நவம்பர் 2 கொண்டாடப்படும் கல்லறை திருநாள் சரியா? உத்தரிக்கிற ஸ்தலம் என்ற ஒன்றுண்டா?
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒரு காரியம். என்னுடைய சிறுவயதில் நான் சென்ற சபை ரோமன் கத்தோலிக்க மதத்தோடு தொடர்பில்லாமல் இருந்தாலும் இந்த காரியங்களில் பெரிய வேத அறிவு இல்லாமலே இருந்தார்கள். மரணத்திற்குப் பிறகு நான் நேராக பரலோகம் செல்லாமல் இடையில் தூய்மை பெறும் (Purgatory) இடத்தில் தங்கி விடுகிறோம் என்ற தவறான நம்பிக்கை ரோமன் கத்தோலிக்கர்களைப் போல நிறைய கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இந்த சிறிய ஆக்கத்தின் நோக்கம் உண்மையில் மரணத்திற்குப் பின்பு அப்படி ஒரு இடம் உண்டா என்பதை ஆராய்வதே.
அக்டோபர் 31 சீர்திருத்த நாள் கொண்டாடப்பட்டது. இது கி.பி. 1517 இல் மார்ட்டின் லூத்தர் தனது 95 அறிக்கைகளை (95 Theses) வெளியிட்டதை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நாள் புரோட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. நவம்பர் இரண்டாம் தேதி கொண்டாடப்படும் கல்லறை திருநாளுக்கு முன்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்த லூத்தர் இந்த செயலை செய்ததால் அன்று பெரும் சர்ச்சையும் விவாதமும் உண்டானது. அன்று அநேகருடைய கண்கள் திறக்கப்பட்டு ரோமன் கத்தோலிக்க மதத்தின் இந்த பாரம்பரியம் எந்த அளவிற்கு வேதத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக்காட்டியது.
இந்த ஆக்கத்தின் நோக்கம் யாரையும் குற்றப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ அல்ல. மாறாக மனிதன் இந்த உலகத்தில் மறைந்த பிறகு அவனுக்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி சுருக்கமாக அறிவிப்பதே. கிறிஸ்தவர்களாக நாம் இந்த விஷயத்தில் தெளிவோடு இருப்பது அவசியம். ஏனெனில் தவறான நம்பிக்கை இருக்கும்போது பரிசுத்தமாக வாழ்வதைப் பற்றியும், ஆண்டவருடைய நியாயத் தீர்ப்பைப் பற்றியும் தவறான புரிதலோடு வாழ்கிறோம். தேவன் படைத்த உலகத்தில் மனிதன் ஒரு முறை பிறக்கிறான். அவன் மரித்த உடனே தேவனுடன் பரலோகத்திற்கோ அல்லது தேவன் இல்லாத நரகத்திற்கோ சென்று விடுகிறான். அவன் இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்து வாழ வேண்டும். இது மட்டுமே அவனுக்கு கொடுக்கப்பட்ட கடமை. தேவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளுக்கும் இதுவே நிபந்தனை. இது மட்டுமே வேதம் விளக்குகின்ற காரியம். இதற்கு மேல் சொல்லப்படுகிற அனைத்தும் மனிதனின் எண்ண ஓட்டத்தில் உதித்ததே. அதற்கும் வேதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கல்லறை திருநாள் என்றால் என்ன?
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கையின்படி மரிக்கும் வேளையில் தேவனுடன் நட்புறவிலிருந்தும் பரலோகம் செல்ல தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து தூய்மை பெற்று முதிர்ச்சியடைய தேவனால் அளிக்கப்படும் வாய்ப்பு நிலையினை தூய்மை பெறும் நிலை அல்லது உத்தரிப்புநிலை அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்கின்றார்கள்.
இவர்கள் இந்த நிலையில் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள் எனவும், முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, பரலோகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர் நம்புகின்றனர். இத்தகையோருக்கு கத்தோலிக்கத் திருச்சபையினர், இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் என நம்புகின்றனர். நவம்பர் மாதம் முழுதும் இந்த நிலையில் இருப்போருக்காக கத்தோலிக்கர்கள் சிறப்பாக மன்றாடுகின்றனர். குறிப்பாக இறந்தபோன விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளன்று அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மன்றாடுவது வழக்கமாய் உள்ளது. மரித்த அவர்களை தேவன் ஏற்றுக் கொள்ளும்படியாக அவர்களுக்கு பதிலாக அநேக நற்காரியங்களை இங்கே செய்கிறார்கள்.
கல்லறை திருநாளை முதன்மையாக நிறுவியவர் கிளூனி மடத்தின் சன்யாசி புனித ஒடிலோ ஆவார். இவர் கி.பி. 998 ஆம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதியை இறந்த விசுவாசிகளுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாக அறிவித்தார். அவர் ஏன் இதை அறிவித்தார் என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் அதற்கு பல அர்த்தங்களை கொடுத்து பல காரியங்களை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதன் தாக்கமானது ரோமன் கத்தோலிக்க மதத்தையும் தாண்டி கிறிஸ்தவத்திலும் இருக்கிறது.
ஏன் இது கிறிஸ்தவத்திற்கு எதிரானது?
