அந்நியபாஷை – ‘ஒருமை, பன்மை’
நாம் மேலும் தொடர்வதற்கு முன்னர் மற்றுமொரு அடிக் குறிப்பை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 1கொரி 14:2 மற்றும் 4ம் வசனங்களில், தமிழ் வேதாகமத்தில் ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையானது, ஜேம்ஸ் அரசர் மொழிபெயர்ப்பில் (King James Version – KJV), ‘Unknown tongue’ என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 5-ஆம் வசனத்தை கவனித்தீர்களா? அங்கே ‘அந்நியபாஷைகள்’ என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் KJV மொழிபெயர்ப்பில், 5-ஆம் வசனத்தில் ‘Unknown’ என்ற வார்த்தை இல்லாமல் ‘tongues’ என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்பொழுது மிக கவனமாக ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையை ஒருமையில் குறிப்பிட்டு அதற்கு முன்னர் ‘Unknown’ என்ற வார்த்தையை அவர்கள் சேர்த்துள்ளனர். பல முன்னணி வேதாகம ஆராய்ச்சியாளர்கள் நம்புவது என்னவென்றால், பவுல் ஒருமையில் ‘அந்நியபாஷை’ என்ற வார்த்தையை பயன்படுத்தும்போது அவர் கொரிந்தியர்களின் அர்த்தமற்ற உளறல்கள்களைக் குறிக்கிறார், ஏனென்றால், அவர்கள் எத்தனை விதங்களில் உளறினாலும், அவைகள் எல்லாம் ஒரே பாஷை, பொதுவாக, அவைகளெல்லாம் ‘உளறல்கள்’ அவ்வளவுதான். ஆனால் அவர் உண்மையான அந்நியபாஷைகளை குறிப்பிடும்போது அப்போஸ்தல நடபடிகளில் நாம் காண்கிறது போல அவைகள் உலகத்தில் உள்ள பாஷைகள், அதைக்கேட்ட மனிதர்களால் அந்த பாஷைகளை புரிந்துகொள்ள முடிந்தது. KJV வேதாகமத்தில் உள்ள இந்த ‘ஒருமை, பன்மை’ வித்தியாசத்தை நீங்கள் தமிழ் வேதாகமத்திலும் காணமுடியும். ஆகவே 1 முதல் 4 வசனங்களில் அவர் சொல்லுகிறார், நீங்கள் பேசும் இந்த உளறலான அந்நியபாஷை வரம் தவறானது. ஐந்தாம் வசனத்தில் உண்மையான அந்நியபாஷை வரம், முறையாக வியாக்கியானம் செய்யப்படும் பொழுது, அது சரியானது.
இப்போது பெரும்பாலான பரவச போதனையாளர்களும் பெந்தேகோஸ்தே விசுவாசிகளும், அந்நியபாஷை காரியத்தில், அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்திற்கும் 1கொரிந்தியர் 14ஆம் அதிகாரத்திற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த வித்தியாசத்திற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்: அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் பேசப்பட்ட அந்நியபாஷையானது உலகப்பிரகாரமான பாஷைகள் என்றும், 1கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பது ஒரு விசுவாசியின் தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்காக தேவனுடன் தனிப்பட்ட விதத்தில் பேசப்படும் பரவச அந்நியபாஷை என்றும் அதற்கு விளக்கம் அளிக்கிறார்கள். இரண்டு வேத பகுதிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை, அவை இரண்டுவிதமான அந்நியபாஷைகள் என்று சொல்லி தீர்வளிக்கிறார்கள்.
நானும் இரண்டு வேத பகுதிகளுக்கும் இடையில் அந்நியபாஷை விஷயத்தில் வித்தியாசத்தை காண்கிறேன், அந்த வித்தியாசத்திற்கு எப்படி தீர்வு அளிக்கிறேன் என்றால், அப். 2-ஆம் அதிகாரத்தில் உண்மையான அந்நியபாஷையின் வரம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1கொரி 14-ஆம் அதிகாரத்தில் அந்த வாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது, அதனால் 14ம் அதிகாரத்தில் இருப்பது வேறொரு அந்நியபாஷை வரம் அல்ல, மாறாக, சரியான அந்நியபாஷை வரம் புற ஜாதியினரின் போலியான பரவச பாஷையுடன் கலந்து தவறாக பயன்படுத்தப்பட்டது. வேத வாக்கியங்களில் எங்கும் இரண்டு வகையான அந்நியபாஷைகள், (1) உலக பாஷைகள் மற்றும் (2) பரவச பேச்சுகள் இருப்பதாக போதிக்கவில்லை. இதை ஏன் நாம் உறுதியாக கூறுகிறோம் என்றால் அந்த வரத்தைக் குறிக்க, அப் 2-ஆம் அதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தையே 1கொரி 14-ஆம் அதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் காணப்படும் அந்நியபாஷை வெவ்வேறானவை என்றால் அதை குறிக்க இரண்டுவிதமான கிரேக்க வார்த்தைகளை தேவன் பயன்படுத்தியிருப்பார், ஆனால், அங்கு அப்படி இல்லை. பாஷை என்பதை குறிக்கும் சாதாரண கிரேக்க வார்த்தையே இரண்டு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே சுயநலமாக பயன்படுத்தப்படும் பரவச உளறல் பேச்சை ஏதோ ஒரு புதிய சிறப்பு வரம் என்று நியாயப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.
