பாடல் பிறந்த கதை
சென்னை மாநகரின் கிண்டிப்பகுதியிலுள்ள, "ராஜ்பவன்" என்னும் பிரம்மாண்டமான கவர்னர் மாளிகையைப் பார்த்திருக்கிறீர்களா? இத்தகைய உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் கூட, ராஜாதி ராஜனாம், இயேசு ராஜனைப் புகழ்ந்து பாடியதைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?
சிறந்த கிறிஸ்தவ ஆராதனைப் பாடலாகிய, இப்பாடலை எழுதிய சர் ராபர்ட் கிரான்ட், 1779-ம் ஆண்டு இந்திய மண்ணில், வங்காளப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை சார்லெசும் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனராக, இந்தியாவில் பணியாற்றியவர். அவர் இங்கிலாந்து தேசப் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தாலும், திருச்சபையின் நற்செய்திப் பணியிலும் உற்சாகமாக ஈடுப்பட்டார். எனவே, அவரது மகன் சார்லெசும், 1834-ம் ஆண்டு, பம்பாயின் கவர்னராக உயர் பதவி வகித்தாலும், தன் வாழ்நாள் முழுவதும், ஆண்டவரின் ஊழியத்தில் ஈடுபாடு கொண்ட, உண்மைக் கிறிஸ்தவராக விளங்கினார். தன் அன்புச் செயல்களால் இந்தியர்களைக் கவர்ந்தார். எனவே, அவர் நினைவுச் சின்னமாக, இன்றும் அவர் பெயரில், ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது.
இப்பாடல், சர்வ வல்லவரை ராஜாவாகவும், கேடகமாகவும், பாதுகாப்பவராகவும், அநாதியானவராகவும், சிருஷ்டிகராகவும், மீட்பராகவும், நண்பராகவும், பல தலைப்புகளில் உருவகப்படுத்தி ஆராதிக்கிறது. மற்றும், இறைவனின் வல்லமை, சத்துவம், கிருபை, பராமரிப்பு, தெய்வீக அன்பு, முதலான குணாதிசயங்களையும் உயர்த்திக் கூறுகிறது. எனவே, தேவனை முழுமையாக ஆராதிக்க உதவும் சிறந்த பாடலாக, இன்றும் விளங்குகிறது.
இப்பாடல், ராபர்ட்டின் மரணத்துக்குப்பின் மறு ஆண்டே, "பக்திக் கவிதைகள்" என்று, 1839-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, ராபர்ட்டின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இப்பாடலின் "லியான்ஸ்" என்ற ராகத்தை, ஹேடன் என்பவர் அமைத்ததாகக் கருதப்படுகிறது. இந்த ராகம் வில்லியம் கார்டினரின் "பக்திக் கீதங்கள்," என்ற புத்தகத்தின் இரண்டாம் தொகுப்பில், 1815-ம் ஆண்டு வெளியானது.