தேவன் கொடுத்த வேதத்தில் நம்முடைய இரட்சிப்புக்கு தேவையான அனைத்தும் மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும், அழகாகவும், விளக்கப்பட்டிருக்கிறது. நாம் கவனம் கொண்டு தாழ்மையுடனும் விசுவாசத்துடனும் வாசிக்கும்போது, தேவன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு விளங்கச் செய்கிறார். வேதம் மரணத்தைப் பற்றி சொல்லும் போது அது மனிதனுக்கு ஒரே தரம் தான் என்கிறது. மரித்த உடனே விசுவாசிகள் பரலோகத்துக்கு செல்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசியாத, தேவபயம் இல்லாத மனிதர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள். “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபிரெயர் 9:27) என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நம்புவது போல மரித்தவர்களுக்காக ஜெபிப்பதோ அல்லது மரித்தவர்களுக்காக நற்காரியங்கள் செய்வதோ தவறு. இந்த செயல் வேதத்திற்கு முரணானது.
வேதம் தெளிவாக விளக்குவது என்னவென்றால் ஒரு மனிதன் இந்த உலகத்தில் உயிரோடு வாழும் போதே பிதாவாகிய தேவன் இரட்சிப்பிற்காக ஏற்படுத்தியிருக்கும் ஒரே வழியாகிய கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, தன்னுடைய பாவத்தை அவரிடம் அறிக்கையிட்டு, பாவத்திலிருந்து மனம் திரும்பி தொடர்ச்சியாக பரிசுத்தத்தில் வளர்ந்து வாழ்வதாகும். இந்த காரியம் மனிதன் இந்த உலகத்தில் கண்ணை மூடுவதற்கு முன்பதாக நடைபெற வேண்டிய ஒன்று. நாம் மரித்த பிறகு உத்தரிக்கும் ஸ்தலத்தில் பரிசுத்தம் ஆகிக் கொள்ளலாம் என்று நினைப்பது முற்றிலும் தவறு. இது சாத்தான் ஏற்படுத்தி இருக்கும் கள்ளப் போதனை. இந்த தவறான போதனை நம்மை பரிசுத்தத்தின் பாதையில் தடுமாற செய்து பாவத்தோடு சமரசம் செய்ய வைக்கிறது. எனவே வேதத்தின் அடிப்படையில் இது முற்றிலும் தவறான செயல்.
முடிவாக என்ன செய்யலாம்?
மெய்யாகவே பரலோகம் சென்றடைய வேண்டும் என்ற உங்களின் நோக்கம் சரியானது. ஆனால் அதை சரியாக செய்கிறோமா என்பதே எனது கேள்வி. ஆரோனின் மகன்களும் இஸ்ரவேலின் ஆசாரியர்களுமான நாதாபும் அபியூவும் தங்கள் சொந்த தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, கர்த்தருக்கு முன்பாக அங்கீகரிக்கப்படாத நெருப்பையும் தூபத்தையும் செலுத்தினார்கள். தேவன் சொல்லியபடி அவர்கள் அந்த காரியத்தை செய்யாததால், தேவன் அவர்களை அங்கேயே அடித்தார்.
நீங்களும் நானும் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களாக இருப்பதால் வேதம் என்ன சொல்கிறதோ அதற்கு கீழ்ப்படிவது அவசியம். ரோமன் கத்தோலிக்க மதங்களோ அல்லது கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் இருந்து சொல்லுகிற பாரம்பரியங்களோ சடங்குகளோ அவை வேதத்திற்கு முரணாக இருக்கும்போது அதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
நாம் செய்கின்ற சடங்குகளும் நற்காரியங்களும் ஒருநாளும் நமக்கு இரட்சிப்பை பெற்று தராது. இந்த காரியங்கள் முதலில் நம்மை திருப்பிப் படுத்தாது. நான் எவ்வளவுதான் நற்காரியங்கள் செய்தாலும் அதற்கு முடிவு என்ற ஒன்று கிடையவே கிடையாது. அப்படி இருக்கும்போது தேவன் எதிர்பார்க்கிற முழுமையான நீதியை பரிசுத்தத்தை என்னால் எப்படி எண்ணிலிருந்து கொண்டுவர முடியும். இதற்காகவே நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம். நமக்காக அவர் சிலுவையில் தேவனுடைய கோபத்தை ஏற்றுக் கொண்டு பாவமாகி சாபமானார். இந்த உலகத்தில் வாழ்ந்த போது தேவன் எதிர்பார்க்கிற முழுமையான நீதியுள்ள வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அதன் மூலமாக தேவன் எதிர்பார்க்கிற முழுமையான நீதியை சம்பாதித்தார். அவரை விசுவாசிக்கிற நமக்கு அதை இலவசமாக தருகிறார். நாம் இறந்தவர்களுக்காக என்ன நன்மை செய்தாலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அது அவர்களை பரலோகம் கொண்டு சேர்க்காது.
அநேகர் இதை தவறு என்று தெரிந்தும் சடகாச்சாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உண்மையாகவே உங்களுக்கு அவர்கள் மீது அக்கறை இருந்தால் அவர்கள் இந்த உலகத்தில் வாழும் போதே இரட்சிப்பின் நற்செய்தியை அவர்களுக்கு சொல்லுங்கள். அந்த நற்செய்திக்கு கிழ்படியும்படி அவர்களை வற்புறுத்துங்கள். மரித்த பிறகு அவர்களுக்கு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.
தீமையான பாரம்பரியங்களை தவிர்த்து வேதம் மட்டுமே விளக்குகிற காரியங்களை விசுவாசத்தோடு செய்யப் பழகுங்கள். கர்த்தர் உங்களுக்கு இந்த காரியங்களில் மேலும் தெளிவான வேத அறிவை கொடுப்பராக... ஆமென்.