கொரிந்து சபையும் ஆவியின் வரங்களும்
நான் இப்படியாக சொல்ல விரும்புகிறேன். உலகப்பிரகாரமான, பிரிந்து கிடக்கும், தனித்தனி யோசனை கொண்ட, மாம்சீக, பொறாமை மிகுந்த, சுயத்தில் திருப்தியடைந்த, சண்டை போடும், வாக்குவாதம் செய்யும், பெருமை கொண்ட, தற்பெருமை பிடித்த, நன்நெறி கெட்ட, பாவத்துடன் ஒத்து வாழும், ஒருவரை ஒருவர் ஏமாற்றும், விபச்சாரம் செய்யும், திருமணத்தை அசுசி செய்யும், தீமையை இச்சிக்கும், விக்கிரக வணக்கம் கொண்ட, பிசாசுகளுடன் ஐக்கியம் கொள்ளும், கீழ்படியாத, போஜன பிரியாராய் இருக்கும், குடித்து வெறிக்கும், ஏழைகளை அவமானப்படுத்தும், கர்த்தருடைய பந்தியை அசட்டை பண்ணும், மாய்மாலமான ஒரு கூட்ட கிறிஸ்தவர்களிடத்தில் உண்மையான பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் செயல்படும் என்றா நினைக்கிறீர்கள்? இதற்கான பதில் மிகத் தெளிவானது! இதுபோன்ற கிறிஸ்தவர்களிடம் உண்மையான ஆவிக்குரிய வரங்கள் செயல்படும் என்று யாராவது சொன்னால் அது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒவ்வொரு கற்பனையையும் மீறுவதாக அமையும். ஒரு விசுவாசி ஒன்று மாம்சத்தில் நடக்கிறார் அல்லது ஆவியில் நடக்கிறார். கொரிந்தியக் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்தார்கள் என்று விவாதம் எல்லாம் செய்யவேண்டியதில்லை; உறுதியாக அவர்கள் மாம்சத்தில் நடந்தார்கள். இப்படி சொல்வதற்கு உங்களுக்கு பிரச்சனை இருக்குமென்றால், இந்த நிருபத்தில் எந்த ஒரு அதிகாரத்தை வேண்டுமானாலும் வாசித்துப் பாருங்கள். நீங்கள் மாம்சத்தில் நடக்கும் போது, எந்த ஒரு உண்மையான ஆவிக்குரிய வரத்தையும், பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் சரியாக செயல்படுத்த முடியாது. அப்படி நடந்தால் அது விசித்திரமானது, அப்படி நடக்க முடியாது.
இப்போது நீங்கள் பதிநான்காம் அதிகாரத்திற்கு வருகிறீர்கள், இங்கே நீங்கள் காண்பது உண்மையான ஆவிக்குரிய வரம் என்று முடிவு செய்து விடக்கூடாது, இல்லாவிட்டால் ஆவிக்குரிய வரங்கள் செயல்படும் அடிப்படை விதிகளையே நீங்கள் மீறுவீர்கள். எல்லாமே தவறாக இருந்த கொரிந்திய திருச்சபையில், அந்நியபாஷையும் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. எப்படி முதல் 13 அதிகாரங்களில் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்ய சொன்னாரோ, அதையேதான் 14-ஆம் அதிகாரத்திலும் அவர் செய்து கொண்டிருக்கிறார். அங்கே மிக மோசமான கூச்சலும் குழப்பமும் நிலவியதால் அதை சரி செய்ய வேண்டும் என்று பவுல் நினைக்கிறார். சுயநலமான போலியான புறஜாதி மக்களின் பரவச பேச்சுக்கள் ஏதோ பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் பேசப்படும் உண்மையான அந்நியபாஷை வரம்போல் அங்கு நியாயப் படுத்தப் பட்டது.
உண்மையான அந்நியபாஷை வரத்தை கொண்டவர்களும் அதை தவறாக பயன்படுத்தினார்கள், தங்களுடைய சொந்த வழியில் பேசிக்கொண்டிருந்தார்கள், அந்த குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்கள் சபையில் இல்லாதபோதும் அந்த வரத்தை பயன்படுத்தினார்கள், மிகவும் ஆவியில் நிறைந்தவர்கள் போல தங்களை உயர்த்தி காட்டிக்கொள்ள அந்த வரத்தை பயன்படுத்தினார்கள். கொரிந்து திருச்சபையில் இருந்த விசுவாசிகளுக்கிடையில் ஏதாவது ஒன்று பொதுவாக இருக்குமென்றால் அது உலக வழக்கங்கள் அனைத்திலும் அவர்கள் மூழ்கிப் போயிருந்தார்கள்; அதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒட்டுமொத்த உலக வழக்கமும் திருச்சபைக்குள் வந்துவிட்ட பிறகு, புற ஜாதி சமய வழக்கங்கள் மட்டும் ஏன் திருச்சபையை விட்டு வெளியே இருக்க வேண்டும்?
கொரிந்திய நிருபத்தில் அந்நியபாஷை – உண்மையும், யூகங்களும்
அப்போஸ்தலர்களின் காலகட்டத்தில் உண்மையான அந்நியபாஷை வரம் என்ற ஒன்று இருந்தது. ஆம், அந்நியபாஷை வரம் உண்மையானதே. 1கொரி 13: 8-12 வரை நாம் பார்க்கிறபடி அந்த வரம் திருச்சபையை விட்டு மறைந்து போயிற்று. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த வரம் நம் திருச்சபையில் செயல்பாட்டில் இல்லாததால், இதை குறித்த எல்லா விவரங்களையும் மீண்டும் சரியாக அறிந்துகொள்வது மிகவும் கடினமானது. அந்நியபாஷை வரத்தை குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்த ஜான் மெக் ஆர்தர் (John MacArthur) அவர்கள் சொல்கிறார், ‘இதைக் குறித்து கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்திருக்கிறேன், ஆனால் அவற்றில் இரண்டு புத்தகங்கள் கூட எல்லா விஷயங்களிலும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை’ என்கிறார்.
இந்த அதிகாரத்தில் மிகச் சில இடங்களில் நாம் நம் யூகத்தை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எல்லா இடங்களிலும் நாம் அப்படி செய்ய வேண்டியதில்லை, ஆனால் வெகு சில பகுதிகளில் நமக்கு போதுமான விவரங்கள் கிடைக்கவில்லை. ஒன்று நமக்கு நன்றாக தெரியும்: கொரிந்தியர்கள் மாம்சீகமானவர்கள். நாம் அறிந்திருக்கிற மற்றொரு காரியம், அவர்கள் கலாச்சாரத்தில் காணப்பட்ட பரவச பேச்சுக்களை சபைக்குள் நுழைய அனுமதித்திருந்தார்கள். நாம் உறுதியாக அறிந்த மற்றுமொரு காரியம்: அந்நியபாஷை வரம் என்பது அப் 2-ஆம் அதிகாரத்தில் நாம் காண்பது போல ஒரு நபர், தான் முன் அறிந்திராத மொழியை பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் பேசுவதாகும், அது பேசுபவருக்கு புரியாத மொழி, ஆனால் அதைக் கேட்பவருக்கு புரியும், கொரிந்தியர்கள் இந்த வரத்தை இப்படி பயன்படுத்தவில்லை. மேற்சொன்ன விவரங்கள் யாவும் நாம் உறுதியாக அறிந்த ஒன்று.
