எல்லாருக்கும் மா உன்னதர்
(All hail the power)
பாடல் பிறந்த கதை
இந்தியாவுக்கு முன்னோடி மிஷனரியாக வந்த E.P.ஸ்காட், ஒருமுறை ஒரு பாதையில் தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடிரென்று, ஒரு ஆதிவாசிகளின் கொலைக்கூட்டம், ஈட்டிகளுடன் அவரைச் சூழ்ந்து கொண்டது. என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த ஸ்காட், உடனடியாகத் தன் பெட்டியைத் திறந்து, வயலின் இசைக்கருவியை எடுத்து, அதை மீட்டிக்கொண்டே, இப்பாடலைப் பாட ஆரம்பித்தார். மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த ஆதிவாசிகள், அவர், ''எல்லா ஜனங்களும் எல்லா ஜாதிகளும், '' என்ற சரணத்தைப் பாடும்போது, தங்கள் ஈட்டிகளைத் தாழ்த்திக் கொண்டு, கண்ணீர் மல்க நின்றனர். பின்னர், அவர்களுக்கு அவர் நற்செய்தியை எடுத்துக் கூறினார். இவ்வாறு, அந்த நாளிலே, எளிமையான, கருத்துச் செறிந்த இப்பாடலைக் கொண்டு, மிஷனரியின் உயிரைக் காத்ததுடன், நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்கும் வாய்ப்பையும் ஆண்டவர் அளித்தார்.
இப்பாடல் ''கிறிஸ்தவ ராஜ்ஜியத்தின் தேசிய கீதம்'' என்று அழைக்கப்படுகிறது. இது, ''பிளவுண்ட மலையே,'' என்ற பிரபல பாடலை எழுதிய, அகஸ்டஸ் டாப்லடி வெளியிட்ட நற்செய்திப் பத்திரிக்கையில் முதலாவது அறிமுகமானது. கிறிஸ்தவம் பரவிய அனைத்து மொழிகளிலும் இப்பாடல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ''கிறிஸ்தவர்கள் இவ்வுலகத்தில் இருக்கும்வரை, இப்பாடல் தொடர்ந்து பாடப்படும். பின்னர், பரலோகத்தில் இது தொடரும்.'' என்று ஒரு எழுத்தாளர் எழுதினார்.
இச்சிறந்த பாடலை எழுதிய எட்வர்டு பெரோனெட், இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள சன்டிரிட்ஜ் என்ற இடத்தில், 1726-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய மூதாதையர் பிரான்ஸ் நாட்டின் மதக்கலவரத்தால் நேரிட்ட துன்புறுத்தலினால், சுவிட்சர்லாந்துக்கும், பின்னர் இங்கிலாந்துக்கும் ஓடி வந்த, பிரபல பிரெஞ்சு ஹீகுநாட் குடும்பத்தினராவர். இங்கிலாந்து திருச்சபையின் போதகரான இவர் தந்தை, வெஸ்லி, வொயிட்பீல்டு ஆகிய பிரசங்கியார்களின் நற்செய்தி இயக்கப் பணியை ஆதரித்தார். அவர் லண்டனிலிருந்து 20 மைல் தூரத்திலிருந்த, ஷோர்காம் என்ற அழகிய கிராமத்தின் ஆலயப் போதகராக ஊழியம் செய்தார்.
தந்தையைப் போல திருச்சபை போதகரான எட்வர்டு, திருச்சபையின் மந்த நிலையை வெறுத்தார். ஒருமுறை அவர், ''நான் இங்கிலாந்து திருச்சபையின் ஐக்கியத்தில் வளர்ந்து, அதிலேயே மரிக்கப் போகிறேன். ஆனால், இத்திருச்சபையின் அர்த்தமில்லாத நடத்தைகளை வெறுக்கிறேன்,'' என்று எழுதினார்.
வாலிபனான எட்வர்டுக்கு, ஜான் வெஸ்லியின் மீது, மிகுந்த மதிப்பும், உயர்வான எண்ணமும் இருந்தது. எனவே, அவர் திருச்சபை ஊழியத்தை விட்டு விலகி, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக, வெஸ்லியின் ஊழியங்களில் தீவிரமாக ஈடுபட்டார். பவுலுக்கு தீமோத்தேயு போல, வெஸ்லிக்கு எட்வர்டு இருந்தார். வெஸ்லியின் ஊழியங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்புத் தோன்றிய அந்நாட்களில், எட்வர்டு வைராக்கியமாக இவ்வூழியங்களில் முன்நின்று செயல்பட்டார். ஒருமுறை போல்டன் என்ற ஊரில் அவர் தாக்கப்பட்டு, சேற்றிலும் சகதியிலும் புரட்டி எடுக்கப்பட்டார்; கல்லெறிபட்டார்.
