கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த உலகத்திலே அவரை மகிமைப்படுத்தி கனப்படுத்த வேண்டுமென்பதை, தங்களைக் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்கிற அனைவரும் குறைந்தபட்சம் பெயரளவிலாவது ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இதை எப்படிச் செய்ய வேண்டும், அவர் நம்மிடத்திலிருந்து எதை எதிர்ப்பார்க்கிறார் என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது ஏதோ ஒரு ‘சபையில்’ சேர்ந்து, அதனுடைய பல செயல்பாடுகளில் பங்குபெற்று அதை ஆதரிப்பது என்று. மற்றவர்கள் நினைக்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவரைப்பற்றி மற்றவர்களிடம் பேசி, ‘தங்களுடைய தனிப்பட்ட வேலையைக்’ கருத்தாய் செய்வது என்று. இன்னும் சிலர் இப்படிக் கற்பனை செய்து கொள்கிறார்கள், கிறிஸ்துவைக் கனப்படுத்துதல் என்பது அவருடைய வேலைக்காக இன்னும் கொஞ்சம் அதிகமான பணத்தை செலவிடுவது என்று. நாம் அவருக்கென்று பரிசுத்தமாய் வாழ்ந்து, அவருடைய வெளிப்படுத்தப்பட்டிருக்கிற சித்தத்துக்கு அடிபணிந்து நடப்பதின் மூலமே கிறிஸ்து கனப்படுத்தப்படுகிறார் என்பதை உண்மையில் வெகுச்சிலரே உணர்ந்திருக்கிறார்கள். ‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்’ (1சாமு 15:22) என்ற வார்த்தையை வெகுச்சிலரே உண்மையில் நம்புகிறார்கள்.
‘கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டு’ (கொலோ 2:6) நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்காவிட்டால் நாம் கிறிஸ்தவர்களே அல்ல. இந்த வாக்கியத்தை சிரத்தையுடன் சிந்தித்துப்பார்க்க உங்களை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். தங்களுடைய இருதயத்தில் மாற்றம்பெறாமல், சுயம் தங்களை முழுவதுமாக ஆண்டுக்கொண்டிருக்கும்பொழுது, கிறிஸ்துவின் ‘செய்து முடிக்கப்பட்ட பணியில்’ விசுவாசம் வைத்திருப்பதாக நினைக்கவைத்து சாத்தான் பலரை இன்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். தேவனுடைய வார்த்தையைக் கேளுங்கள்: ‘இரட்சிப்பு துன்மார்கருக்குத் தூரமாயிருக்கிறது; அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்’ (சங் 119:155). நீங்கள் உண்மையாகவே அவருடைய பிரமாணங்களைத் தேடுகிறீர்களா? அவர் என்ன கட்டளையிட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் சிரத்தையுடன் அவருடைய வார்த்தையைத் தேடுகிறீர்களா? ‘அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை’ (1யோவா 2:4). இதைவிட வெளிப்படையாக என்ன இருக்க முடியும்?
‘என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?’ (லூக் 6:46). கிறிஸ்து கேட்பது, நம்முடைய வாழ்க்கையில் கீழ்ப்படிதல், பிரகாசமான வெறும் வாயின் வார்த்தைகளல்ல. யாக்கோபு 1:22 என்ன ஒரு ஆராயவைத்து துக்கப்படவைக்கும் வார்த்தை! ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயுமிருங்கள்!’ வசனத்தைக் ‘கேட்பவர்களில்’ பலவகைகள் உண்டு, வழக்கமாகக் கேட்பவர்கள், நன்றியுணர்ச்சியுடன் கேட்பவர்கள், ஆர்வத்துடன் கேட்பவர்கள்; ஐயோ, அவர்கள் கேட்பது வாழ்க்கையிலே இணைக்கப்படவில்லை: அவர்களுடைய வாழ்க்கையை அது ஒழுங்குபடுத்தவில்லை. மேலும், வசனத்தின்படி நடக்காதவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள் என்று தேவன் சொல்கிறார்.
