பாமாலைகள்

எந்தன் ஜீவன் இயேசுவே

(Take my life and let it be)

 பாடல்: F.R. ஹேவர்கல்

பாடல் பிறந்த கதை

 1. எந்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே;
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.
 
2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்.
 
3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.
 
4. எந்தன் ஆஸ்தி, தேவரீர்,
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்.
 
5. எந்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்து விட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.
 
6. திருப்பாதம் பற்றினேன்;
எந்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

"சகோதரி, நீங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்."

என 42 வயதே நிரம்பிய ஹேவர்கலைப் பார்த்து வருத்தத்துடன் கூறினார் அவளது வைத்தியர்.

அவளோ, பதிலுக்கு மகிழ்ச்சியுடன், "நான் உண்மையாகவே சீக்கிரம் இவ்வுலகை விட்டுப் போகப் போகிறேன் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான செய்தி!" என்று கூறினாள்.

படுத்த படுக்கையாகப் பல ஆண்டுகள் இருந்தபோதும், அவள் விரும்பிய, "தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" என்ற வேத வசன அட்டையைத் தன் படுக்கைக்கருகே, எளிதில் பார்க்கும் வண்ணம் வைத்திருந்தாள். மரணம் சந்தித்தபோது, "பரலோக வாசலருகே நிற்பது எத்தனை அருமையாக இருக்கிறது!" என்று மகிழ்ச்சியுடன் கூறியபடி மரித்தாள்.

பிரான்சிஸ் ரிட்லி ஹேவர்கல் இங்கிலாந்திலுள்ள அஸ்ட்லி என்ற இடத்தில் 14-12-1836 அன்று பிறந்தார். ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய ஹேவர்கல் "அர்ப்பணப் பாடகி" என அழைக்கப்படுகிறார். ஏனெனில், அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும், விசுவாசம், அர்ப்பணம், ஊழியம் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. தன் வாழ்க்கையிலும் ஹேவர்கல் இக்கருத்துக்களை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார்.

ஹேவர்கலின் தந்தை வில்லியம் ஒரு எளிமையான ஆங்கிலிக்கன் போதகர். அவர் ஒருமுறை வண்டியில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில், அடிபட்டு ஊனமானார். சுமார் 20 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆலய இசை வளர்ச்சிக்கென, வில்லியம் தன் தாலந்துகள் அனைத்தையும் செலவிட்டார். தந்தை வழி வந்த மகளும் சிறுவயதிலிருந்தே தாலந்து மிக்கவளாக விளங்கினாள்.

ஹேவர்கல் மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தாள். தனது ஏழாவது வயதிலேயே தன் கருத்துக்களைக் கவிதையாக எழுதினாள். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகளைக் கற்று, பின்னர் கிரேக்க, எபிரேய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றாள். 43-வது வயதிலேயே மரித்த ஹேவர்கல், தனது சொற்ப வாழ்நாட்களிலேயும், தொடர்ந்து பெலவீனமானவளாகவே இருந்தாள். எனினும், மனந்தளராது, படிப்பதிலும், எழுதுவதிலும், இசை அமைப்பதிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டாள்.

வாலிப மாணவியாக சுவிஸ் ஆல்ப்ஸ் மலைமீது கூட ஏறிய ஹேவர்கல், பின்னர் நோயால் தாக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் கடைசி 21-ஆண்டுகளை சக்கர நாற்காலியில் கழித்தாள். சுகவீனத்தின் மத்தியிலும், இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும், பின்னர் சுய முயற்சியாலும், தொடர்ந்து படித்து முன்னேறினாள். வாலிபப்  பெண்ணாக இருக்கும்போதே முழு புதிய ஏற்பாட்டையும், சங்கீதங்கள் அனைத்தையும், ஏசாயாவையும் மனப்பாடம் செய்து முடித்தாள்.

