பாடல் பிறந்த கதை
ஜேம்ஸ் மான்ட்கோமரியின் பெற்றோர், மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற மொராவிய மிஷனரிகள். ஜேம்ஸ் வாலிபனானபோது, இங்கிலாந்திலிருந்த மொராவிய குருத்துவப் பயிற்சி நிலையத்தில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் பெற்றோர் இருவரும் பணித்தளத்தில் திடீரென்று இறந்துபோனார்கள். இச்செய்தியைக் கேட்ட ஜேம்ஸ், தன் படிப்பை விட்டு உடனே விலகிக் கொண்டான். சில நாட்கள், நோக்கம் எதுவுமின்றி, சோர்ந்து போயிருந்தான்.
பல நாட்களுக்குப் பின், எழுதுவதிலும், செய்தித்தாள் வேலையிலும் ஜேம்ஸ் ஈடுபாடு கொண்டார். தன் 23வது வயதிலேயே, ''ஷெப்பீல்டு ரெஜிஸ்டர்'' என்ற வாராந்திரப் பத்திரிக்கையின் ஆசிரியரானார். இவ்வேலையைத் தொடர்ந்து 31 வருடம் செய்து வந்தார்.
இத்துறையில் சிறந்து விளங்கிய மான்ட்கோமரி, தன் செல்வாக்கையெல்லாம், 'அடிமை ஒழிப்பு' போன்ற சமுதாய சீர்திருத்தப் பணிகளுக்கு உபயோகித்தார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடவும், ஏழைகளுக்கு உதவவும், எப்போதும் தயாராக இருந்தார். இருமுறை, இப்போராட்டங்களின் விளைவாக, சிறைத் தண்டனையும் பெற்றார். 1797-ல், ''சிறை அனுபவங்கள்'' என்ற தலைப்பில் தன் அனுபவங்களை, பல கவிதைகளாக எழுதி வெளியிட்டார்.
1825-ம் ஆண்டு, தன் பத்திரிக்கைத் தொழிலை விட்டுவிட்டு, இலக்கிய முன்னேற்றப் பணிகளிலும், தூரதேச மிஷனரி ஊழியங்களைத் தாங்குவதிலும், தன் நேரம் முழுவதையும் செலவிட ஆரம்பித்தார். அவருடைய சமூக நலத்தொண்டைப் பாராட்டி, ஆங்கிலேய அரசு, அவருக்கு ஆண்டுக்கு 1000 வெள்ளிக் காசுகள், மானியமாக வழங்கியது.
இப்பாடல் முதன்முறையாக, 24.12.1816 அன்று ஒரு கவிதையாக மான்ட்கோமரியின் செய்தித்தாளில் வெளிவந்தது. பின்னர் ''எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி'' என்ற தலைப்பில், "மான்ட்கோமரியின் சொந்தப் பாடல்கள்" என்ற பாடல் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இன்றும் திருச்சபை ஆசரிக்கும் ''வருகையின் நாட்களில்'', ஆலயங்களில் பாடப்படும் பாடலாக விளங்குகிறது. மான்ட்கோமரி மொத்தம் 400 பாடல்களை எழுதியிருக்கிறார்.
தனது அறுபத்தாறு வயது வாழ்க்கையின் கடைசி 15 ஆண்டுகளைப் பார்வை இழந்த நிலையில் கழித்த ஹென்றி ஸ்மார்ட், இப்பாடலுக்கு ''ரீஜன்ட் ஸ்கொயர்'', என்ற ராகத்தை அமைத்தார்.