ஓசன்னா பாலர் பாடும்
(All glory laud and honour)
பாடல் பிறந்த கதை
இத்தாலியைச் சேர்ந்த தியோடல்ப் ஒரு சிறந்த போதகர்; பேராயர்; புலவரும் கூட; சமுதாய சீர்திருத்தப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். சிறுவயதிலேயே கத்தோலிக்க மடத்தில் சேர்ந்த அவர், துரிதமாக முன்னேறி, சிறந்த தலைவரானார். அமைதி காக்கப் பாடுபட்டார்.
சார்லி மக்னே அரசன் அவரது திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, 781-ம் ஆண்டு, ஆக்கென்னில் இருந்த தன் அரண்மனைக்கு அழைத்துக் கௌரவித்தார். தியோடல்ப் அங்குள்ள கல்விகற்ற அறிஞர்களையும், அரசு அதிகாரிகளையும், தமது தாலந்துகளால் மகிழ்வித்தார். எனவே, அரசன் அவரை ஆர்லீன்ஸ் பட்டணப் பேராயராக நியமித்தார். தனது பேராயத்திலுள்ள அனைத்து மடங்களிலும், தேவாலயங்களிலும், தியோடல்ப் பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தார். பல ஊர்களிலும், கிராமங்களிலும் இருந்த ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசப் பள்ளிகளையும் நிறுவினார்.
814-ம் ஆண்டு, சார்லி மக்னே அரசர் மரித்தார். அவரது மகன் "பக்தியுள்ள லூயிஸ்", அடுத்த அரசனாகப் பதவியேற்றார். ஆனால், அதற்கு முன் இருந்த பெப்பின் அரசனின் மகன் பெர்னார்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தார். இந்தச் சூழ்ச்சியில், தியோடல்பும் உடந்தையாயிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். எனவே, பேராயர் பதவியிலிருந்து அவரை நீக்கி, ஆங்கர்ஸ் மடத்தில் சிறைப்படுத்தி வைத்தார்கள். ஒன்றும் செய்ய முடியாமல், சிறையில் அடைபட்டிருந்த தியோடல்ப், தன் துயரை மறக்க, பாடல்கள் எழுத ஆரம்பித்தார். சிறையிலிருந்த அந்நாட்களில், 820-ம் ஆண்டு, இப்பாடலை எழுதினார். அடுத்த ஆண்டே, நஞ்சைக் கொடுத்து அவரைக் கொலை செய்தார்கள்.
எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிப் பவனி வருகையை, நற்செய்தி நூல்களின் அடிப்படையில், தியோடல்ப் இப்பாடலில் அழகாக வர்ணித்து எழுதியிருக்கிறார். எனவே, இப்பாடல் உலகெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்படுகிறது.
ஆர்லீன்ஸ் பட்டணத்தில் குருத்தோலை ஞாயிறு, பண்டிகையாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும். பேராயரின் அருளாசீர்வாதத்துடன் ஆரம்பமாகும் பவனியில், அனைவரும் குருத்தோலை பிடித்து, ''ஓசன்னா!'' என ஆர்ப்பரித்துப் பாடி வருவார்கள். நகர வாசலைப் பவனி வந்தடையும் போது, கதவுகள் மூடப்படும். அப்போது நற்செய்திப் பகுதியைப் பாடலாகப் பாடி, நகரத்திற்கும், அதன் குடிமக்களுக்கும், ஜெப விண்ணப்பங்கள் ஏறெடுக்கப்படும். பின்னர், நகரத்தின் கோட்டைச் சுவரில் நின்று, சிறுவர்களின் பாடகர் குழு இப்பாடலைப் பாட, நகர வாசற்கதவுகள் திறக்கப்படும். அனைவரும் இப்பாடலைச் சேர்ந்து பாட, பவனி தேவாலயம் வந்தடையும்.
இப்பாடலைப் பற்றிய கீழ்க்கண்ட பாரம்பரியக் கதை ஒன்றுண்டு
'' தியோடல்ப் ஆங்கர்ஸ் சிறையில் இருக்கும்போது, லூயிஸ் அரசர் குருத்தோலை ஞாயிறன்று அப்பட்டணத்திற்கு வந்திருந்தார். எனவே, பவனியிலும் கலந்து கொண்டார். பல தெருக்களைக் கடந்து, தியோடல்ப் சிறையிருந்த மடத்தை நெருங்கும்போது, பவனி ஏதோ ஒரு காரணத்தால் தடைப்பட்டு நின்றது. அப்போது, அச்சிறையிலிருந்து அருமையான பாடல் ஒலி கேட்டது. இனிமையான அப்பாடலைக் கேட்டு ரசித்த அரசர், பாடியது யாரென வினவினார். அது, அவருடைய சிறைக் கைதியாகிய தியோடல்ப் எனக் கூறினர். இரக்கம் மிகுந்த அரசர், மனதுருகி, அந்நேரமே தியோடல்பை விடுவித்து, மன்னிப்பளித்து, மீண்டும் ஆர்லீன்ஸ் ஆலயப் பேராயராக்கினார். அது மட்டுமன்றி, தியோடல்ப் அன்று பாடிய, இவ்வழகிய பாடலை, குருத்தோலை ஞாயிறு தோறும் பவனிப் பாடலாக, எங்கும் பாடவேண்டும், என்று கட்டளையும் விடுத்தார்.''
இப்பாடல் 39 சரணங்கள் உள்ளதாக எழுதப்பட்டது. டாக்டர் ஜான் மேசன் நீல் இப்பாடலை இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.