பாடல் பிறந்த கதை
ஜான் ஆ. கப் ஆலய ஆராதனைக்குச் சென்றார். தன் இருக்கையில் அமரும்போது, அவ்வரிசையில், பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு மனிதன் இருப்பதைக் கண்டு, சற்றுத் தள்ளி அமர்ந்தார். சபையோர் இப்பாடலைப் பாட, அந்த மனிதனும் மிகுந்த உணர்ச்சியோடு பாட ஆரம்பித்தான். அவன் பாடும் முறை கூட, தரத்தில் குறைந்தே இருந்தது. ஆனால், அவன் வாஞ்சையோடு இப்பாடலைப் பாடியதைப் பார்த்த ஜானின் உள்ளம் நெகிழ்ந்தது. எனவே, ஜான் சற்று அவனுக்கருகில் சேர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
மூன்று சரணங்கள் பாடி முடிந்து, ஆர்கன் இடை இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்த மனிதன், ஜான் பக்கமாய் சற்றே சாய்ந்து, மெல்லிய குரலில்,
"அடுத்த சரணத்தின் முதலடியை தயவு செய்து கூறுவீர்களா?" என்று கேட்டான்.
"நான் பாவிதான், பரிதாபமான ஏழைக் குருடன்." என்று பதிலளித்தார் ஜான்.
"உண்மை தான். நான் ஒரு பார்வையற்றவன்; சரீரத்தின் ஒரு பாதி செயலிழந்தவனாகவும் இருக்கிறேன். ஆண்டவரே, என்னைப் பெலப்படுத்தும்." என்று அவன் கூறிவிட்டுப் பாட ஆரம்பித்தான்.
அப்போது தான் ஜான் அவனை உற்று நோக்கினார். அவன் மிகுந்த முயற்சியுடன், நடுங்கும் தன் உதடுகளை அசைத்துப் பாடுவதைக் கண்டார். இதுவரை தான் காட்டிய, ஏளனம் நிறைந்த ஈனச் செயலை. எண்ணித் தலை குனிந்தார். அந்த மனிதனின் வாயிலிருந்து புறப்பட்ட அச்சரணம், ஜானின் காதில் தேவ கானமாகத் தொனித்தது. இத்தகைய அர்த்தம் நிறைந்த வார்த்தைகளை, இதைவிட அழகாக எவரும் பாடி, அவர் வாழ்நாளில் அதுவரை கேட்டதேயில்லை!.
செயலிழந்து, சோர்வுற்ற, ஒரு பெண்ணின் உள்ளத்திலிருந்து எழுந்த பாடலிது. ஆனால், கேட்பவரின் உள்ளத்தைத் தொட்டு, இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தூண்டிய பாடல்களில் முதன்மையானதாக விளங்குகிறது.
இப்பாடலை எழுதிய சார்லெட் எலியட், இங்கிலாந்தில் உள்ள கிளாபாம் என்ற இடத்தில், 18.03.1789 அன்று பிறந்தாள். தன் வாலிப நாட்களில் ஓவியம் தீட்டுவதிலும், நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுவதிலும் புகழ் பெற்று, ஒரு கவலையற்ற வாழ்க்கை நடத்திவந்தாள். ஆனால், 30 வயதானபோதோ, உடல்நலம் குறைவுபட்டு, மிகவும் பெலவீனமடைந்து, படுத்த படுக்கையானாள். செயலிழந்தவளாய், தன் வாழ்வின் மீதமுள்ள 50 ஆண்டுகளைப் படுக்கையிலே கழித்தாள்.
இவ்வாறு சார்லெட் செயலிழந்து சோர்வுற்றிருந்த நிலையில், 1822-ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் சீசர் மலன் என்ற பிரபல பிரசங்கியார் அவள் வீட்டிற்கு வந்தார். அந்த சந்திப்பு, சார்லெட்டின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. தன் ஆவிக்குரிய வாழ்விலும் சோர்ந்து போயிருந்த அவளை, டாக்டர் மலன் பார்த்து,''உன் உள்ளத்தை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து, அவர் கரத்தில் ஒரு உபயோகமுள்ள ஊழியக்காரியாக மாறிவிடு''. என்று அறிவுரை கூறினார். அதற்கு எலியட்,'' நான் எவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லையே'' என்றாள்.
