பாமாலைகள்

என்னோடிரும், மா நேச கர்த்தரே,

(Abide with me)

 பாடல். ஹென்றி  F லைட்

பாடல் பிறந்த கதை

 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
 
2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
 
3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராகச் சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
 
4. நீர் கூட நின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
 
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
 
6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும், சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

"போதகர் வந்திருக்கிறார்!"

மரணப்படுக்கையிலிருந்த மனிதன் தன் கண்களைத் திறந்து, போதகரை ஆவலோடு நோக்கினான்.  போதகர் ஹென்றி லைட் தனது திருச்சபை அங்கத்தினனாகிய அந்த மனிதனுக்கு, வேத புத்தகத்திலிருந்து, பல ஆறுதல் வார்த்தைகளை எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தினார்.  சாகுந்தறுவாயிலிருந்த அந்த மனிதன், மரண பயம் நீங்கி அமைதிபெற்றான்.  சிறிது நேரம் கழித்து, போதகர் புறப்பட எழுந்தார்.

"ஐயா! என்னோடு இன்னும் கொஞ்ச நேரம் தங்கியிருங்கள்."

மரணத்தோடு போராடும் அம்மனிதனின் கெஞ்சும் குரல், போதகரைத் தடுத்தது. அவ்வார்த்தைகள் அவர் உள்ளத்தைத் தொட்டு, ஆழமாய்ப் பதிந்தது.

"இயேசு ஒருவரே, நித்திய காலமாக நம்மோடு இருப்பார்."

என்று மீண்டும் ஆறுதல் கூறி, ஜெபித்து விடைபெற்றார்  போதகர் ஹென்றி லைட்.

இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் முக்கியமானது, வெம்பிளே கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியாகும்.  அம்மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்நிகழ்ச்சியைக் காணக் கூடிவரும், சுமார் ஒரு லட்சம் மக்கள் அனைவரும் சேர்ந்து பாடுவது இப்பாடலையே. 1916-ம் ஆண்டு, பெல்ஜியத்தில் காவெல் என்ற நர்ஸ், தன்னைச் சுடுவதற்குத் தயாராகும் போர்வீரர்களுக்கு முன், தைரியமாய் நிற்க, இப்பாடல் பெலனளித்தது.  வீரன் ஷாக்கில்டன் அன்டார்க்டிக் பனிமலைகளில் மரணத்தைத் தழுவும்போது, ஆறுதல் அளித்ததும் இப்பாடல் தான்.  1912-ம் ஆண்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தில் மூழ்கிய, உல்லாசக் கப்பல் டைட்டானிக்கின் கடைசி நிமிடங்களில் பாடப்பட்ட  பாடல்களில் இதுவும் ஒன்று.  போலந்தின் யுத்த கைதிகளின் முகாம்களில், ஞாயிறு மாலை நேரத்தில், இப்பாடலை விரும்பிப் பாடி, தூர தேசங்களில் இருக்கும் தங்கள் அருமைக் குடும்பங்களோடு, நெருங்கிச்சேர்ந்த உணர்வைப் பெற்ற கைதிகள் அநேகர்.

இப்படிப்பட்ட அருமையான இப்பாடல் உருவானதின் பின்னணியைப் பார்ப்போமா?

இப்பாடலை எழுதிய போதகர் ஹென்றி பிரான்சிஸ் லைட், 01.06.1793 - அன்று, ஸ்காட்லாந்தில் உள்ள எட்னாம் என்ற ஊரில் பிறந்தார்.  ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்த ஹென்றி, சிறுகுழந்தையாக இருக்கும்போதே அனாதையானார்.  அயர்லாந்தில் மாணவர் பள்ளியிலும், பின்னர் டப்ளின் திரித்துவக் கல்லூரியிலும், பலரது உதாரத்துவ உதவியுடன், வறுமையோடு போராடிக்கொண்டே, படித்து முடித்தார்.

தனது 21-வது வயதில், ஆங்கிலிக்கன் திருச்சபையின் முழுநேர ஊழியராகி, அயர்லாந்திலுள்ள  ஒரு சிறு திருச்சபையின் போதகரானார்.  தினசரி காலை- மாலை  ஆராதனைகளையும்,  ஞானஸ்நானம், திருமணம் மற்றும் அடக்க ஆராதனைகளையும், சடங்காச்சாரங்களுடன் நடத்தும் திறமையான பாதிரியாரானார்.  ஆனால் இவற்றைத் தன்மேல் விழுந்த கடமையாக மட்டுமே கருதிய லைட், புத்தகங்கள் வாசிப்பதிலும், விளையாடுவதிலும் நேரத்தைச் செலவிட்டுவந்தார்.

