பாடல் பிறந்த கதை
''வில்லியம்! வில்லியம்ஸ்! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?''
''மருத்துவக் கல்லூரியில் சேர ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.'' எனத் தன் நண்பனுக்குப் பதிலுரைத்தான் 20 வயதே நிரம்பிய வாலிபன் வில்லியம் வில்லியம்ஸ்.
நண்பன் தொடர்ந்தான், ''உனக்கு செய்தி தெரியுமா? ஹேரிஸ் என்ற நம்மைப் போன்ற வாலிபன் ஒருவன்! ஆனால், மதவெறிபிடித்த பைத்தியக்காரன்! அவனுடைய போதனைகளைக் கேட்டு, நமது ஊர் முழுவதும் கலக்கமடைந்திருக்கிறது!''
''அவன் இப்போது எங்கே இருக்கிறான்?'' ஆவல் மேலிட, நண்பனிடம் வினாவினான் வில்லியம்ஸ்.
டெல்கார்த் ஆலய வளாகத்திற்கு விரைந்த வில்லியம்ஸ், அங்கே ஒரு கல்லறையின் மீது ஏறிநின்று, ஞாயிறு காலை ஆராதனை முடிந்து வந்து கொண்டிருந்த ஜனங்களிடம், வரும் கோபாக்கினை, நரகத்தின் எரிநெருப்பு, ஆகியவற்றைக் கண்டிப்புடன் கூறி எச்சரித்துக் கொண்டிருந்த ஹோவல் ஹேரிûஸக் கண்டான். 24 வயதே நிரம்பிய இவ்வாலிபப் பிரசங்கியாரின் செய்தியால் கவரப்பட்ட வில்லியம்ஸ், தன் மருத்துவப்படிப்புத் திட்டத்தைக் கைவிட்டு, ஆண்டவரின் ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்தான்.
இப்பாடலை எழுதிய போதகர் வில்லியம் வில்லியம்ஸ், பண்டிசெலின் சேகரத்தில், ஒரு பண்ணை வீட்டில், 1717-ம் ஆண்டு பிறந்தார். திருச்சபையின் முழுநேர ஊழியராகி, ஓரிரு திருச்சபைகளில் ஊழியம் செய்தார். ஆனால், அவை உயிரின்றி, சடங்காச்சாரங்கள் நிறைந்திருந்ததால், தொடர்ந்து திருச்சபைப் போதகராகும் ஆசையை விட்டுவிட்டார். அதற்குப் பதிலாக, ஹேரிஸ் போல, வேல்ஸ் நாடு முழுவதையும் தன் திருச்சபைச் சேகரமாகக் கருதி, அடுத்த 43 ஆண்டுகள், சுமார் 1 லட்சம் மைல்களை, குதிரையில் பயணம் செய்து, நற்செய்தியைப் பிரசங்கித்தார். மழையிலும் பனியிலும், வெயிலிலும், காற்றிலும் நின்று, அயராது கடின உழைப்பை மேற்கொண்டார். சில இடங்களில் கூடிய கூட்டம், அவரை எதிர்த்துத் தாக்கியது. இவைகளின் மத்தியிலும் சிறப்பாக ஊழியம் செய்தார்.
வில்லியம்ஸ் ஒரு அருமையான பிரசங்கியாராக இருந்தபோதும், அவரது ஊழியத்தின் உயிரோட்டமாக விளங்கியவை, அவருடைய பாடல்கள் ஆகும். வெல்ஷ் மக்கள் உலகத்திலேயே உற்சாகமாகப் பாடுபவர்களென்று பெயர் பெற்றவர்கள். வேல்ஸ் நாடே, '' பாடும் தேசம்'' என்று அழைக்கப்படும். எனவே, பாடல்களின் மூலமாகத் தன் ஊழியத்தை செய்த வில்லியம்ஸ், அந்நாட்டின் இனிமைப் பாடகர் என்று புகழ்பெற்றார். இவர் 800 பாடல்களை, வெல்ஷ் மொழியில் இயற்றினார். இவற்றில் சில பாடல்கள் மட்டுமே, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள், இப்பாடலே பிரபல்யமானது.
வில்லியம்ஸ் இப்பாடலை, தென்வேல்ஸின் ட்ரெவக்காவில் உள்ள, கிறிஸ்தவ ஊழியப் பயிற்சிக் கல்லூரியின் துவக்க விழாவில் பாடுவதற்கென, 1745-ம் ஆண்டு எழுதினார். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து கானானுக்குச் செல்ல, அவர்கள் மேற்கொண்ட பயணத்தைப் பின்னணியாக வைத்து, இவ்வுலக வாழ்க்கையை அத்துடன் ஒப்பிட்டு, இப்பாடலை இயற்றினார். இப்பாடலின் முதல் சரணத்தை, போதகர் பீட்டர் வில்லியம்ஸ், 1771-ம் ஆண்டு மொழிபெயர்த்தார். மீதி இரண்டு சரணங்களையும், வில்லியம் வில்லியம்சே மொழியெர்த்தார்.
இப்பாடலுக்கு ஜான் ஹியூஸ் அமைத்த ''க்விம் ரோன்டா'', என்ற ராகம் மிகவும் பொருத்தமாக இருந்ததால், இப்பாடல் உலகெங்கும் பிரபலமாகி, 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.