பாடல் பிறந்த கதை
''அக்கா ! நானும் ஆண்டவருக்குப் பணிசெய்யும் தூதனாக மாற வேண்டும்!''
என உற்சாகத்துடன் கூச்சலிட்டாள் ஒரு அழகிய சிறுபெண். ஞாயிறு பள்ளியின் வகுப்பு நேரத்தில், தேவ தூதர்களைப் பற்றி, வேதபாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை, சிட்னி ட. ஜில், மகிழ்வுடன் சத்தமிட்ட மாணவியைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவள் அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள, டாக்டர் ஜோயல் பார்க்கர் ஆலய ஞாயிறு பள்ளி ஆசிரியையாக, உத்தமமாய் ஊழியம் செய்து வந்தாள்.
சில நாட்கள் சென்றபின், தேவதூதனாக மாற விரும்பிய அச்சிறுமி, வியாதிப்பட்டு மரித்துப்போனாள். இதைச் சற்றும் எதிர்பாராத சிட்னியின் உள்ளத்தில், அன்று அந்த மாணவி உற்சாகமாய்க் கூறிய வார்த்தைகள், மறக்கமுடியாமல் தொனித்துக் கொண்டேயிருந்தன. அச்சிறுமியின் வாஞ்சை, சிட்னியின் உள்ளத்தில் பாடலாக உருவெடுத்தது.
இப்பாடலைத் தன் ஞாயிறுபள்ளிப் பிள்ளைகள் பாடுவதற்கென்றே, சிட்னி எழுதினாள். ஆனால், நாளடைவில், பெரியவர்களும் கூட விரும்பிப் பாடும் பாடலாக அது மாறியது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பல நாடுகளில் இன்றும் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.