அருகிலுள்ள கிராமத்தில் இவரைப் போலவே வாழ்ந்து  வந்த போதகர் ஒருவர் மரணப்படுக்கையிலிருந்தார்.  அவர் ஹென்றியை அவசரமாய்த் தன்னிடம் அழைத்து, தன் ஆத்தும வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.  பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிராத அப்போதகர், சாவதற்குத் தயாராக இல்லை.  இரட்சிப்படைவது எப்படி, என்று இருவரும் சேர்ந்து வேதபுத்தகத்தை ஆராய்ந்தபோது,  தேவ ஆவியானவர் வேத வசனங்களின் மூலம் அவர்களோடு பேசினார்.  இருவரும் ரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றனர்.  மகிழ்வுடன் மரித்த அந்தப் போதகரின் நிம்மதியான முடிவு, ஹென்றியை இன்னும் ஆழமாக வேதத்தைத் தியானிக்கச் செய்தது.  அது முதல் அவரது அருளுரைகள், உள்ளான அனுபவத்தின் பிரதிபலிப்பாக மாறின.

இந்நிலையில், ஹென்றி லைட் தொடர்ந்து சுகவீனமாகி, ஆஸ்துமா நோயாளியானார்.  பல சிற்றாலயங்களில் மாறிமாறிப் பணியாற்றினார்.  கடற்கரைப் பகுதியிலுள்ள கீழ் பிரிக்ஸ்ஹாமின் சூரிய வெளிச்சமும் வெப்பநிலையும் அவரது உடல்நிலைக்குச் சாதகமாக இருந்ததால், 1823-ம் ஆண்டு அவ்வூரின் ஆலயப் போதகரானார்.  கிராம மக்கள், மீனவர்கள், போர்வீரர்கள் அடங்கிய   இத்திருச்சபையின் சேவைக்கே, தன் வாழ்வின் மீதியான 24 ஆண்டுகளை அர்ப்பணித்தார்.  தனது சமுதாய மேன்மை, நாகரீகம் அனைத்தையும், இப்பணிக்காக இழந்துபோன ஹென்றி லைட், தன் முதல் பாடலாக, "இயேசுவே, என் சிலுவையை நான் எடுத்துக் கொண்டேன்," என்று எழுதினார்.

பள்ளிக்கூடங்கள் மிகக்குறைவாக இருந்த அந்நாட்களிலேயே 800 பிள்ளைகளடங்கிய ஞாயிறு பள்ளியைத் துவக்கி, அதின் 70 ஆசிரியர்களுக்கும்  பயிற்சி அளித்தார்.  இந்த ஆலயத்தின் சிறுவர், மீனவர், மற்றும் வேதனையிலுள்ளவர்களுக்கென்று அவர் எழுதிய பாடல்களே, பின்னர் உலகப் பிரசித்தியாயிற்று.

தன் தியாக அன்பால், தனது திருச்சபை மக்களைக் கவர்ந்த லைட்டின் ஞாயிறு ஆராதனையில் ஆலயம் நிரம்பி வழிந்தது.  சுறுசுறுப்பான, முரட்டாட்ட சுபாவமுள்ள அம்மக்களின் தவறான நடத்தைகளிலிருந்து அவர்களை மாற்ற, லைட் பல முயற்சிகளை எடுத்தார்.  மீனவர்களின் படகுகளுக்குச் சென்று, உற்சாகப்படுத்தி, அச்சிறு துறைமுகத்திற்கு வரும் அனைத்துக் கப்பல்களிலும், வேத புத்தகத்தை வைக்க ஏற்பாடு செய்தார். அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடினார்.

ஹென்றி ஒரு புதிய ஆராதனை முறையைக் கையாண்டு, பாடகர் குழு ஒன்றையும் ஆரம்பித்துப் பயிற்சி அளித்தார்.  ஆராதனையில் அனைவரும் ஆண்டவரைத் துதித்து உற்சாகமாகப் பாட, "ஆத்மமே,  உன் ஆண்டவரின்," என்ற துதிப்பாடலைத் தன் வியாதியின் மத்தியிலும் எழுதி, அதற்கான ராகத்தையும் அமைத்தார்.

லைட்டின் அயராத உழைப்பால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.  1844-ம் ஆண்டு, மிகவும் சுகவீனமடைந்தார். அது முதல், குளிர்கால நாட்களை பிரெஞ்சு ரிவேராவில் கழிக்கலானார்.  இந்த இறுதிப் பத்தாண்டுகளில், ஹென்றி லைட் பல வேதனையூட்டும் அனுபவங்களைச் சந்தித்தார்.  அவர் விடுமுறையில் சென்ற நாட்களில், அவரது திருச்சபையில் பல வேறுபாடுகள் தோன்றி, சில அங்கத்தினர்கள் சபையை விட்டு வெளியேறி, பிளைமவுத் பிரதரனில் சேர்ந்தனர்.  அவருடைய பாடல் குழுவும் உடைந்தது.

