பாமாலைகள்

நற்செய்தி கூறுவேனே

(I love to tell the story)

பாடல் : கேத்தரின் ஹான்கே

பாடல் பிறந்த கதை

1. நற்செய்தி கூறுவேனே! மேலோர் காணாததை;
இயேசுவின் மகிமையை! இயேசுவின் அன்பையே!
நற்செய்தி கூறுவேனே! சத்தியமானதே;
என் வாஞ்சையை வேறொன்றும் திருப்தி செய்யாதே.
 
    நற்செய்தி கூறுவேனே! மேலோகிலும் அதுவே;
    இயேசுவின் அன்பைப்பற்றி நான்  மீண்டும் கூறுவேன்.
 
2. நற்செய்தி கூறுவேனே! ஆச்சரியமானதே;
பொன்மய கனவுகள் ஒப்பானதல்லவே;
நற்செய்தி கூறுவேனே! எனக்கு செய்திட்ட
அனைத்திற்காகவுமே இப்போதே கூறுவேன்
                                                          - நற்செய்தி
 
3. நற்செய்தி கூறுவேனே! மீண்டும் சொல்ல நன்றே;
 சொல்லச் சொல்லச் செய்தியின் இனிமை கூடுதே;
நற்செய்தி கூறுவேனே! கேளார் இன்னும் உண்டே
தேவ தூய வார்த்தையின் ரட்சிப்பின் செய்தியை.
                                                          - நற்செய்தி
 
4. நற்செய்தி கூறுவேனே! நன்றாய் அறிந்தோரும்
மற்றோரைப் போலக் கேட்க வாஞ்சையாய் உள்ளோரே;
மகிமையிலே நானும் புதிதாய்ப் பாடினும்
அப்பாடல் நான் விரும்பும் இந்த நற்செய்தியே.
                                                          - நற்செய்தி

இங்கிலாந்து தேசத்தில் நற்செய்திப் பணியானது, ஜார்ஜ் வொயிட்பீல்டு, மற்றும் வெஸ்லி சகோதரர்களின் ஊழியங்களால், பதினெட்டாம் நூற்றாண்டில் விறுவிறுப்படைந்தது.  ஆயினும்,  ஆரம்ப நாட்களில் இப்பணி, சமுதாயத்தின் கீழ்நிலை மக்கள் மத்தியில் தான் சிறப்பாக நடைபெற்றது.  பின்னர், 19-ம் நூற்றாண்டில், உயர்நிலை மக்களும் நற்செய்திப் பணியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.  தென்கிழக்கு லண்டனின் கிளாபம் என்ற பகுதியில் உள்ள வசதிபடைத்த மக்கள், வேத போதனையிலும், ஜெப ஐக்கியத்திலும் உறுதியுள்ளவர்களாய், பல இடங்களிலும் நற்செய்தி பரவ செயல்பட்டனர்.  இம்  மக்கள் இங்கிலாந்து திருச்சபையின் அங்கத்தினர்களாகத் தொடர்ந்து நிலைத்திருந்து, நற்செய்திப் பணியை உற்சாகமாகச் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஊழிய வாஞ்சை நிறைந்த ஒரு செல்வந்தரின் மகளாக, கேத்தரின் ஹான்கே 1834-ம் ஆண்டு பிறந்தார்.  தந்தையின்  சுவிசேஷ பாரம், மகளின் உள்ளத்தையும் நிரப்பிற்று.  தன் வாலிப வயதிலேயே, லண்டன் மாநகரின் பலதரப்பட்ட பிள்ளைகளுக்கு, ஞாயிறு பள்ளிகள் அமைத்து, சிறுவர் ஊழியம் செய்தாள்.  இப்பணியின் மூலம், அநேக வாலிபர்கள் ஊழியர்களாக எழும்பினார்கள்.  கேத்தரின், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் திறமை மிக்கவள்.  இத்தாலந்துகள் மூலம் அவள் சம்பாதித்த பணம் அனைத்தையும், தூர தேச மிஷனரிப் பணிகளுக்கென்று, காணிக்கையாக அனுப்பி வைத்தாள்.

இவ்வாறு ஊழியம் செய்த கேத்தரின், தனது முப்பதாவது வயதிலேயே, கடுமையான வியாதிக்குள்ளானாள்.  வியாதிப் படுக்கையின் நாட்களையும் வீணாக்காமல்,  இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக வாழ்க்கையை, 50 சரணங்களடங்கிய ஒரு பெரிய கவிதையாக எழுதினாள்.  இரு பகுதிகளாக எழுதப்பட்ட இக்கவிதையின் முதற்பகுதியின் தலைப்பு, "தேவையான நற்செய்தி".  இப்பகுதியை மையமாகக் கொண்டு,  "தொன்மை மிக்க அந்நற்செய்தியை எனக்குக் கூறுங்கள்"  என்ற பிரபல பாடலை அவள் எழுதினாள்.  பின்பு, அதே ஆண்டிலேயே, இரண்டாம் பகுதியின் அடிப்படையில், ''அந்நற்செய்தியை நான் கூற விரும்புகிறேன்.''  என்ற இந்த அருமையான பாடலைத் தன் முதல் பாட்டிற்குப் பதிலாக அமையுமாறு எழுதினாள்.

இசையிலும் திறமையுள்ள கேத்தரின், இப்பாடலுக்கு ராகத்தையும் அமைத்தாள்.  பின்னர், 1867- ல் கனடாவின் மான்ட்ரியலில் நடைபெற்ற, Y.M.C.A பன்னாட்டுக் கூட்டத்தில், மேஜர் ஜெனரல் ரஸ்ஸல் இந்தப் பாடலைத் தன் செய்தியில் அறிமுகம் செய்தார்.  அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க இசை வல்லுனரான வில்லியம் D. டோயன் இப்பாடலை விரும்பியதால், அருமையான மற்றொரு ராகத்தை இதற்கு உருவாக்கினார்.

பின்னர், பிலடெல்பியாவின் இசை மேதையான வில்லியம் G. ஃபிஷர், இப்பாடலுக்கு புதியதொரு ராகம் அமைத்து, இப்பாடலின் பல்லவியையும் இணைத்தார்.  1875-ல் பிளிஸ் -சாங்கி வெளியிட்ட '' நற்செய்திப்  பாமாலைகளும், பக்திப் பாடல்களும் '' என்ற புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்று பிரபலமானது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.