இப்போது நாம் திருச்சபையில் அந்நியபாஷை வரத்தின் முக்கியத்துவத்தை குறித்து பார்த்து வருகிறோம், மேலும் தீர்க்கதரிசன வரத்துடன் ஒப்பிடுகையில் அந்நியபாஷை வரம் இரண்டாம்பட்சமே என்பதையும் பார்த்தோம். இப்போது இன்னும் ஒரு சிறிய குறிப்பை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 11 முதல் 14 அதிகாரங்கள் முழுமையும் கொரிந்து மக்கள் ஒரு சபையாக கூடி வரும்போது செய்ய வேண்டியவைகளைப் பற்றி கூறுகின்றன. இந்த அதிகாரங்களில் எந்த ஒரு பகுதியும் தேவனுடனான ஒரு தனிப்பட்ட உறவு குறித்தோ அல்லது தனிப்பட்ட நேரம் செலவிடுவது குறித்தோ பேசவில்லை; இவையெல்லாம் ஒரு சபையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து பேசுகிறது. பதினொன்றாம் அதிகாரம், பெண்கள் எப்படி திருச்சபையில் நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், மேலும் கர்த்தருடைய பந்தியை எப்படி அனுசரிக்க வேண்டும் என்றும், அன்பின் விருந்தை அவர்கள் எப்படி கைக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் பேசுகிறது. அவர்கள் கூடி வரும்போது எப்படி ஆவியின் வரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து 12-ஆம் அதிகாரமும், தங்களுக்குள் எப்படி அன்பை செயல்படுத்த வேண்டும் என்பதை 13-ஆம் அதிகாரமும் குறிப்பிடுகின்றன; 14-ஆம் அதிகாரத்தில் அவர்கள் சபையாக கூடியபோது அந்நியபாஷை வரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கிறோம். இவை அனைத்தும் ஒரு திருச்சபையாக அவர்கள் செய்ய வேண்டியவைகளை குறித்து பேசுகின்றன. ஆனால் பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் இந்த பகுதிக்கு விளக்கம் கொடுக்கும்பொழுது இந்த பகுதியில் உள்ள அந்நியபாஷையானது தேவனுடன் தனிப்பட்ட விதத்தில் பேசுவதற்கு, ஜெபம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பாஷை என்று விளக்கம் கொடுக்கிறார்கள். இது முற்றிலும் இந்த வேத பகுதியின் பின்னனியத்திற்கு பொருந்தாத விளக்கமாகும்.
அர்த்தமுள்ள வார்த்தைகளே பயனுள்ளது
அந்நியபாஷை வரம் இரண்டாம்பட்சம் என்பதற்கு மற்றுமொரு காரணம், அது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதது. வச 6. “மேலும், சகோதரரே”, இப்போது ‘அந்நியபாஷை’ என்ற சொல் ஒருமையா, பன்மையா என்பதை வைத்துப் பார்க்கும்போது, இங்கே அவர் சந்தேகத்திற்கிடமின்றி உண்மையான அந்நியபாஷை வரத்தை குறித்து பேசுகிறார். “மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து ….. அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?” வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், ‘அப்போஸ்தலனாகிய பவுலாகிய நானும், என்னுடைய எல்லா தெய்வ பக்தியுடனும், அறிவுடனும், உங்களிடத்தில் வந்து உண்மையான அந்நியபாஷைகளில் பேசினால், அதினால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் கிரேக்கத்தில் பேசுகிறீர்கள், நான் உங்கள் மொழியில் பேசாவிட்டால் என்னாலே உங்களுக்கு என்ன பிரயோஜனம்?’
மேலும் அவர் சொல்லுகிறார், நான் உங்களிடத்தில் வந்து, “உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லவில்லையென்றால், அதனால் உங்களுக்கு எந்த அர்த்தமும், எந்த பயனும் இல்லை”. அதனால்தான் அவர் சொல்லுகிறார், யார் பேசினாலும் அதைக் கேட்பவர்களுக்கு புரிய வேண்டும், அவர்கள் எல்லோரும் கிரேக்க மொழியைப் பேசுகிறார்கள், அங்கே வந்து அவர்களுக்கு புரியாத வேறு ஒரு உலக மொழியில் பேசினால், அதனால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
இசைக்கருவிகளுடன் ஒப்பீடு
ஏழாம் வசனத்தில் இந்தக் கருத்தை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார், “அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?” புல்லாங்குழலும், சுரமண்டலமும் அக்காலகட்டத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளாகும். அவைகள் வீட்டு விசேஷங்களிலும், மரித்தவர்களுடைய வீடுகளிலும், சமய வழிபாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன, ஆகவே பவுல் இங்கே என்ன சொல்ல வருகிறார் என்று கொரிந்தியர்கள் புரிந்து கொண்டார்கள்.
ஏழாம் வசனத்தில் கவனித்தீர்களானால் “உயிரில்லாத வாத்தியங்கள்” – ஆவியற்ற, அசைவற்ற, உயிரற்ற வாத்தியங்கள் என்று அவர் சொல்கிறார்; இனிமையான இசைக்காக அறியப்பட்ட இந்த வாத்தியங்கள், சந்தோஷ மற்றும் துக்க உணர்வுகளுக்கிடையில் தொனியில் வித்தியாசம் காட்டுகின்றன. இந்த வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால் அவைகளின் இசையால் எந்த பயனும் இல்லை.
சரி, இந்த உதாரணத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? அதன் அர்த்தம், ஒருவர் பேசும்போது அந்தப் பேச்சு ஒரு புரியும்படியான அர்த்தத்தை கொண்டிருக்கவில்லை என்றால் அது பயனற்றது, அதனால் நீங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி பெற முடியாது. அதை எந்த வகையில் நீங்கள் செய்தாலும் அது பயனற்றது. ஒருவேளை நீங்கள் உண்மையான அந்நியபாஷை வரத்தை பயன்படுத்தினாலும், அதைக் கேட்பவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது பயனற்றது, மேலும் பரவச உளறல் பேச்சுக்கள் எப்பொழுதுமே பயனற்றது.