ஒருமுறை ஜான் வெஸ்லி,'' அடுத்த கூட்டத்தில், வாலிபனான எட்வர்டு பெரோனெட் பேசுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார். தன்னைவிட 18 வயது மூத்த, சிறந்த பிரசங்கியாராகிய ஜான் வெஸ்லியின் முன்னிலையில் பேச விரும்பாத பெரோனெட் அடுத்த கூட்டத்தில், ''நான் பிரசங்கிக்க ஒத்துக்கொள்ளவே இல்லை. எனினும், இவ்வுலகின் மிகச் சிறந்த பிரசங்கத்தை, இப்போது தரப்போகிறேன் '' என்று கூறி, மலைப் பிரசங்கத்தை வேதாகமத்திலிருந்து வாசித்து விட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தார்.
வெஸ்லியின் ஊழியங்களில் பெரோனெட் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த போதும், தனித்தன்மை உள்ளவராக விளங்கினார். ஒருமுறை வெஸ்லி, "மெதடிஸ்டுகளுக்குள் போதகர்கள் தவிர, மற்ற பிரசங்கிமார் நற்கருணை கொடுக்கலாகாது," என்று தீர்மானம் எடுத்தபோது, அதை எதிர்த்து, அவருடைய ஊழியத்திலிருந்து விலகினார். பின்னர் ஹன்டிங்டன் சீமாட்டியின் ஆலயப் போதகர்களில் ஒருவராக ஊழியம் செய்தார். அவருடைய பிரசங்கங்களில், திருச்சபையின் அவல நிலையைப் பற்றி மிகவும் கடிந்துரைப்பதை அச்சீமாட்டி விரும்பாததால், அங்கிருந்தும் அவர் விலகி, கேன்டர்பரியிலிருந்த ஒரு தனிப்பட்ட சிற்றாலயத்தின் போதகரானார்.
உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் ஊழியம் செய்த பெரோனெட்டுக்கு, பாட்டு எழுதுவது தானாகவே வந்த கலையாக இருந்தது. அவர் பல பாடல்களைப் புனைப்பெயரில் எழுதியபோதும், அவரது பாடல்களில் இப்பாடல் ஒன்றே இன்றும் உபயோகத்திலிருக்கிறது. இப்பாடலை அவர் தனது 58-வது வயதில், கேன்டர்பரியில் ஊழியம் செய்யும்போது எழுதினார் என்று கருதப்படுகிறது.
இப்பாடல், உயிர்த்தெழுந்த ஆண்டவரை வாழ்த்திப் பாடுவதாக எழுதப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் உன்னதத்திற்கு ஏறி, மகிமையின் நித்திய சிங்காசனத்தில் அமரும்போது, இறைவன் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றும் வந்து அவரை வாழ்த்திப் பாட, இப்பாடலாசிரியர் அழைக்கிறார்.
இப்பாடலுக்கு மூன்று அழகான ராகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாசாச்சூசெட்டில் தச்சுவேலை செய்த ஆலிவர் ஹோல்டன் என்ற இசை ஆசிரியர், ''காரனேஷன்'' என்ற ராகத்தை அமைத்தார். பெரோனெட்டின் நண்பரும், அவரது கேன்டர்பரி பேராலயப் பாடகருமான, வில்லியம் ஷ்ரப்சோல் எழுதிய ''மைல்ஸ் லேன் '' என்ற ராகம், இங்கிலாந்தில் அனைவராலும் பாடப்படுகிறது. பின்னர், 1838-ம் ஆண்டு, ஜேம்ஸ் எல்லோர் என்ற ஆங்கிலேயரால் விழாக்காலங்களுக்கென்று அமைக்கப்பட்ட ''டையடெம்'' என்ற ராகம், பாடகர் குழுக்கள் விரும்பிப் பாடும் சிறப்பு ராகமாகக் கருதப்படுகிறது.