கு மீறிய மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிவது போன்றவற்றைச் செய்கிறார்கள். மற்றவர்களை ஈர்ப்பதற்காகவும், மாம்ச இச்சைகளைத் தூண்டும் விதமாகவும் கீழ்த்தரமான ஆடைகளை அணிவது, பெருமையும் காமமும் கலந்த பார்வைகளைக் கவனிக்கும்போது, நாம் செல்வது தேவாலயத்திற்கா அல்லது ஃபேஷன் ஷோவிற்கா என்று புரியாத நிலை உள்ளது. மேலும் விலையுயர்ந்த கட்டிடங்கள், கார்கள் போன்றவற்றை வாங்கி, அவற்றில் பயணம் செய்து சொகுசாக வாழ்கிறார்கள். இவை அனைத்தும் ஏழை மக்களின் கடின உழைப்பிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு அவர்கள் அனுபவிக்கும் சுகபோகங்களாகும். ஆதி கிறிஸ்தவத்தில் எங்கும் இப்படிப்பட்ட மோசமான நிலைமை இருந்ததில்லை.
"வழியிலே போவதற்குத் தடியையாவது, பையையாவது, அப்பத்தையாவது, காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளை வைத்திருக்கவும் வேண்டாம். நீங்கள் எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கியிருந்து, அங்கேயிருந்து புறப்படுங்கள்." (லூக்கா 9:3-4).
இந்தக் கட்டளைகளைப் பின்பற்றும் தேவ ஊழியர்கள் இன்றைய கிறிஸ்தவத்தில் மிகச் சிலரே உள்ளனர்.
6. இலட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதிக்கும் சபைகளும், சபை மூப்பர்களும்:
ஆண்டவர் நம் அனைவருடைய பாவங்களுக்காகத் தமது கடைசிச் சொட்டு இரத்தம் வரை சிந்தித் தமது ஜீவனை அர்ப்பணித்தார். ஆனால் இன்றைய சபை மூப்பர்களும் தேவ ஊழியர்களோ ஏழை மக்களின் கடைசிப் பைசா வரை காணிக்கையாகவும், தசமபாகமாகவும் வசூலித்து அவர்கள் உயிரை வாங்குகிறார்கள். இதற்காக பலவிதமான தந்திரங்களையும் திட்டங்களையும் பயன்படுத்தி, ஏழை மக்களையும் சபை விசுவாசிகளையும் அடியோடு சுரண்டுகிறார்கள்.
ஆசீர்வாதங்கள் வரும் என்று கட்டுக்கதைகளைச் சொல்வது, ஒரு இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம் கிடைக்கும் என்று ஆசை காட்டுவது, ஜெபிக்கப்பட்ட எண்ணெய், கைக்குட்டைகள் மற்றும் பல வகையான பொருட்களை விற்று வியாபாரம் செய்வது போன்றவற்றைச் செய்து இலட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதித்து காணிக்கைகளை வசூலிக்கிறார்கள். ஒருவேளை உணவிற்கு ரூ. 20 செலவழிக்க முடியாத ஏழையிடம் ரூ. 100-க்கு ஜெபிக்கப்பட்ட எண்ணெயை விற்கும் அநியாயமான கொடுமையை இன்று சபைகளில் காண முடிகிறது. ஒரு சபையின் கட்டிடத்தைவிட மற்றொரு சபையின் கட்டிடம் பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், அளவுக்கதிகமான காணிக்கைகளை ஆசீர்வாதத்தின் போர்வையில் வசூலித்து கொள்ளையடிக்கிறார்கள்.
உண்மையாகவே, ஆண்டவர் நமக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி ஜீவனைக் கொடுத்ததைவிட வேறு எந்த ஆசீர்வாதமும், சுகமும் பெரியதல்ல. நம்முடைய பலவீனத்தில்தான் அவருடைய கிருபை பூரணமாய் விளங்குகிறது. முதலாவது நாம் அவருடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும்; அப்பொழுது இவைகளெல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும். அவருக்காக நம் உயிரையும் துச்சமாக மதித்து உழைக்க வேண்டும்.
"பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களை ஆதாயமாகக்கொள்வார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஆக்கினை தாமதியாது, அவர்களுடைய அழிவு உறங்காது." (2 பேதுரு 2:3).
