பாடல் பிறந்த கதை
நற்செய்தியால் உலகையே அசைத்த, பிரபல அமெரிக்கப் பிரசங்கியார் ஈ.க. மூடி, மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருந்தார். வியாதியால் மரண அவஸ்தைப்பட்ட, தன் நண்பனைக் காண வந்திருந்தார் வில் தாம்சன். தன் கண்களை ஏறிட்டுப் பார்த்த மூடிப் பிரசங்கியார், தன் நண்பனை நோக்கி, ""வில், ஒன்று தெரியுமா? நான் என் வாழ்நாளில் செய்த ஊழியங்கள் அனைத்தையும்விட, இந்த அருமையான பாடலை எழுதுவதையே, மேலானதாகக் கருதுகிறேன்.''
ஏனெனில், மூடிப் பிரசங்கியாரின் உள்ளத்தைக் கவர்ந்த இப்பாடலானது, அவரின் நற்செய்திக் கூட்டங்களில், சாங்கியால் மென்மையாகப் பாடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களை, இயேசுவின் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தது.
வில் க. தாம்சன் ஒகியோவின் கிழக்கு லிவர்பூலில், 7.11.1847 அன்று பிறந்தார். போஸ்டன் இசைப் பள்ளியில் பயின்று தேறி, இசை வல்லுனரானார். பலதரப்பட்ட பாடல்களை இயற்றிப் புகழ் பெற்றார். பின்னர், கிறிஸ்தவப் பாடல்களையும் எழுத ஆரம்பித்தார். செல்வந்தராக பேரும் புகழும் பெற்ற பின்னரும், ஊழியங்களுக்குத் தாராளமாகக் கொடுத்து, எளிமையான பண்புடன், ஒரு நடைமுறைக் கிறிஸ்தவனாக வாழ்ந்தார். பல குக்கிராமங்களுக்கும் குதிரையில் சென்று, பாட்டுகள் பாடி, அவர்களை மகிழ்விப்பார்.
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், மிகவும் பிரபலமான இப்பாடலின் ராகத்தையும், வில் தாம்சனே அமைத்தார்.