ஐயோ, அப்படிப்பட்ட எத்தனைப்பேர் இன்று கிறிஸ்தவ உலகில் இருக்கிறார்கள்! அவர்கள் மாய்மாலக்காரர்களல்ல, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள். கிருபையினாலேயே தாங்கள் இரட்சிக்கப்படுகிறோம் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ‘வேதத்தை ஒரு புதிய புத்தகமாக’ அவர்களுக்குக் காட்டும் ஒரு மனிதனுடைய ஊழியத்தில் பங்கெடுப்பதன் மூலம் அவர்கள் கிருபையில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வேதாகம அறிவு அதிகரித்திருப்பதால் அவர்கள் அதிகமாக ஆவியில் வளர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு தேவனுடைய மனிதனின் செய்தியைக் கேட்பதும் அல்லது அவருடைய படைப்புகளை வாசிப்பதும்தான் வார்த்தையை உண்ணுதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியல்ல! நாம் கேட்டதையும் வாசித்ததையும் தனிப்பட்ட விதத்திலே அப்பியாசப்படுத்தி, அசைபோட்டு அதன் உண்மையை வாழ்க்கையில் புரிந்துகொள்ளும்பொழுதுதான் நாம் வார்த்தையை உண்ணுகிறோம். எங்கே இருதயத்திலும் வாழ்க்கையிலும் தேவனுடைய வார்த்தைக்கு அதிகரிக்கும் ஒத்திசைவு இல்லையோ, அங்கே தேவனுடைய வார்த்தையைப்பற்றிய அதிகப்படியான அறிவு அதிகப்படியான ஆக்கினையையே கொண்டுவரும். ‘தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்’ (லூக் 12:47).
‘எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்’ (2தீமோ 3:7). இப்பொழுது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘அபாயகரமான காலத்திற்கு’ மிக முக்கியமான அடையாளங்களில் இதுவும் ஒன்று. மக்கள் இந்த போதகர் அந்த போதகர் என்று பலருக்கு செவிசாய்க்கிறார்கள், இந்த கூட்டம் அந்த கூட்டம் என்று பல கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள், வேதபுத்தகம் சம்பந்தபட்ட இந்த புத்தகம் அந்த புத்தகம் என்று பல புத்தகங்களை வாசிக்கிறார்கள், ஆனாலும் சத்தியத்தைக்குறித்த மிகமுக்கியமான செயல்ரீதியான அறிவைப்பெறுகிறதில்லை, அதனுடைய வல்லமையின் சுவடோ அல்லது ஆத்துமாவிற்கான எந்த பயனோ தென்படுகிறதுமில்லை. ஆவிக்குறிய வீக்கம் என்று ஒன்று இருக்கிறது, பலர் இன்று அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு அதிகமாக அவர்கள் கேட்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் அப்படியாகிறார்கள்: அவர்கள் பிரசங்கங்களைக் கேட்கிறார்கள், அதிக வாஞ்சையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தாமல், அவர்களுடைய அறிவைக்குறித்து பெருமைப்படுகிறார்கள். ‘தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமுமே’ (தீத்து 1:3) தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விசுவாசமாயிருக்கிறது, ஆனால் இதற்கு பெரும்பாலானவர்கள் அந்நியர்களாயிருக்கிறார்கள்.
தேவன் தம்முடைய வார்த்தையை நமக்குக் கொடுத்திருப்பது அவர் நம்மிடத்தில் சொல்ல நினைத்ததை சொல்வதற்கு மாத்திரமல்ல, நமக்கு உத்தரவு கொடுக்கவும் சேர்த்துதான்: நாம் என்ன செய்ய அவர் விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துவதற்காக. நமக்கு வேண்டிய முதற்காரியம் நம்முடைய கடமையைக்குறித்த தெளிவான அறிவு; தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் முதல் காரியம், நம்முடைய அறிவுக்கேற்றபடி அதை உண்மையுடன் செயல்படுத்துதல். ‘நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்’ (மல் 6:8). ‘காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே’ (பிர 12:13). ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்’ (யோவா 15:14) என்று இயேசு சொன்னபொழுது இதே காரியத்தை அவர் உறுதிபடுத்தினார்.
1. ஒரு தனிப்பட்ட மனிதன், வேதவாக்கியங்களின் மீது தேவனுடைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது; அவர் மாறாதவராகையால், அவர் எதிர்பார்ப்புகளும் மாறாதவை என்பதைக் கண்டுகொள்ளும்பொழுது ஆதாயம்பெறுகிறான்.