எட்டாம் வசனத்தில், “அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?” இப்போது எல்லோரும் யுத்ததிற்கு ஆயத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்; எக்காளம் ஊத வேண்டிய மனிதன் அவன் விரும்பிய ஏதோ அர்த்தமற்ற தொனியை ஊதுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்; இப்போது போர் வீரர்கள் மத்தியில் ஒரு குழப்பம், அவர்கள் படுக்கையிலிருந்து எழ வேண்டுமா, அல்லது படுக்கைக்கு செல்ல வேண்டுமா, அல்லது தங்கள் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டுமா, அல்லது என்ன செய்ய வேண்டும்? எக்காள தொனி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது அதன் சத்தத்தில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பது வெளிப்படை. எல்லா இசைக்கருவிகளிலும், ராணுவ எக்காளமானது தெளிவான மற்றும் உரத்த சத்தம் எழுப்பக் கூடியது; ஆனால் அர்த்தமுள்ள சத்தத்தை அது ஏற்படுத்தவில்லை என்றால் எந்த ராணுவ வீரனும் போருக்கு ஆயத்தமாக முடியாது.
ஒன்பதாம் வசனத்தில் மற்றும் ஒரு உதாரணத்திற்கு அவர் செல்கிறார்: “அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே”. இங்கே கவனிக்கிறீர்களா? பரவச உளறல் பேச்சுகளுக்கு எப்பொழுதுமே எந்த முக்கியத்துவமும் இருந்ததில்லை, ஏனென்றால் எந்தக் காலத்திலும் அது யாருக்கும் புரிந்ததில்லை! அப்போஸ்தலர்களின் காலத்தில் அந்த குறிப்பிட்ட மொழியை பேசும் அல்லது புரிந்து கொள்ளும் யாராவது ஒருவர் அந்த இடத்தில் இருந்த போது மட்டுமே உண்மையான அந்நியபாஷை வரம் பயன்படுத்தப்பட்டது. அது விசுவாசிகளின் சபையாக இருந்தால் மற்றவர்களும் ஆவிக்குரிய வளர்ச்சி அடையும்படி பேசப்பட்ட அந்நியபாஷையானது, அனைவருக்கும் புரியும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அது எல்லோருக்கும் புரியும்படியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் ஆகாயத்தில் பேசுபவர்கள் போல் இருப்பீர்கள்.
பவுல் இங்கே உண்மையில் ஏளனத்துடன் கிண்டலடிக்கும் விதமாக கொரிந்தியர்களுடன் பேசுகிறார்: அர்த்தமில்லாத ஒலி எழுப்பும் இசை வாத்தியங்கள் பயனற்றது, புரிந்துகொள்ளமுடியாத ஒலி எழுப்பும் ராணுவ எக்காலத்தின் மூலம் ராணுவ வீரர்கள் எந்த உத்தரவையும் பெற்றுக் கொள்ள முடியாது. மேலும் அவர் சொல்கிறார், ‘இதுதான் கொரிந்து சபையில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது: ஒட்டுமொத்த கூச்சல் குழப்பம் அங்கு நிலவுகிறது’. ஆவியின் வரங்கள் எல்லாம் இரட்சிக்கப்படாதவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கவும், தேவனுடைய சத்தியத்தை அவருடைய பிள்ளைகளுக்கு போதிக்கவும் அல்லது இவ்விரண்டையும் செய்பவர்களுக்கு அங்கீகாரத்தை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பதை கொரிந்திய விசுவாசிகளை புரிந்துகொள்ள வைக்க பவுல் முயற்சி செய்கிறார்; மேலும் இவைகள் அனைத்தும் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வார்த்தைகளைப் பேசினால் மட்டுமே செய்ய முடியும்.
உலக பாஷைகள்
இப்போது பொறுமையுடன், சிறந்த உதாரணங்களை கொண்டு, சற்று குத்திக்காட்டி, அவர்களுடைய அறியாமை, உணர்ச்சிப்பூர்வ மூட நம்பிக்கையை உடைக்க முற்படுகிறார். ஆகவே தன்னுடைய உதாரணத்தை அவர் தொடர்கிறார் (வச 10): “உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல”. இந்த வசனத்தில் உள்ள ‘பாஷைகள்’ என்ற வார்த்தையானது, ஆங்கில (KJV) வேதாகமத்தில் ‘Voices’ (சத்தங்கள்) என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அதே கருத்தை ஆணித்தரமாக கூறுகிறார். இது ஒரு விவசாயி மிகக்கடினமான நிலத்தை மீண்டும் மீண்டும் உழுவது போன்றதாகும். என்றோ ஒருநாள் இந்த நிலத்தை வெற்றிகரமாக உழுவேன் என்ற நம்பிக்கையுடன், ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
‘உலகில் மூவாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கின்றன’. இந்த பலதரப்பட்ட மொழிகள் தங்களுக்கே உரிய ஒலிப்பு முறைகளைக் கொண்டுள்ளன. இந்த உதாரணத்தில் சத்தங்கள் என்பதற்கு பயன் படுத்தப்பட்டுள்ளன கிரேக்க வார்த்தையும் முந்தைய உதாரணத்தில் (வச 7) இசைக்கருவிகள் ஏற்படுத்தும் சத்தங்கள் என்ற வார்த்தைக்கும் ஒரே கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ‘சத்தங்கள்’ என்பதை குறிக்க பயன்படும் மிகப் பொதுவான வார்த்தை. அவர் சொல்ல வருவது இதுதான், உலகில் பலதரப்பட்ட மொழிகள் பல்வேறு வகையான சத்தங்களை கொண்டு இருக்கின்றன, ஆனால் ‘அவைகள் ஒன்றும் அர்த்தம் இல்லாதவைகள் அல்ல’. அந்த சத்தங்களை, மொழிகளுக்கு ஒப்பிடுகிறார்.
பதினொன்றாம் வசனத்தில் அவர் சொல்கிறார், “ஆயினும், பாஷையின் (சத்தத்தின்) கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்”. நான் புரிந்து கொள்ளாத பாஷையில் நீங்கள் என்னிடம் பேசினால், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத இரு அந்நியர்கள் பேசிகொள்வதைப் போன்றதாகும். இங்கே அவர் அழுத்தம் திருத்தமாக சொல்ல வருகிற செய்தி என்னவென்றால், அது ஒருவருக்கும் புரியாத பரவச உளறல் பேச்சாக இருந்தாலும் சரி, வியாக்கியானம் செய்யப்படாத (புரியாத) உலக மொழியாக இருந்தாலும் சரி, அது யாருக்கும் புரியாததால் அதை பேசுவதால் திருச்சபையில் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதாகும். நேர்த்தியாக வாசிக்கப்பட்ட இசைக் கருவிகள் ஆனாலும் சரி, முறையாக பேசப்பட்ட உலக மொழியாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் உண்டு, ஆனால் சபையில் நீங்கள் அந்நியபாஷைக்கு (பரவச உளறல்/வியாக்கியானம் செய்யப்படாத உலக பாஷை) எந்த அர்த்தமும் இல்லை என்பதாகும்.
