அமர்! அமைதியாய்!
(Peace! Be Still!)
பாடல் பிறந்த கதை
அலைகளும் பொங்குதே
கார்மேகத்தால் வானம் இருண்டதே
புகலிடமில்லையே
மாள்கிறோம்; கவலையின்றி
உறங்கலாமோ நீர்?
ஒவ்வோர் கணமும் திகில் சூழ்ந்திடுதே
ஆழ் கடலில் ஆழ்வோமோ?
காற்றும் அலையும் என் சித்தம் போல்
அமருமே அமைதியாய்
புயல் கொந்தளிக்கும் கடல் தானோ
பேயோ மானிடனோ மற்றெதுவோ
வான் புவி ஆழிகளின் ஆண்டவர்
உறங்கிடும் ஓடத்தையே
விழுங்கலாகாது; கீழ்ப்படிந்தே
அமருமே அமைதியாய்
அருமையாய் அவை கீழ்ப்படியும்
அமர்! அமைதியாய்!
2. ஆண்டவா ஆவி கலங்கி
தவிக்கிறேன் இன்றே
துயர் உள்ளத்தின் ஆழம் குமுறுதே
எழுந்து காருமே
பாவப் பெருக்கும் தத்தளிப்பும்
புரளுதென் ஆன்மாவில்
அமிழ்ந்தேன் அமிழ்ந்தேன் அன்பின் நாதா
விரைந்தென்னை ஆட்கொள்ளுமே
- காற்றும் அலையும்
3. ஆண்டவா திகில் ஓய்ந்ததே
இயற்கை அமர்ந்ததே
ஆதவன் ஒளி அக்கடலில்
விண்ணொளி என் உள்ளத்தில்
மீட்பரே என்னோடு தங்கும்
விலகாதீர் என்றும்
ஆனந்தமாய் அக்கரை சேர்வேன்
இளைப்பாறி சுகிப்பேன்.
- காற்றும் அலையும்
"ஆண்டவர் நல்லவராம்! என்னை நேசிப்பவராம்! கைவிடவே மாட்டாராம்! இப்படிக் கூறும் வேத புத்தகத்தை நான் நம்ப வேண்டுமாம்!''
பொங்கி எழும் தன் உள்ளக் குமுறலின் உணர்ச்சி அலைகளோடு போராடிக் கொண்டிருந்தாள் வாலிபப் பெண்ணான மேரி பேக்கர். மேரி பேக்கரின் பெற்றோர் எலும்புருக்கி நோயாளிகள். அவளது தம்பியையும் தங்கையையும் வளர்க்கும் பொறுப்பை மேரியின் கரத்தில் கொடுத்துவிட்டு, சீக்கிரமே மரித்துப் போனார்கள். அமெரிக்காவின் சிக்காகோ மாநகரில் தனது கடின உழைப்பினால் குடும்பத்தைப் பராமரித்து வந்தாள் மேரி.
இந்த வாலிபப் பெண்ணின் வாழ்வில் மற்றுமொரு சூறாவளி! அவளுடைய அருமைத் தம்பியையும் எலும்புருக்கி நோய் தாக்கியது. எப்படியாவது தன் ஒரே தம்பியைக் காப்பாற்ற வேண்டுமென மேரி முயற்சித்தாள். தென் அமெரிக்காவில் உள்ள பிளாரிடாவின் சூரிய ஒளியும், வெப்ப நிலையும் அவனைச் சீக்கிரம் குணமாக்கும் எனப் பலர் ஆலோசனை கூறினர். எனவே, தன்னால் சேமிக்க முடிந்த பணமனைத்தையும் சேர்த்து, தன் தம்பியை அங்கு அனுப்பி வைத்தாள்.
ஆனால், பிளாரிடாவில் தம்பியின் உடல்நிலை சில நாட்களுக்குள் மிகவும் மோசமடைந்தது. அயராது உழைத்த மேரியோ சிக்காகோவில் சுகவீனமானாள். எனவே, மேரிக்கு பிளாரிடா செல்ல பெலனுமில்லை; பணமுமில்லை. இரு வாரங்களில் அவள் நேசித்த ஒரே தம்பி ஆயிரம் மைல்களுக்கப்பால் தனிமையில் அனாதையாய் மரித்துப் போனான். பயணச் செலவுக்கும் பணமில்லாததால் தன் தம்பியின் சடலத்தைப் பார்க்கவோ, அடக்க ஆராதனையில் கலந்துகொள்ளவோ மேரியால் முடியவில்லை. தவித்துப் புலம்பினாள்.
மேரி ஒரு கிறிஸ்தவள் தான். ஆனால், அவளது வாலிப வயதில் தொடர்ந்து புயல்போல் தாக்கிய இச்சோதனைகளால் மனக்கசப்பு அடைந்தாள். தேவனின் அன்பு, பராமரிப்பு என்பவற்றை நம்ப, அவள் உள்ளம் மறுத்தது. அவரையே வெறுக்குமளவிற்கு எதிர்ப்புணர்ச்சி தலை தூக்கியது. அமைதியின்றி, வேதனையுற்ற அவள் உள்ளம் அலை மோதியது.
அந்நிலையில், தன்னோடு மெல்லிய சத்தத்தில் பேசும் ஆண்டவரின் அன்புக்குரலை மேரி கேட்டாள். அதன் பின்னர், ஒரு புதிய ஆழமான சமாதானத்தையும், நல் நம்பிக்கையையும் அடைந்தாள்.
சில வாரங்கள் சென்றபின், அவளது ஆலயப் போதகர் டாக்டர் பால்மர் மேரியைச் சந்தித்தார். ஆலய ஞாயிறு பள்ளியில் போதிக்கப்படும் சில பாடங்களின் கருத்தமைந்த பாடல்களை அவள் எழுத வேண்டுமென்று கேட்டார். அப்பாடங்களில் ஒன்று "இயேசு புயலை அமர்த்தும் சம்பவம்'' இத்தலைப்பில் பாடலை எழுதத் துவங்கிய மேரி பேக்கர், அந்நிகழ்ச்சியைத் தன் வாழ்வின் அனுபவ சாட்சியாகவே உணர்ந்து எழுதினாள். தன் உள்ளத்தில் வீசிய புயலை, ஆண்டவர் எவ்வாறு அற்புதமாக அமைதியாக்கினார், என்ற மேரி பேக்கரின் இந்த சாட்சிப் பாடல், அநேகரின் வாழ்க்கைப் புயலில் அமைதியையும், ஆறுதலையும் இன்றும் அளிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கீழே குறிப்பிடுகிறோம்.
1995-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினம். தஞ்சாவூரில், அதற்கு சில நாட்களுக்கு முன் தன் அருமை கணவனை இழந்த ஒரு சகோதரி, துயரம் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டேயிருந்தார். அவரை ஆற்ற முடியாமல் தவித்த அவர் தம்பி அதை எங்களுடன் வேதனையோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் அவர் வீட்டிற்கு உடனே சென்று, இப்பாடலின் பின்னணியத்தைக் கூறிப் பாடி முடித்தபோது, மேரி பேக்கரின் சாட்சியின் மூலம் ஆண்டவர் அச்சகோதரியைத் தேற்றி அவருக்கு ஆறுதல் அளித்தார்.
இச்சகோதரியும் அடுத்த வருடமே வியாதியால் மரித்தபோது, அவரது பிள்ளைகளை ஆண்டவர் கைவிடாது, அருமையாய் பராமரித்து வழி நடத்துவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து, வேதனையின் மத்தியிலும் தேவன் தரும் உன்னத சமாதானத்தை உணர்ந்து கொண்டோம்.