பாமாலைகள்

சர்வத்தையும் அன்பாய்

(Now thank we all our God)

பாடல்: மார்ட்டின் ரிங்கர்ட்

பாடல் பிறந்த கதை

 1. சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை,
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்
மா நன்றி கூறியே,
சாஷ்டாங்கம் பண்ணுவோம்.
 
2. தயாபரா, என்றும்
எம்மோடிருப்பீராக;
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக;
மயங்கும் வேளையில்
நேர் பாதை காட்டுவீர்;
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்.
 
3. வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை,
விண்ணோர் மண்ணோர் எல்லாரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற்போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே.

ஆரம்ப காலத்தில் இப்பாடலுக்குக்  கொடுக்கப்பட்ட தலைப்பு ''உணவருந்து முன் பாடவேண்டிய சிறு நன்றிப் பாடல்.''  ஆனால், கெம்பீர தொனியுடன் பாடப்படும் இப்பாடல், இங்கிலாந்து தேசம் முழுவதும் மகிழ்வுடன் உற்சாகமாகப் பாடும் கொண்டாட்டப் பாடலாக மாறியது.  கோலோன் பேராலயப் பிரதிஷ்டை ஆராதனை, விக்டோரியா மகாராணியின் ரத்தின விழா, போயர் யுத்த முடிவு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளில் பாடத் தெரிந்து கொள்ளப்பட்ட சிறப்புப் பெற்றது.

ஆனால், நன்றித் தொனியை உற்சாகமுடன் முழங்கும் இப்பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையோ, முற்றிலும் மாறுபட்டது.  அதைப் பார்ப்போமா?

23.04.1586 அன்று, ஜெர்மனியின் எய்லென்பெர்க்கில், ஓர் ஏழைத் தட்டானின் மகனாக மார்ட்டின் ரிங்கர்ட் பிறந்தார்.  சிறுவனாக இருக்கும்போதே லீப்சிக்கில்

பிரபலமான, தூய தோமாவின் ஆலயப் பாடகர் குழுவில் இருந்தார்.  பின்னர், அந்நகரப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, லுத்தரன் திருச்சபையின் ஊழியத்தில் சேர்ந்தார்.  தனது 31-வது வயதில், தன் சொந்த ஊராகிய எய்லென்பெர்க்கின் போதகராக நியமிக்கப்பட்டார்.  தன் வாழ்வின் எஞ்சிய 30 ஆண்டுகளையும், அதே இடத்தின் ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்.

ரிங்கர்ட் எய்லென்பெர்க்கில் ஊழியம் செய்த நாட்களில், ''முப்பது ஆண்டுப் போர்''  நடைபெற்றது.  எய்லென்பெர்க் ஒரு கோட்டை நகரமாக இருந்ததால், பலதரப்பட்ட அகதிகள் பாதுகாப்புக்காக அதற்குள் நுழைந்தனர்.  ஜனக்கூட்டம் அதிகமானதால், சுகாதாரமற்ற நிலையில், பல பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், அந்நகரத்தை அடிக்கடி தாக்கின.  1637-ல் நிலைமை மிகவும் மோசமாகி, அங்கிருந்த அதிகாரிகள், மற்றும் போதகர்கள் பலர் மரித்தனர்.  மற்றவர்கள்  அந்நகரத்தை விட்டு ஓடிவிட்டனர்.

எனவே, நகர மக்களைப் பராமரிக்கும் முழுப்பொறுப்பும், தனித்து நின்ற பேராயர் ரிங்கர்ட்டின் தோளில் விழுந்தது.  ஒரு நாளுக்கு 40 அல்லது 50 அடக்க ஆராதனைகளை அவர் நடத்தினார்.  பின்னர் சாவுகள் இன்னும் அதிகரிக்கவே, பொதுக்குழிகளில் பலருக்கு ஒரே நேரத்தில் அடக்க ஆராதனைகள் நடத்தலானார்.  இப்படி மரித்த 8000 பேர்களில், இவரது அருமை மனைவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தன்னைச் சுற்றியுள்ள தேவை நிறைந்த மக்களுக்குத் தொடர்ந்து உதவியதால், தன் சொந்தக் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளான, உணவு, உடை, முதலியவற்றைக் கூட சந்திக்க முடியாமல் பலமுறை வாடினார்.

இப்படிப்பட்ட  சூழ்நிலையிலும், ஆண்டவரின் சேவையில், தன் தாலந்துகள் அனைத்தையும் உபயோகிப்பதில், ரிங்கர்ட் சிறிதும் தளர்ந்து போகவில்லை.  அந்நாட்களில்,  அவர் 7 நாடகங்களையும், 66 பாடல்களையும் எழுதினார்.

யுத்தம் முடிவடையும் சமயம், எய்லென்பெர்க், ஆஸ்திரிய, மற்றும் சுவீடன் படைகளால் மூன்று முறை தாக்கப்பட்டது.  இதில் ஒரு முறை, சுவீடன் படை, இந்நகர மக்களை 30000 டாலர் பணத்தைப் பொது அபராதமாகக் கட்ட உத்தரவிட்டது.  அந்த ஏழை மக்களின் பிரதிநிதியாக, ரிங்கர்ட் அவர்களோடு சென்று, சுவீடன் படைத் தளபதியிடம் தங்கள் இயலாமையை எடுத்துரைத்தார்.  ஆனால் அத்தளபதி அபராதத் தொகையைக் குறைக்க மறுத்துவிட்டார்.  அப்போது ரிங்கர்ட், தம்முடன் வந்த ஏழைச் சபை மக்களை நோக்கி, ''என் அருமைக் குழந்தைகளே, மனிதனிடம் இரக்கத்தை எதிர்பார்த்து ஏமாந்து போகலாம்.  நம் தேவனிடத்தில் அடைக்கலம் பெறுவோம்,  வாருங்கள்.'' என்று அழைத்தார்.  முழங்காலில் நின்று, அந்த ஏழை மக்களுக்காக வேண்டி,  ஜெபத்துடன் அவர்கள் அறிந்த  ஒரு பாடலையும் அவர்களோடு சேர்ந்து பாடினார்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த படைத் தளபதி, மனமிரங்கி, அபராதத் தொகையை 2000 டாலர் என்று குறைத்தார்.  இவ்வாறு பணப்பற்றாக் குறையுடனும், பெலவீன சரீரத்துடனும் தொடர்ந்து ஊழியம் செய்த ரிங்கர்ட், தமது 61-ம், வயதில் மரித்தார்.

ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட  இப்பாடலை, 1858-ம் ஆண்டு, கத்தரின் விங்க்வொர்த் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  இப்பாடலின் சிறப்பான ராகத்தை ஜோகன் குரூகர் என்ற ஜெர்மானிய இசை ஆசிரியர் அமைத்தார்.  1647-ம் ஆண்டு, "பிராக்ஸிக் பையடாடிஸ் மெலிக்கா" என்ற ஜெர்மானியப் பாடல் புத்தகத்தில், இப்பாடல் இடம் பெற்றது. எவ்வேளையிலும் ஆண்டவரைத் துதிப்பதை, ரிங்கர்ட் தம் வாழ்க்கையின் அனுபவ சாட்சியாக இப்பாடலில் எழுதியிருப்பது, நம் அனைவருக்கும் சிறந்த சவாலாக அமைந்திருக்கிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.