இதுபோன்ற கூச்சல் குழப்பத்தினால் எந்த ஒரு ஆவிக்குரிய ஊழியத்தையும் செய்ய முடியாது. இப்போது அவிசுவாசிகள் உள்ளே வந்து நீங்கள் செய்யும் கூத்தை பார்த்து, இதென்ன இவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வார்கள் (வச 23). வேறொரு வகையில் சொல்லவேண்டுமென்றால், இவர்களுக்கும் கிரேக்க தெய்வமாகிய தியானால்-ஐ (Diana) வழிபடுபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் சொல்வார்கள். புறஜாதி சமயத்தாரின் கோயில்களில் அவர்கள் எப்படி உளருகிறார்களோ, அதே போன்று தான் இவர்களும் உளறுகிறார்கள், ஆகவே கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கும், தியானாலின் ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
அந்நியபாஷையை வியாக்கியானம் செய்தல்
பன்னிரண்டாம் வசனத்தில், “நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்”. நீங்கள் ஆவிக்குரிய வரங்களுக்காக வைராக்கியம் கொண்டிருக்கிறீர்கள், ஆவிக்குரிய வரங்களை நாடுகிறீர்கள், பரிசுத்த ஆவியானவரின் செயல்களை விரும்புகிறீர்கள். இவைகள் உண்மையானால், சபையின் உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யும் செயல்பாடுகளை நாடுங்கள் என்று சொல்லுகிறார்.
அந்நியபாஷை இரண்டாம்பட்சமே என்பதற்கு மற்றுமொரு காரணம், அது மனதையும், அறிவையும் கொள்ளாமல் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. பதிமூன்றாம் வசனத்தில் இதைத்தான் அவர் சுட்டிக்காட்டுகிறார். “அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன்” - ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே உளறல் பேச்சைக் குறிக்கிறார் – “அந்த உளறலின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்”. இது புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான வசனமும் கூட.
இங்கே பவுல் என்ன சொல்லுகிறார்? ஏற்கனவே நாம் பார்த்தபடி, ஏதோ பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் உண்மையான தேவனுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் தங்கள் புறஜாதி தேவர்களுடன் தனிப்பட்ட விதத்தில் உளறல் பேச்சுக்கள் மூலம் தொடர்புக் கொண்டிருந்தார்கள். பரவச உளறல் பேச்சுக்கள் மூலம் ஜெபம் செய்வது என்பது இந்த வரத்தின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை; அப்படி செய்வது எப்பொழுதுமே தவறு. பவுல் சொல்லுகிறார், ‘உளறல் பேச்சு மூலமாக ஜெபம் செய்யும் நீங்கள், அதன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம்பண்ணுங்கள், அதை வியாக்கியானம் பண்ணும் வரத்துக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்’. இங்கே அவர்களைக் கிண்டல் செய்யும் விதமாக பேசுகிறார், உளறல் பேச்சு மூலமாக ஜெபிக்கிறவர்களே, மற்றவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அதன் அர்த்தத்தையும் கேட்டு, ஏன் நீங்கள் ஜெபிக்க கூடாது? என்கிறார்.
ஒருவேளை நீங்கள் இந்த வசனத்தை வியாக்கியானம் செய்யும் விதம் சற்று அதிகப்படியாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் கொரிந்திய நிருபத்தை கவனமாக வாசித்தால் இதுபோன்ற கேலிக் கிண்டல்களை பல இடங்களில் பவுல் பயன்படுத்துவதை நீங்கள் காணமுடியும். சரி, இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு பிரச்சனை இருக்கும் என்றால் இதை வேறொரு வகையிலும் விளக்கலாம். மற்றொரு விளக்கம் இதுதான்: ‘அந்நியபாஷையில் ஜெபிக்கிறவன், அதை வியாக்கியானம் செய்யும் வரத்தையும் பெற்றுக்கொள்ள தக்கதாக ஜெபிக்கக்கடவன்’. இந்த வகையில் நாம் அர்த்தம் கொள்ள வேண்டுமென்றால், ‘நாம் நமக்கு வேண்டிய வரங்களை ஜெபித்து பெற்றுக்கொள்ளமுடியும்’, அப்படித்தானே? வியாக்கியானம் செய்யும் வரமோ அல்லது வேறு எந்த வரமும் வேண்டும் என்றால் நாம் அதற்காக ஜெபிக்க வேண்டும். சரியா? வேதத்தின்படி அது உண்மையா?
1கொரி 12:11 சொல்லுகிறது, “இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் (வரங்களைப்) பகிர்ந்து கொடுக்கிறார்”. மேலும் 12:30 சொல்கிறது, “எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?” அதன் பதில், இல்லவே இல்லை, என்பதாகும். நீங்கள் எந்த ஒரு வரத்தையும் ஜெபித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தேவன் ஒருபோதும் சொன்னதில்லை அல்லது நீங்கள் விரும்பும் எந்த வரத்தையும் நாடி பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னதில்லை. ஆகவே, 13-ஆம் வசனத்தில் உள்ளபடி, நாம் ஜெபித்து வியாக்கியானம் செய்யும் வரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்கம் கொடுப்பது தவறானது. அங்கே பவுல் அவர்களை கிண்டல் செய்யும் வண்ணமாகவே அப்படி சொல்லுகிறார்.
இங்கே மற்றுமொரு காரணத்தை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். வசனம் 14:28-ஐ கவனியுங்கள்: “அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல்”. ஒருவன் உண்மையான அந்நியபாஷையின் வரத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் கூட, அவர்கள் நடுவில் உள்ள புறஜாதியானும் புரிந்து கொள்ளும் விதமாக, வியாக்கியானம் செய்கிறவன் இல்லாவிட்டால் ஒருவரும் அந்நியபாஷையில் பேசக்கூடாது. வியாக்கியானம் செய்தல் அவ்வளவு முக்கியம் என்றால் தங்களில் யாருக்கு அந்த வரம் இருக்கிறது என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்.