அப்போது டாக்டர் சீசர் மலன் அவளை அன்புடன் நோக்கி, ''தெய்வ ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு, உலகின் பாவமனைத்தையும் சுமந்து தீர்த்துவிட்டார். அதை நம்பி, நீ இப்போது இருக்கிற நிலையிலேயே, பாவியாகவே, அவரிடம் வா. அவர் உன்னை ஏற்றுக்கொள்ளுவார். உன்னை மாற்றுவார்.'' என்று உற்சாகப்படுத்தினார். அன்றே, சார்லெட் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டாள். அந்த நாளைத் தன் ஆவிக்குரிய வாழ்வின் பிறந்த நாளாக பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தாள்.
சார்லெட் 82 வயதுவரை வாழ்ந்தாலும், தன் பழைய ஆரோக்கிய நிலையை, ஒருபோதும் அடையவேயில்லை. மிகுந்த பெலவீனங்கள் மத்தியில், போராடிக்கொண்டே ஒவ்வொரு நாளையும் கழித்தார். ''என் தேவன் என்னைக் காண்கிறார்; வழி நடத்துகிறார்; பாதுகாக்கிறார்; நான் இருக்கும் இந்த நிலையிலேயே, அவருடைய ஊழியத்தை மகிழ்வுடனும், பரிசுத்தத்துடனும் செய்ய, அவருடைய குரல் என்னைத் தொடர்ந்து ஏவுகிறது." என்று எழுதினார். "செயல் இழந்தவளின் பாடல் புத்தகம்" என்ற தலைப்பில், தான் எழுதிய 115 பாடல்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்.
சார்லெட்டின் சகோதரர் மறைதிரு. எச்.வி. எலியட், பிரைட்டனில், "தூய மரியின் ஹால்" என்ற கல்லூரியை, ஏழைப் போதகர்களின் பிள்ளைகள் படிப்பதற்கென்று நடத்தி வந்தார். இந்த உபகார ஊழியத்தின் பணத்தேவைகளை சந்திக்க, 1836-ம் ஆண்டு, ஒரு விற்பனை விழா நடத்தினார். இந்த விற்பனை விழாவின் முந்தின இரவு, சார்லெட் தூங்க முடியாமல், தன் சகோதரரின் சிறந்த பணிக்கு, தன்னால் ஒன்றும் உதவ முடியவில்லையே, என்று வெகுநேரம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் அவர் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், உற்சாகமாகப் பற்பல வேலைகளில் ஈடுபடுவதைத் தன் படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டேயிருந்த சார்லெட், தன் உபயோகமற்ற வாழ்க்கையை நினைத்து, மிகுந்த வேதனையுற்றாள்.
சோர்வுற்ற அந்த வேளையில், சார்லெட்டின் உள்ளத்தில், 14 ஆண்டுகளுக்குமுன், இதுபோன்று சோர்ந்து வேதனைப்பட்ட நேரத்தில், டாக்டர் மலன் கூறிய ஆறுதல் வார்த்தைகள் நினைவில் வந்தது.
"இருக்கும் நிலையிலேயே இயேசுவண்டை வா" என்ற அழைப்பின் குரல் மீண்டும் தொனித்தது. அவளது உள்ளத்தின் ஏக்கங்களெல்லாம்,
"நான் பாவி தான்" என்ற பாடலாக வடிவெடுத்தது.
இப்பாடல் எழுதப்பட்டவுடனே அச்சிடப்பட்டது. அதை வாசித்த பலராலும் விரும்பப்பட்டதால், மீண்டும் பிரதிகளாக வெளியிடப்பட்டு, மிகவும் பிரபலமடைந்தது. இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால், அந்த விற்பனை விழாவின் மூலம் சேகரிக்கப்பட்ட மொத்த தொகையைக் காட்டிலும், தன்னை உபயோகமற்றவளெனக் கருதிய சார்லெட், அன்று எழுதிய இப்பாடல், அதிக நிதியை அவளுடைய சகோதரனின் ஊழியத்திற்குத் திரட்டித் தந்தது.
சார்லெட் 150 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆங்கில வழிபாட்டுப் பாடலாசிரியர்களில் மிகவும் பெயர்பெற்றவராக விளங்கினார். அவர் மரித்தபோது, இப்பாடலின் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களைப் பற்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்தும் கடிதம் எழுதினார்கள்.
இப்பாடலுக்கு, வில்லியம் B. பிராட்பரி அமைத்த ''உட்வொர்த்'' என்ற ராகத்தை, அமெரிக்க நற்செய்திப் பாடலாசிரியரான, தாமஸ் ஹேஸ்டிங்ஸ் இணைத்தார். வில்லியம், "என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்", "இயேசு எந்தன் நேசரே", ''அருள் மாரி எங்குமாக '' போன்ற பிரபல பாடல்களுக்கெல்லாம் இசை அமைத்த, நற்செய்தி இசை வல்லுனராவார்.