பாமாலைகள்

சொற்பக் காலம் பிரிந்தாலும்

(God be with you)

பாடல்: எரேமியா E. ரான்கின்

பாடல் பிறந்த கதை

 1. சொற்பக் காலம் பிரிந்தாலும் - பார்,
பின்பு ஏக சபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
 
      கூடுவோம் . . . . கூடுவோம்
      இயேசுவோடு வாழுவோம்;
      கூடுவோம் . . . . கூடுவோம்
      அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
 
2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
                                     - கூடுவோம்.
 
3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
சிறகாலே மூடிக் காத்து
மன்னா தந்து போஷிப்பித்து,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
                                     - கூடுவோம்.
 
4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே,
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
                                     - கூடுவோம்.
 
5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்;
ஜெயக்கொடி பறந்தாடும்
சாவும் தோற்றுப் பறந்தோடும்;
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
                                    - கூடுவோம்.

ஆங்கிலத்தில் பிரியாவிடைக்கு, ''Good bye" அதாவது, ''நல்லது, போய் வாருங்கள்'' என்று பொதுவாக உபயோகிக்கும் வழக்கம் உண்டு.

''இந்த  “குட்பை'' என்கிற வார்த்தை எப்படி வந்தது?  அதின் முழு அர்த்தம் என்ன?  என்று அறிந்து கொள்ள விரும்பினார் போதகர் டாக்டர் எரேமியா ஈம்ஸ்  ரான்கின்.  எனவே, ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்த்தார்.  அதில், ''குட்பை'' என்பது தேவன் உங்களோடிருப்பாராக'' (God be with you), என்ற வார்த்தைகளின் சுருக்கமே என்றும், ஒரு கிறிஸ்தவ வாழ்த்துதலாகக் கூறப்படுகிறது  என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.  இதையறிந்த டாக்டர் ரான்கின், இப்பாடலை ஒரு கிறிஸ்தவ வாழ்த்துப்பாடலாக எழுதினார்.

போதகர் ரான்கின் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள தார்ட்டனில் 1828-ம் ஆண்டு பிறந்தார்.  வெர்மோன்டின் மிடில்பரி கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, பின்னர் மசாச்சூசெட்டின் அன்டோவரில் இறையியல் கற்றார்.  பல திருச்சபைகளின்  போதகராகப் பணிபுரிந்த பின், வாஷிங்டன் க்.இ.-ல் உள்ள, நீக்ரோக்களுக்கான கல்வி நிலையமாகிய, ஹோவர்டு பல்கலைக் கழகத்தின் தலைவரானார்.  இவர் அருமையாகப் பிரசங்கம் செய்யும் தாலந்து படைத்தவர்.  எனவே, அவரது திருச்சபை துரிதமாய் வளர்ந்தது.  மாலை நேரங்களில் நற்செய்திக் கூட்டங்களும் நடத்துவார்.  இக்கூட்டங்களில் பாடுவதற்கென்றே, இப்பாடலை அவர் 1882-ம் ஆண்டு எழுதினார்.

இப்பாடல் இதற்கு அமைக்கப்பட்ட ராகத்தின் மூலம், அனைவரும் மிகவும் விரும்பிப் பாடும் பாடலாக மாறியது.  டாக்டர் ரான்கின் இப்பாடலின் முதல் சரணத்தை எழுதி முடித்தவுடன், இரண்டு இசை வல்லுனர்களுக்கு ராகம் அமைக்குமாறு கேட்டு அனுப்பினார்.  இதில் ஒருவர் புகழ்பெற்ற இசை மேதை மற்றவர், பேரும் புகழும் பெறாத சாதாரண நபர்.  இருவரும் ராகம் அமைத்து அனுப்பினார்கள்.  அவற்றில் சாதாரண நபரின் ராகத்தை விரும்பிய  ரான்கின், அதையே தெரிந்தெடுத்து, தன் நற்செய்திக் கூட்டங்களில் உபயோகித்தார்.  இந்த ராகத்தை எழுதிய அந்த சாதாரண நபர், டாமர் என்ற ஒரு பள்ளி ஆசிரியர்.

இப்பாடல் ''மூடியும் சாங்கியும்'' என்ற பாடல் தொகுப்பில் இடம் பெற்றுப் பிரபலமானது.  கவிதை நயம் நிறைந்திராவிட்டாலும், இப்பாடல் உள்ளத்தைத் தொடும் பாடலாக விளங்குகிறது.

இப்பாடலின் பல்லவியை டாக்டர் ரான்கின் எழுதவில்லை.  பாடல் புத்தகத்தைத் தொகுத்தவர் பின்னர் சேர்த்துவிட்டார்.  அப்பல்லவி, பிரியாவிடைப் பாடலாக இருந்த இப்பாடலை, பரலோக வாழ்வை எதிர்நோக்கும் பாடலாக, ''பரலோகில் இயேசுவின் பாதத்தண்டை சேரும் வரை, ஆண்டவர் உங்களோடிருப்பாராக.'' என்று வாழ்த்தும் பாடலாக மாற்றிவிட்டது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.