ஆகவே 13-ஆம் வசனம் நிச்சயமாக ஜெபித்து அந்த வரத்தை பெற்றுக் கொள்ளும்படி சொல்லவில்லை. மாறாக, அவர்களை கிண்டல் செய்யும் விதமாக, நீங்கள் அந்நியபாஷை என்ற பெயரில் உளரும் போது, ஏன் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் படி, யாவரும் புரிந்து கொள்ளக் கூடிய சில வார்த்தைகள் பேசும்படி ஜெபிக்க கூடாது என்பதாகும். இப்போது நீங்கள் பவுல் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பரவச உளறல் பாஷை பயனற்றது
பதிநான்காம் வசனத்தில் அவர் சொல்கிறார், “நான் அந்நியபாஷையிலே (உளறல் பாஷையிலே) விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்”. இங்கு ‘ஆவி’ என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, ‘pneuma’; இந்த வார்த்தை ‘ஆவி’, ‘சுவாசம்’, ‘காற்று’ என்றும் மொழியாக்கம் செய்யப் படலாம். ஆகவே, இந்த வசனம் இப்படியாக மொழியாக்கம் செய்யப் படலாம், என்னுடைய ‘சுவாசம்’ அல்லது ‘காற்று’ ஜெபிக்கிறது, என் மனதோ கருத்தில்லாமல் வேறு எங்கோ சிதறி இருக்கிறது.
இங்கே பெந்தேகோஸ்தே போதனையாளர்கள் ‘ஆவி’ என்பதற்கு ‘பரிசுத்த ஆவி’ என்று விளக்கம் அளிப்பார்கள். அது சரியான விளக்கம் இல்லை; ஏனென்றால், இங்கே “என் ஆவி விண்ணப்பம்பண்ணும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே அவர்கள், “பரிசுத்த ஆவியானவர், என் ஆவி” என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த வசனத்தில், “என் ஆவி”-யானது “என் கருத்து”-உடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் ஒப்பீடு ‘மனித கருத்தாக’ இருக்கும் பட்சத்தில், அடுத்த பக்கத்தில் அது ‘மனித ஆவியுடன்’ தான் இருக்கவேண்டும், பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது. ஒரு ஒப்பீடு சமநிலையாக இருக்க வேண்டும்.
ஆகவே அவர் சொல்கிறார், “நான் (உளறல்) அந்நியபாஷையில் பேசினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்”. அங்கே பயனுள்ள எதுவும் நடக்கவில்லை; பரவச உளறல் பாஷையில் ஜெபிக்கும்போது அங்கே எந்த கருத்தும் இல்லை. நான் என்ன ஜெபிக்கிறேன் என்பது எனக்கும் புரியவில்லை, மற்றவர்களுக்கும் புரிகிறது இல்லை. போலியான வரமானது உணர்ச்சிபூர்வ அனுபவத்தை தருகிறதே தவிர, அதில் மனப்பூர்வமான எந்த கருத்தும் இல்லை.
அன்பானவர்களே, நீங்களும் நானும் அறிந்திருக்கிறபடி, வேத புத்தகத்தின் எந்த ஒரு பகுதியிலும் தேவன் நாம் ஒரு கருத்தற்ற மற்றும் மனதற்ற ஒன்றை செய்யும்படி கூறவில்லை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் மூளையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நேரம் என்று ஒன்று இல்லை. எந்த கருத்தும் இல்லாமல் உணர்ச்சியின் அடிப்படையில் தேவன் உங்களை செயல்பட வைக்கும் நேரம் எப்போதுமே இல்லை. அப்படிப் பார்க்கும்பொழுது இன்று பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷை மிகத் தவறானது. இங்கே இருப்பது எல்லாம் கருத்தற்ற மனதற்ற ஒரு உணர்ச்சி பூர்வ அனுபவம் மட்டுமே.
உண்மையில், மத்தேயு 22:37 இப்படியாக சொல்கிறது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக”. கவனித்தீர்களா? ‘உன் முழு மனதோடும்’. மனிதன் கவனம் இல்லாத, உளறலான பரவச அந்நியபாஷையில் பேசுவதோ, ஜெபிப்பதோ, பாடுவதோ பயனற்றது; உங்களுக்கும் பயனும் இல்லை, அதைக் கேட்பவருக்கும் எந்த பயனும் இல்லை.
வசனம் 15: “இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்”. நான் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என்னுடைய உள்ளத்தில் இருந்து, என்னுடைய இருதயத்திலிருந்து வரும்; நான் என்ன பேசுகிறேன் என்பதை என் முழு மனதோடும் அறிந்திருக்கிறேன். நான் என்னுடைய சுவாசத்தையும், என்னுடைய காற்றையும், என்னுடைய மூளையையும், ஜெபிக்கும்பொழுது பயன்படுத்துவேன். முழு மனதோடும் இருதயத்தோடும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
நாம் காண்கிறபடி, இந்தப் பரவச உளறல் பாஷையில் அவர்கள் பாடலும் பாடி இருக்கிறார்கள். இன்றைய பெந்தேகோஸ்தே விசுவாசிகளும் அந்நியபாஷையில் பாடுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். பவுல் சொல்லுகிறார், நான் அதை செய்கிறதில்லை. எனக்கும் தேவனுக்கும் இடையிலான இந்த தனிப்பட்ட ஜெப பாஷையில் என்னால் பாடவும் முடியும் என்று மற்றவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் பெருமை பட்டுக்கொள்வதைத் தவிர, அந்நியபாஷையில் பாடுவதால் என்ன பிரயோஜனம்? மிகவும் சுயநலமான போக்கு! கேளுங்கள், நீங்கள் தமிழில் பாடுகிறீர்கள், தேவன் புரிந்து கொள்கிறார், நீங்கள் தமிழில் ஜெபிக்கிறீர்கள், தேவன் புரிந்து கொள்கிறார். நீங்களும் தேவனும் புரிந்து கொள்ளும் மொழியில் பேசுவதை விட சிறப்பான ஒன்று இருக்க முடியுமா? யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் புரிந்து கொள்ளாத, தேவன் விரும்பாத உளறலான பரவசப் பேச்சு, இதைவிட சிறந்ததா என்ன? தேவனுக்கு அது தேவையில்லை!