இந்நிலையில், கடைசி முறையாக, 1847-ம் ஆண்டின் வேனிற்காலத்தில், தன் திருச்சபைக்கு மீண்டும் ஊழியம் செய்ய வந்தார். அப்போது, தன் வாழ்க்கையின் இறுதி நிலைக்குத் தான் வந்துவிட்டதை உணர்ந்தார்.  54 வயதே நிரம்பிய அவர், தனக்கு அருமையாயிருந்த அந்த மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, நிரந்தரமாக உதவும் வண்ணம், ஒரு பாடல் எழுத விரும்பினார்.

1847-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வேனிற்காலம் முடியும் நேரம், மீண்டும் ஹென்றி தன் திருச்சபை மக்களைவிட்டுப் பிரிய வேண்டிய  தருணம் நெருங்கியது. புறப்படுமுன், மீண்டும் ஒருமுறை ஆலய ஆராதனையில் செய்தி கொடுக்க விரும்பினார்.  மிகுந்த பெலவீனத்துடன் இருந்ததால், 04.09.1847 அன்று ஞாயிறு காலை ஆராதனையில், தன் கடைசிச் செய்தியை அளிக்க, பிரசங்க மேடைக்கு ஏறிச் செல்லவும் அவருக்குப் பெலனில்லை.  அவருடைய குடும்பத்தினர் அவரது நிலையைக் கண்டு தயங்கினர்.  எனினும், "என்ன நேர்ந்தாலும் கவலையில்லை," என்ற உறுதியோடு, பரிசுத்த நற்கருணையைப் பற்றிச்  செய்தி அளித்து, அதைச் சபையோருக்குப் பரிமாறுவதிலும் உதவி செய்தார்.

அந்தக் கடைசி ஞாயிறு மாலை, தன் வீட்டிற்கு முன்பாக இருந்த பள்ளத்தாக்கில் உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றார்.  நல்ல மாலை நேர சூரிய வெளிச்சத்தில், ஒரு கற்பாறையின் மீது  அமர்ந்து, போதகர் ஹென்றி லைட் இப்பாடலை எழுதினார்.  மாலை மயங்கிய பின், தன்  அறைக்குச் சென்றார்.

அன்று மாலை அவருடைய திருச்சபை மக்களில் அநேகர், போதகரின் சுகத்திற்காக  ஜெபித்துக்   கொண்டிருந்தனர்.  அவரோ, இளைப்பாறாமல், தன் அறையில், தான் அன்று மாலை எழுதின பாடலுக்கு, இறுதி மாற்றங்களைச் செய்தார்.  உடனே, அதை அச்சுப் பதிவு செய்து, பிரதிகளையும் தயார் செய்தார்.  மறுநாள், தனது திருச்சபையின் அங்கத்தினர்களுக்குத் தன் ஞாபகார்த்தப் பரிசாக வினியோகித்தார்.

பின்னர், தனது திருச்சபை மக்களிடம் பிரியாவிடை பெற்று, இளைப்பாற, இத்தாலிக்கு அன்றே பயணமானார்.   பிரான்சின் நைஸ் பட்டணம் வரை அவர் பிரயாணம் செய்தார்.  அங்கே, தன் இரு கரங்களையும் வானத்திற்கு நேராக உயர்த்தி, "சமாதானம்! சந்தோஷம்!" என்ற கடைசி  வார்த்தைகளுடன் 20.11.1847 அன்று ஹென்றி லைட் கர்த்தரின் இராஜ்ஜியத்தில் சேர்ந்தார்.  அங்கே அவரை அடக்கம் செய்தனர்.

டாக்டர் வில்லியம் ஹென்றி மங்க் இப்பாடலுக்கான, "மாலை அலை," என்ற அருமையான ராகத்தை, தன் வாழ்வின் மிகவும் சோகமான சூழ்நிலையில், மாலைக் கதிரவன்  மறையும் வேளையில், பத்தே நிமிடங்களில் உருவாக்கினார்.

இப்பாடல், பல ஆலயங்களில், மாலை ஆராதனையின் முடிவுப்பாடலாகப்  பாடப்படுகிறது.  எனினும், இப்பாடலின் முக்கிய  கருத்து, "வாழ்க்கையின் அந்தி நேரம்," என்பதே.  இப்பாடல், எம்மாவூர் சென்ற சீஷர்கள், மாலை மயங்கும் வேளையில், உயிர்த்தெழுந்த ஆண்டவரை, "எங்களோடு இராத்தங்கும்," என்று வேண்டிக்கொண்ட வேத பகுதியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.  மிகவும் கருத்து மிக்க, உள்ளமுருகும் பாடலானதால், இதை அமெரிக்காவில் 1855-ம் ஆண்டு வெளியிட்டபோது, "இது பாடுவதற்காக அல்ல, வாசிப்பதற்கே."  என்று அறிமுகம் செய்தனர்.

"உபயோகமின்றித் துருப்பிடித்து அழிவதைக்  காட்டிலும், தொடந்து உபயோகிக்கப்பட்டுத் தேய்ந்து போவதே மேல்," என்ற தமது சொல்லுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் ஹென்றி லைட் ஆவார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.