"பரிசேயரே, உங்களுக்கு ஐயோ; நீங்கள் துளசியிலும், அரதையிலும், சகலவிதப் பூண்டுகளிலும் தசமபாகம் செலுத்தி, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும். பரிசேயரே, உங்களுக்கு ஐயோ; ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ; மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷர்கள் அவைகளை அறியாதிருக்கிறார்கள் என்றார்." (லூக்கா 11:42–44).
7. சபை வளாகங்களைப் புண்ணிய ஸ்தலங்களாக மாற்றுவது:
அநேக தேவ ஊழியர்கள் இலட்சங்களிலும் கோடிகளிலும் கட்டிய தங்கள் சபைகளைப் புண்ணிய ஸ்தலங்களாக (யாத்திரைத் தலங்களாக) மாற்றுகிறார்கள். இன்ன சபைக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்கும் அல்லது இன்ன இடத்தில் உள்ள சபைக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களைத் தவறான பாதையில் நடத்துகிறார்கள். உண்மையாகவே, ஆண்டவர் சமாரிய ஸ்திரீயோடு பேசும்போது...
"அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்." (யோவான் 4:19-24).
எனவே, தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் தங்கள் முழு மனதோடும், முழு ஆவியோடும் தொழுதுகொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுதுகொண்டால்தான் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வது தவறாகும். அவ்வாறு சொல்லி இஸ்ரவேல் யாத்திரை, வேளாங்கண்ணி யாத்திரை இன்னும் பல யாத்திரைகளை ஏற்பாடு செய்து, புண்ணியம் கிடைக்கும் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
8. சுகமளிக்கும் ஊழியத்தின் பெயரில் நடக்கும் அதீத மோசடிகளும், அருவருப்பான செயல்களும்:
கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக, சுகமளிக்கும் ஊழியத்தின் பெயரால் கிறிஸ்தவ சபைகளை ஏமாற்றும் காரியங்களில் தேவ ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தேவ வார்த்தையைப் போதிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, வெறும் சுகமளிக்கும் கூட்டங்களை மட்டுமே நடத்துகிறார்கள். உண்மையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் முதலாவதாகத் தேவையானது மனந்திரும்புதலும், பாவமன்னிப்புமே ஆகும். மனுக்குலத்திற்காகக் கர்த்தர் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி, மரித்து, உயிர்த்தெழுந்தார் என்றும், அவர் மீண்டும் வரப்போகிறார் என்றும் அனைவருக்கும்—அதாவது அனைத்துப் பகுதியினர், மொழியினர், சாதியினர், இனத்தவர் என அனைவருக்கும்—அறிவிக்க வேண்டும். தேவ வார்த்தையைப் புரியும் வகையில் போதிக்க வேண்டும்.
பாவமன்னிப்பும், மனந்திரும்புதலும் இல்லாமல் வெறும் சரீர சுகம் மட்டும் ஒரு மனிதனைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்லாது. தேவ வார்த்தை மற்றும் சுகமளித்தல் குறித்த சரியான புரிதல் இல்லாமல் தேவ ஊழியர்கள் சபையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தங்களின் சுயநலமான பண ஆசைக்காகவும், புகழுக்காகவும் சபையை முற்றிலும் தவறான வழியில் நடத்துகிறார்கள். கீழே விழுவது, பைத்தியக்காரத்தனமாகக் குதிப்பது, உருளுவது போன்ற அருவருப்பான செயல்களைச் செய்ய வைக்கிறார்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற பெயரில் தண்ணீரைத் தெளிப்பது, காற்றில் ஊதுவது போன்ற செயல்களைச் செய்து கர்த்தருடைய நாமத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள். ஜெபிக்கப்பட்ட எண்ணெய் (Prayer oil) பாட்டில்கள், முகத்தைத் துடைக்கும் கைக்குட்டைகள் (Handkerchiefs), புத்தகங்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருப்பதாகக் கூறி, இன்னும் கீழ்த்தரமாகச் சுகமளிப்பதன் பெயரில் வியாபாரம் செய்து மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
எனவே, சபையைக் கெடுக்கும் இப்படிப்பட்டவர்களை தேவன் ஆதரிப்பாரா? ஒருபோதும் ஆதரிக்க மாட்டார் அல்லவா!
"பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிடத்தொடங்கி: என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்." (லூக்கா 19:45-46)
குறிப்பு: அன்பான வாசகர்களே, சுகமளிக்கும் வரங்கள் இல்லை என்று நான் கூறவில்லை. கர்த்தர் ஜீவனுள்ளவர்; அவருடைய சித்தத்தின்படி விசுவாசத்தோடு ஜெபிப்பவர்களின் ஜெபங்களைக் கேட்டு அவர் சுகமளிக்கிறார். வேதாகமம் கூறுகிறது - "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்" (யாக்கோபு 5:15). ஆனால், சுகமளிக்கும் ஊழியத்தின் பெயரில் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடக்கும் மோசடிகளைக் குறித்தே நான் பேசுகிறேன். இந்த விஷயத்தை வாசகர்கள் புரிந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
9. சாதியின் பெயரால் பிளவுபட்ட சபைகள்:
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவத்திற்கும், "உன்னைப்போல் உன் அயலானையும் நேசிப்பாயாக" என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், சமூகத் தீமையான சாதியமைப்பைக் கிறிஸ்தவ சபைகளில் பரவச் செய்து, உயர்ந்த மற்றும் தாழ்ந்த சாதிகளின் பெயரால் சபையை நெடுக்காகப் பிளந்து, சாதியின் பெயரால் திருச்சபைகள் கட்டப்படுவது மிகவும் வேதனையான விஷயமாகும்.
சாதியின் பெயரால் தேவ ஊழியர்கள் உருவாவது, சபைகளை நிறுவுவது, மற்ற சபைகளைச் சேர்ந்த சக கிறிஸ்தவர்களைத் தூஷிப்பது, தங்கள் சாதியைச் சேர்ந்த தேவ ஊழியர்களிடம் மட்டுமே ஜெபிப்பது மற்றும் திருமணங்களை நடத்துவது போன்றவை சர்வசாதாரணமாகிவிட்டன. அதுமட்டுமின்றி, தங்களுக்குச் சாதகமாக இருக்கும் திருச்சபைகளை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுத்து, தேவ வார்த்தையோடு எவ்வித சம்பந்தமுமில்லாமல் சபைகளை உருவாக்குவது மிகவும் வருத்தத்திற்குரியது.
"ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நீங்கள் மாம்சத்துக்கேற்றவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே." (1 கொரிந்தியர் 3:4-5)
10. மூடநம்பிக்கைகள், குருட்டுத்தனமான ஆசாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்:
தேவன் மீதும், அவருடைய வார்த்தையின் மீதும் கவனம் செலுத்துவதைவிட, குருட்டுத்தனமான ஆசாரங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்கள் மீதே அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். தேவ வார்த்தையின் ஆழங்களை ஆராய்வதில் தோல்வியடைகிறார்கள். வாஸ்து பார்ப்பது, முகூர்த்தம் குறிப்பது, கிரகணங்களைக் கடைப்பிடிப்பது, ஜோதிடம் பார்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளைப் பல கிறிஸ்தவர்கள் பின்பற்றுவது மிகவும் வேதனையானது. இவை அனைத்திற்கும் மேலாக நம் சிருஷ்டிகராகிய தேவன் இருக்கிறார் என்ற உண்மையை மறப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
"அக்காலத்தில் நீங்கள் தேவனை அறியாமலிருந்து, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனில்லாதவைகளும் வெறுமையானவைகளுமான மார்க்கப்பிரமாணங்களுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைகளாகும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே." (கலாத்தியர் 4:8-10)
11. சபைகளில் அரசியலை ஊக்குவித்தல்:
சபைகளில் அரசியலானது அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் திருச்சபையின் மீது தீவிர ஆர்வம் காட்ட முடியாமல் போகிறது. போதகருக்கும், கமிட்டி உறுப்பினர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. கமிட்டி உறுப்பினர்களுக்குச் சாதகமாகச் செயல்படாவிட்டால், போதகரை அந்தச் சபையிலிருந்து பணியிட மாற்றம் செய்வதோ அல்லது வேறு வகையில் இடையூறு செய்வதோ நிகழ்கிறது.