இக்காலத்தில் மனிதனிடம் தேவன் தன்னுடைய எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறாரென்று நினைப்பது ஒரு மிகப்பெரிய மோசமான தவறாகும். ஏனென்றால் அது முற்காலத்தில் தேவன் கொடுத்த கற்பனைகள் கடுமையானவைகள்போலும், நீதியற்றவைகளாக இருந்ததுபோலும் ஆகிவிடும். அப்படியல்ல! ‘நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் நீதியாயும், பரிசுத்தமாயும், நன்மையுமாயும் இருக்கிறது’ (ரோம 7:12). ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக’ (உப 6:5) என்பதே தேவனின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாயிருக்கிறது; மத்தேயு 22:37ல் இயேசு அதைத் திரும்பவும் எடுத்துரைக்கிறார். ‘ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறாமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்’ (1கொரி 16:22) என்று அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய கடிதத்தில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
2. தேவனுடைய எதிர்ப்பார்ப்புகளை பூர்த்திசெய்வதில் எப்படி தான் முழுமையாக பாவத்தில் தோல்வியடைந்திருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ளும்பொழுது ஒரு மனிதன் வேதத்திலிருந்து ஆதாயம் பெற்றுக்கொள்கிறான்.
கடந்த பத்தியில் நாம் பார்த்தபடி, தேவன் மனிதனிடம் கொண்டிருக்கும் மிக உயர்ந்த எதிர்பார்ப்பை அவன் கண்டுகொள்ளும்வரை, எந்த மனிதனும் தான் எப்பேர்ப்பட்ட பாவி என்பதைக் கண்டுகொள்ள முடியாது, தேவனின் தரத்துடன் ஒப்பிடும்பொழுது தான் எப்படி முடிவில்லாமல் விழுந்துபோயிருக்கிறான் என்ற செய்தியை பெரிதுபடுத்தும் மனிதனின் பயனுக்காக நாம் சிலவற்றை சுட்டிக்காட்டுவோம்! தேவன் மனுகுலத்திடமிருந்து எதிர்பார்க்கும் தன்னுடைய தரத்தை எந்த அளவிற்கு பிரசங்கியார்கள் குறைத்து போதிக்கிறார்களோ, அந்த அளவிற்கு தங்களுடைய பாவத்தைப்பற்றிக் குறைவான மற்றும் தவறான புரிந்துகொள்ளுதலையே அதைக் கேட்பவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள், மேலும் அந்த அளவிற்கு குறைவான அளவே சர்வ வல்லமையுள்ள இரட்சகரின் தேவையை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் ஒரு ஆத்துமா தன்மீதான தேவனின் உண்மையான எதிர்பார்ப்பை, எப்படி அவன் முழுமையாக தொடர்ச்சியாக அதை சந்திக்க தவறியிருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது, அவன் எப்படி ஒரு உதவியற்ற சூழ்நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்துகொள்கிறான். நற்செய்தியை கேட்க ஆயத்தமாயிருக்கிறவர்களுக்கு முன்னர் நியாயப்பிரமாணம் போதிக்கப்பட வேண்டும்.
3. தேவன் தன்னுடைய ஜனங்களிடமிருந்து தன்னுடைய சொந்த எதிர்பார்ப்பை தன்னுடைய அளவில்லாக் கிருபையின் மூலம் அவரே கொடுத்திருக்கிறார் என்று வேதவாக்கியங்களின் மூலம் போதிக்கப்படும்பொழுது ஒரு மனிதன் ஆதாயம்பெறுகிறான்.
இந்த பகுதியில் கூட, தற்காலத்து போதனைகள் மிகவும் மோசமாக பழுதடைந்ததாகவே இருக்கிறது. ‘அரை நற்செய்தி’ என்று சகஜமாக அழைக்கப்படக்கூடிய ஒன்று கொடுக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் நடைமுறையில் அது உண்மையான நற்செய்தியை மறுதலிப்பதாகும். ஒரு ஒப்புக்காக கிறிஸ்து உள்ளே எடுத்துவரப்படுகிறார். கிறிஸ்துவானவர் தேவனுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்துவிட்டாரென்பது ஆசீர்வதிக்கப்பட்ட உண்மை, ஆனாலும் இது உண்மையின் ஒரு பகுதியே. தேவனுடைய நீதியின் எதிர்பார்ப்புகளை கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்காக பூர்த்திசெய்துவிட்டார் என்பது மட்டுமல்ல, அவர்கள் தங்களை தனிப்பட்டவிதத்திலே திருப்திபடுத்திக்கொள்ளவும் அதை சம்பாதித்தார். மீட்பர் அவர்களுக்காக செய்த நற்காரிங்களை அவர்களில் ஏற்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியானவரையும் கிறிஸ்து அனுப்பியிருக்கிறார்.