பதினாறாம் வசனம்: “இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே”. இப்போது உனக்கு அருகில் இருக்கும் நபரைக் காட்டி, நீ பேசுவதை அவன் புரிந்து கொள்ளாததால் உன் ஜெபத்திற்கு அவன் எப்படி ஆமென் சொல்லுவான்? என்று கேட்கிறார். இங்கே ‘கல்லாதவன்’ என்ற வார்த்தையை சற்று கவனியுங்கள். அதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை ‘idiōtēs’, அதன் அர்த்தம் ‘அறியாதவன்’ என்பதாகும். அதாவது, நீ பேசும் மொழியை அறியாதவன். நீ ஸ்தோத்திரம் (நன்றி) சொல்லும்பொழுது, நீ பேசுவதை உனக்கு அருகில் இருப்பவன் புரிந்துக்கொள்ளாததால், உன் ஜெபத்திற்கு அவன் எப்படி ஆமென் சொல்லுவான்?
‘ஆமென்’ என்பது எபிரேய பெயர்ச்சொல். அதன் அர்த்தம், ‘உண்மை, சொல்லும் சகோதரா’, ‘அப்படியே ஆகக்கடவது’ மற்றும் ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்பவைகளில் சூழ்நிலைக்கு தக்கவாறு எது பொருந்துமோ, அந்த அர்த்தத்தை குறிக்கும். யூத ஜெப ஆலயங்களில் ‘ஆமென்’ சொல்வது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரியுமா? யூத ரபிகள் சொல்லும் பொன்மொழிகள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘ஆமென் என்று சொல்பவன், ஆசீர்வதிப்பவனை விட மேலானவன்’. மற்றுமொன்று, ‘ஆமென் என்று சொல்பவனுக்கு பரலோகத்தின் வாசல்கள் திறந்திருக்கிறது’. மற்றுமொன்று, ‘மிகச் சுருக்கமாக ஆமென் சொல்பவனின் வாழ்நாட்கள் சுருக்கப்படும், மிக நீளமாக ஆமென் சொல்பவனது வாழ்நாட்கள் நீட்டிக்கப்படும்’. அவர்களின் ஜெப ஆலயங்களில் என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படி, யார் அதிக ஆமென் சொல்கிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவியது.
ஆதித் திருச்சபையிலும் உண்மையான அர்த்தத்துடன் ஆமென் சொல்வது மிகவும் வழக்கமான ஒன்று. பவுல் சொல்கிறார், ‘ஆமென்’ என்று சொல்லி ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வது எத்தனை சிறந்தது! நீங்கள் உங்கள் பரவச உளறல் பாஷையில் ஜெபிக்கும்பொழுது உங்கள் அருகில் இருப்பவன் கூட ஆமென் என்று சொல்லி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே. எல்லோரும் தேறும் படிக்கே எல்லோரும் பயன்பெறும் படிக்கே நீங்கள் சபையாக கூடி வருகிறீர்கள். ஆனால் நீங்கள் செய்யும் செயல் எப்போதும் யாராவது ஒருவரை உதாசீனப் படுத்துவதாக இருக்கிறது.
வசனம் 17: “நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய்”. நீ செய்வது சிறப்பான ஒன்றாக இருக்கலாம். நீ உண்மையான அந்நியபாஷை வரத்தை உடையவனாக இருந்தாலும் அல்லது நீங்கள் உங்கள் இருதயத்தில் எதையாவது நினைத்து, தேவனுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தாலும், உன்னை சுற்றி இருக்கிற யாருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் அது உதவி செய்யவில்லையே. நீங்கள் சபையாக கூடி வருவதே எல்லோருடைய ஆவிகுரிய வளர்ச்சிக்கும் தானே!
இப்போது உங்களில் சிலர் சொல்லலாம், அதனால்தான் இது தனிமையில் நீங்கள் தேவனோடு நேரம் செலவிடும் போது பயன்படுத்தவேண்டிய வரம் என்று நாங்கள் சொல்லுகிறோம், என்று. சற்று முன்னர் தான் பார்த்தோம், இது தனி ஜெபத்தில் பயன்படுத்த வேண்டிய வரமும் அல்ல. அந்நியபாஷையின் வரமானது அந்த குறிப்பிட்ட பாஷையை பேசிய யாராவது ஒருவர் அருகில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்தப்பட்ட வரம் ஆகும். தனி ஜெபத்திற்கு பயன்படுத்தும்போது, என்ன பயன்? நீங்கள் பொதுவில் பேசும் போதே யாருக்கும் பயன்படவில்லை என்றால் தனியாக பேசும் போது எப்படி பயன்படும்?
பவுலின் அந்நியபாஷை வரம்
பதினெட்டாம் வசனத்தில், “உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்”. பவுல் சொல்லுகிறார், இந்த காரியத்தை குறித்து நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன், பாஷைகளைக் குறித்து நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் விரும்புகிறேன். இங்கே உண்மையான அந்நியபாஷையின் வரத்தை குறித்து பவுல் பேசிக்கொண்டிருக்கிறார் (கவனிக்க: பாஷைகள், பன்மை). ‘ஒருவேளை உங்களுடைய பாஷைகளைக் குறித்து நான் எதுவுமே அறியவில்லை என்று நீங்கள் நினைப்பீர்களென்றால், உங்கள் எல்லாரையும் விட அதிகமான உலக பாஷைகளை நான் பேசுகிறேன்’ என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன் என்று பவுல் சொலுகிறார்.
அவர் அப்போஸ்தலனாக இருந்தபடியால், 2கொரி12:12-ன் படி, அப்போஸ்தலர்களுக்கே உரிய உண்மையான அந்நியபாஷை வரத்தை உடையவராய் இருந்தார். அவர் அதிகமான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபடியால் தனக்கிருந்த அந்நியபாஷையின் வரத்தை சந்தேகத்திற்கிடமின்றி அவர் பயன்படுத்தினார் என்று சொல்லலாம்.