சில இடங்களில் போதகரும், கமிட்டி உறுப்பினர்களும் இணைந்து சபைக்கு வரும் காணிக்கைப் பணத்தைக் கையாடல் செய்கிறார்கள். அதேபோல, மாவட்ட அல்லது மண்டல அளவிலான சபைகளைக் கண்காணிக்கும் பெரிய போதகர்கள் லஞ்சம் என்ற போர்வையிலோ அல்லது அதிக அளவில் பணத்தைச் சம்பாதிப்பதன் மூலமாகவோ செய்யும் ஊழல் மற்றும் முறைகேடான அரசியலினால் சபை நாளுக்கு நாள் சீரழிந்து போகிறது.
12. திருச்சபைச் சொத்துக்களை அந்நியப்படுத்துதல் (முறைகேடாக விற்பனை செய்தல்):
லஞ்சத்தின் வலையில் விழுந்து, மிஷனரிகள் இந்தியாவின் நல்வாழ்விற்காகவும், கிறிஸ்தவ சபையின் வளர்ச்சிக்காகவும் சம்பாதித்து வைத்த அசையாச் சொத்துக்களையும், நிலங்களையும் அந்நியர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்று அந்நியப்படுத்துகிறார்கள். மிஷனரிகள் மிகவும் கஷ்டப்பட்டு, தங்கள் சொகுசான வாழ்க்கையைத் துறந்து, இங்கு வந்து நமக்குச் சுவிசேஷத்தை அறிவித்தனர். தேவாவியானவர் நம் தேசத்து மக்களில் சிலரிடத்தில் கிரியை செய்ததால் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டோம்.
நாம் அனைவரும் ஓரிடத்தில் கூடி தேவனைத் துதிப்பதற்காகச் சபைக்கான நிலங்களை வாங்கினார்கள். நாம் கல்வியறிவில்லாமல் தேவ வார்த்தையை வாசிக்க முடியாத நிலையில் இருந்தபோது, நம் கிறிஸ்தவ சமுதாயத்திற்காகவும் தேச மக்களுக்காகவும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவத்திற்காக மருத்துவமனைகள், அனாதைகள் மற்றும் முதியோர்களுக்கான ஆசிரமங்கள், இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை நமக்குச் சேர்த்து வைத்துச் சென்றனர். ஆனால், இன்றைய நம் சபைப்போதகர்களில் சிலர் பண ஆசைப் பிடித்து, பொருளாசையுள்ளவர்களாக அவற்றை விற்பது மிகவும் துக்கத்தை அளிக்கிறது.
"அப்பொழுது தேசத்து ஜனங்கள் யூதா ஜனங்களின் கைகளைத் தளரப்பண்ணி, அவர்கள் கட்டாதபடிக்கு அவர்களைப் பயமுறுத்தினார்கள். பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் நாட்களிலெல்லாம், பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாண்ட காலம்வரைக்கும், அவர்களுடைய யோசனையை அபத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கூலிகொடுத்தார்கள்." (எஸ்றா 4:4-5)
13. குடும்பத்தைக் காட்சிப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்:
இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அநேக போதகர்களும், தேவ ஊழியர்களும் சுவிசேஷத்தை அறிவிப்பதைக் காட்டிலும், தங்கள் குடும்பத்தைக் காட்சிப்படுத்துவதற்கே அதாவது தங்கள் வாரிசுகளையோ அல்லது குடும்பத்தினரையோ சபைக்கு முன்பாக முன்னிறுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, அவர்களுடைய மகன்களையே அவர்களின் வாரிசுகளாகக் காட்சிப்படுத்துகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ஏனென்றால், சுவிசேஷ அறிவிப்பிற்கான வாரிசுகளை, அதாவது தேவ ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் கண்டிப்பாக வேதாகமம் சொல்லும் போதனையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
"கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதிக்க வல்லவனுமாயிருக்கவேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து; தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கத்தோடும் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எவ்விதம் விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசுக்கு நேரிடும் ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதனனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பேயிருக்கிறவர்களால் நற்சாட்சி பெற்றவனுமாயிருக்கவேண்டும்." (1 தீமோத்தேயு 3:1-7)