மீட்கப்பட்டவர்கள், புதுபிக்கப்படுகிறார்கள் (மறுபிறப்பு) என்பது இரட்சிப்பின் விமரிசையான, மகிமையான அற்புதமாகும். ஒரு மாற்றம் அவர்களுக்குள்ளாக ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் ஒளியேற்றப்படுகிறது, அவர்களுடைய இருதயம் மாற்றமடைகிறது, அவர்களுடைய ஆசைகள் புதுபிக்கப்படுகிறது. அவர்கள் ‘கிறிஸ்துவுக்குள்ளாக புதுசிருஷ்டியாகிறார்கள்’ (2கொரி 5:17). இந்த அதிசயமான கிருபையை தேவன் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்: ‘என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்’ (எபி 8:10). இருதயமானது இப்பொழுது தேவனுடைய பிரமாணத்திற்கு செவிசாய்க்கிறது: ஒரு புதிய நடத்தை இருதயத்திற்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதனுடைய எதிபார்ப்புகளுக்கு இருதயம் பதிலளிக்கிறது; அதை நடப்பிக்க ஒரு உண்மையான விருப்பம் அங்கே இருக்கிறது. ஆகவேதான், ‘என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடம் சொல்லிற்று’ (சங் 27:8) என்று உயிர்பிக்கப்பட்ட ஆத்துமாவால் சொல்லமுடிகிறது.
தன்னை விசுவாசிக்கிறவர்களை நீதிமான்களாக்கும்படியாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தது மட்டுமல்லாமல், மாம்ச சிருஷ்டிகளை மாற்றம்பெறசெய்து, தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் பரிசுத்தமாகுதலுக்கு அவசியமான பரிசுத்த ஆவியானவரையும் அவர்களுக்காக அனுப்பியிருக்கிறார். கிறிஸ்து ‘அக்கிரமக்காரருக்காக’ மரித்திருந்தாலும் (ரோம 5:6), அவர்களை நீதிமான்களாக்கும்பொழுதுகூட அவர்களை பாவிகளாகப்பார்த்தாலும் (ரோம 4:5), அவர்களை அந்த அருவறுப்பான நிலையிலேயே விட்டுவிடுகிறதில்லை. அதற்குமாறாக, அக்கிரமத்தையும், உலக இச்சைகளையும் மறுதலிக்கும்படியாக தன்னுடைய ஆவியினாலே அவர்களுக்கு வல்லமையாய் போதிக்கிறார் (தீத்து 2:12). எப்படி ஒரு கல்லிலிருந்து அதன் எடையையோ அல்லது நெருப்பிலிருந்து வெப்பத்தையோ பிரிக்க முடியாதோ, அதைப்போல பரிசுத்தமாகுதலிருந்து நீதிமானாக்கப்படுத்தல் என்பதையும் பிரிக்கமுடியாது.
தேவன் ஒரு மனிதனின் பாவத்தை முழுமையாக மன்னித்து அவனுடைய மனசாட்சியில் உணர்த்தும்பொழுது, உன்னதமான கிருபையினால் அவனுடைய இருதயம் சுத்திகரிக்கப்படுகிறது, வாழ்க்கைத் திருத்தப்படுகிறது மற்றும் முழு மனிதனும் பரிசுத்தமாக்கப்படுகிறான். ‘கிறிஸ்து நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குறிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் (அக்கரையற்றவர்களாக அல்ல) நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்’ (தீத்து 2:14). எப்படி ஒரு பொருளும் அதன் பண்புகளும், காரணங்களும் அதன் விளைவுகளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதுபோல, இரட்சிக்கும் விசுவாசமும், தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்கிற மனநினைவும் ஒன்றையொன்று பிரியாது. ஆகவேதான் நாம் ‘விசுவாசத்திற்கு கீழ்ப்படிதலைக்’ (ரோம 16:25) குறித்து வாசிக்கிறோம்.
‘என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னில் அன்பாயிருக்கிறான்’ (யோவா 14:21) என்று இயேசு சொன்னார். பழைய ஏற்பாடானாலும் சரி, நற்செய்தி அல்லது நிரூபங்களானாலும் சரி, தன்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாத எவரையும் தன்னில் அன்புகூர்ந்தவர்களாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பு என்பது உணர்ச்சிகளுக்கு மேற்பட்டது; இது செயல்பாட்டின் தத்துவம், தேன்போன்ற இனிமையான வெளிப்படுத்துதல்களைவிட மேலாக தன்னை வெளிப்படுத்துகிறது, எடுத்துக்காட்டாக, தன்னுடைய செயல்கள் மூலமாகத்தான் நேசிப்பவரை மகிழ்விக்கிறது. ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூறுவதாம்’ (1யோவா 5:3). என்னுடைய வாசகரே! நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு, இன்னும் தேவனுக்கு முன்பாக கீழ்படிவதற்கு ஆழமான ஆசையோ, உண்மையான முயற்சியோ எடுக்காமல் இருப்பீர்கள் என்றால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்.