சிறுவயதில் ஹேவர்கல் மரணத்தைப்பற்றிப் பயம் கொண்டவளாக, ஆண்டவர் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவாரோ, என்ற ஐயம் கொண்டவளாக இருந்தாள். ஆனால், தன் வாலிப வயதில் ரட்சிப்பின் அனுபவம் பெற்றபின், சந்தோஷம் நிறைந்தவளாக, கனிகொடுக்கும் வாழ்க்கையை நடத்தினாள். இசையில் தாலந்து படைத்த ஹேவர்கல், இனிமையான குரல் வளம் உடையவள். நன்றாகப் பாடும் திறமையும் மிக்கவள். எனவே, இசை நிகழ்ச்சிகளில் சிறப்புப் பாடகியாகவும், அருமையாக பியானோ இசைப்பவளாகவும் விளங்கினாள்.

தன் வாழ்க்கையை ஆண்டவருக்கென்று முழுவதுமாக அர்ப்பணம் செய்த ஹேவர்கல், 1873-ம் ஆண்டு முதல், இயேசுவைப் புகழ்ந்து பாடுவதற்கு மட்டுமே, தன் தாலந்துகள் அனைத்தையும் உபயோகித்தாள். 1874-ம் ஆண்டு லண்டனிலுள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்று 5 நாட்கள் தங்கினாள், அதிக நாட்களாக அநேகர் ஜெபித்தும், அவ்வீட்டிலிருந்த 10 பேரில் சிலர், ஆண்டவரை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளாமலிருந்தனர். ஆண்டவரை ஏற்றுக் கொண்ட மற்றவரும் மகிழ்ச்சியின்றி, சோர்வுடன் இருந்தனர்.

"ஆண்டவரே, இவ்வீட்டிலுள்ள அனைவரையும் எனக்குத் தாரும்," என்று ஹேவர்கல் ஜெபித்தாள். அவளது  வேண்டுதலின்படியே, அவள் தங்கியிருந்த அந்த 5 நாட்களுக்குள், ஆண்டவர் அந்த 10 நபர்களின் உள்ளங்களில் கிரியை செய்து, இரட்சிப்பின் புது ஆசீர்வாத அனுபவத்திற்குள் நடத்தினார். ஹேவர்கல் அங்கு தங்கியிருந்த கடைசி நாள் இரவில், அவள் படுக்கைக்குச் சென்றபின்தான், இன்னும் குணப்படாமலிருந்த கடைசி இரு வாலிபப் பெண்களையும்  ஆண்டவர் சந்தித்துப் பேரானந்தத்தால் நிரப்பினார்.

இதைப் பார்த்த ஹேவர்கலுக்கு, மகிழ்ச்சியின் மிகுதியால் அன்றிரவு தூக்கமே வரவில்லை. தன் விண்ணப்பத்தைக் கேட்டுப் பதிலளித்த ஆண்டவருக்கு, தன்னை மீண்டும் ஒருமுறை அர்ப்பணித்து ஜெபித்துக் கொண்டிருந்தாள். அப்போது, "என் அனைத்தையும் தத்தம் செய்தேன் நித்தமாய்" என்ற வார்த்தைகள் ஒவ்வொன்றாக அவள் உள்ளத்தில் வந்து சேர்ந்து, இப்பாடலுக்கு மையக்கருத்தை அளித்தன.

இப்பாடலை எழுதிய ஹேவர்கல், இதிலுள்ள ஜெபமாகிய, "எந்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கிகரிப்பீர்." என்பதைத் தன் வாழ்க்கையில் செயல்படுத்தினாள். தன்னிடமிருந்த விலையுர்ந்த ஆபரணங்கள் அனைத்தையும், திருச்சபையின் ஊழியத்திற்குக் கொடுத்துவிட்டாள்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சிசர் மலன் என்ற போதகர் அமைத்த "ஹென்டன்" என்ற ராகம் இப்பாடலுக்குப் பொருத்தமாக  அமைந்தது. இப்போதகர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும், ராகங்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. "அருள் நாதா, நம்பி வந்தேன்," என்ற பிரபல பாடலும் ஹேவர்கல் எழுதிய பாடல்களில் ஒன்றாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.