அவர் எப்படி பயன்படுத்தினார்? முதலாவதாக, அவர் தனிப்பட்ட ஜெப மொழியாக அதை பயன்படுத்தவில்லை. இரண்டாவதாக, கிறிஸ்தவ கூடுகைகளில் தான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள பயன்படுத்தவில்லை. மூன்றாவதாக சுயநலமாக தன்னுடைய சொந்த பிரயோஜனத்திற்காக பயன்படுத்தவில்லை. அவர் எப்படி இந்த வரத்தை பயன்படுத்தினார் என்று உங்களுக்கு சொல்லுகிறேன். பவுல் தன்னுடைய பயணங்களில், அவர் அறிந்திராத மொழி பேசிய மக்களை அவர் சந்தித்தபோது, தனக்கு தெரியாத அந்த மொழியை (அந்நியபாஷையை) பேசும் வரத்தை தேவன் அவருக்கு கொடுத்தார். அதனால் தேவனுடைய மகத்துவங்களையும், நற்செய்தியையும் அவர்கள் மொழியிலேயே, அவர்கள் புரிந்ந்துக்கொள்ளும்படி பேசினார்; இந்த அதிசயத்தைப் பார்த்த மக்கள் தேவனே தங்களோடு பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டார்கள்; அற்புத அடையாளங்களை பெற்றுக் கொண்டார்கள்; தங்கள் மொழியில் தேவனுடைய உண்மையை பேசக் கேட்ட மக்கள், இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.
அவர் புறஜாதியார் மத்தியில் ஊழியம் செய்தார், தன்னுடைய ஊழியப் பாதையில் இந்த வரத்தை அவர் பலமுறை பயன்படுத்தினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இந்த வரத்தை அவர் மிகக் குறைவாகவே மதிப்பிட்டு தன்னுடைய ஊழியங்களிலும், தன்னுடைய நிரூபங்களிலும் இந்த வரத்தைப்பற்றி வேறு எங்குமே குறிப்பிடவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.
பத்தொன்பதாம் வசனம், “அப்படியிருந்தும்” - எனக்கு அந்த வரம் இருந்தாலும் – “சபையிலே” - நற்செய்தி அறிவிப்பது சரிதான். அங்கே இருந்த புறஜாதி மக்கள் தங்கள் மொழியில் தேவனுடைய உண்மையை கேட்பதிலும், தேவனே அவர்களிடத்தில் பேசுகிறார் என்பதை அவர்களுக்கு காண்பிப்பதில் தவறொன்றும் இல்லை என்றாலும், இப்போது, “சபையிலே”, கவனியுங்கள் – “அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்”. அதுதான் அவரின் நோக்கம்.
இப்போது சுவாரசியமான ஒன்றை நாம் பார்க்கப் போகிறோம். இந்த வசனத்தில் உள்ள ‘ஐந்து’ மற்றும் ‘பதினாயிரம்’ என்ற எண்கள் ஒரு ஒப்பீட்டுக்காக பயன்படுத்தப்படவில்லை. பதினாயிரம் என்பதற்கான கிரேக்க வார்த்தை ‘murios’ என்பதாகும். கிரேக்க கணிதவியலில் பதினாயிரம் என்ற எண்ணே அதிகபட்ச மதிப்புக் கொண்டதாகும்; அதை குறிக்க ‘murios’ வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை இங்கு ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்கிறீர்களா? உதாரணமாக, வெளி 5:11ல், தேவதூதர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுகையில், “அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு murios, murios என்றும், chilioi, chilioi என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்களுடைய எண்கணிதத்தில் பதினாயிரம் என்ற எண்ணே மிகப் பெரிய மதிப்பு கொண்ட எண் ஆகும். ஆகவே தமிழில் நாம் இப்படி சொல்லலாம், “நான் சபையிலே (உளறல் பாஷையில்) அந்நியபாஷையில் ‘கோடானகோடி’ வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்”. இங்கே அவர் எதையும் எதனோடும் ஒப்பிட வில்லை. இப்படி அர்த்தமில்லாததை பேசுவதற்கு பதிலாக, என்னுடைய சத்தத்தை பயன்படுத்தி மற்றவர்களுக்கு பயனுள்ளதை போதிக்கவே நான் விரும்புகிறேன் என்று சொல்லுகிறார்.
இருபதாம் வசனத்தில், “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; … புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்” என்று சொல்லுகிறார். அதாவது ஆவிக்குரிய காரியங்களில் வளருங்கள் என்று சொல்லுகிறார். 1கொரி 13:11ல், “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், …. நான் புருஷனானபோதோ” – என்ன செய்தேன்? “குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” என்று சொன்னார். இந்த பகுதியில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் என்ன? சபையில் அந்நியபாஷையை எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்கிறோமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால், ஆதித்திருச்சபையில் காணப்பட்ட அந்நியபாஷை வரமானது, அதன் நோக்கம் நிறைவேறிவிட்டதால், இன்றைய திருச்சபையில் செயல்பாட்டில் இல்லை.
சரி, இதுவரை நாம் பார்த்தவைகளிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? தேவனுடைய வார்த்தையை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அறிவிக்க வேண்டும், தேவன் நமக்கு கொடுத்திருக்கும் வரங்களை வைத்து மற்றவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும், ஒருபோதும் சுயநலமான ஆவிக்குரிய அனுபவங்களை நாடாதீர்கள், உணர்ச்சி பூர்வ அனுபவத்திற்கு பதிலாக, அறிவு பூர்வ அனுபவத்தில் மகிழுங்கள். சாத்தானுடைய போலியான அனுபவங்களுக்கு எச்சரிக்கையாக இருந்து, தேவனுடைய சத்தியத்துடனும், எல்லாவற்றையும் திறந்த மனதுடனும் செய்யுங்கள். இன்றைய அந்நியபாஷை இயக்கங்களின் மிகப் பரிதாபமான நிலைமை என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான செயல்களை விட்டு வெகு தூரம் சென்றிருக்கிறார்கள்.
இங்கு வேடிக்கையான கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நாய் ஒன்று தன்னுடைய வாயில் ஒரு எலும்புத்துண்டைக் கவ்விக்கொண்டு பாலத்தின் மீது நடந்துசென்றது. மேலிருந்து கீழே தண்ணீரில் தன்னுடைய நிழலைப் பார்த்த அந்த நாய்க்கு, தன்னிடத்திலிருந்த எலும்புத்துண்டைவிட தன்னுடைய நிழலில் தெரிந்த எலும்புத்துண்டு சிறப்பாக இருப்பது போல் தோன்றியது. உடனே அந்த எலும்புத்துண்டை பிடிக்க எண்ணி, தன் வாயிலிருந்த எலும்பை கீழே தண்ணீரில் போட்டுவிட்டு, பசியுடன் நடந்து சென்றது. இப்படித்தான் இருக்கிறது இன்று போலியான பரவச அனுபவங்களை நாடும் கிறிஸ்தவர்களின் நிலைமையும்.