தேவனுக்கு கீழ்ப்படிதல் என்றால் என்ன? இயந்திரமையமாக சில கடமைகளைச் செய்வதிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. நான் கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருக்கலாம், அதனால் நான் சில நன்னடத்தைகளைப் பெற்றிருக்கலாம், ஆனாலும் நாம் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பதோ அல்லது திருடாமலிருப்பதோ, மூன்றாவது மற்றும் எட்டாவது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதல்ல. மறுபடியும், தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது அவருடைய ஜனங்களின் நடத்தையைவிட மேலானது. ஓய்வு நாளை கண்டிப்பாக ஆசரிக்கும் ஒரு குடும்பத்தில் நான் இருக்கலாம், அவர்களின் மேலுள்ள மரியாதையினாலோ அல்லது ஏழு நாட்களில் ஒரு நாள் ஓய்வு எடுப்பது நல்லது என்று நான் நினைப்பதினாலோ, அந்தநாளில் மற்ற தேவையில்லாத வேலைகளை நான் தவிர்க்கலாம், ஆனாலும் நான் நான்காம் கற்பனையைக் கைக்கொள்ளவில்லை! கீழ்ப்படிதல் என்பது வெளிப்பிரகாரமாக கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுமட்டுமல்ல, என்னுடைய சித்தத்தையே அதனுடைய அதிகாரத்திற்கு சரணடையச்செய்வதாகும். ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்பது தேவனுடைய தலைமைத்துவத்தை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதே: கட்டளையிடுவது அவருடைய உரிமை, அதற்கு பணிந்துபோதல் என்னுடைய கடமை. இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவின் நுகத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிதலாகும்.
தேவனுக்குத் தேவைப்படும் இந்தக் கீழ்ப்படிதலானது அவரை நேசிக்கும் இருதயத்திலிருந்து மட்டுமே புறப்பட முடியும். ‘நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்’ (கொலோ 3:24). தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் வரும் கீழ்ப்படிதலானது அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்பட்டது. தேவனிடத்திலிருந்து நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் வரும் கீழ்ப்படிதலானது சுயநலமானது, மாம்சத்துக்குறியது. ஆனால், ஆவிக்குறிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்படிதலானது உற்சாகத்துடன் கொடுக்கப்படுகிறது: தகுதியில்லாத நமக்கு தேவன் கொடுத்திருக்கும் அன்பிற்காகவும், மதிப்பிற்காகவும் நம்முடைய இருதயத்தின் நன்றியால் வரும் கீழ்ப்படிதலாகும்.
4. தேவனுக்கு கீழ்ப்படிவது நம்மேல் விழுந்த கடமை என்பதை பார்க்கும்பொழுது மட்டுமல்ல, அவருடைய கற்பனைகளின் மீதான வாஞ்சை நம்மில் திட்டமிடப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.
‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்பவன் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பவனே’ (சங் 1:2). மீண்டும் நாம் வாசிக்கிறோம், ‘கர்த்தருக்கு பயந்து, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங் 112:1). அவருடைய வாக்குத்தத்தங்களை நான் மதிக்குமளவிற்கு, அவருடைய கற்பனைகளை நான் மதிக்கிறேனா? அல்லது நான் மதியாமலிருக்கிறேனா? என்ற கேள்வியை உண்மையாகவே நம் இருதயம் எதிர்கொள்ளத்தக்க சோதனையை இந்த வசனம் நம்மில் ஏற்படுத்துகிறது. நிச்சயமாக, அவருடைய அன்பிலிருந்து தொடங்குகிற ஒருவன் அவருடைய கற்பனைகளை மதிக்கிறான். கிறிஸ்துவினுடைய சத்தத்திற்கு இருதயம் ஒத்துப்போதலே, எல்லா நடைமுறை பரிசுத்தத்துக்கும் அடித்தளமாகும்.
