பாடல் பிறந்த கதை
மரியான் உபதேசியார் எளிய வாழ்வை மேற்கொண்டவர். பார்ப்பவர்கள் அவரை ஓர் ''ஏழைப் பரதேசி '' என எண்ணுமளவிற்கு, தாழ்மைக் கோலம் கொண்டவர். ஆண்டவருக்காக உற்சாகமாகப் பல இடங்களில் பணியாற்றினார். பல இனிய பாடல்களை, அவர் தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி ததும்ப எழுதினார்.
கடந்த நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்த மரியான் உபதேசியார், கொடிய தொழுநோயால் பீடிக்கப்பட்டார். எனினும், ஆண்டவர் பேரில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, சிறிதும் குறைந்து போகவில்லை. தொடர்ந்து நற்செய்திப் பணிகளை, உற்சாகமாய்ச் செய்து வந்தார்.
ஒருமுறை, அவர் பணியாற்றிய திருச்சபையின் மூப்பர் ஒருவர், அவருடன் ஒத்துழைக்க மறுத்தார். மாறாக, அவருக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அதனால், திருச்சபையின் வழிபாட்டில் கலந்து கொள்வதையும் நிறுத்தி விட்டார். இதை அறிந்து துயருற்ற மரியான், ஒரு ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிற்குச் சென்றார். அவரைத் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ளுமாறு, வருந்தி அழைத்தார். அந்நிலையில் அவர் உள்ளத்தில் எழுந்ததே இப்பாடல். இந்த அருமையான பாடலை, மரியான் உருக்கமாகப் பாடினார். அதைக் கேட்ட அந்த மூப்பர், உடனே மனம் மாறி, மன்னிப்புக் கேட்டு, அந்நாளின் நற்கருணை ஆராதனையில் கலந்து கொண்டார்.
''சுந்தரப் பரம தேவ மைந்தன்'' போன்ற பல துதிப் பாடல்களையும், மரியான் உபதேசியார் இயற்றியிருக்கிறார். ''கிறிஸ்துவுக்குள் அனைவரும் சகோதரர்; எனவே, திருச்சபையில் சாதி வேற்றுமை பாராட்டுவது தவறு,'' என்று ஆணித்தரமாய் எடுத்துக் கூறினார். அவர் வாழ்ந்த காலத்தில், பரவலாக நிலவிய இச்சீர்கெட்ட பழக்கத்தைக் கடிந்து, சமுதாயச் சீர்திருத்தவாதியாக விளங்கினார்.
இயேசுவின் மந்தையில் சேராத மற்றவர்களும், அவரது தியாக அன்பை அறியவேண்டுமென, மரியான் விரும்பினார். எனவே, அவர் நற்செய்திப் பணியில் துரிதமாக ஈடுபட்டார். தாம் பணியாற்றிய சிற்றூரில் ஓர் ஆலயம் கட்ட, தீவிர முயற்சி எடுத்தார். அதனால், கிறிஸ்தவரல்லாத மற்றோரின் பலத்த எதிர்ப்புக்குள்ளானார். ஒருமுறை அவர்கள் அவரைக் கொலை செய்ய முயன்றபோது, மரியான் தமது நண்பரின் வீட்டுப் பரணில் ஒளிந்துகொண்டார். அந்நிலையிலும் விசுவாசத்தில் தளர்ந்திடாமல், ''என் ஐயா, தினம் உன்னை நம்பி நான்,''என்ற நம்பிக்கையூட்டும் பாடலை எழுதினார். இவ்வாறு, தன் வாழ்வின் பிரச்சினை நேரத்தைக் கூட, ஆண்டவரின் ஊழிய வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்.
மரியான் உபதேசியார், ஸ்ரீவைகுண்டம், கிறிஸ்தியான் கோட்டை, ஏழாயிரம் பண்ணை, ஆகிய பல ஊர்களில் ஊழியம் செய்துமுடித்து, பின்னர் தேவனின் பரம அழைப்பைப் பெற்று, ஏழாயிரம் பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டார்.