தேவ வார்த்தைக்காகவும், சத்தியத்திற்காகவும் நிலைத்து நிற்கும் நபரையே ஊழிய வாரிசுகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாறாக, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள் என குடும்பத்தை ஒரு திரைப்படம் அல்லது தொடர் போலக் காட்சிப்படுத்துவது மிகவும் வேதனையான விஷயமாகும். சபையில் தேவன் மீது ஆர்வம் கொண்டு சிறந்த திறமையை வெளிப்படுத்தும் அநேக இளம் தேவ ஊழியர்களையும், அனுபவமடைந்து தேவ வார்த்தையைத் தெளிவாகப் போதிக்கும் திறமையுள்ளவர்களையும், இனிமையான குரலில் பாடுபவர்களையும், ஆவிக்குரிய இசைக்கருவிகளை வாசிப்பவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
அதைவிடுத்து, தங்கள் மகன்கள் மட்டுமே வார்த்தை போதிப்பார்கள், மகள்கள் மட்டுமே பாடல்கள் பாடுவார்கள், இசைக்கருவிகளை வாசிப்பார்கள் என்று நினைத்து மற்றவர்களை ஊக்குவிக்காமல் இருப்பது பட்சபாதமான செயலாகும்; அது சுவிசேஷப் பரவலும் ஆகாது. சபையிலுள்ள அனைவரையும் கிறிஸ்துவைப் பின்பற்றும் சீஷர்களாகவும் சீஷிகளாகவும் பயிற்றுவித்து, அவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளிய கிருபை வரங்களையும், திறமைகளையும் கண்டறிந்து, அந்தந்த ஊழியங்களில் சபையின் வளர்ச்சிக்காகவும், கர்த்தருடைய மகிமைக்காகவும் அவர்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் சிறந்த சுவிசேஷகர்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடையே குடும்பத்தைக் காட்சிப்படுத்துவதற்கு எங்கும் இடமிருக்கவில்லை. மேலும், இயேசு கிறிஸ்து ஓரிடத்தில் இருந்தபோது, "உம்முடைய தாயாரும் சகோதரரும் வந்திருக்கிறார்கள்" என்று சொன்னபோது, "என் தாயார் யார்? என் சகோதரர் யார்?" என்று கேட்டு, குடும்ப உறுப்பினர்களை விட பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முன்மாதிரியைக் காண்பித்தார்.
முடிவுரை:
ஆகையால் அன்பான சகோதர சகோதரிகளே, தேவ ஊழியர்களே, கிறிஸ்துவின் சபையே விழித்தெழுங்கள். தேவன் மீதும், அவருடைய வார்த்தையின் மீதும் வாஞ்சை கொண்டு ஜெபியுங்கள். சபை உலகப் பிரகாரமான காரியங்களில் மூழ்கிவிடாமல், ஜெபத்திற்கும், வேதவாசிப்பிற்கும் ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்கி, நம் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் தேவனுடைய கற்பனைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
"இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது." (உபாகமம் 6:6-9)
"அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்." (2 கொரிந்தியர் 10:5)
இறுதியாக, தேவ வார்த்தைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து, கிறிஸ்தவர்களுக்கும் அநீதி இழைக்கப்படும் ஏழை மக்களுக்கும் துணையாக நின்று, சபைப்போதகர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேவனுக்குச் சேர வேண்டிய மகிமையைத் தேவ ஊழியர்கள் திருடிக்கொள்ளாமல், அன்பும் சமாதானமும் நிறைந்த அரவணைப்போடு சபையை நடத்த வேண்டும். திருச்சபைகளைப் புண்ணிய ஸ்தலங்களாக மாற்றக்கூடாது. தனிப்பட்ட முறையில் தேவனோடு ஆழமான உறவையும், ஐக்கியத்தையும் கொண்டிருக்கும்படி சபையை ஊக்குவித்து, வேதத்தின்படியான வாழ்க்கையை வாழும் திசையில் அவர்களை வழிநடத்த வேண்டும். சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் சுவிசேஷகர்களை உருவாக்க வேண்டும்.
மோசே இஸ்ரவேலரை நடத்தினதுபோல பொறுமையோடும், தேவ ஞானத்தோடும் சிறந்த தலைவனைப் போலவும், எரேமியா தீர்க்கதரிசியைப் போல சபையின் வளர்ச்சிக்காகப் புலம்பியும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நடந்த பாதையில் நடந்தும்... சபையைக் குறித்துக் கர்த்தர் கொண்டிருக்கும் பாரத்தில் சிறு பகுதியையாவது தேவ ஊழியர்கள் தங்கள் தோள்களில் சுமந்து, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதற்குக் கர்த்தர் தமது விசேஷித்த கிருபையை அருளிப் பலப்படுத்துவாராக! ஆமென்.