பின்வருவனவற்றை உன்னிப்பாக கவனிக்கும்படி, மீண்டுமாக நாங்கள் வாசிப்பவரை சிரத்தையுடனும் அன்புடனும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம். தான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிற எந்த மனிதனும், அவருடைய கற்பனைகளின் மீது உண்மையான அன்பு செலுத்தாவிட்டால், அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொண்டிருக்கிறான். ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’ (சங் 119:97) என்று சங்கீதக்காரன் சொல்லியிருக்கிறான். மறுபடியுமாக, ‘நான் பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்’ (சங் 119:127) என்கிறான். இது பழைய ஏற்பாட்டின் காலத்தில் என்று எவரேனும் பொருள்படுத்துவாரென்றால், நாங்கள் கேட்கிறோம், பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டு காலத்தைவிட, இன்றைய நாட்களில் மறுபிறப்படைவோரின் உள்ளத்தில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகிறார் என்று நீங்கள் தெரிவிக்கிறீர்களோ? ஆனால், புதிய ஏற்பாட்டு பரிசுத்தாவானும் கூட ‘உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்’ (ரோம 7:22) என்று பதிவு செய்திருக்கிறார். என்னுடைய வாசகரே, ‘தேவனுடைய கற்பனைகளில்’ உங்கள் இருதயம் பிரியமாயிருக்காவிட்டால், அடிப்படையிலேயே ஏதோ உங்களிடத்தில் தவறு இருக்கிறது; ஆம், நீங்கள் ஆவிக்குறிய மரணமடைந்திருக்கிறீர்கள், இது மிகவும் அச்சத்திற்குறியது.
5. தேவனுடைய எல்லா கற்பனைகளுக்கும் ஒருவனுடைய இருதயமும் சித்தமும் இணங்கும்பொழுது அவன் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறான்.
அரைகுறையான கீழ்ப்படிதல், கீழ்ப்படிதலே அல்ல. ஒரு பரிசுத்தமான சிந்தை தேவன் தடுக்கும் எந்த காரியத்தையும் மறுக்கிறது, எந்த விதிவிலக்குமின்றி, தேவன் கேட்கும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த தெரிந்தெடுக்கிறது. நம்முடைய மனது தேவனில் அவருடைய எல்லா கற்பனைகளுக்கும் கீழ்ப்படியாவிட்டால், தேவன் கட்டளையிடும் எதிலும் அவருடைய அதிகாரத்திற்கு நாம் கீழ்ப்படியவில்லை. நாம் நம்முடைய கடமையை முழுமையாகச் செய்யாமல், நாம் அவருடைய கற்பனைகளை விரும்புகிறோம் என்று நினைத்துக்கொண்டிருப்போமென்றால், நாம் மிகப்பெரும் தவறு செய்கிறோம். பரிசுத்தம் என்ற கொள்கையில்லா மனிதன் கூட, தவறான செயல்கள் தான் செய்வதற்கு உகந்ததல்ல, ஆனால் நற்செயல்கள் தான் செய்யத்தகுந்தவை என்று கருதுகிறான், அதனால் அவன் தவறான காரியங்களைச் செய்யாமல் நற்காரியங்களைச் செய்தாலும் அது அவனுடைய உள்ளத்திலிருந்து தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிதல் ஆகிவிடாது.
உண்மையான ஆவிக்குறிய கீழ்ப்படிதலென்பது முழுமையானது. புதிதாக்கப்பட்ட ஒரு இருதயம் தேவனுடைய கற்பனைகளிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பொருக்கிகொண்டிருக்காது: அப்படி செய்யும் மனிதன் தேவனுடைய சித்தத்தை செய்யவில்லை, தன்னுடைய சித்தத்தை செய்து கொண்டிருக்கிறான். நாம் எல்லா காரியங்களிலும் சிரத்தையுடன் தேவனை பிரியப்படுத்த விரும்பாவிட்டால், நாம் உண்மையாக எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பவில்லை என்ற இந்த கருத்தில் தவறு செய்துவிடாதிருங்கள். சுயம் வெறுக்கப்பட வேண்டும்; நாம் ஆசைப்படுகிற சில காரியங்களை மட்டுமல்ல, முழுசுயத்தையும்! பாவம் என்று அறிந்திருக்கும் எந்த ஒன்றையும் விருப்பத்துடன் நம்மில் அனுமதித்தல் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறுவதாகும் (யாக் 2:10,11). ‘நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுபோவதில்லை’ (சங் 119:6). இயேசு சொன்னார், ‘நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்’ (யோவா 15:14): நான் அவருடைய நண்பனாயிராவிட்டால், வேறு மாற்றுவழி இல்லாததால், நான் அவருடைய எதிராளியாகத்தான் இருக்க வேண்டும் (லூக் 19:27).
6. தேவனுடைய சித்தத்தை செய்யவைக்கும் கிருபைக்காக ஆத்துமா ஜெபம் பண்ணும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.
கிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பில், தேவனுடைய வார்த்தைக்கேற்ற கீழ்ப்படியும் சுபாவத்தைப் பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்துகிறார். இருதயம் தேவனால் வெற்றிக்கொள்ளப்படுகிறது. இப்பொழுது அவரைப் பிரியப்படுத்த ஒரு ஆழமான உண்மையான விருப்பம் இருக்கிறது. ஆனால் அந்த புதிய சுபாவத்திற்கு எந்த உள்ளான வல்லமையும் இல்லை, பழைய சுபாவம் அல்லது மாம்சம் அதற்கு எதிராகப் போரிடுகிறது, மேலும் சாத்தானும் எதிர்க்கிறான். ஆகவே ஒரு கிறிஸ்தவன் கதறுகிறான், ‘நன்மைசெய்ய வேண்டும் என்ற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, ஆனால் நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை’ (ரோம 7:18). தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்னர் இருந்ததுபோல, இது அவன் பாவத்திற்கு அடிமை என்பது பொருளல்ல; தன்னுடைய ஆவிக்குறிய வாஞ்சையை எப்படி முழுமையாக உண்மையாக்குவது என்பதை அவன் கண்டுகொள்ளாமலிருக்கிறான் என்பதே பொருளாகும். ஆகையால் ‘உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்’ (சங் 119:35) என்று அவன் ஜெபிக்கிறான். மீண்டுமாக, ‘உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்’ (சங் 119:133) என்றும் சொல்கிறான்.
அநேகமாக பலருடைய சிந்தையில் இப்பொழுது எழும்பியிருக்கும் கேள்விக்கு நாங்கள் பதிலுரைக்க விரும்புகிறோம்: இந்த வாழ்க்கையில் தேவன் நம்மிடத்தில் பரிபூரண கீழ்ப்படிதலை கேட்கிறார் என்று நீங்கள் உறுதிபட கூறுகிறீர்களோ? நாங்கள் பதிலுரைக்கிறோம், ஆமாம்! தேவன் அதைவிட குறைவான தரத்தை நம் முன்னால் வைக்கமாட்டார் (1பேது 1:15). அப்படியனால் உண்மையான கிறிஸ்தவன் அந்தத் தரத்திற்கு இருக்கிறானா? ஆம் மற்றும் இல்லை! ஆம், அவனுடைய இருதயத்தில், மேலும் அந்த இருதயத்தை தேவன் பார்க்கிறார் (1சாமு 16:7). ஒவ்வொரு மறுபிறப்படைந்த மனிதனும் தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய கற்பனைகளுக்கு உண்மையான அன்பைக் கொண்டிருக்கிறான், அவைகள் எல்லாவற்றையும் முழுமையாக கைக்கொள்ள அவன் உண்மையாக விரும்புகிறான். இந்தவகையில், இதில் மட்டும், கிறிஸ்தவன் செயல்முறையில் ‘பரிபூரணமாயிருக்கிறான்’. ‘பரிபூரணம்’ என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டிலும் (யோபு 1:1, சங் 37:37), புதிய ஏற்பாட்டிலும் (பிலி 3:15) ‘மாய்மாலம்’ என்ற வார்த்தைக்கு மாறாக ‘செம்மையானவன்’ மற்றும் ‘உத்தமன்’ என்கிற பொருள்படுகிறது.
‘கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்’ (சங் 10:17). பரிசுத்தவான்களுடைய ஆத்துமாவின் மொழியே அவர்களின் ‘விருப்பமாயிருக்கிறது’, அவர்களுக்குறிய வாக்குத்ததமானது, ‘அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின் படி செய்கிறார்’ (சங் 145:19). தேவனுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவின் சாயலுக்கு முழுவதுமாக ஒத்திருக்க வேண்டுமென்பதே கிறிஸ்தவனின் வாஞ்சையாயிருக்கிறது. அதே நேரத்தில், தேவனும் கிறிஸ்துவின் நிமித்தம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று முயலுகிற மனதை ஏற்றுக்கொள்கிறார் (1பேது 2:5). தேவன் நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்கிற தன்னுடைய பிள்ளையின் அந்த உண்மையான ஆழமான அன்பை அவர் பார்க்கிறார், மிகச்சரியான நடத்தைக்குப்பதிலாக உள்ளான ஏக்கத்தையும், விருப்பமான அவனுடைய முயற்சியையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் (2கொரி 8:12). ஆனால் தேவனை தங்கள் வாழ்க்கையின் எல்லாக் காரியங்களிலும் இருதயப்பூர்வமாக பிரியப்படுத்த விரும்புபவர்களின் ஆறுதலுக்காக இப்பொழுது சொல்லப்பட்டிருக்கும் இந்தக் காரியங்கள், விருப்பத்துடன் கீழ்ப்படியாமையில் வாழ்பவர்கள் தவறான சமாதானத்தைத் தேடிக்கொண்டு தங்கள் சொந்த அழிவுக்காக மாற்றிக்கொள்வதற்கு அல்ல.
என்னுடைய விருப்பங்களெல்லாம் மறுபடியும் பிறந்த ஆத்துமாவினுடையதென்று எனக்கு எப்படித் தெரியும்? என்று எவரேனும் கேட்டால், நாங்கள் சொல்கிறோம், இரட்சிப்புக்கேதுவான விசுவாசமானது (கிருபையானது) பரிசுத்த நடக்கைக்கேற்ற பழக்கவழக்கங்களையே உள்ளான இருதயத்தில் விளங்கப்பண்ணும். இதை வாசிப்பவரின் ‘விருப்பங்கள்’ இப்படியாக பரிசோதிக்கப்பட வேண்டும்: அவைகள் நிலையானதாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்கிறதா? அல்லது இப்பொழுதும் அப்பொழுதும் வருவதும் போவதுமாக இருக்கிறதா? நீங்கள் உண்மையாகவே ‘நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாகும் படிக்கும்’ (மத் 5:6), ‘தேவனை வாஞ்சித்து கதறும்படியும்’ (சங் 42:1) அவைகள் சிரத்தையாகவும் உண்மையாகவும் இருக்கிறதா? அவைகள் செயல்படுகிறவைகளாகவும், சாதிக்கிறவைகளாகவும் இருக்கிறதா? பலர் நரகத்திற்கு தப்பிக்கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை நிச்சயமாக நரகத்திற்கு எடுத்துச் செல்லக் காரணமான, ‘விரும்பி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தலை’, வெறுத்து அதைவிட்டு திரும்பும்படிக்கு அவர்களுடைய விருப்பங்கள் போதுமான அளவிற்கு வலிமையுள்ளதாக இல்லை. பலர் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் அவர்களை அங்கே எடுத்துச் செல்லும் அந்த ஒரே ‘குறுகலான வழியில்’ நுழையவோ, அதில் தொடரவோ அவர்களுக்கு விருப்பமில்லை. உண்மையான ஆவிக்குறிய ‘விருப்பங்கள்’ கிருபையை பயன்படுத்தி அதை அடையும்படிக்கு எந்த ஒரு வலியையும் பொறுத்துக்கொண்டு, தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள இலக்கை நோக்கி ஜெபத்துடன் தொடரும்.
7. கீழ்ப்படிதலின் வெகுமதியில் நாம் மகிழும்பொழுது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம். ‘தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’ (1தீமோ 4:8).
கீழ்ப்படிவதால் நாம் நம்முடைய ஆத்துமாவை சுத்தப்படுத்துகிறோம் (1பேது 1:22). கீழ்ப்படியாமை நம்முடைய ஜெபங்களுக்குத் தடையாயிருப்பதுபோல (ஏசா 59:2, எரே 5:25), கீழ்ப்படிதலினாலே நாம் தேவனுடைய பதிலைப் பெற்றுக்கொள்கிறோம் (1யோவா 3:22). கீழ்ப்படிதலினாலே நாம் ஆத்துமாவிற்கு விலைமதியா கிறிஸ்துவின் நெருங்கிய வெளிப்பாடுகளைப் (யோவா 14:21) பெற்றுக்கொள்கிறோம். தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படுத்தின அந்த ஞானத்தின் வழியிலே நாம் நடக்கும்பொழுது, ‘அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்’ (நீதி 3:17) என்பதை நாம் கண்டுக்கொள்ளுவோம். ‘அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல’ (1யோவா 5:3) மேலும் ‘அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு’ (சங் 19:11).